அம்மாவாகப் பேசத் தொடங்கி அவளாகவே கதைகளைப் பேசித் தொடர்வாள். அப்பா சென்றபின் பல கதைகளும் சொல்வதுண்டு.
"அப்பாவை கடவுள் அழைத்து வந்தார் ஒருநாள். அப்பாவுடன் அருட்தந்தை சிரியக் கூட்டும்மேல் அவர்களும் உண்டு. அவர் இப்போது இறந்த போயிருப்பார். ஆனால் அவரும் வந்திருந்தார். கடவுள் தன் உடலை முழுமையாக மூடியிருந்தார் வெண் ஆடையால். அவரின் முகத்தை தெரியவில்லை. உடல் பாகங்களும் காண முடியவில்லை. அவர் வீட்டு மனையின் வாசலைத் தாண்டி உள்ளே நுழையவில்லை. அப்பாவை உள்ளே அனுப்பி வைத்தார். பிறகு கடவுள் சென்று விட்டார். இப்போது எனது அறையில் வழக்கமாக அப்பா தூங்கி வந்த கட்டிலில் படுத்துத் தூங்குகிறார். அடிக்கடி அவர் அங்கே இருப்பதற்கான தடயங்களாக சில முனகல்களும், கட்டிலில் திரும்பிப் படுக்கும் போது ஏற்படும் சத்தங்களும் கேட்பதுண்டு. அவை அப்பா அங்கே இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர் இங்கே தான் உண்டு. சில வேளைகளில் வெளியே சென்று ஜன்னல் வழியாக கதவைத் தட்டுகிறார். தட்டிவிட்டு வேறு பல ஓசைகளையும் எழுப்புகிறார். 'வந்து உள்ள படுங்க, அங்க என்ன சத்தம் எழுப்புறீங்க' என்று நான் கேட்பதுண்டு. கடவுள் வெண் ஆடைதான் உடுத்தியிருந்தார் அன்று. முழுவதுமாக மூடியிருந்தார். உடல் உறுப்புகள் எதுவும் தெரியவில்லை.
'சீனாய் மலைமேல் மோசே ஏறிச்சென்றார். கடவுளின் மோசே தனது ஆசையை வெளிப்படுத்தினார். எனக்கு உமது முகத்தைக் காண வேண்டும். கடவுள் கூறினார்: 'நீ பேசு, நான் கேட்கிறேன்."
அம்மா ஆன்ம நிறைவில் வாய் நிறைய சிரிக்கிறார்கள். பிறகு தொடர்கிறாள்.
"சாமியாரப் பார்த்துவிட்டு இப்ப வருவேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றவர் திரும்பவில்லை.
மோசே கடவுளின் முகத்தை என்றுமே கண்டதில்லை. மோசேயைத் தாண்டி கடவுள் நடந்து சென்றார், மோசேக்கு அவர் தம் பின்புறம் மட்டும் காட்டினார் (விடுதலைப்பயணம் 33:17-23)
"நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” (விப 33:17-33). அம்மா சொன்னது உண்மைதான் என்று உணர்கிறது மனது.
புத்தியால் சிந்தனை செய்து கோர்வையாக்க முடியாத உண்மைகளுடன் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
0 கருத்துகள்