குடிசை அளவே இருக்கும் அவ்வீட்டின் வாசலின் இடது பக்கத்தில் மேற்கு கிழக்காக
ஜெனிசிலின் படுத்துக் கிடந்தாள். கிழக்கு வலது மூலையில் அம்மா ராதிகா, அடுப்படியில் சமைத்துக்
கொண்டிருந்தாள். அது இரட்டை அடுப்பு பிரதான அடுப்பில் சோற்றுப் பானை இருந்தது.
தண்ணீர் திளைத்து அரிசி வேக ஆரம்பித்திருந்ததால், நெருப்பை பிள்ளை அடுப்பை நோக்கித் தள்ளிக்
கொண்டிருந்தாள். அதில் மீன் வெந்துக் கொண்டிருந்தது. அவள் புலம்பியவாறே நெருப்பைப்
பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். நெருப்பைத் தள்ளுவதில் இருந்த சிரமம், கேஸ் விலையேறியைதை
குறிவைத்துக் தாக்கிக் கொண்டிருந்தது. ஜெனிசிலின் கையில் வைத்திருந்த, அலைபேசி மீதான வெறுப்பு
ராதிகாவின் வார்த்தைகளின் வீரியத்திலும், விறகை இரண்டாம் அடுப்பை நோக்கித் தள்ளுவதிலும் தெரிந்தது.
"இவளக் கல்யாணம் பண்ணி வைக்க முடியலியே, ஆண்டவரே" என்று கூறியவாறு ராதிகா திரும்பிப் பார்ப்பதை கவனித்த
ஜெனிசிலின் அலைபேசியின் பொத்தானை அழுத்தி தொடுநிரையை கறுப்பாக்கிக் கொண்டாள்.
ராதிகா திரும்பியதும் அவள் மீண்டும் தொடுதிரையை வெளிச்சமாக்கிக் கொண்டாள்.
தொடுதிரையின் முகப்பில் காதல் வடிந்துக் கொண்டிருந்தது. காதலர்கள் ஒரு பைக்கின்
பின்னால் நின்றவாறு, காதலன்
காதலியை தூக்கிப் பிடித்து இருவரும் முகத்தோடு முகம் பார்த்தவாறு அந்தப் படம்
இருந்தது. இருவரும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். ஹெல்மெட் உடல்களை விட
பெரிதாகவும், வண்ணங்களின்
கலவையாகவும் இருந்தது. இருவருக்கும் பின்னால், இதயங்கள் பலத் தொங்கிக் கொண்டிருந்தன. குறுஞ்செய்திகள் வந்ததற்கான
அறிவிப்பு குறிப்புகள் திரையில் தென்படவில்லை. சற்றே ஏமாற்றம் அடைந்தாலும்
மீண்டும் இன்ஸ்டா, முகநூல், புலனம் என பலவற்றுள்
நுழைந்துக் கொண்டிருந்தாள்.
வாட்ஸ்அப் இல் எதுவும் புதிதாக இல்லை. முகநூல் பலதையும் தந்துக்
கொண்டிருந்தது. புதியதும் பழையதுமாக அது நீண்டுச் சென்றுக் கொண்டே இருந்தது.
முகநூலுக்கு முடிவுகள் இல்லை. திரையை கீழ்நோக்கி விரட்ட விரட்ட, முடிவில்லாப் பயணங்கள் போல
அது நீண்டுக் கொண்டே சென்றது. திரும்ப வருவதும் புதிய பயணம் தொடங்குவதும் என அது
முடிவிலியாய் நிரந்தரமாகப் எல்லைகளின்றிப் பயணித்துக் கொண்டிருந்தது.
அடுப்பிலிருந்த
அரிசியை வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் சரித்து வைத்தாள். மீன் வெந்திருக்கிறதா
என்றுப் பார்த்தோடு, உப்பு
போன்றவற்றையும் சரிபார்த்துக் கொண்டாள். ராதிகா காலையில் பக்கத்தில் உள்ள பள்ளிக்
கூடத்திற்குப் போவதுண்டு ஆயா வேலைப் பார்ப்பதற்கு. பள்ளிவாகனத்தில் மட்டும் தான்
வேலை. காலையில் 7 மணிக்குச்
சென்றால், 10.30 மணிக்கெல்லாம்
திரும்பி வந்துவிடுவாள். பிறகு மாலையில் மூன்று மணிக்குப் போனால் போதும். அன்றைய
தினம் வேலையில் மனம் கொள்ளவில்லை. செல்லும் வாகனத்தின் ஓட்டுநர் ஓரிரண்டு முறைத்
திட்டிவிட்டான். கவனக்குறைவாகச் செயல்பட்டாள் என்றும், பிள்ளைகளை சரிவரக்
கவனிக்கவில்லை என்றும். காலையில் குளிரும் அதன் பிறகு கொடும் வெயிலும், உடலை ஏதோ செய்து
கொண்டிருந்தது.
ராதிகா, வாசலில் வந்து
உட்கார்ந்தாள். வெளியே பாதியாகவும் உள்ளே பாதியாகவும் தெரியும்படி சவுகரியமாக
உட்கார்ந்து கொண்டாள். புற உலகையும் உள் உலகையும் இணைப்பது போல் அவளுடைய இருப்பு
இருந்தது. வீட்டு இரகசியங்கள் வெளியேச் செல்லாமல் இருக்க, வாசலில் இருப்புக் கொள்வது
மிகவும் தந்திரபூர்வமானதாகக் கருதிக் கொண்டாள். "நானும்தான் லவ் பண்ணினேன்.
உடம்பெல்லாம் இரத்தத்துக்குப் பதிலா காதலு ஓடுற உணர்வு தான் இருந்திச்சு."
சுவர் பக்கமாகச் படுத்திருந்த ஜெனிசிலின் ராதிகாவைப் பார்த்தவாறுப் படுத்தாள்.
அம்மாவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அலைபேசியை எடுத்தவள், அதற்கு வெளிச்சம்
கொடுக்கலாமா என கைக்கு உயிர் கொடுக்கையில், "நாசம் பிடிச்ச ஒரு செல் போண்" என்று
திட்டினாள். தேவையற்ற உரசல் வேண்டாம், அம்மா ஏதோ சொல்ல வருகிறாள் அது முடங்கி விடும் என்று அலைபேசியை
பாயில் போட்டாள். "அண்ணைக்கு எல்லாப் பிள்ளைங்களப் போல நானும் படிப்பில கவனம்
வெச்சிருந்தா இப்போ இருந்திருப்பேன். ஓன் அப்பனப் பாத்திருக்கவும் மாட்டேன்"
என்று ராதிகா காதல் கதையை மீண்ட மீட்டலானாள். "இண்ணைக்கு ஆயா வேல
பாக்குறதுக்கு, டீச்சரா
வேலப் பார்த்திருக்கலாம். நல்ல இடத்தில வாழ்ந்திருக்கலாம்." ஜென்சிலின் மூச்சைத் தள்ளி சிரிக்க வந்தவள் அதை அடக்கி விட்டாள். "நானும்
டீச்சருக்குப் பொண்ணாப் பொறந்திருப்பேன், இப்போ வேன்கிளி ஆயாவோட புள்ள" என ஜெனிசிலின் ராதிகா காதில் முழுமையாக
விழாதாவாறு முணுமுணுத்தாள். "கொளுப்பு உனக்கு... கொளுப்பு. எனக்கக் கண்ணீரு
உனக்கு சந்தோஷம்" என்று
வார்த்தைகளை உதிர்த்தாள். "அப்புறம் நான் அழவாச்
செய்யணும்" ஜெனிசிலின் திருப்பிக் கேட்டாள். "எவ்வளவு ஜாலியா இருந்து
காலேஜுக்குப் போய் முதல் மாசம் முடியும்போ உங்கப் அப்பனப் பார்த்தப் பிறகு எல்லாம்
போச்சு. என் சிரிப்புப் போச்சு,
சமாதானம் போச்சு... தொடுறது எல்லாம் பிரச்சனயாத் தான் போச்சு.
கடைசியில, அவரு
இல்லாம முடியாதுண்ணு தோணிச்சு" என்று ராதிகா கூறி முடிப்பதற்குள், "உனக்கு
இருப்புப் பொறுக்கல இல்ல அப்புறம்" என ஜெனிசிலின் வெடுக்கெனக் கேட்டாள்.
"வெந்தப் புண்ணில வேல் பாய்ச்சாத" ராதிகா அழாதக் குறையாகக் வார்த்தைகளை
உதிர்த்தாள்.
"ஓடிப்போன...
இல்ல" எனக் கூறி "ஈ" என ஓசை எழுப்பி பற்களை இழித்தாள் ஜெனிசிலின்.
அவளின் குத்துப் பேச்சக்களை ராதிகா வெறுத்தாள். ஆனால் பதில் ஏதும் கூறவில்லை. மகளை
அடிக்கும் நிலையிலோ, வார்த்தைகளால்
தண்டிக்கும் நிலையிலேோ அவள் இல்லை என்பதை அவளது மவுனம் கூறியது.
"மூணு
வர்ஷம் படிச்சு முடிச்சிருந்தண்ணா... அத நீ கடந்திருந்தா.. இப்போ படுற கஷ்டம் நீ
பட்டிருக்க மாட்ட... அவருக்கு நீ டாட்டா சொல்லியிருப்ப. இப்போ மாடி வீட்டில சுகமா
இருந்திருப்ப." ஜெனிசிலினின் வார்த்தைகளை நெஞ்சில் வருத்தத்தை
ஏற்படுத்தினாலும், அவள்
கூறிய வார்த்தைகளில் அவள் பேச்சற்றாள். அச்செய்தி சுய வெறுப்பாகவும் கழிவிரக்கமாகவும்
தொண்டையில் தங்கியது. உமிழ்நீரை உள்ளிறக்க முடியாமல் ஒரு நிமிடம் தவித்தாள்.
தொலைந்து போன சொந்தங்களின் நெருக்கமும், தூரமாய் நின்று உதவும் சில நட்புகளின் உதவியும் அவளின் நினைவில்
இலைமேல் விழுந்த தண்ணீர் போல் தெறித்தன.
"நான்
தான் அப்படி ஆயிட்டேண்ணா... நீயும் அப்படியில்ல கிடக்க" என்று ராதிகா
ஜென்சிலினைச் சீண்டினாள். "யாரு கிடக்கா அப்படி? அவன் தான் வேணும்ணு தவமா
கிடக்கேன்?" ஜென்சிலினின்
பதில் ராதிகாவை சற்றே உலுக்கியது. "அப்போ போன வாரம் பைக்கில நீங்க ஒரு நாளு
புள்ளா சுத்தினது... " ஜென்சிலின் முகத்தில் எவ்வித விகார மாற்றங்களும்
இல்லாமல், இயல்பாய்
இருப்பது ராதிகாவை ஆச்சரியப்படுத்தியது. "அதுவா, தெரியல... லவ்வுண்ணா
ல்வ்வுதான்... அவ இல்லண்ணா செத்துப் போவேன் போல ஒண்ணும் இல்ல. வேறத் தெரியல.
பிரண்ட்சுங்களுக்கு போட்டோ காட்டி ரசிச்சப்போ செமயா இருந்திச்சு..."அது பெரும்
பொறுப்பற்றப் பதிலாக உதிர்வதைப் புரிந்துக் கொள்ள ராதிகாவால் முடியவில்லை. அவன்
இல்லையென்றாலும் வாழ்ந்திடுவாள் என்னும் எண்ணம் தோன்ற, "அப்புறம்
போன மாசம் சம்மந்தம் கொண்டு வந்தப்போ ஏன் வேண்டாம்ண?" என்று ஏதும் புரியாதவளாய்
கேள்வி எழுப்பினாள். "அதுவா... அவன் போதும்ணு தோணிச்சு... எத்தன 'லல்' அனுப்புவான்... எத்தனை நாள்
நான் திரும்ப திரும்ப அவ அனுப்பின மெசேஜ் எல்லாம் வாசிப்பேன்... வாசிக்கும்போ
உடம்பெல்லாம் ஏதோ போல, ஆகி
மனசெல்லாம் நெறயும்... நேற்றும் விடிய விடிய மெசேஜ் அனுப்பிட்டுத் தான்
இருந்தான்... அவனப் போல யாரு எனக்கு மெசேஜ் அனுப்புவா." ராதிகாவுக்கு எதுவும்
பிடபடவில்லை. "என்ன சொல்ற... உன் அப்பா இல்லண்ணா செத்துருவேண்ணு தோணும்
எனக்கு அப்போ... சாப்பாடு இறங்காது, என்னவோ போல இருக்கும்... அவரு இல்லண்ணா செத்துருவேன் போல
இருக்கும்" ராதிகா காதலின் இலக்கணங்களைக் கூறத் தொடங்கியதும், "அதுதான்
நீ இந்த புக அடுப்பிலக் கிடந்து ஊதிட்டு கிடக்கிற" என்று எகத்தாளமாகக்
கூறினாள்.
ராதிகா
ஆழமான யோசனையில் மூழ்குவது போல் தோன்றியது. கொஞ்சம் நேரம் யோசித்தவள், "அப்புறம்
ஏன் போணே தவம்ணு கிடக்கிற" என்று கேட்டாள். "தெரியல... போணு இல்லாம
இருக்க முடியல... அரமணி நேரம் இல்லண்ணாலும் உலகமே முடிஞ்சு போற போல இருக்கு."
ராதிகா மீண்டுமாக கேட்டாள் "அப்போ அவன்தான் வேணும் இல்ல உனக்கு."
"யாரு வேணும்?" ஜெனிசிலின்
உடனடியாக பதில் அளித்தாள். ராதிகா "ஜெனி சம்மந்தமில்லாம பேசிட்டு இருக்க?"ஜெனிசிலின்
காதில் வாங்கிக் கொள்ளவில்லை போல.
ராதிகா
தலையில் கைவைத்துக் கொண்டு எழுந்தாள். மதிய உணவு விளம்புவதற்காகத் தட்டுக்களை
கழுவினாள். மகளை சாப்பிட அழைத்தாள். ஜெனிசிலின் எழுந்து பாய் மீது அமர்ந்தாள்.
ராதிகா சாப்பாடும் மீனும் விளம்பினாள். அலைபேசியால் ஒரு கிளிக் செய்து அதை
புலனத்தில் அனுப்பினாள். ராதிகா,
"எப்பவும் போணும் கையுமா அலயுறா. லவ்ண்ணு சொல்றா, இல்லண்ணு சொல்றா...
என்னவோத் தெரியல. கல்யாணம் செய்யலன்னா பின்ன எதுக்கு லவ்வு?" கேள்வியை
ஜெனிசிலினின் காதில் விழுமாறு எழுப்பினாள். அவள் வாட்ஸ்அப் இல் பெருவிரலை
அழுத்திக் கொண்டிருந்த சற்றே நிமிர்ந்து அம்மாவைப் பார்த்துவிட்டு மீண்டும்
புலனத்தில் மூழ்கினாள். அவன் மதிய உணவின் படத்தைப் பார்த்துவிட்டு, நாக்கில்
எச்சில் வடியும் எமோஜி அனுப்பியிருந்தான். அவள் அதைப் பார்த்தும் பார்க்காதது போல, விரல்களால் தொடுதிரையை
நகர்த்திக் கொண்டிருந்தாள். விரல்களின் நகர்த்தல்கள் சென்று கொண்டே இருந்தது. அது
ஒரு முடிவிலியாகப் போய் கொண்டே இருந்தது. மீண்டும் படுத்தாள், விரல்கள் தங்களதுப்
பணிகளைச் செய்து கொண்டிருந்தது. சார்ஜ் கூட போட்டுக் கொண்டாள். நெஞ்சில் மொபைல்
சரிய அப்படியேத் தூங்கி விட்டாள். முந்தைய நாளைய தூக்கம் இமையில்
கனக்க நன்றாகத் தூங்கி விட்டாள்.
இன்றும் இரவு தூங்கா இரவாக மாறிக் கொண்டிருந்தது. வழக்கம் போல. ராதிகா தூங்காமல் கிடந்தாள். இதுவரைக்கும் லவ் செய்கிறாள், எப்படியாவது பையனிடம் பேசிவிட்டு திருமணம் செய்து வைக்கலாம் என்று நம்பியவள் மனதில் இன்று பல சந்தேகங்கள் எழும்பின. லவ் இல்லியாம் அப்புறம் எதுக்கு இரவெல்லாம் அவனிடம் மெசெஜ் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. வீட்டின் வெளிச்சம் எல்லாம் அடங்கியது. சரிந்து படுத்திருந்த ஜெனிசிலின், அலைபேசியை போர்வைக்குள் வைத்து பயன்படுத்திக்கொண்டிருந்தாள். போர்வையை மீறி வெளிச்சம் வெளியே தெரிந்துக் கொண்டிருந்தது. ராதிகா பார்த்துக் கொண்டே இருந்தாள். லவ் செய்கிறாளா? இல்லையா? அவனிடம் தான்பேசுகிறாளா? இல்லை வேறு யாரிடமாவது பேசுகிறாளா? என்ன செய்து கொண்டிருக்கிறாள்? ஒரே குழப்பமாக இருந்தது. எழுந்தாள் அவள். போர்வையை தூக்கி வீடிவிட்டு, அலைபேசியை பிடுங்கி சாலையில் எறிந்தாள்.
எழுந்து உட்கார்ந்தாள் ஜெனிசிலின். “எதுக்கு என் போணப் புடுங்கி எறிஞ்ச நீ?” பாஷையில் மரியாதை இல்லாமல் இருந்தது. ராதிகா அவளின் கேள்வியில் அடங்கியிருந்த மூர்க்கத்தனத்தில் சற்றே அரண்டு போனாள். “இப்போ எனக்குப் போண் வேணும்” தீர்மானமாகச் சொன்னாள். லாரி ஒன்று சாலையைக் கடந்து செல்லும் ஓசை கேட்டது. "ஒனக்கு போண் எதுக்கு, இதுவரையும் பொறுமையா இருந்தேன்., ஏதோ படிக்கணும்ணு சொன்ன இல்லாதப் பணத்தை உண்டாக்கி வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் பிரண்ட்ஸ் வச்சிருக்காங்க, போண் இல்லாம இருக்க முடியாது. கொஞ்சம் நாளில பாய் பிரண்ட்டு, காதல், கல்யாணம், அவன் தான் வேணும். கல்யாணம் பண்ணலாம்ண... இப்போ, எதுக்கு அவன்கிட்ட மெசேஜ் பண்றேண்ணே தெரியாதுண்ணு சொல்ற... பிறகு உனக்கு எதுக்குப் போணு. இத்தோட முடிச்சுக்க... கல்யாணம் பண்ணி வைக்கிறேன்." ஜெனிசிலின் எழுந்தாள். ஜியோமெட்ரி பாக்ஸ் திறந்து பிளேட் ஒன்றை எடுத்து, கையை அறுக்கத் தாயாரானாள். “இப்போ எனக்குப்போண் வேணும். எடுத்திட்டு வா..." கட்டளை தீர்மானமாய் வெளிவந்தது. பயந்தாள் ராதிகா, வாசலைத் திறந்தாள். சாலைக்கு ஓடினாள். அலைபேசி சிதைந்துப் போய் கிடந்தது. செய்வதறியாது விழித்தாள். சமாதானப் படுத்தலாம் என்று வீட்டுக்குள் வந்தாள். இதயம் பதைப்பதைத்துக் கொண்டிருந்தது. கையெல்லாம் நடுங்கியது. இப்போ நான் கைய வெட்டுவேன். "மோளே கொஞ்சம் பொறுடி வாங்கலாம்" ராதிகாவின் குரலில் பவ்யமும் கனிவும் படந்திருந்தது. "இப்போ வேணும் மொபல்" ஜெனிசிலின் தன் பிடிவாதத்திலிருந்து சற்றும் விலகுவாதாயில்லை. "எனக்கு வேணும்ணா வேணும். இல்லண்ணா கைய அறுப்பேன்." "விடியட்டும் காலையில வங்கலாம் மோள..." அவள் விடுவதாயில்லை. "வாங்குத்தருவியா மாட்டியா?" கேள்வி பலமாய் விழுந்தது. நேரம் 12 மணி தாண்டியிருந்தது. கடைகள் மூடியிருக்கும். இப்போ காசுக்கு எங்கேப் போவது. செய்வதறியாமல் திகைத்தாள் ராதிகா. மகள் ஏதோ பூதம் போல் நின்றாள். ராதிகாவின் வாழ்க்கை இத்தோடு முடிந்து விடும் போல இருந்தது. தைரியம் முற்றிலும் இல்லை. கோழையாய் காட்சியளித்தாள். அசுர பலத்துடன் மகள் நின்றாள். தன்னுடைய சிறு அலைபேசியின் எண்களை அழுத்தி யாருக்கோ, போண் பண்ண முயன்றாள். "இப்போ கைய அறுப்பேன். போண் பண்ணாத. பண்ணினா இப்போ முடியும்" ஜெனிசிலின் கர்ஜித்தாள். "உனக்கு போண் வாங்கத்தான். கடைக்காரப் பையன் தான். சாதாரணமா அவன் தான் எனக்க மொபைல் சார்ஜ் பண்ணுவான். அவன கூப்புடுறேன்" நடுங்கியவாறே கூறினாள் ராதிகா. உருவிய வாளுடன் நிற்கும் எதிரியின் முன்னால் வாள் தொலைத்த வீரன் போல் நடுங்கிவாறு வார்த்தைகளை உதிர்த்தாள். மறுமுனையில் அந்தக் கடைக்காரப் பையன் போண் எடுத்தான். ஓடினாள் ராதிகா. கழுத்தில் கிடந்த அரைப்பவுன் நகையை அங்கே வைத்து விட்டு மொபமைல் வாங்கி வந்தாள். நாளை அடகு வைத்து பணத்தைக் கொடுப்பதாக கூறினாள். ஜெனிசிலின், கோபம் தணிந்து ஓரமாய் குழைந்து படுத்திருந்தாள். அலைபேசி முழு பூசணிக்காய் போல் அருகில் திறக்கப்படமால் பெட்டிக்குள் இருந்தது. அதை அவள் தொடவே இல்லை. மறுமூலையில் ராதிகா கண்ணீர் மல்க மகளையேப் பார்த்தவாறு அரண்டு போய் உட்கார்ந்திருந்தாள். "மொபைல் பேய் ஒன்று உண்மையாகவே உண்டு போல" அவள் எலக்ட்ரானிக் பேயை நம்பலானாள்.
1 கருத்துகள்
Nice
பதிலளிநீக்கு