திருமுழுக்கு யோவான், நாசரேத்தூர் இயேசுதான் மெசியா
என்பதைப் பற்றியத் தெளிவும் உறுதியும் பெறும் பொருட்டு தன்னுடைய சீடர்களை அவரிடம்
அனுப்பினார். அவர்கள் இயேசுவிடமிருந்து சொற்களோடு செயல்களின் சாட்சியங்களையும்
பெற்றப் பின் திரும்பிச் சென்றனர். அப்போது, இயேசு, மக்கள் கூட்டத்தைப் பார்த்து
சற்றே விசித்திரமான கேள்வியை எழுப்புகிறார்? “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய
ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்” (மத்தேயு 11, 7-8). இவை, திருமுழுக்கு யோவானின்
மாறுபட்ட வாழ்வை மெச்சும் விதமாக அமைகின்றன. அது அக்காலத்தைய தலைவர்கள் மற்றும்
மக்களின் இருமனநிலையையும், உறுதியற்றத்தன்மையையும் விமர்ச்சிக்கும் விதமாகவும்
அமைந்தது. காற்றின் திசைக்கேற்ப அசையும் நாணல் அல்ல திருமுழுக்கு யோவான்; அவர் மெல்லிய ஆடைகள் அணிந்து கொண்டு, வெளிவேடங்கள் அளிக்கும் பளபளப்பின் பின்னால்
இருந்து அதிகாரங்களை வெளிப்படுத்துபவரும் அல்ல; மாறிவரும்
காலச்சூழல்கள் சுமந்து வரும் தீமைகளை வாழ்வியல் நெறிகளாக தன்வயப்படுத்தும் மனிதரும்
அல்ல அவர். உள்சுமக்கும் நெறிகளால், காலமும் அதன் பண்பாடுகளும் சுமக்கும் தீமைகளை
மாற்றி அமைக்க முனைந்த மனிதர். இம்மனநிலையை இயேசு மெச்சுகிறார்.
photo: pixabay.com
இன்றையச் சூழலில், கணப்பொழுதில் பிரதிபலன் எதிர்பார்த்தல்,
இட்டப் பொருளை எப்படியாவது மீள்தல் போன்றவை மேலோங்கி இருக்கின்றன. இதன் விளைவாக,
சமூகத்தில் புரையோடியிருக்கும் ஊழல், மற்றும் சமூகத்தின் மீது கிஞ்சித்தும்
அக்கறையற்ற பின்-தனிமனிதமுதன்மை வாதம் (post-individualism)
போன்றவை கல்வி நிறுவனங்களையும் பாதித்திருக்கின்றன. இதனால், கல்வி
மனிதருக்கானது என்பதும் (வத்திக்கான்
திருச்சங்கம், “இன்றைய உலகில் திருச்சபை”, எண் 35), சமூகத்தை நிரந்தரமாகப் புதுப்பிக்கும் உன்னத நோக்கத்தைக்
கல்வி கொண்டிருக்கிறது (வத்திக்கான்
திருச்சங்கம், “இன்றைய உலகில் திருச்சபை”, எண் 26) என்பதும் மறக்கப்பட்டிருக்கிறது. இது கத்தோலிக்க
நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது. இக்கட்டுரையில், செலவு-பயன் கோட்பாடு (reflexive cost-benefit) மற்றும்
பின்-தனிமனிதமுதன்மை வாதம் (post-individualism) ஆகிய
இரண்டும் விவாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களையும் அலசி, சில
தீர்வுகளையும் முன்வைக்க முயல்கிறது.
நவீன தொழில் நுட்ப கருவிகளின் ஆதிக்கத்தால், கணநேரம்
நீடிக்கும் ‘உண்மைகளின்’ மீதான ஈர்ப்பு பொதுவாகப் பெருகி
இருக்கிறது எனலாம். இக்கருவிகள், எப்படி மனித மூளையைப் பாதித்து, சிந்தனையையும்
செயலையும் இயக்குகிறது என்பதைப் பற்றி ஆடம் ஆல்ட்டர் தமது Irresistible என்னும் நூலில் பேசுகிறார் (Adam Alter, Irresistible: The rise of additive
technology and the business of keeping us hooked, New York, Penguin Press,
2017). இதை அவர்
செலவு-பயன் பிரதிபலிப்புக் கோட்பாட்டின் (reflexive cost-benefit) கீழ் கொண்டு
வருகிறார். ஒருவரை கொக்கிப்போட்டு தனக்குள் கட்டிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது
அவருடைய அனுமானமாக இருக்கிறது. நவீன தொழில் நுட்ப கருகிவிகளான, கணினி மற்றும்
நுண்ணறிவு அலைபேசிகளில் உள்ள செயலிகள், குறிப்பாக விளையாட்டுகள் மற்றும் முகநூல், படவரி (Instagram) போன்ற புது/சிறு ஊடகங்கள் இத்தகைய கோட்பாட்டின் அடிப்படையில்தான்
இயங்குகின்றன. விளையாட்டெனில், உடனடியாக பிரதிபலனை தோல்வி அல்லது வெற்றி என்பதன்
அடிப்படையிலும், சமூக ஊடகம் எனில், likes, comments எனவும் பயனாளருக்குத் தருகிறது. இது ஒருவிதமான போதை போல மாறி பயனீட்டாளரைக்
கட்டிப்போடுகிறது. மிக முக்கியமாக அது உடனடி பிரதிபலனை, அந்நொடிப்பொழுதிலேயேத்
தருகிறது. இத்தகையப் போக்கானது, பொதுவெளியில் உள்ள அனைவரையும் பாதித்திருப்பதோடு,
நற்சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்களையும்
பாதித்திருக்கிறது என்பதை ஏற்றாக வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், “குறைந்த செலவில் வெற்றிகாணும்,
தற்காலிகமான, கணப்பொழுதே நீடிக்கும் வாழ்வியல் மாதிரிகள் நம்மைப்
பாதித்திருக்கின்றன. இதன் விளைவாக, தியாகம் என்னும் புண்ணியம் ஓரங்கட்டப்பட்டு,
உடனடி பிரதிபலன்களை கல்வி தரவில்லை எனில் அது தேவையில்லை என்னும் போக்கை நாமும்
தன்வயப்படுத்தியிருக்கிறோம்” என்று கூறுகிறார் (Christus vivit n.
223). இத்தகைய நொடிப்பொழுதில் கடந்து போகும்
கோட்பாடுகள் ஆனது, கல்வியின் உயர்வான நோக்கங்களான, பாரபட்சமற்ற உண்மைக்கானத்
தேடல், நீதிக்கானத் தாகம், மனிதம் வளர்த்தி பொதுநலன் பேணும் அன்பு போன்றவற்றை
கைநழுவ விட்டிருக்கிறது (காண். இரண்டாம் வத்திக்கான்
திருச்சங்கம், இன்றைய உலகில் திருச்சபை எண் 26). திருத்தந்தை பிரான்சிஸ், “கல்விக்கான உரிமை
என்பது ஞானத்தை பாதுகாப்பற்கான உரிமை” என்று கூறிவிட்டு,
“அறிவு மனிதம் கலந்ததாய் மனிதநேயம் விதைப்பதாய் அமைய வேண்டும்” என்றும்
கூறுகிறார் (Christus
vivit n. 223). இவைகள் ஏனோ, கத்தோலிக்கக்
கல்வியாளர்களிடையேயும் காணவில்லை என்பதே சோகம். குறைந்த காலத்தில் பெரும்
வளர்ச்சி, சமூக ஊடகங்களில் பிரபலமடைதல் போன்றவைகள் நிறுவனத்தை இயக்கும்
கோட்பாடுகளாக மாறியிருக்கின்றன, உயர்ந்த மதிப்பீடுகள்
தாரைவார்க்கப்பட்டிருக்கின்றன.
பின்-தனிமனித முதன்மைவாதமும் கல்வியும்
தனிமனித முதன்மைவாதம் வரலாற்றில் பகுதியாக இருக்கிறது. நவீன
காலத்தின் குழந்தையாகப் பார்க்கப்படும், இக்கருத்தியலானது, ரெனே டெக்கார்த்
போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டது எனலாம். அறிவைப் பற்றியத் தேடலின் பகுதியாக, அனைத்தையும்
ஐயத்திற்கு உட்படுத்திய டெக்கார்த், கடைசியில், ‘நான்’ என்னும் உண்மை ஒன்றே ஐயங்களுக்கு
அப்பாற்பட்டது என்றார். அதன் தத்துவ வெளியீடாக, “உள்ளுவதால்
உறைகிறேன்” (cogito ergo sum) என்று கூறினார். ஐயங்களுக்கு
அப்பாற்பட்டவன் ‘நான்’ என்பதால்,
அறிவுபூர்வமாக நான் தேடுபவற்றை உண்மைகளாக ஏற்கலாம் என்னும் நிலைக்கும் அவர்
வந்தார். இவருடயை மெய்யியலின் தாக்கமானது வரலாற்றில் பல்வேறு விதங்களில்
வெளிப்பட்டாலும், தனிமனிது முதன்மைவாதமானது மானுடவியலின் பகுதியாக
வளர்ச்சியடைந்தது. நிறுவனங்கள், கருத்தியல்கள், பொதுமைவாதங்கள் போன்றவற்றைவிட
தனிநபர் முக்கியம் என்பது பொதுபுத்தியின் பகுதியாக வளர்ச்சியடைந்தது. பத்தொன்பதாம்
நூற்றாண்டில் கருத்தியலாக உருப்பெற்று இருபதாம் நூற்றாண்டில், அரசியல்
கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும் உருப்பெற்றன. இதற்கு இரண்டு உலகப்போர்கள்
வரலாற்றுக் களம் அமைத்துக் கொடுத்தன (Steven Lukes, “The Meanings of ‘Individualism’”
in Journal of the History of Ideas, 32.1, 45-66, 1971. இதன்
அடிப்படையில், மனித மாண்பு, மனித உரிமைகள் போன்றவை உயர்வாக மதிக்கும் போக்கு
வந்தது. இத்தகையத் தன்மை, பிறரையும் மதிக்கும் தன்மையுடையதாய், சமூகக்
கண்ணோட்டத்தையும் பெற்றிருந்தது. ஆனால் இது தற்போது, பின்-தனிமனித
முதன்மைவாதங்களாக மாறியிருக்கின்றன. இதை ஆங்கிலத்தில், post-individualism, ultra individualism என்று கூறுகிறார்கள்.
இத்தகையக் கருத்தியலானது, தனிநபர் உரிமைகள் அனைவருக்கும் பொருந்தும் என்னும்
கண்ணோட்டத்தை இழந்து, பாரதிதாசன் கூறுவதைப் போன்று,
“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங்க கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்” (பாரதிதாசன், புதிய உலகம்).
இது மனைவி, பிள்ளை, வீடு போன்றவற்றின் மீதாவது குறைந்த
பட்சம் அக்கறை கொள்கிறது. அவர்களையே “சிறிய வீணன்” என்று பாரதிதாசந் சாடுகிறார். ஆனால்
இன்றைய தனிமனித முதன்மைவாதம், மனைவி, பிள்ளை, வீடு போன்றவற்றைப் பற்றிக் கூட
அக்கறைக் கொள்ளாத நிலையை அடைந்திருக்கிறது. தன் சம்பாத்யம், தன் வயிறு, தன் உடல், தனது
பொழுது போக்குகள் என அது சுருங்கி விட்டிருக்கிறது. இத்தகையப் போக்கானது,
கல்வி-வணிகம் எனும் இணையிலும் கலந்திருக்கிறது. தனிமனிதன் முன்னெடுக்கும் வணிகமாக
கல்வி மாறிவிட்ட நிலையில், தன்னலங்கள் பேணும் தளமாக கல்விச்சாலைகள் மாறிவிட்டன.
தனிமனித முதன்மைவாதம் முன்வைத்த, மனித உரிமைகள், மாண்பு போன்ற நேயம் கலந்த
அணுகுமுறைகள் கல்வி நிறுவனங்களிலிருந்து காணாமற் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலை,
நம்முடைய கத்தோலிக்க நிறுவனங்களையும் பாதித்திருக்கின்றன. இவற்றை களைய வேண்டியது
காலத்தின் கட்டாயம்.
கத்தோலிக்க நிறுவனங்களை தாக்கியிருக்கும் இரு நோய்களை கீழே
அடையாளம் காண்போம்.
i. அன்றாடங்களின் சிறுமைகளோடு ஒத்துப் போதல்
கத்தோலிக்கத் திருச்சபையின்
மிகப்பெரிய இறையியாளராகக் கருதப்படுபவர் புனித தோமஸ் அக்குயினாஸ். இவருடைய
வாழ்நாள் சாதனையாக Summa Theologiae
(comprehensive treaties on Theology), என்னும் இறையியல் தொகுப்புப்
பார்க்கப்படுகிறது. இது, Quaestiones disputatae – disputed
questions என்னும் முறையைக் கொண்டிருக்கிறது. அதாவது, ஆசிரியர் ஓர்
உண்மையை எடுத்து வைப்பார். பின்னர் அதற்கு எதிரான, வாதங்கள் முன்வைக்கப்படும்.
பின்னர் ஆசிரியர் அவற்றிற்கு பதிலுரைப்பார். இது சாக்ரட்டீஸ் கையாண்ட உத்தியோடு
ஒத்துப் போகிறது. மெய்யியல், இறையியல், அறிவியல், அறவியல், விவிலிய விரிவுரை என
அனைத்திலும் அறிவராக விளங்கிய அவர் பல உண்மைகளை பேசவும் எழுதவும் இந்த உரையாடல்
முறையே உதவியாக இருந்தது. உரையாடல்
மற்றும் விவாதம் என்பவை மனித மாண்பின் பகுதியாக இருக்கிறது என்று திருத்தந்தை
இரண்டாம் ஜாண்பால் கூறுகிறார் (John Paul II, Ut unum sint, 28). அதாவது பேச்சுரிமை, மாற்றுக்கருத்துகளை முன்வைத்தல் (the right to
dissent) ஆகியவை மனித மாண்போது தொடர்புடையவை. ஒற்றுமை (unity) என்பது ஒரேபடித்தான நிலை (sameness) மாறுதலற்ற
இயல்பு என்றெல்லாம் புரிந்துக் கொள்ளப்டுகிறது. இது, மாணவர் சீருடை, ஆசிரியர்
சீருடை (90s kids ஆல் ஏற்க முடியவில்லை) போன்றவை, கேள்விகளை சகித்துக்
கொள்ளாத நிலை, விவாதங்களை முடக்கி, ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரின் கருத்தை
அனைவரும் அனுசரித்தல் என்னும் நிலை நோக்கி நகர்ந்திருக்கின்றன. உரையாடல் அல்லது
விவாதத்தை முடக்குவதன் வழியாக, கல்வி-வணிகம் என்னும் இணை பாதிப்பின்றி துடிப்புடன்
வாழும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால், சமூகத்தோடு ஒத்துப்போதல், ஆணாதிக்கத்தைப்
பேணுதல் போன்ற பிற்போக்குத் தன்மைகளும் துடிப்புடன் கல்லூரி வளாகங்களில் துடிப்புடன்
வாழ்கின்றன. தனிமனித மற்றும் சமூகத்தின் ஏற்றத்திற்கு, சிறுமைகளைத் தவிர்த்து, மீமெய்யியல்
முன்வைக்கும் உயர்வானவற்றை நோக்கமாகக் கொள்தல் அவசியமாக இருக்கிறது. அவை, பெண்
விடுதலை, உண்மை, நேர்மை, மனித மாண்பு ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க
வேண்டும்.
ii. கல்வி-வணிகம் இணையும், விழுமியங்களின் வீழ்ச்சியும்
இலவசக் கல்வி
என்பது பழங்கதையாகிப் போய், கல்வி-வணிகம் எனும் இணை வழக்கமாகிப் போனதன் விளைவாக,
கிறிஸ்து கற்பித்த தியாகம் கிறிஸ்தவ கல்வியாளர்களிடமிருந்து விலகிச் செல்கிறது. அசையாச் சொத்தாக, கட்டிடங்களாக
மாற்றப்பட்ட பணத்தை, வட்டியும் முதலுமாக, அதற்கும் மேலாக பெரும் லாபமாக திரும்ப
எடுக்கும் நோக்குடன், சமூகத்தில் புரையோடியிருக்கும் ஊழலையும் இவர்கள் சாதாரணமாக
ஏற்கிறார்கள்.
அது
மட்டுமல்லாமல், மாணவர்கள் நுகர்வுப் பொருட்களாக தரம் தாழ்த்தும் போக்கையும்
கல்வி-வணிகம் இணைத் தொடங்கி வைத்திருக்கிறது. இதனால், அறவாழ்வில் வீழ்ச்சிகளையும்
கல்லூரிகள் சந்திக்கின்றன.
இச்சூழலில், கணப்பொழுதில் கடந்து போகும் செலவு-பயன்
கோட்பாடுகளைப் புறந்தள்ளி, சமூகத்தின் நீடித்த
வளர்ச்சிக்காக மாணவர்களை செதுக்கும் பணியில் கத்தோலிக்க நிறுவனங்கள் தங்களை
நிகழ்நிலையாக்கம் செய்து கொள்ளுதல் தேவையாய் இருக்கிறது. பொதுவெளியில்
தொலைநோக்கற்ற சிறுமைகளால் ஈர்க்கப்படும் நிலை அகல வேண்டும். இல்லையென்றால்,
காற்றில் ஆடும் நாணலாகி, வேர்களற்றவையாய் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள்
மாறிப்போய், முக்கியத்துவம் இழந்து போகலாம். கிறிஸ்துவாகும் நற்செய்திக்குப்
பணிவிடை புரியாத, கத்தோலிக்க நிறுவனங்கள் திருஅவையில் இடமில்லை, “நற்செய்தி அறிவிக்காத திருச்சபையை அழுகல் நோய்
பாதித்திருக்கிறது என்று அர்த்தம்” என்று திருத்தந்தை எச்சரிக்கை
விடுக்கிறார். நற்செய்தி என்றால் கிறிஸ்து என்றே அர்த்தம். மனிதர் மீட்புப்
பெறவும் சமூகத்தின் தீமைகளை அகற்றவும் வாழ்வை தியாகம் செய்த இயேசுவே, ஆசிரியர்களுக்கெல்லாம்
ஆசிரியர் அவர் வழி நின்று பயணித்தல் சிறப்பு.
Fr. ஜோசப் சந்தோஷ்
தக்கலை மறைமாவட்டம்
0 கருத்துகள்