கோடை காலத்தில் கோவிலில் பத்து நாட்கள் மறைக்கல்வி Intensive வகுப்புகள் நடைபெறும். அன்று படித்தவை வாழ்வாகிப் போயிருக்கலாம். ஆனால் மூக்கால் நுகர்ந்த சாப்பாட்டின் மணம் நினைவில் நிற்கிறது. அத்தோடு அதை விளம்புவதற்காக காட்டு பாதம் மரத்தின் இலைகளை, பச்சைக் கொம்புகளை முறித்து சேகரிக்கும் நேரத்தையும் மறக்க முடியவில்லை. எங்களுடைய வகுப்பு, கோவிலுக்குள் வைத்து தான் நடைபெறும். ஜன்னல் வழியாக, வெளியே நடப்பவற்றை அறிந்திட இயலும். வறுத்த மஞ்சள் மாவின் மணம், அல்லது கோதுமையில் தாளிப்பதின் மணமும், அத்தோடு அண்ணன்களின் இலை சேகரிப்பும் சேரும் போது அன்று உண்டான உடல் அதிர்வுகள் ஏனோ இன்றும் நீங்கவில்லை. இது கோயிலிலிருந்து சிறு நினைவு. அனைவரும் வராந்தாவில் சரிசமமாய் இருந்து உண்போம்.
எங்களுக்கு 20 சென்ட் வயல் இருந்தது. அதில் நெற்பயிர் செய்வதுண்டு. எங்களுடைய முழு குடும்பத்தின் உழைப்பும் அதில் இருக்கும். அப்பா, அம்மா, அக்காமார்கள், அண்ணன் என அனைவருடையவும். அங்கே, நிலம் உழுவதற்காக எனக்கு நினைவுக்கு வருவதற்கு முன்னால், அப்பா ஏர் வைத்திருந்தார். மாட்டுத் தொழுவத்தின் ஓரத்தில் அது மழை நனையாமல் ஒதுக்கு வைத்திருந்த நினைவு மட்டுமே உண்டு. இப்போது உழுவதற்கு வருபவர்கள், வேறு மனிதர்கள். அவர்கள், காளைகளை வைத்திருப்பதில்லை, எருமை மாடுகளை வைத்திருந்தார்கள். அப்பா அவர்களோடு சேர்ந்து வேலை செய்வார். பள்ளிக் கூடம் இல்லாத நாட்களில்தான், உழவு நடக்கும். நாங்கள் 10 மணிக்கு மரச்சீனிக் கிழங்கும், இடித்த மிளகாயும் உப்பும் எடுத்துச் செல்வோம். அங்கிருந்து அவர்களோடு சேர்ந்திருந்து உண்ணுகின்ற சுகம் அலாதி. துண்டு வாழை இலைகளை வெட்டி, கீழே போட்டு, உழுகின்ற மனிதர்களும் நாங்களும் சரிசமமாக சேர்ந்திருந்து உண்போம். இயேசுவின் சமபந்தி விருந்து போல. அவர்களுகளுடைய வீடுகளுக்கு நாங்கள் செல்வதில்லை. சாதிய கட்டமைப்புகள் அப்படி இருந்தது. அவர்கள் வீட்டு விஷேசங்களுக்கு, அன்றைய தினம் போவதில்லை, முந்தைய தினம் செல்வதுண்டு. உழைக்கும் இடத்தில் சரிசமமாக இருந்து உண்பது இன்று நினைவில் இருக்கிறது. அப்பாவுக்கு சிறிதும் தீண்டாமை என்பது இல்லை. அம்மா இடையிடையே வெளிப்படுத்துவண்டு. அப்பா, கம்யூணிஸ் பார்ட்டியில் இருந்தார். எங்கள் வார்டுக்கு அவர் தான் மெம்பர், மும்பர் என்று மக்கள் பொதுவாக அவரை அழைப்பார்கள். நாங்கள் மும்பரின் மக்களும். மதியம் கஞ்சி தான் கொண்டு செல்வோம். எல்லாரும் வயலிலில் இருந்தால், அங்கேயே கஞ்சி வைக்கும் பழக்கமும் உண்டு, பயிறு பூண்டு, வெள்ளைப்பூண்டு, சில வேளைகளில் பலாக் கொட்டையின் பருப்பு போன்றவை எல்லாம் போடுவதுண்டு. சற்றே கெட்டியானதாக மாற்ற வேண்டும் என்றால் பலாக் காயின் சுளைகளையும் போடுவதுண்டு. அத்தோடு, தேங்காய் சட்னி (சம்மந்தி) இடிப்பார்கள். அது தேங்காய் சிரட்டையில் வைத்துக் கூடப் பண்ணுவதுண்டு. அக்கஞ்சியும் சமபந்தி சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே இருக்கும். அதற்கும் இலைகள் முறித்து எடுத்துக் கொள்வோம். வயிலிருந்து ஏறி, வர்ம்பில் அம்ர்வதுண்டு. வரம்பில் சற்று விசாலானமதாக இருக்கும். தென்னை மரங்களை அதில் நட்டுவைப்பதுண்டு. வயல் ஒருவர் வைத்திருந்தால், வரம்பு வேறு ஒருவருக்கு உரிமையானதாகக் கூட இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரைக்கும் அது அப்பிடித்தான். இருக்கும் இடத்தை சுத்தம் செய்து, ஒவ்வொருவரும் கையளவு மண் சேரும் அளவுக்கு குழி எடுத்து விட்டு, அதில் இலையை வைத்து அதன் மேல் கஞ்சியை ஊற்றுவார்கள். இலை, சூடின் தாக்கத்தால் சற்றே வாடி, கிழியாமல் நடுப்பகுதிய குழிக்குள் இறங்கும். பிறகு பலா மர இலைகள், ஸ்பூணுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும். அதிலிலும், உழுபவர்களும், முதலாளிகளான நாங்களும் (20 சென்ட் நிலத்திற்கு முதலாளிகள்) சேர்ந்திருந்து கஞ்சி அருந்துவோம். எங்கள் பாஷையில் கஞ்சி குடித்தல் என்றே அறியப்பட்டிருக்கிறது. அதிலும் உணவில் பேதமைகள் இல்லை, இயேசுவின் சமமந்தி அங்கேயும் நடத்தது.
இனியும் சமபந்திகள் உண்டு. எங்கள் வீட்டின் வராந்தா நீண்டு கிடக்கும். இது திண்ணையல்ல வராந்தா, மண்ணால் கட்டப்பட்ட வீட்டைச் சுற்றி அப்பா தத்ரூபமாக அமைத்த கல் வராந்தா. அது இருந்தால், வீட்டின் சுவர்களில் தண்ணீர் இறங்கி வீடு இடியாமல் இருக்கும். எங்களுக்கு வராந்தாவில் இருந்து உண்பது பிடிக்கும். காரணம், பூனை, நாய், கோழி என எல்லாம் அங்கே உண்டு. நாங்கள் உண்ட கையை உதறினாலே, கோழிகளுக்கு ஆரவாரம். நாய்க்கு உணவு போடும் ரகமே தனி. மீன் முள்ளை தூக்கி எறிந்தால் அது குதித்து கவ்விப் பிடிக்கும். பூனைக்கு மீன் வைத்து விட்டு, அதனுடைய உடலைச் சற்றுத் தொட்டால், அது எழுப்பும் உறுமல் தனி ரகம். அதைக் கோபம் கோள்ள வைப்பதில் ஒரு தனி சுகம் (பிறர் கோபப்படுவதைப் பார்க்கையில் இப்போதும் சுகம் ஏற்படுவதுண்டு. இது அங்கிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும்). பிறகு தொழுவத்தில் பசு, கண்ணுக்குட்டி. அவை நம்மைப் பார்க்கும். அதில் இருந்து உண்பதல்லவா தனி சுகம். இது மட்டுமல்லாமல், யாராவது உணவு கேட்டு வந்திருப்பார்கள். சாதாரணமாக வீட்டுக்குள் வரமாட்டார்கள். அவர்களும் அந்த வராந்தாவில் இருந்து உண்பார்கள். நாங்களும் தான். அம்மாவுக்கு சில வேளைகளில் இது பிடிக்காது. அப்பாவைப் பார்த்தால், உணவுப் பாத்திரத்தைத் தூக்கிக் கொணடு உள்ளே ஓடுவோம். அங்கேயும் சமபந்தி தான். உணவுக் கேட்டு வந்திருப்பவரின் கையில் இருப்பதும் எங்கள் கைகளில் இருப்பதும் அதே ஸ்டீல் தட்டு தான். உள்ளே இருக்கும் உணவும் அதே உணவு தான். சமபந்தி தழைத்தது. இயேசுவும் அங்கே வாழ்ந்திருப்பார்.
இன்று மேஜை மீது ஏராளமான உணவு வகைகள். கையில் ஸ்பூண் போர்க். அவருக்கென தனி இருக்கை உண்டு. அவருக்கென தனி பாத்திரம் உண்டு. அவருக்கென மூஞ்சியைத் துடைக்கத் தனி துண்டுத் துணி உண்டு. அவர் ஸ்பூணும் போர்க்கும் பிடிக்கும் விதத்தைப் பார்த்தால் ஏதோ, அரசன் செங்கோலும் முடியம் சூடி ஆசனத்தில் இருப்பது போல் இருக்கம் (இது என்னுடைய தோற்றப் பிழையாக இருக்கலாம்). அவர் உண்பதைப் பார்க்கும் போது, இவர் பேப்பர் எல்லாம் அடுக்கி ஒழுங்குப் படுத்தும் அலுவலகப் பணி செய்கிறாரா? என்னும் தோற்றப்பிழை எனக்கு ஏற்படுவதுண்டு.
அங்கே வடிவேலு காமடி போன்று, கோழி, ஆடு, மாடு, மீன் என வகை வகையாக மிருகங்கள் டேபிளின் மீது செத்துக் கிடக்கும். அதே வேளியில் இன்னொரு கூட்டம் உணவு உண்ணும். அவர்களுக்காக மிருகங்கள் எதுவும் சாவதில்லை. உருளைக்கிழங்கும் கொஞ்சம், பெரிய வெங்காயமும், தண்ணீரும் உயிர்களை தியாகம் செய்யும். உள்ளே பீங்கான்கள் மின்னுகையில் வெளியே, பேப்பர் பாத்திரங்கள் சூரியனின் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருக்கும். இயேசுவை தேடிக் கொண்டிருந்தேன். அவர், பேப்பர் பாத்திரம் கையிலேந்தி, உருளைக்கிழங்கை தண்ணீரில் கலந்த தண்ணீர் ஊற்றிய சப்பாத்தியை, கல கல வென சிரித்துக் கொண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து உண்டுக் கொண்டிருந்தார். அவரின் அதிகாரம் முழுவதும் கொண்டவராக நினைப்பவர், செத்த மிருகங்களை, சிலை செதுக்குவது போல் செதுக்கி வாய்க்குள் உந்தித் தள்ளிக் கொண்டிருந்தார். அவர்களின் சிரிப்பைத் திருடி இயேசு, தன்னைச் சுற்றியிருந்த குழந்தைகளுக்குக் கொடுத்த வண்ணம் இருந்தார்.
ஒரு பையன் ஆர்வக் கோளாறால் உள்ளே நுழைந்து விட்டான். மிருகங்கள் செத்துக் கிடந்த அறையில். விரட்டப்பட்டான். இந்த டேபிளுக்கு அவனுக்கு அருகதை இல்லை என்று தீர்ப்பெழுதி விட்டார்கள்.
இயேசுவின் சமபந்தி வாழ்க...
0 கருத்துகள்