அறைக்குள் எழுத்துகளின் நறுமணம் | சந்தோஷ் குமார் அப்பு

றைக்குள் எங்கும் எழுத்துகள். அவை என்னை வரவேற்றுக் கொண்டிருந்தன. காற்றில் பரவியிருக்கும் தூசி போல் அவை அறையெங்கும் பரவிக் கிடந்தன. இப்போது, அறைக்குள் அச்சிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கை குறைவே. அதற்கென்ன? விரல் நுனியின் சிறுதொடுதலுக்காய்ப்  கணினுக்குள் பல நூல்கள் தவம் கிடக்கின்றன. அவற்றிலிருந்து வந்த எழுத்துகள் மட்டுமா? இதற்கு முன்னால் பல ஆண்டுகளாய், இவ்வறைக்குள் தங்கியவர்கள் அனைவரும், நூல்களை எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் புலன்வழியாய் வெளியேறிய எழுத்துகளை என்னதான் செய்ய முடியும்? அவை அனைத்தும் அறையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. விரட்ட முடியாத கடவுளின் உடனிருப்புப் போல அவை அங்கே நிறைந்திருக்கின்றன. மறக்கவும் மறைக்கவும் முயன்றும், விலகாமல் நினைவோடு ஒண்டிக் கிடக்கும் சில அன்புகளைப் போன்று அவை அறைக்குள் கலந்து கிடக்கின்றன. இவ்வறைக்குள் வசித்தவர்கள் பேசியவர்கள் அனைவரும் எழுத்துகள் அனைத்தையும் சுமந்து சென்று விட்டார்களா? அப்படி எடுத்துத் தான் சென்று விட முடியுமா? அது பேராசை அல்லவா? நிறைவேறாத ஆசை அல்லவா? வாய்களை கழுவி விடலாம். ஆனால் அதிலிருந்து வெளிவந்த எழுத்துக்கள். நீங்கள் இவ்வறையிலிருந்து எழுதிய நூல்களும் குறிப்புகளையும் நீங்கள் நெருப்பிலிட்டு பொசுக்கி இருக்கலாம். ஆனால், அவற்றிலிருந்து கசிந்த எழுத்துகளை அழித்திட முயன்றால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுப் பாருங்கள். எழுத்துகள் எழும்பி நின்று அசைவாடி ரீங்காரம் போடுவதை உங்களால் உணர முடியும். எழுத்துகள், எக்காலத்திலும் நிறைவேறாத, முடிவிலிகளின் உலகம். பேசிய எழுத்துகளை எல்லாம் மனிதர்கள் சுமந்து சென்றிருந்தால், மனிதர்கள் வாய்ப்பேச்சற்றவர்கள் ஆகிவிடமாட்டார்களா? எழுத்துகளின் ஆதிக்கம் என் அறைக்குள். 

ஒன்று தெரியுமா? எழுத்துகள் ஒருவகையில் சொன்னால் மாற்றான் மனநிலை உடையவை. அவை விருப்பு வெறுப்பற்றவை. அவைகள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நல்லவர் கெட்டவர் என்று அவைக்கு வேறுபாடுகளும் இல்லை. செல்வந்தர் ஏழை என்னும் வர்க்கவாதத்தின் ஏவலாளிகளும் அல்ல அவை. அவை யார் யார் வாயினுள்ளும் நுழையும். எழுத்தின் இயல்பை நான் பல வேளைகளில் வெறுத்திருக்கிறேன். அவைகள் உறுதியான நிலைப்பாடுகளை ஏற்றிருக்கலாம். அத்தகையதொரு உட்கசப்பு நான் அவற்றோடு கொண்டிருக்கிறேன். ஒருவகையில்  அவை துறவிகள் போன்றவை. ஆசைகள் துறந்த துறவி. யாருக்குள்ளும் நுழைந்து தன் பணியை செய்யும் சமத்துவவாதி. அவற்றிற்கு ஓய்வில்லை. நதி போல் அவை ஓடிக்கொண்டே இருக்கின்றன. நின்றால் ஒருவேளை வாழ்வை இழக்கலாம் என்னும் உணர்வு அவைக்கு இருக்கலாம். எப்போதும், எவ்விடத்திலும் அவை வினையாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கென ஓய்வுகள் இல்லை.  


அவற்றிற்கு பொறாமைகள் இல்லை போல. தேடுவோர் அனைவருக்குள்ளும் அவை நுழையும். தேடுவோரின் வசதிக்கேற்ப எழுத்துகள் நின்றும் வளைந்தும் கொடுக்கும். அவர்கள் விருப்பம் போல் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். சிலர் சில எழுத்துகளை பயன்படுத்துவதே இல்லை. மூளையின் பெரும்பகுதி  பயனற்று கிடப்பதைப் போன்று எழுத்துகளை ஒதுக்கி விடுகிறார்கள். அவ்வெழுத்துகள், மற்ற எழுத்துகள் பேனா நுனிகளிலும், நாமுனையிலும், விரல் தொடுதல்களிலும் தங்களது அரங்கேற்றத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, அவற்றின் வளர்ச்சியைக் கண்டு மனம் மகிழ்கின்றன. அவை முந்தியடிப்பதில்லை. வாய்ப்புகள் வந்தால் வரட்டும் என்று ஒதுங்கி விடுகின்றன. தங்களது இருத்தலைப் பற்றியும், தேவைப்படும் இடங்களில் பயன்படுவதைப் பற்றியும் பெருமிதம் கொள்வதால், அவற்றிற்கு தாழ்வு மனநிலைகள் இல்லை. தங்களின் உதவிகள் இன்றி சில கருத்துகள் முன்வைக்கப்பட முடியாது என்பதை அறிந்திருந்த அவை, தங்களது தனித்தன்மையை கட்டிக் காப்பதை கருத்தில் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தன. அவை அவையல்லாமல் மாறத் துணியவில்லை. அப்படியானால் அவை செய்து கொண்டிருக்கும் பணியை வேறு யார் செய்வார் என்னும், சுய அறிவு அவற்றிற்கு உண்டு. சுய அறிவு ஞானமாய் அகத்தில் குடிகொண்டதால் அவை கவலைகள் இன்றி மனமகிழ்வுடன் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தன.

அறைக்குள் நுழைந்த எனக்குள் அவை நுழைந்தன. அவற்றிற்கு தான் எவ்வளவு வாசம், எவ்வளவு இனிமை. அறையெங்கும் பரவிக் கிடந்த எழுத்துகள் எனக்குள் நுழைந்து கொண்டிருந்தன. மனமகிழ்வாய் அவற்றை கோர்வையாக்கினேன். அவை பூகோர்ப்பவரின் விரல்நுனியில் லாவகமாய் தொற்றிக் கொள்ளும் பூக்களைப் போன்று எனக்குள் கோர்வையாகத் தொடங்கின. மணமும், வண்ணமும் ஒழுங்கும் கோர்வையான போது, மனமெங்கும் நற்சொற்களின் பெருமழைை பொழியத் தொடங்கியது. எழுத்துகளின் ஆற்றல் தான் என்னே? உயிர்ப்பின் ஆற்றல் அவற்றிற்கு உண்டு. சோம்பல்களை அகற்றும் வித்தையை அவை கற்றிருக்கின்றன. சோம்பல் விலக ஆரம்பித்திருந்தது. அவை தூக்கம் கலைக்கும் மர்மம் கற்றவை. தூங்க விடச் செய்யாமல், பேரானந்தத்தால், உள்ளத்தை நனைத்து இமைகளை மூடச் செய்யாது. அது செய்யும் மாயஜாலங்கள் தான் என்னே? இப்போது எழுத்தால் நிறைந்த அறைக்குள், சொந்தங்கள் பெருகி இருக்கின்றன. உறவுகள் இதயத்தோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். உலகெல்லாம் அழகாய் தோன்றிக் கொண்டிருந்தது. எங்கும் மகிழ்வே.

எழுத்துகளை அழகான மாலையாய்க் கோர்க்கும் வித்தையை அன்றாடம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். கோர்வான எழுத்துகள் மனதை மகிழ்விப்பதால், வித்தையை அன்றாடம் மெருகூட்டுவதில் சிரமம் ஏதும் ஏற்படுவதில்லை. எழுத்தை கோர்வையாக்கும் கலையை எழுத்துகள் தான் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. கலை மூளையின் ஆணைகளால் இப்போது பிறப்பதில்லை. மூளையில் ஏவல்களுக்காய் காத்திருந்த காலம் போய், இயல்பாய் இயங்கும் நிலை கைகூட ஆரம்பித்திருக்கிறது. இப்போது, எழுத்துக்கள் என் அறையில் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்