அவ்வீதி வழியாக நான் நடக்கத் தொடங்கினேன். அதற்கென தனிச்சிறப்பு உண்டு. அது மகளிருக்கான பேருந்து என்பது போலவும், பெண்களுக்கான தனி தொடர்வண்டிப் பெட்டிப் போலவும், பெண்களுக்கானது. பெண்கள் மட்டும் எனும் போது, ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆண் குழந்தைகள் பெண்களின் வீதியில் வாழ்வது எளிதாக இருக்கிறது. அதில் ஆண் குழந்தைகளுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆண்கள் மட்டும் வாழும் வீதியில், பெண் குழந்தைகள் வாழ விரும்புமா? அல்லது அவர்களை நம்பி விட்டு விட முடியுமா? என்றால் முடியாது என்பதே பொதுவான விளக்கமாக இருக்கும். “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று” என்னும் இயக்குநர் ராமின் வார்த்தைகள் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா என்றுத் தெரியவில்லை.
அப்படிப்பட்ட வீதியில் ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்துக் கொண்டிருந்தேன். எனக்கு வயது 10 மட்டும் என்பதால் அச்சிறப்பு அனுமதியை நான் பெற்றேன். அவள் என் தாய் அல்ல, என் சகோதரியும் அல்ல. அவள் பூப்பெய்தி இருந்தாள். அதுத் தெரியும். அவள் திருமண வயதை அடையவுமில்லை. அவள் வன்புணர்வு செய்யப்பட்ட கன்னி என்பது உறுதியாய்த் தெருந்தது. என் கரங்களைப் பிடித்து அழைத்துச் செல்வதில் அவளுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. பார்த்தப் பெண்கள் எல்லாரும் பாசமழை என்மீது பொழிந்துக் கொண்டிருந்தார்கள். ஆரத்தழுவினார்கள், முத்தமிட்டார்கள், தாங்கள் தின்றுக் கொண்டிருந்த தின்பண்டங்களை எனக்கு ஊட்டிவிட்டார்கள். அதில் காமம் இருக்கவில்லை என்றுத் தெரியும். ஃபிராய்ட் கூறிய காம்பிளக்ஸ் ஏதாவது இருந்திருந்தாலும், அது வன்மமாகக் தென்படவில்லை.
photo: pixabay.com
ஆண்கள் கோலோச்சும் உலகில் நான் அனாதையாக விடப்பட்டேன். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் விசித்தரமான உலகில் என் தாயும் வாழ்ந்தாள். மீசையை முறுக்கி ஆண்மை காட்டும் அந்த ஆணுடன் அவள் வாழ்ந்து வந்தாள். அப்பா என்று அழைக்க நான் அம்மாவால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தேன். நானும் எவ்வித மறுப்பும் இன்றி அவ்வாறே அழைத்தும் வந்தேன். அந்த ஆணுக்கு புஜபலம் உண்டு. பிறரை துன்புறுத்துவது இயல்பாக அவனுக்குக் கைகூடியிருந்தது. அடித்தல், உதைத்தல், கைகளை சேர்த்துப் பின்னால் இழுத்துப் பிடித்தல், இரு கால்களுக்கு இடையே அமுக்கி வைத்தல், சுவரோடு சேர்த்து குரவளையை நெரித்தல், ஆடைகளைக் கிழித்தெறிதல் எல்லாம் செயற்கையின் எவ்வித சீண்டல்களும் இல்லாமல் தோல் போல் அவனிடம் ஒட்டிப் போய் இருந்தது. அம்மா அந்த ஆணின் வீட்டில் வாழ்ந்தாள், அதுவும் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தால் என்றால் அது ஓர் அசாதாரணக் காரியம் தான். கண்களை மூடிக் கொண்டு பாதாளச் சிறைவாசம் எப்படி இருக்கும் என்பதை வரலாற்றுச் செய்திகளை விவரிக்கும் வரிகள் வழியாக கற்பனைச் செய்துப் பார்ப்பதுண்டு. அதன் தீவிரம் இதில் செலுத்திப் பார்க்கும் போது என் அம்மா வாழ்ந்த வாழக்கைச் சூழல் ஏற்க முடியவில்லை. அவன் எந்த மிருகத்தின் உருவைப் பெற்று மாலை வேளையில் வருவான் என்பது யூகிக்க முடியாத மர்மம். சீறிப்பாய்ந்து வரும் சிங்கம் போல வரலாம். கையில் கிடைத்தப் பூவை துவம்சம் செய்யும் குரங்குப் போல் வரலாம். பாம்பு போல் ஊர்ந்து வரலாம். எதைப் பார்த்தாலும் வாயை அகல விரித்து பற்களைக் காட்டி கொலைவெறியுடன் குரைக்கும் வெறிநாய் போல் வரலாம். அவன் வருகையில், அம்மாவின் மடியில் இருக்கும் சாதுவான பூனை ஓடி ஒளிந்து கொள்ளும். அவனின் கூடா ஒழுக்கம் அத்து மீறி, காவல் நிலையத்தை ஒட்டி வாழ்ந்த ஒருவளை சொந்தமாக்க, அவளின் கணவனை பொய்க் கொலைக்குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்பும் நிலையை எட்டியது. அதை அறிந்த அம்மா ஏதோ கேட்க முயல அறை ஓங்கி விழுந்தது. மயங்கியவள் பிறகு எழும்பவில்லை. ஆண்களின் உலகில் நான் வாழ வேண்டாம் எனத் தீர்மானித்தப் பாட்டி என்னுடைய கரங்களைப் பற்றி, பெண்கள் வாழும் வீதியில் விட்டுச் சென்றாள். என்னைப் பற்றிப் பிடித்திருந்த அந்த பூப்பெய்தியப் பெண் என்னை இறுக்கமாகப் பற்றி வைத்திருந்தாள்.
தூய்மையான அன்பு வாழ்கிறது என்பதை உரைத்தவாறு அவ்வீதி தொடங்கும் இடத்தில் தூய்மையான நீர் பாயும் ஓடை ஒன்று அமைந்திருந்தது. அதுவே அவ்வீதிக்கான வேலியாக அமைந்தது. அதைத் தாண்டி ஆண்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்னும் சட்டம் இருந்தது. அதை யாரும் மீறியதாக தோன்றவில்லை. என்னைப் போன்ற பல சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல சிறுமிகளும் அங்கே விளையாடினர். அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்.
என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்ற அப்பெண்மணி இடுக்கமான பாதையில் முன்சென்று, இடதுபுறத்தில் இரண்டாவதாக இருந்த மாடிப்படி வழியாக மேலே அழைத்துச் சென்றாள். இடுக்கமாக இருந்தன அப்படிகள். உள்ளே நுழைந்ததும், அந்த அறை பெரிதாக இருந்தது. அங்கே சோபாக்களோ இருப்பதற்கு இருக்கைகளோ இல்லை. விசாலமான அறையில் எவ்விடத்தில் வேண்டுமென்றாலும் இருக்கலாம். அங்கே தடைகள் இல்லை, தடுக்கும் சட்டங்களும் இல்லை. எதை வேண்டுமானாலும் தொடலாம், எடுக்கலாம், அவற்றோடு உறவாடலாம். அதில் படுப்பதற்கு என்று தனி அறை ஏதுமில்லை. ஒரே அறையில் எங்கு வேண்டுமானாலும் படுக்கலாம் என்னும் நிலையில் இருந்தது. துணிகளில் சில அடுக்கி வைக்கப்பட்டிருந்தன சில விரிக்கப்பட்டுக் கிடந்தன. ஆனால் எல்லாம் அழகாய் இருந்தது. காசும் பணமும் அங்கேக் கிடந்தன. அவை பெட்டிகளுக்குள் இருந்து மூச்சிரைக்காமல் காற்றை சுவாசித்து வெளியேக் கிடந்தன. என்னை அழைத்து வந்தவள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்டிருக்கிறாள், என்னைப் போன்றதொரு பையன் வேண்டுமென்று. ஐந்து வயது முதல் ஏழு வயதுக்குள் இருக்கும் சிறுவன் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் அது கிடைக்கவில்லை. நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இப்போது நான் கிடைத்திருக்கிறேன். தூய்மையான அன்பை என்மீது பொழிந்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் அவளுடைய அப்பாவை மிகவும் நேசித்திருந்தாள். அப்பாவின் தோள் மீது ஏறியிருந்து பயணிக்க அவள் ஆசைப்பட்டிருக்கிறாள். சைக்கிளின் முன்னால் அப்பாவின் இரு கைகளுக்கு இடையில் கம்பியில் அமர்ந்து பத்திரமாகப் பயணிக்க விரும்பியிருக்கிறாள். அம்மா ஊட்டி விடுவதைப் போல அப்பாவும் ஊட்டி விட வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறாள். பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று விட வேண்டும் என்றும் ஆசித்துக் காத்து நின்றிருக்கிறாள். தனது ஆசைகள் அனைத்தையும் அவள் தன் தாயிடம் கூறியிருக்கிறாள். அப்பாவால் அவற்றைச் செய்ய முடியாது என்பதும் மென்மை என்பது அவனிடம் துளி அளவும் இல்லை என்பதையும் கூறிப் புரிய வைக்க அவளால் முடியவில்லை. அன்றாடம் இரவு அனுபவிக்கும் வன்மங்களால் மகளிடம் விவரிக்கும் மொழி அவளுக்கு வசப்படவில்லை. வசப்படவில்லை என்பதை விட, அத்தகைய மொழிக்குறியீடுகளை உலகின் மொழிகள் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, வேலை பழு அழுத்தம் அதிகம் என்றெல்லாம் கூறி சமாளிக்கும் மொழிகள் அவளுக்கு சமூகம் கற்றுக் கொடுத்திருந்ததால் அவற்றின் உதவியோடு மகளின் மனதை தேற்றினாள்.
ஒருநாள் மகள் மூலையில் உடைந்து கிடப்பதை வேலைக்குப் போய்விட்டுத் திரும்பியவள் பார்த்தாள். காலில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. நினைவிழந்து கிடக்கும் மகளின் ஆடைகள் கிழிக்கப்பட்டுத் தொங்கிக் கிடந்தன. நகத்தாலான கீறல்களை உடலெங்கும் கண்டாள். அவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். அவனின் செய்கைகளும் பார்வைகளும் அவளுக்கு இதை பல வேளைகளில் உணர்த்தியிருக்கின்றன.
அவனைக் கொன்ற அம்மாவை சிறைக்குக் கொண்டுப் போகும் போது, தூய நீர் பாயும், அந்த ஓடையின் வேலிகளைத் தாண்டி மகளை விட்டுச் சென்றாள். ஆணை மென்மையாக அன்பு செய்ய இப்போது அவளால் இயன்றது இப்போது. நான் மகிழ்வுற்றுக் கிடந்தேன் அங்கே. தூய்மையான அன்பை சுவைத்தவாறு.
0 கருத்துகள்