நீரில் நடந்து நினைவில் மிதக்கும் சுகம் | அ. சந்தோஷ்

நான் நினைவலைகளில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். காலடிகள் வாய்க்காலில் தடம் பதித்து நினைவலைகளில் நடந்து சென்றுகொண்டிருந்தன. நினைவின் சுகங்கள் வாய்க்காலில் பதித்த பாதங்கள் வழியாக மென்மையாக உடலெங்கும் வெகுவாக சிலிர்த்தவாறு உயர்ந்து கொண்டிருந்தது. நினைவுகளின் சுகங்கள் வெகுவாய் இதயத்தை பாதித்து ஆனந்தத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது. வயலின் உழைத்தக் களைப்பும் வாழ்வில் படிந்த கறைகளும் நினைவுகளின் வாய்க்கால் பாதங்களிலிருந்தும் இதயத்திலிருந்தும் கழுவிக்களைந்து கொண்டிருந்தது. நினைவலைகள் நீராய் வருடி களைப்பை மறைத்து சுகத்தை மட்டும் தந்துக் கொண்டிருந்ததால் அதில் நீடிக்க இதயமும் பாதங்களும் வெகுவாய் ஆசைப்பட்டு, வெளியேற மாட்டேன் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தன. அதில் மனதிற்கும் எவ்வித விரோதமுமில்லை என்பது அது அனுபவித்துக் கொண்டிருந்த சுகத்தின் அனுபவத்திலிருந்து தெளிவாய்த் தெரிந்தது. காலை வெயிலின் வெப்பம் காயங்களின் வலிகளால் வந்த உள்மனச் சூட்டுடன் வாய்க்காலின் நினைவலைகளில் நனைந்து பேரின்பம் அனுபவித்துக் கொண்டிருந்தது. சூரியனோடு உடல் கொண்டிருந்த கோபம் வாய்க்காலில் தணிந்து போக, சமூகம் தந்த தீக்காயங்கள் நினைவலைகளில் கரைந்துக் கொண்டிருந்தன. 

photo: pixabay.com

வாய்க்காலில் படுத்துக் கிடந்து நினைவலைகளில் மிதந்து உடல் முழுக்க நனைத்து உள்ளத்தை குளிப்பாட்டி எடுக்க வேண்டும் என்னும் பேராசை இதயத்தில் தொற்றிக் கொண்டது. ஒரே அடியாக நனைந்து விட்டால் நீடித்த இதம் கிடைக்காமல் போகும் என, வியர்வையில் குளித்த உடல் தடுத்துரைக்க, இதயமும் மூளையிலிருந்து நினைவுகளின் பொக்கிஷங்களை சிறிது சிறிதாய் வெளியேற்ற நிர்பந்தித்தது. வாய்க்காலில் நின்றவாறு, நினைவினின்று நீரை அள்ளி உடம்பில் தெளித்தேன். உச்சந்தலையில் மழைத்துளிக் கெட்டியாய் விழுந்து குளிர்விக்கும் சுகம் ஊடுருவி இறங்கியது. நினைவுகளிலிருந்து நீரை அள்ளுவது மிகவும் சுலபமானப் பணியாக மாறிப் போய் இருந்தது. எவ்வித நெருடல்களும் இல்லை. தண்ணீரில் மூழ்கி இருந்த பாதங்கள் முழுமையாய் தெரிந்தன. அம்மாவின் இடுப்பில் இருந்த தருணங்களும், அப்பாவின் தோளில் இருந்து பனைபோல் உயர்ந்து நின்ற திமிர்களும் நினைவலைகளாய், நீரின் மத்தியில் கண்ணாடிபோல் தெளிவாய்த் தெரிந்தது. பசுமாட்டுக் கன்றுடன் விளையாடியது, பசுமாட்டின் கழுத்தில் பஞ்சுபோல் தொங்கிய தோலை வருடியது, அதன் கொம்புகளை நீவியது, பூனைக்குட்டியுடன் கொஞ்சியது, போர்வைக்குள் பதுங்கி வெதுவெதுப்பின் சுகத்தை அனுபவத்த பூனைக்குட்டி தரும் சூட்டை உடல் ஏற்றது, நாய்க்குட்டியை சுமந்து திரிந்தது, அதற்கு பால் ஊற்றிக் கொடுத்தது என சிறுவயது நினைவுகளை தண்ணீர் பாதங்கள் வழியாக வழிந்தோடிக் கொண்டிருந்தது. 

இதயத்தையும் உடலையும் பாதித்த வெப்பத்தைத் தணிக்க பாதங்களை நீரில் நடக்க விட்டு நினைவலைகளில் நடந்து திரிவோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்