அவர், இயேசு கிறிஸ்துவின் விலாவிலிருந்து வடிந்த தூய நீரிலிருந்தல்லவா தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்ட கசப்பாலான காடியிலிருந்துக் குடித்திருப்பாரோ? சுவைத்து விட்டு வேண்டாம் என்று ஒதுக்கியத் நீரைக் குடித்திருக்க வாய்ப்பு உண்டு. அதை அன்று யாரும் கீழே ஊற்றியிருக்க மாட்டார்கள். இயேசுவின் சாவின் போது, உலகெங்கும் காரிருள் சூழ்ந்த போது, அந்த மறைவில் அந்த நீரை சாத்தான் சொந்தமாக்கியிருக்கலாம். யார் கண்ணிலும் விழாதவாறு, சிலுவையின் கீழ் மறைத்திருக்கலாம். அது இரண்டாயிரம் ஆண்டுகளாக அங்கேயே இருந்திருக்கலாம். சாத்தான் ஒருவேளை அதைக் குடித்துத் தான் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து வடிந்த தூய நீர் அதில் விழுந்திருக்காது. சிலுவையிலிருந்து புறப்பட்டு ஓடி வந்த நீர், உள்ளே விழாதவாறு, சாத்தான், சுதந்திரம் என்னும் மூடியால் மூடி காத்திருக்க வேண்டும்.
இவர் எப்படிக் குடித்தார்? வேண்டுமென்றே தூய தண்ணீரைப் புறந்தள்ளி, ஒருவர் கெட்ட நீரை எப்படிக் குடிப்பார்? சாத்தான் ஏமாற்றியிருக்க வேண்டும். அன்று ஏவாளை ஏமாற்றியதைப் போன்று. ஆனால் இங்கே சிறு மாற்றம். காடி தான் இயேசுவின் விலாவிலிருந்து வடிந்த நீர் என்று அது பிறரை நம்ப வைத்திருக்க வேண்டும். தந்திரபூர்வமாக, அதே சிலுவையின் அடியில் இருந்தவாறு, இது தான் இயேசுவின் நீர் எனச் சொல்லி ஏமாற்றி மக்களை குடிக்க வைத்துக் கொண்டிருக்கலாம். அதை நம்புவதில் சிக்கல் இருந்திருக்காது. நன்மையின் போர்வையில் தானே அது தீமையை விற்கும். வெளிப்படையாகத் தெரியும் நன்மையின் தோற்றங்கள் தானே தீமைகளைப் பத்திரப்படுத்துகின்றன. அக்காடியை சாத்தான் ஆலய வாசல்களிலும் கூவிக் கூவி விற்றிருக்கலாம். வெளியே ஏன் உள்ளேயும் விற்றிருக்கலாம். அந்த அசிங்கம் நிறைந்த காடியில், இயேசுவின் தூய நீர் விழாமலிருக்க வேண்டும் என சாத்தான் மிகக் கவனமாக இருந்திருக்கலாம். சுதந்திரம் அதன் ஆயுதம் அல்லவா.
photo: pixabay.com
இவரும் ஒருவேளை அதிலிருந்து குடித்திருக்கலாம். அது அவருடைய சிந்தனை நரம்புளிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். தாயின் மடியில் நிர்வாணமாக இயேசுவின் உடல் கிடந்ததன் அர்த்தங்களை இவர் அறிந்திருக்க மாட்டார் என்பது திண்ணம். அதைப் பற்றி அவர் சிலாகித்து பக்தி பரவசங்கள் நிறைந்த பிரசங்கங்கள் நடத்தியிருப்பார். அது நம்பிக்கை என்னும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டவையாக இருந்திருக்கலாம். வாழ்வியலை நம்பிக்கை கூண்டுக்குள் சிறைப்பிடித்தால், மெழுகு திரி ஏத்தி வைக்கலாம், சாம்பிராணியால் தூபிக்கலாம், நீண்ட நேரம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தொழுது வணங்கலாம், பல மணி நேரம் நீளும் செபங்களை நடத்தலாம், உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்து சுய நிம்மதி அடையலாம், சுய நலங்கள் நிறைந்த வேண்டுதல்களை அடுக்கி வைக்கலாம், பக்தன் என பலர் முன் காட்டலாம். இன்னும் எத்தனை எத்தனை சவுகரியங்கள். சிலுவையின் கீழ் நின்ற அன்னையின் மடியில் கிடந்த இயேசுவின் நிர்வாண உடல் உணர்த்தும் வாழ்வியல் உண்மைகளை மறைக்க, அதை மிகச்சிறந்த கற்களால் செதுக்கி கூண்டுக்குள் அடைத்தார்கள். அதன் முன் பெண்களும் வணங்கினார்கள். அக்கூண்டின் வெளியே சவுகரியமான உண்மைகளை கோர்வையாக்கி மாலையாக்கினார்கள். அம்மாலைகளின் பூக்கள் உதிராமல் இருக்க மிகக் கவனமாக இருந்திருப்பார்கள். அவ்வுண்மைகளைப் பாதுகாக்க சாத்தானும் உடந்தையாக இருந்திருக்கலாம். அதன் அருகாமையில் இருந்த வண்ணம் சாத்தான், இயேசு சுவைத்து ஒதுக்கிய காடியை விற்றுக் கொண்டிருக்கலாம். அந்த பொய்ம்மையின் ஊற்றிலிருந்து சில பல பேர் குடித்துக் கொண்டிருக்கலாம். அது அவர்களுக்கு, மரியாளை மீண்டும் மீண்டும் சிறைப் பிடிக்க வசதியாக இருந்திருக்கலாம். மரியாள் நாசரேத்து வீட்டை விட்டு யூதேயா பிரதேசத்திற்கு தனியாக விரைந்து செல்லக்கூடது என்பதில் சாத்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதற்காக அவளையும் எலிசபெத்தம்மாளையும் வேறு ஒரு கூண்டில் அடைத்திருக்கலாம். பெண்கள் அல்லவா? பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா? ஆண்கள் நிரம்பி வழிந்த சிலுவையின் பாதையில் மரியா என்னும் பெண் சென்றதையும் பக்தி பரவசமாக்கித் தொழுது கொண்டிருந்தார்கள். தொழுவதில் தான் எவ்வளவு சுகம். தெய்வங்களையும் பெண்களையும் வீட்டின் அறைக்குள் பத்திரப்படுத்திப் பாதுகாப்பதில் தானே அன்பின் வெளிப்பாடு இருக்கிறது. ஆஹா... மெய்சிலிர்க்க வைக்கும் அன்பல்லவா... எவ்வளவுச் சிறந்தப் வழிபாடு. எல்லாம் போலிகள் என அறியாமல் ஆராதனைகள்.
இவர் அருந்தியது காடியாகத் தான் இருக்க வேண்டும். அவரின் மிகப்பெரியக் கவலை, மரியா நாசரத்து வீட்டை விட்டு வெளியேறியதுதான். அவளை திரும்ப வீட்டுக்குள் அடைப்பதில் மிகப்பெரிய கவனம் செலுத்தினார். அவர் யேசேப்பின் இயலாமையைப் பற்றியும் பேசினார். அவர் மட்டும் காண வேண்டியவளை ஏன் உலகம் காண, அதுவும் ஆண்கள் கண்டு வழிபிழைப்பதற்கென அனுப்பியிருக்கிறார். அவரது கோபம் ஆண்கள் குலம் முழுவதின் மேலும் விழுந்தது. அவர் ருத்ரதாண்டவமாடினார். உள்ளேக் குடித்தக் காடி வேலை செய்து கொண்டிருந்தது. மரியாவின் மானம் காக்க வேண்டிய யேசேப்பு என்ன செய்து கொண்டிருக்கிறார். தச்சுத் தொழிலுக்கு அடிமையாகிப் போய் விட்டாரா. மரியா வெளியேச் செல்ல யோசேப்பு எப்படி அனுமதிக்கலாம்? அவரின் ஆண்மை எங்கேப் போனது. அவரது வீரம் எங்கே? அவளது முந்தானை முடிச்சியில் கட்டப்பட்டுக் கிடக்கிறரார? அவர் ஆண் இனத்திற்கே பெருத்த அவமானம். மரியாள் ஓடிய போது. அணிந்திருந்த ஆடையை யேசேப்பு கவனித்தாரோ என்னவோ. காடி குடித்த இவர் கவனித்திருப்பார். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவளின் அழகில் மயங்கி வேறு ஆண்கள் வழி தவறியிருந்தால் யார் உத்திரவாதம் கொடுப்பார்கள்? யோசேப்பு வேண்டுமென்றே ஊராரை வழிபிழைக்கச் செய்ய மரியாவை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். என்ன சொல்ல? இவர்களின் கழுத்தில் இயந்திரக் கல்லை கட்டியிருக்க வேண்டாமா? ஆழ்கடலில் அமிழ்த்தி இருக்க வேண்டாமா? சாத்தான் தலைவிரி கோலம் கொண்டு ஆடியது. மரியாளை தளைத்துப் போடாமல் மூக்குக்கயிறு அறுத்து விட்டது யார்? யோசப்பு அல்லவா மூக்குக் கயிறு போட்டிருக்க வேண்டும். யோசேப்பின் கழுத்தில் முதலில் இயந்திரக் கல்லை கட்டி கடலில் அமிழ்த்தி இருக்க வேண்டும். அடுத்ததாக மரியாவை. அவள் கழுத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல பல கற்களைக் கட்டி, கடிலில் கீழ் கொண்டு போய் தறியடித்துக் கட்டிப் போட வேண்டும். ஆண்களின் சுயமரியாதையைக் கெடுப்பவர்களை பின் என்ன தான் செய்ய வேண்டும். சமூகச் சீரழிவை யார் தான் பொறுத்துக் கொள்ள முடியும்? சமூகத்தின் பண்பாட்டு நெறிகளுக்கு எவ்வித குறையும் ஏற்படாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட மரியாக்களை யார் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவர்களால் ஆண்களின் கற்பிழந்து போய்க் கொண்டிருக்கிறது. அவர்களின் கற்புக்கு உத்திரவாதி யார்? சமூகமும் கற்பை இழக்கிறது போலும்.
மரியாவை சீடர்களின் மத்தியில் உட்கார வைத்தது யார்? ஆண்கள் மத்தியில் ஒரு பெண் மட்டும் இருந்து, எப்படி செபிக்க முடியும். அதுவும் ஆண்களை எல்லாம் சேர்த்து வைத்து. யார் தான் பொறுக்க முடியும்?
அவர் குடித்தது காடி நீர் என்பதை இவர் தந்திரபூர்வமாக மறைத்தார். கணவன் காண வேண்டிய அழகை உலகம் சுற்ற விடும் அநீதிக்கெதராக அவர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கி, அவரின் எச்சிலை வாங்கி அழுது கொண்டிருந்தது. அது அடிக்கடி நாணி தலைகுனிந்துக் கொண்டிருந்தது. அது இடையிடையே உமுறுயது, கூவி ஒலி எழுப்பி அதன் எதிர்ப்பைப் பதிவு செய்தது. அவர் விடுவதாயில்லை. அதை அவர் புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருந்தார், இறைச்சிக் கடைக்காரன் போல. இறைச்சியும் பெண்ணும் அவருக்கு ஒன்று தான் போல. அவரின் தவிப்புகள் எல்லாம் காதைக் கூசும் நாராசங்களாக சாக்கடையாய் வெளியே வந்துக் கொண்டிருந்தன. எங்கும் இச்சைகளின் எச்சங்கள். முகத்தைப் பார்த்தாரா? உள்ளத்தைப் பார்த்தாரா? கடவுளின் முகச்சாயலை அவர்களில் பார்த்தாரா? தெரியவில்லை. சாத்தான் கொடுத்தத் தண்ணீரை தேடித் தேடி குடித்தார் போலும். இயேசு கூண்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்க, அவர் போர்வையை அணிந்து நடந்த சாத்தானிடமிருந்து நிறையவே குடித்தார் போலும்.
இயேசுவின் தூய நீர் வழிந்தோடியது. அதிலிருந்து யோசேப்புகள் குடித்தனர். காடி கொடுத்தவர்களின் ஊற்று தங்கள் வீடுகளில் சேராத வண்ணம் சிலர் கடவுளையும் ஒதுக்கத் தொடங்கினர். தூய நீர் பாய வேண்டிய இடத்தில், காடி விற்றால் என்ன தான் செய்ய முடியும்? அம்மனிதர்கள், உறவுகளோடு வாழ்ந்துக் கொண்டிருந்தனர். உடைகளுக்குள் இருக்கும், தங்களின் உயிரின் துடிப்பான எலும்பின் எலும்போடும் சதையின் சதையோடும் வாழ்ந்து கொண்டிருந்தனர். தாய் தந்தையை விட்டு விட்டு உறவுகளின் உலகில் இயல்பான உணர்வுகள் விளம்பும் சுதந்திரம் என்னும் காற்றை சுகமாக சுவாசித்துக் கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் சுய மாண்புடன் விரும்பிய ஆடைய அணிந்து சுதந்திரமாக, சிலுவையிலிருந்து வடிந்த தூய நீரை அருந்தியவாறு வாழ்ந்து கொண்டிருந்தனர். இயேசு வாழட்டும். சிலுவையிலிருந்து சிந்தப்பட்ட நீரிலிருந்து யோசேப்புகள் குடிக்கட்டும்.
0 கருத்துகள்