இயேசுவிடமிருந்து பார்வை பெற்ற பார்த்தமேயு என்னும் மனிதரைப் பற்றி ஒத்தமை நற்செய்தி நூல்கள் மூன்றும் கூறுகின்றன. மாற்கு தனது விவரணத்தில், பார்த்தமேயு குரல் எழுப்பி இயேசுவை நோக்கி கத்திக் கூறியதாகக் கூறப்படுகிறது. பார்வை வேண்டும் என்பது அவனது கோரிக்கையாக இருந்தது. இதைக் கேட்டப் போது கூட்டத்தினர் பேசாதிருக்குமாறு அதட்டினர். அவனுடைய திசையை இயேசுவிடமிருந்து திருப்புவதற்காகப் பார்த்தார்கள். ஏராளமான குரல்கள் எழும்பின. ஆனால், அவன் இயேசுவை நோக்கி குரல் எழுப்புவதை நிறுத்தி விடவில்லை. அவனது குரல் இயேசு கேட்டார் பதில் அளித்தார், நலம் அடைந்தான்.
இப்போது, YouTube இல் பிரசங்கிங்களின் அதிப்பிரங்கித்தனம் பெருகி விட்டது எனலாம். நிறைய பேர் இயேசுவிடமிருந்து நேரடி தரிசனம் பெற்று வருகிறார்கள். அவர்களே இயேசு என்பதை சொல்லாமல் சொல்லிப் போகிறார்கள். இதை நம்பி YouTube கத்தோலிக்க விசுவாசத்தை வளர்த்துக் கொள்பவர்களைப் பார்க்கும் போது, அச்சமாகவே இருக்கிறது. கலாச்சாரம் சுமந்து கிடக்கும் நச்சுக்களில் மூழ்கிப் போய், நச்சு எது அமுதம் எது என்றுத் தெரியாமல், நற்செய்தியை விஷத்தில் குழைத்துக் கொடுப்பதாகவேத் பலரும் தென்படுகிறார்கள். பெண்களை அவர்கள் சித்தரிப்பதைப் பார்க்கும் போது, காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல் உள்ளது. எவ்வளவு அசிங்கங்கள். விட்டுவிட்டால், ஒவ்வொரு பெண்களின் மானத்தைக் காப்பதற்காக இவர்களே துணிகளை தைத்துக் கொடுப்பார்கள் போல. தாங்கள் பெரியவர்கள் என்றும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்னும் காட்டிக் கொள்வதில் தான் எவ்வளவு அக்கறை. கேள்வியாளர்கள் எல்லாம் பாவத்தில் மூழ்கி மடிந்துக் கொண்டிருக்கிறார்கள், இல்லையென்றால் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவதில் அவர்களுக்கு அலாதி சுகம் போல. பேச்சுச் சுகம் போல. இதைக் கேட்பவர்களும், கேட்பதிலியே வாழ்வை கழிக்கிறார்கள் போல. கேட்டுக் கொண்டே ஆன்மீகத்தில் மூழ்கிப் போய் கிடக்கிறார்கள். YouTube செய்தியைக் கேட்பதால் அவர்கள் ஆன்மீகத்தில் முத்தியை அடைந்து விட்டார்கள் என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கிடக்கிறார்கள் போலும். பவுலடியார் திமொத்தேயுவுக்கு எழுதியவை பலிக்க ஆரம்பித்தனவோ எனும் அச்சமே ஆட்கொள்கிறது. பவுல் எழுதுகிறார்,
"ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.
உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்" (2 திமொ 4, 3-4).
வயிற்றுக்காக வாழ்பவர்களைப் போல, செவிக்காக வாழ்கிறவர்கள். நாக்குக்கு சுவையானவற்றை உண்டு உடலைப் பெருக்குவதைப் போன்று, செவிக்கு சுவையாக இருப்பவற்றை கேட்டு, ஆன்மீகத்தைப் பெருக்குபவர்கள். இல்லையென்றால் அப்படிக் காட்டிக் கொள்பவர்கள். WhatsApp யூனிவேர்சிட்டிப் போல, YouTube ஆன்மீகக் கடலில் மூழ்கிக் கிடப்பவர்கள் சிலவற்றை மனதில் வைத்தல் நன்று.
1. செவித்தினவு ஆன்மீகம் அல்ல. அது, ஒரு சுகம், போதை. நாம் காப்பாற்றப்பட்டோம், நாம் இரட்சிக்கப்பட்டோம், இத்தகைய போதனைகளை கேட்காதவர்கள் எல்லாம் பாவத்தில் வாழ்கிறார்கள், நாம் மற்றவர்களை விட நல்லவர்கள் போன்றவை எல்லாம் ஒருவகை போதை. நான் நல்லவள் என்று புல்லரிக்க வாழ்வது அறியாமை. இயேசு அன்பில் வளரத்தான் சொன்னார். வெறுப்பில் வளரச் சொல்லவில்லை. பிறரை விட நான் நல்லவள் என்று சொல்லி, தங்களைப் போல இல்லாதவர்களை எல்லாம் இழிவாகப் பேசுதல் ஒருவகை நோய். அது மருந்தல்ல, விஷம்.
2. ஒவ்வொரு மனிதரும் மண் சார்ந்தவர்கள். அதாவது, இம்ண்ணின் இயல்புகளைக் கொண்டவர்கள். ஆகையால், அம்மண்ணில் கலாச்சார நம்பிக்கைக் கூறுகளைக் கொண்டவர்களாகத் தான் வளர்கிறார்கள். கலாச்சாரம் நல்லது. ஆனால், அதற்குள் விஷம் உண்டு, அடிமைத்தனங்கள் உள்ளன. இயேசு, விடுதலையின் நாயகன். அடிமைத்தனத்தின் சுவர்களை எல்லாம் தகர்த்தவர். ஆண் பெண் சரிசமம் எனப் போதித்து, அதை வாழ்வாக்கிய புரட்சியாளர். இன்றைய போதகர்களை கலாச்சாரத் தெளிவுகள் இல்லாமல், இயேசுவின் நற்செய்தியை திரித்து, கலாச்சாரம் கொண்டிருக்கும் அடிமைத்தனங்களுக்குள் குழைத்து YouTube வழியாக ஊட்டுகிறார்கள். இயேசு ஒளியாக இருக்கிறார். இருளை போக்க வந்தவர். தெளிவற்றப் போதனைகளுக்கு அடிமையாக வேண்டாம். உங்கள் பிள்ளைகள், இவ்வாறு ஆடை அணிவதால், முடி திருத்திக் கொள்வதால், இப்படி நடை உடை பாவனை கொண்டிருப்பதால் பாவிகள் எனச் சித்தரிப்பது, கலாச்சாரத்தின் முடைநாற்றம் என்பதை விவேகித்தறிவது அவசியம்.
3. நீங்கள் வாசிக்கிறீர்களா? அமைதியாக உங்களால் இயேசுவை மட்டுமே தியானித்துக் கொண்டு 15 நிமிடங்கள் இருக்க முடிகிறதா? இயேசுவின் வசனங்களை உங்களுக்குள்ளே அசை போட நேரம் ஒதுக்குகிறீர்களா? உள்ளெழும் இயேசுவின் குரலுக்கு செவி மடுக்கிறீர்களா? நேரம் ஒதுக்குங்கள். YouTube விளம்பும் குப்பைகளை எல்லாம் அப்படியே விழுங்க வேண்டாம்.
0 கருத்துகள்