தொடரும் எழுத்துகளின் வன்மம் | சந்தோஷ் குமார் அப்பு

எழுத்துக்களோடான எனது போராட்டம் தொடர்கிறது. எழுத்துக்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்? அவைகள் பயன்படுத்துவோரின் கைப்பாவைகள் தானே? ஆகையால் எழுத்துகளை குற்றம் சாட்டுவது அறிவீனம் என்று நீங்கள் கூறலாம். உங்கள் நியாயத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் என் சவுகரியத்திற்காக வேறொரு வாதத்தை நான் ஏற்றிருக்கிறேன். அதை முன்வைக்கிறேன். அது நன்றாக இருப்பதாகவும் உணர்கிறேன். அது என் வாழ்வோடு ஒத்துப் போகிறது. நீங்கள் ஏற்கலாம், ஏற்காமல் போகலாம். நீலகேசி குறுங்காவியத்தின் ஆசிரியர் சொல்வதைப் போல. அது உண்மையாக இருப்பது போல தோன்றலாம், இல்லாமல் இருப்பதாக தோன்றலாம். இருப்பது போல் இருந்தவாறே இல்லாமல் போகலாம். தர்க்கவாதம் தான். எழுத்துகளின் விளையாட்டு எனலாம். ஆடத்தெரிந்தவர், எழுத்துக்ளை வரிசைப்படுத்தி, கொம்பு சீவிவிட்டு உறைந்து போன அறிவின் படிமங்களை (pattern thinking) கிழிக்கும் வித்தை அது (Ann Alder. 2010. Pattern Making, Pattern Breaking. Gower Pub Co). இதை ஆக்கப்பூர்வமான அழிப்பு (creative destruction) என்று கூட சொல்லலாம் (Sharad Raghavan T.C.A. 2025. How Innovation Drives Growth. The Hindu. October 15).


Image generated using Google Gemini 

நூலாசிரியர் இறக்கும் போது, வாசகர் உயிர்த்தெழுகிறார் (The Death of the Author) என்று கூற கேட்டதில்லையா? அது தான் இப்போது எனக்கு சவுகரியமாக இருக்கிறது. அதற்கான காரணங்களை நான் பின் சொல்கிறேன். இக்கூற்றின் அடிப்படையில், பார்க்கும் போது, எழுத்துக்களை உதிர்த்தவர் யார் என்பது என் பொருட்டல்ல. அவ்வர்த்தத்தில் தான் நான் எழுதுகிறேன். எழுத்துகளை ஏவி விட்டு, அன்னவர் அகன்று விட்டார். எழுத்தை அவரிடமிருந்து பிரித்து விட்டேன். எழுத்துக்கும் அவருக்கும் இடையேயான தொப்புள் கொடி உறவை அறுத்து விட்டேன். என் அகத்திலே பரப்பி விடப்பட்ட, எழுத்துக்கள் எனக்குச் சொந்தமாகி விட்டன. அவ்வெழுத்துகளின் உரிமையாளர் அவரில்லை. அவ்வெழுத்துகளை பொறுத்தவரைக்கும் அவர் இறந்து விட்டார். இப்போது எனக்குள் நடப்பது எனக்கும் எழுத்துகளுக்குமான போராட்டம்.

அவ்வெழுத்துகள் இப்போது, கறுப்பாக இல்லை. அவைகள், ஒலியில் கலந்து, கலாச்சாரா வாழ்வியல் கூறுகளில் பிசையப்பட்டு மொழிக்குரிய உருவங்களை உள்வாங்கி என் செவிவழி உள் நுழைந்து விட்டன. வெள்ளைப்பலகையில் பதிக்கப்பட்ட கறுப்பு வண்ணங்களாக அவை இல்லை. காற்றுவழி வந்தவை. அவை கொண்டிருக்கம் பண்பாட்டு மொழிக் குறியீடுகளை நானும் பகிர்ந்து கொள்வதால், அவ்வொலிக் கீற்றுகள் காற்று வழி பயணித்து காதில் நுழைந்து, பிரதானமாக எனது மூளையின் இடது வரைகோளத்தில் மாந்தரிகம் செய்து, செய்திகளை கிளப்பி விட்டு உடலை உலுக்கச் செய்கின்றன (James W MINETT, William S-Y WANG (Ed.). 2009. Language, Evolution, and the Brain. City University of Hong Kong Press). திரும்பவும் சொல்கிறேன் எழுத்துக்களை உருவி விட்டவரும் நானும் பலவற்றை பொதுவாகப் பகிர்ந்து கொள்வதால் வரும் சிக்கல் இல்லை. பண்பாடு சமூகத்தின் பொதுபுத்தியில் புகுத்தி வைத்திருப்பவற்றை நானும் அவரும் பொதுவாகப் பகிர்கிறோம் என்பதால் தான். மரத்தின் கிளையில் தொங்கும், தேனை சூசகமாக திருடி பலர் உண்பது போல. வாழ்வில் தேடும் சில சுவைகளுக்காக எடுத்துக் கொள்ளும் சற்றே சவால்மிக்க ஆட்டம் இது. அதற்குள், நிலவியல், மொழியியல், இனவியல் என பல கலந்திருக்கும். தேனடையின் சில துவாரங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கு பல்வேறு பூக்களின் மகரந்தம் போல. இலையும், பல வண்ணங்களாலான, பல குடும்பங்களையும், குடும்பங்களுக்குள்ளே உள்ள வித்தியாசனமான உறுப்பினரையும் கொண்ட மலர்களால் கோர்க்கப்பட்ட மாலை போன்றது அது. எப்பூ யாருக்குப் பிடித்திருக்கிறது. எந்நிறத்தின்பால் யார் கவரப்படுகிறார் என்று முழுமையாக சொல்லி விட முடியாது. ஏன் என்னாலேயே சொல்லி விட முடியாது. தனியாகப் பார்க்கும் போது சில பூக்களை நான் கண்டு கொள்வதில்லை. ஆனால், அது பல்வேறு பூக்களுக்கு நடுவே தென்படும் போது, தனி அழகு பெற்று கண்களைப் கொள்ளை கொள்கிறது. அது அப்பூவின் குணமா, இல்லை அப்பூவை தனித்துவமாக எடுத்துக் காட்டும் மற்றுப் பூக்களின் குணமா. தனித்துவம் எடுத்துக் காட்டும் அப்பூக்களுள் ஒன்று வேறு ஒருவருக்கு காதலனாகக் கூடஇருக்கலாம். இச்சிக்கல் மிக்க மொழிக்கலவை சமூக-உள்ளத்தின் பகுதியாக இருப்பதால், எழுத்துகள் எனக்கு அர்த்தம் தருகின்றன. அவ்வெழுத்துகள், வேறு ஒருவரின் பார்வைக்கு அழகாகத் தெரிகின்றன. எனக்கோ அவை, நாராசமாக மாறுகின்றன. உடலை கிழிக்கும் ஆயுதங்களாக மாறி விடுகின்றன.

சரி, ஒலிவழி வரும் வாய்மொழி வடிவு பெற்ற எழுத்துகளை கட்டுப்படுத்தி அவற்றை எனது ஆளுகையின் கீழ் கொண்டு வரலாம் என்றால், உடல் சமிக்ஞைகள் அல்லது உடல்மொழி கடத்தி விடுகின்ற உணர்வலைகளுக்கு, எழுத்துரு கொடுக்கும், மூளையின் வன்முறையை என் சொல்வோம். எனது உடலின் பகுதியாக இருந்து கொண்டு, அதை ஊட்டி வளர்க்கும் எனக்கு எதிராக போர் தொடுக்கக் காரணம் என்ன? அதற்கு என்மீது என்ன பகையோ?  அதற்குள் குருதியை கடத்திவிட்டு, அதற்குள் குடிகொண்டிருக்கும் கோடிக்கணக்கான நியூரோன்களை வாழ வைக்க இதயம் எவ்வளவு கடிமனமாக உழைக்கிறது தெரியுமா? ஆனால், அதை குடித்து விட்டு, அவ்விதயத்தையே நிலைகுலைய வைக்கும் சதிச்செயலில் மூளை ஏற்பட்டு விடுகிறது. உடல்மொழிகளுக்கு எழுத்துருவம் கொடுத்து, கருத்துக் கோர்வைகளாக்கி, அமிலங்களை சுரக்கச் செய்து, இதயத்தின் துடிப்பை அதிகமாக்கி விடுகிறது. இந்த வன்கொடுமையை மூளை ஏன் செய்கிறது என்று தெரியவில்லை. கண் நுகரும் உடல் மொழி அறிவு பதார்த்தங்களுக்கு எழுத்துரு கொடுத்து, வார்த்தைக் கோர்வைகளால் வினைதூண்டும் கருத்துகளாய் சமைத்தெடுத்து, எனது சாப்பாடு மேசையில் விளம்பி எனக்கு அதுவே ஊட்டி விடுகிறது.

மூளை செரித்துருவாக்கும், கருத்துகள் உடலை உலுக்குவதை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அவைகள், சிந்தனையை குழப்பி செயலற்றதாக்கி விடும், உடலின் கட்டுப்பாட்டை ஈவிரக்கமின்றி உணர்ச்சிகளுக்கு கொடுத்துவிடும் (Eagleman, The Brain: The Story of You), இதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதே நிலைதான் இப்போதும். இதுவரை கடந்து வந்த பாதைகளின் நினைவுகளை அது நொடிப்பொழுதில் அழித்து விடுகிறது. வாழ்வின் சாதனைகளாக (நான் நினைப்பவை, நீங்கள் அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. எனது சாதனைகள் உங்களுக்கு வீழ்ச்சிகளாகப் படலாம்) கொண்டிருப்பவற்றை எல்லாம் அது முற்றிலும் துடைத்தெடுத்து விடுகிறது. ஆற்றின் பெரும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நீந்தத் தெரிந்தவனாக நான் மாறிவிடுகிறேன். பற்றிக் கொண்டு கர சேர்ந்திட மரத்துண்டுகள் ஏதுமில்லை என்னும் இருத்தலியல் சிக்கல் வந்து விட்டது. கரைகளுமில்லை, கால்பதிக்க நிலங்களுமில்லை என்னும் இருத்தலியல் சார்ந்த அலைகளில் நீந்துகிறேன். நீந்தத் தெரிந்திருக்கா விட்டால் சிக்கல்கள் இல்லை. பார்வையுடையவன் காரிருளில் சிக்கித் தவிக்கும் நிலை எனக்கு. பார்வையில்லையென்றால் அங்கும் சிக்கல் இல்லை. நிலநடுக்கத்தில், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி, நனவு திரும்பியவனின் நிலை எனக்கு. அங்கும் நினைவு திரும்பவில்லை எனில் சிக்கல் இல்லை. வாழ்வின் அகவைகள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சாதனைகளை மழுங்கடிக்கும் உணர்ச்சிகள், வீழ்ச்சிகளின் கணக்கை அடுக்கிக் கொண்டே செல்கிறது. அது அகவைகளுக்க ஏற்ப அதிகரிக்கிறது. விழுந்த பொழுதுகளின் நினைவுகளை ஏன் எழுத்துகள் தோண்டி எடுக்கின்றன என்று பிடிபடவில்லை. எழுத்தின் ஆட்சி நடக்கிறது. அதன் சர்வாதிகராம். அது, சாதனைகளின் சரித்திரங்களை கோர்வைகளாக்கும் வித்தையை மறந்து விட்டிருக்கிறது. நொடிப்பொழுதில் சாவைத் தேடும் நிலைக்குத் தள்ளி விடுகிறது. இல்லையென்றால் இருத்தலை அழிக்கும் மாற்றுப் பாதைகளை தேடிடத் தூண்டுகிறது. நொடிப்பொழுது என்றில்லை, நீண்ட நேரம் நீடித்து விடுகிறது. அகவைகள் அதிகரிக்க அதிகரிக்க, எழுத்துகளின் ஆட்டம் நீண்டதாகி விடுகிறது. போராடும் திராணியை நான் இழந்து விடுகிறேன். பொழுதுகள் அதிகரித்து, சில வேளைகளில் அது மணிக்கணக்காயும் நாள் கணக்காயும் நீடித்து விடுகிறது. அகவைக்கு ஏற்ப எழுத்துகளுக்கு வீரியம் அதிகரித்திருக்கிறது என்று சொல்லுதலே தகும்.       

இப்போது, நான் எழுத்தை ஆசிரியரிடமிருந்து ஏன் பிரித்தேன் என்று சொல்வதற்கான தருணம். செந்நீரும், உடலும் உடைய அம்மனிதர் என்னை பொறுத்தவரை துடிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போதும் அவர், எழுத்துகளை கோர்வையாக்கி ஏவிவிட்டு விட்டுவிட்டு, அவற்றை அனாதை ஆக்கிக் கொண்டிருக்கலாம். அதெல்லாம் எனது கவலையல்ல. அவர் எனது உறவு. அவரை நான் அன்பு செய்தாக வேண்டும். அன்பு செய்யாமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். இயல்பே அப்படித்தான் என்கிறார், கிறிஸ்தவ இறையியலார் அக்குயினாஸ். நான்கு சக்கர வாகனத்தின் நான்கு சக்கரங்களும் ஒரே நிலையில், திசைநோக்கி இயங்கிட அவற்றை சீர்செய்வதுண்டு. இல்லையென்றால் சிக்கலாகி விடும். ஒன்று வடக்காகவும் இன்னொன்று தெற்காகவும் திரும்பி நின்று கொண்டால் வாகனத்திற்கு சிக்கல் ஏற்படும். துணிந்த பயணமும் கைகூடாது. ஆகையால், நல்லவை செய்வதற்கென்றே நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பது அவரது வாதம். அவ்வியல்பு எனக்குள் இயங்குவதாகவும் உணர்ந்திருக்கிறேன். அன்பு செய்யும் போது, மனம் அமைதி அடைந்து செயல்கள் சீர்மை பெறுவதாகவும் காண்கிறேன். என் உறுப்புகளுக்குள் அது செயல்படுகிறது என்பது தெரியும். ஆகையால், எழுத்துகளை ஏவி விட்ட மனிதரை எழுத்திலிருந்து பிரிக்க முடியுமே ஒழிய அம்மனிதரை என்னால் பிரிக்க முடியாது. அவர் ஏவிய எழுத்துகள் அனைத்தையுமே அப்படியேப் பார்க்க நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

இரண்டாவதாக, அவரோடு நான் திரும்பவும் உறவுகளை ஏற்படுத்தி வாழ்வை நகர்த்த வேண்டும் என்னும் சமூக வாழ்வின் நிர்பந்தம் எனக்கு இருக்கிறது (social living). எழுத்துகளை கோர்வையாக்கி, எழுத்துகளை அம்புகளாக மாற்றியவரை நான் அன்பு செய்தாக வேண்டும். அவரை நான் நாளையும் பார்க்க வேண்டும், உறவாட வேண்டும், பண்டமாற்றம் செய்ய வேண்டும். அவரிடம் நான் வெறுப்பு காட்ட முடியாது. "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கூறுகிறாய்" என்று என் நேர்மையை நீங்கள் உங்கள் எழுத்துகளால் கழுவேற்ற வேண்டாம். அப்படியெல்லாம் இல்லை.

மேலும் சிலர் கேட்கலாம். நீங்கள் ஏன் எழுத்துகளை வைத்து உங்களையே குழப்பிக் கொள்ள வேண்டும். அவரிடமே விளக்கங்களைக் கேட்டு தெளிவு பெறலாமே? அவரின் எழுத்துக்களுக்கான விளக்கம் அவரிடம் கேட்கும் மனநிலை இல்லை. அவர் தரும் விளக்கங்கள் என்னை திருப்திப்படுத்துமா? உள் மனதில் ஊசிபோல் தைத்திறங்கி, ரத்தம் கசிய வைக்கும் கூர்மையான எழுத்துக்கள் அங்கே குடியிருப்பதால், திருப்திப்படுத்தாது என்பதே என் விடை. ஆகையால் எழுத்துகளை ஏவியவர்களை நான் மறந்து விடுகிறேன்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்