திருவழிபாட்டில் தாய்மொழி பயன்பாடு: சிக்கலும் தெளிவும்

பொங்கல், ஓணம் மற்றும் நிலம் சார்ந்த விழாக்களை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது விவாதத்திற்கு வருவதுண்டு. இவை இந்துப் பண்டிகைகள் என்று வாதிடுவோர் உள்ளனர். அடிப்படைவாதிகள், இவ்விழாக்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்மந்தம் இல்லை என்கிறார்கள். முற்போக்கானவர்கள், அதை ஆதரித்து வழிபாடுகளோடு இணைத்து ஆலயத்தில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். சில மிதவாதிகள், இத்தகையை கொண்டாட்டங்கள் எல்லாம் ஆலயத்திற்கு வெளியேக் கொண்டாடலாம். அவற்றிற்கும் கிறிஸ்தவ வழிபாட்டிற்கும் எவ்வித உறவும் இல்லை என்று வாதிடுகிறார்கள்.  

photo: pixabay.com

இது இப்படி இருக்க, மொழி சார்ந்த சிக்கல்களும் எழுவது உண்டு. இது, நிலம் சார்ந்த மொழிகளை, மக்களின் தாய்மொழிகளை வழிபாட்டிற்குப் பயன்படுத்துவதில் ஏற்பட்டிருக்கம் சிக்கல். உலகெங்கும் தீவிர வலதுசாரி சிந்தனைகள் பிரபலமடைந்து வருகின்ற சூழலில் மரபுகளின் மீதான தீராத ஆர்வங்களும், அவற்றின் வழியாக இன, மத, குழு சார்ந்த உணர்வுகளை தூண்டி எழுப்புவதும் நடந்து வருகின்றன. இந்தியாவில் இதை நாம் வெளிப்படையாகப் பார்க்கிறோம். கத்தோலிக்க வழிபாடுகளில் இத்தகையதொரு போக்கு தற்போது அதிகமாகக் காணப்படுகிறது. பல இடங்களிலும் தங்கள் மதக்குழுமத்திலிருந்து உறுப்பினர்களை இழக்காமல் இருக்க இத்தகையப் அணுகுமுறை கையாளப்படுகிறது. தீவிர எண்ணம் உடைய அருட்பணியாளர்களும், நம்பிக்கையாளர்களும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். கீழைக் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர்கள், திருப்பலி மற்றும் இதர திருநிகழ்வுகளில், ஏடுகளில் மட்டும் வாழும் சுரியானி மொழியைப் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. அம்மொழியை முறையாகக் கற்றவர்களுடம் உண்டு, ஒலிபெயர்த்து (transliterate) உபயோகிப்போரும் உண்டு. வழிபாடுகளில் புரிதல்வழி வரும் அனுபவங்களை விட, உணர்வுபூர்வமான அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பதன் விளைவுகளாக இப்போக்கைப் பார்க்கலாம். சிரியன் சபைகளில் இதை ஆதரிப்போரும் உள்ளனர், இதைக்கண்டு முகம் சுளிப்போரும் உள்ளனர். இங்கே சிலத் தெளிவுகளைக் கொள்ளுதல் நலம்.

இறைவழிபாடு: மறையுண்மை மற்றும் வெளிப்படை உண்மை

இறைவழிபாட்டில், கண்களுக்குப் புலப்படாமல் உள்ளார உணரும் வகையில் இருக்கும் மறை உண்மைகளும் (mystical), வெளிப்படையாய் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் உண்மைகளும் (intelligible) அவசியம். மறைத்தன்மை மட்டும் அழுத்தம் பெற்றால். அது நம்பிக்கை முதன்மைவாதம் (fideism) மற்றும் மரபுவாதம் (traditionalism) போன்ற பிறழ்வுகளாகப் பரிணமிக்கும். அத்தகையப் போக்கு, மனிதரின் இயல்பான அறிவாற்றல் மீது அவநம்பிக்கைக் கொள்கிறது, அல்லது அதைப் பொருட்டாகக் கருதுவதில்லை. பல வேளைகளில், புனிதம் என்ற பெயரில் மனிதம் மறக்கும் நிலை நோக்கியும் இது நகரலாம்.  திருச்சட்டத்தின் நிறைவான பிறரிடத்தில் அன்புகூருதல் (உரோ 13, 8) என்பது தந்திரபூர்வமாக மறக்கப்படும் அபாயமும் இங்கே வரலாம். இது தீவிரமடையும் போது, மனிதரைக் கொல்லுதல் கடவுளுக்கான சேவையெனும் புனைப்பெயர் பெறலாம் (காண். யோவா 16, 2). பிரஞ்சு மெய்யியலாளர், இதை (தீய) ஆவியோடு ஐக்கியமாகும் நிலைநோக்கித் தள்ளி, சகோதரருக்குக் காட்ட வேண்டிய, பொறுப்பிலிருந்து ஒருவரை பாதைத்தவறச் செய்யலாம் என்று எச்சரிக்கிறார் (காண். E. Levinas, Nine Talmudic Writings, 146). மேலும், திருத்தந்தை கூறுவதைப்போல, கடவுளின் பெயரால் காழ்ப்புணர்வைத் தூண்டி அதை வளர்க்கலாம் (காண். திருத்தந்தை பிரான்சிஸ், பல்சமய மற்றும் கிறிஸ்தவ தலைவர்களுடன் சந்திப்பு, செப் 21, 2024).

அதே வேளையில் மறைத்தன்மை மறக்கப்பட்டு, முழுமையாக அறிவுவாதங்களாக (rationalism) இருத்தலியல் வாதங்களாக (ontologism) நம்பிக்கை மாறினால், அது கடவுள்தன்மையை இழக்க நேரிடும். மனிதரே அனைத்தையும் நிர்ணயிப்பவர்களாக மாறுவார்கள் (Pope John Paul II, Fides et ratio, no. 52). இத்தகையைப் போக்குகள், அறிவியல் வாதம் (scientism), பட்டறிவுவாதம் (empiricism) போன்ற பிறழ்வுகளாகவும் மாறலாம். அறிவால் அறியமுடியாதவை உண்மையல்ல என்னும் நிலை நோக்கி நகரலாம். இவையும் மனிதத்தை மறக்கச் செய்யும். தனிமனித முதன்மைவாதம் தலைதூக்கி மனிதரை வெறும் பண்டங்களாகக் காணும் நிலையும் ஏற்படும். காரணம், மேலிருந்து வரும் கடவுளின் அழைப்புக்கு செவிகொடுக்க முடியாத மந்தம் செவிகளை பாதிக்கும்.

இத்தகையச் சூழலில், ஆபத்துகளற்ற அணுகுமுறை அவசியம். இதனால் தான் வத்திக்கான் திருச்சங்கம் கூறுகிறது: “தன் இயல்பிலே, திருச்சபை மனிதத் தன்மையையும் இறைத் தன்மையையும் கொண்டுள்ளது; காணப்படுவது எனினும், காணக் கூடாதவற்றையும் கொண்டுள்ளது; செயலில் ஆர்வமும் தியானத்தில் பற்றும் கொண்டுள்ளது; மண்ணில் இருக்கை கொண்டாலும் பயணம் போவதாக உள்ளது. இஃது எம்முறையில் என்றால், திருச்சபையிலே, மனிதத்தன்மை இறைத்தன்மைக்கெனவும், காணப்படுவது காணப்படாததற்கெனவும், செயலானது தியானத்திற்கெனவும், நிகழ்காலத்தவை நாம் தேடும் வரப்போகும் நகரத்திற்கெனவும் அமைந்துள்ளன” (திருவழிபாடு, எண். 2). மனிதத் தன்மையை திருச்சபைக் கொண்டிருப்பதால், அது மனிதரின் அறிவுத்திறனுக்கு ஏற்ப அது தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

இறைவழிபாடு: மரபும் புதுமையும்

மறைத்தன்மை அல்லது இறைத்தன்மை அதிகமாக கொண்டாடப்படும் நிலையானது, இன்றையச் சூழலில், மரபைப் பின்பற்றுதல் என்னும் நிலையில் பார்க்கப்படுகிறது. வத்திக்கான் திருச்சங்கம், கீழைச் சபைகளைப் பற்றிய விதித்தொகுப்பில் இத்தகையக் கண்ணோட்டத்தை முன்வைப்பதோடு, அத்தகையை மரபுகளை வரலாற்றில் இழந்திருக்குமாயின் முன்னோர்களின் மரபுகளுக்கு மீண்டும் திரும்பிச் சென்று மீண்டெடுக்க வேண்டும்என்று வலியுறுத்தியது. குறிப்பாக சீரோ-மலபார் சபையில், காலச் சூழமைவுகளின் காரணத்தாலோ ஆள்களின் காரணத்தாலோ தங்கள் பழக்க முறைகளினின்று விலகிச் செல்ல நேரிட்டிருந்தால் தங்கள் முன்னோர்களின் மரபுகளுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முயல வேண்டும்” (கத்தோலிக்கக் கீழைச் சபைகள், எண். 6) என்னும் பகுதியானது, நம்பிக்கையாளர்களின் ஒரு குழுவினரின், நம்பிக்கை அறிக்கையின் பகுதியாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதனால் தீர்வு காண முடியாத சிக்கல்களும் அங்கே எழுந்து நிலவுகின்றன.

திருவழிபாட்டில் எதைப் பேணி காக்க வேண்டும் என்பதைப் பற்றியத் தெளிவை திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கத்தில் காண்கிறோம்: 1) நம்பிக்கை மற்றும் 2) நம்பிக்கையாளர்களின் பொதுநலன். இவ்விரண்டையும், அடிப்படையாகக் கொண்டு திருச்சங்கம், திருவழிபாட்டில் மாற்றத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாற்றத்திற்கு உட்படாதவை என்றும் வேறுபாட்டை முன்வைக்கிறது (இறைவழிபாடு, எண் 21). ஆக மனிதத்தன்மை பெற்றத் திருச்சபை தன்னையே புதுப்பிக்க வேண்டும் என்னும் விரும்பும் திருச்சங்கம், இதேயை திருவழிபாடு குறித்தும் பேசுகிறது.

கீழைச் சபைகளைப் பற்றிய விதித்தொகுப்பு (Decree) திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கத்தோடு (constitution) ஒத்துப் போக வேண்டும் என்பதே திருச்சபையின் படிப்பினைகளின் தரவரிசை சார்ந்த முறைமை. அப்படிப்பார்க்கையில், பழக்கமுறைகள் மற்றும் முன்னோர்களின் மரபுகள் ஆகியவை, நம்பிக்கை (faith) மற்றும் சமூக நலனைப் (good of the community) பேணுவதாக இருக்க வேண்டும். ஆகையால் தான், கீழைச் சபைகள் பற்றிய விதித்தொகுப்பில் பொருத்தமான” (legitimate) “திருச்சபையின் உயரோட்டமான வளர்ச்சிக்காக (organic development) ஏற்படுத்தப்படும் மாற்றங்களையும் வரவேற்கிறது. பொருத்தமான, உயிரோட்டமான வளர்ச்சி அவசியம். அவ்வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் சமூக நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது என்பதும் தெளிவு. ஆக, இன்றைய உலகிற்கு பொருத்தமற்றவையாகவும், சபையின் உயரோட்டமான வளர்ச்சிக்குத் தடையாகவும் உள்ளவையை நீக்கலாம் என்னும் அனுமதிச் சீட்டையும் திருச்சங்கம் அளிக்கிறது. ஆகையால் தான், திருச்சங்கம், திருவழிபாட்டின் உள்ளியல்புடன் சரியாக இயைந்து செல்லாக் கூறுகள் இவற்றிலே புகுந்திருப்பின் அல்லது பொருத்தம் குறைந்தனவாய் ஆகியிருப்பின் மாற்றப்பட வேண்டியவையுங்கூட” (இறைவழிபாடு, எண் 21) என்று கூறுகிறது.

இவ்வாறாக, இறைத்தன்மையும் மனிதத் தன்மையும் பெற்றத் திருச்சபை, திருவழிபாட்டில் பயன்படுத்தும் மொழிகளைப் பற்றியத் தெளிவையும் தருகிறது. மரபு மொழியைப் பயன்படுத்த வேண்டியதைக் கூறுவதோடு, நிலம் சார்ந்த மொழிகளின் அவசியத்தையும் திருவழிபாட்டை அம்மொழியில் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.   

இறைவழிபாடு: மரபு மொழியும் நிலம் சார்ந்த மொழியும்

திருவழிபாட்டில் மொழிப் பயன்பாடு பற்றிப் பேசுமுன், மொழிபற்றிய மெய்யியல் உண்மைகள் சிலவற்றையும் அசைபோடுதல் நன்று. மார்ட்டின் ஹைடகர், மொழியை “உயிருருவின் வீடு” என்றும் “இவ்வீட்டில் அது வாழ்கிறது”  (“Language is the house of the being” “Letter on Humanism”, Martin Heidegger, Basic Writings, David Farrel Krell, ed. New York, Harper and Row, 1977, 193-242, 193) என்று இருத்தலியல் சார்ந்து கூறினார். உயிருரு தன்னுடைய உள்ளார்ந்த இயல்பை வெளிப்படுத்த வேண்டுமெனில் அதற்கு மொழி இன்றியமையாதது. சுய அடையாளம் தேடுதல், தன்னை நிறுவுதல், சாதனைகளைப் புரிதல், வாழ்வுக்கான ஆதாரங்களைத் தேடுதல், உறவுகளை ஏற்படுத்துதல், உறவுகளைக் கொண்டாடுதல், இன்புற்றிருத்தல் என அனைத்தும் மொழி வழியாகவே சாத்தியமாகிறது. ஆக மொழி என்பது, வேறுமனே மின்சாரத்தை கடத்தி விடும் கம்பி அல்லது ஊடகம் என்னும் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. மனிதர் பயன்படுத்தும் மொழி, ஊக்கத்தைக் கொடுக்கிறது, வாழ்வியல் நெறிகளைக் கொடுக்கிறது. மொழியானது மக்களின் பண்பாடு, வாழ்வியல் கோட்பாடுகள், நெறிகள் எனப் பலவற்றை தன்னகத்தேச் சுமந்து வருகிறது.

ஆயினும் அம்மொழியானது சலனமற்றதாக மாறிவிடக்கூடாது. அம்மொழிக்கு இயங்குநிலை இருக்க வேண்டும் என்பதை, இம்மானுவேல் லெவினாஸ் வலியுறுத்தினார். சொல்லப்பட்ட வார்த்தையானது, பல வேளைகளில் அடிமைத்தனங்களை அடைகாக்கலாம். ஆகையால், சொல்லப்பட்டவை திரும்பவும் சொல்லப்பட வேண்டும் என்று கூறினார் (saying the said, unsaying the said) (Otherwise than Being). ஆகையால் தான், நன்னூல் ஆசிரியர் தன்னுடைய இலக்கணத் விவரணத்தின் இறுதியில் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” (நன்னூல் பா. 462).

வழிபாட்டு நூல்கள் மொழிமாற்றம் செய்வதற்கு திருச்சபை அனுமதிக்கிறது. அதே வேளையில் மூலமொழியின் பயன்பாட்டையும் வலியுறுத்துகிறது (இறைவெளிபாடு, எண் 63, 36.2). மொழி என்பது, வழிபாடு உருவாகியச் சூழல், நம்பிக்கையின் தன்மை, அனுபவங்கள் ஆகியவற்றை சுமந்து வருவது இயல்பு. மொழிபெயர்ப்புகளில் அவை முழுமையாக வெளிப்பட வேண்டும் என்னும் அவசியம் இல்லை. இந்த ஆபத்தை உணரும் திருச்சபையானது, மூல நூல்களைப் பேணுவதிலும் அதை வழிபாடுகளில் பயன்படுத்துவதிலும் கவனம் கொள்கிறது என்பதை ஏற்றாக வேண்டி இருக்கிறது. ஆகையால் மூல நூல்களைப் பேணுவதும் அதைப் பயன்படுத்துவதும் உகந்தது என்பதை திருச்சபை ஏற்கிறது. ஆனால், அதே வேளையில், அம்மொழியில் நம்பிக்கையின் முழுமை அடங்கியிருக்கிறது என்று அடம் பிடிப்பதும் அபத்தமானது. காரணம், அப்படி பயன்படுத்தவதால் நம்பிக்கையானது மக்களிடமிருந்து அன்னியமாகிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகையால் தான் அந்தந்த இடத்திற்கு ஏற்ப விவிலியத்தையும் திருவழிபாட்டு நூல்களையும் மொழிமாற்றம் செய்ய இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் அனுமதித்தது. மேலும் சில தெளிவுகளை, வாழ்வியல் நடைமுறை சார்ந்து திருச்சபை முன்வைக்கிறது.

திருப்பலி மற்றும் திருவழிபாட்டில் நம்பிக்கையாளர்கள் முழுமையாக, கொண்டாடப்படும் மறைப்பொருட்களின் அர்த்தம் புரிந்துப் பங்கேற்க வேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் கூறுகிறது. அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக சுருங்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது. நம்பிக்கைக் கொண்டோர், உரைக்கும் சொற்களோடு உள்ளமும் இணைந்திருக்க வேண்டும். கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருள் வீணாகா வண்ணம் அவரோடு இணைந்து உழைக்க வேண்டும்… நம்பிக்கை கொண்டோர் அறிவால் உணர்ந்து செயல்முறையிலும் பயனுள்ள விதத்திலும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்களா என்பதையும் அருள்பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்” (திருவழிபாடு, எண். 11) என்று திருச்சபை கூறுகிறது. அன்னிய மொழிகளை ஒருவரால் அறிவால் உணர்ந்து கொள்ள முடியாது என்பது தெளிவு. ஆகையால், இறைத்தன்மையும் மனித்தன்மையும் ஒருங்கேக் கொண்டத் திருச்சபையில், சமூகத்தின் பொதுநலன் பேணும்விதத்தில் இடம் சார்ந்த மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவைகள், அவற்றிற்குரிய முக்கியத்துவத்துடன் பார்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மொழியால் அன்னியப்படுத்தும் போக்கு இருந்து வந்தது என்பது உண்மை. வழிபாட்டில் தாய்மொழி என்னும் நிலை அரும்ப ஆரம்பித்தாலும் முழுமையடையவில்லை. மேலும் மொழித்திணிப்புகளை ஏற்பதில் சிக்கல் உள்ளது. ஆகையால், திருவழிபாட்டின் தொன்மைப் பேணுதல், மொழித்திணிப்புகளாக மாறாதிருத்தல் சிறந்தது. ஒரே பாணியில் அமைந்த முறையைத் திருவழிபாட்டிலும் கூட திருச்சபை வலிந்து திணிக்க விரும்பவில்லை” (திருவழிபாடு, எண் 37), என்னும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் பெரியமனதை நினைவில் கொள்தல் நன்று.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்