இரு குழந்தைகள் உள்ளவள் வோறொருவனுடன் ஓடிப்போய், கணவனும் இடையில் கைப்பிடித்தவனும் கைவிட, தற்கொலையே கதியென தூக்கில் தொங்கினாள். ஊரார் தீர்ப்பெழுதினர், அவளின் கற்பு நெறியை தாறுமாறாக விமர்சித்தனர். பிஞ்சுகளின் மேல் கிஞ்சித்தும் கனிவில்லா அரக்கி என பட்டம் அளித்தனர். காமப்பிசாசு என வக்கிர மொழிகளால் தண்டனைகளைகளை வாரி வழங்கினர்.
Photo : pixabay.com |
ஏழு வயது தொடங்கி பதினைந்து வயது வரையிலான அவளது இளமைக்காலம் பற்றி யாரும் பேசவில்லை. வீட்டு வேலைக்கெனச் சென்றவளின், உடலும் உள்ளமும், அறிவும் பாலியல் வாழ்வுக்கான தயார் நிலையில் இருந்திருக்கவில்லை. அவள் பரிசோதிக்கப்பட்டாள், பலரால். பல அரக்கர்களும், அரக்கிகளும் துன்புறுத்தி பாலியல் அறிவை அவளது மூளையில் எழுதினர். ரத்தம் சொட்ட சொட்ட அனைத்தும் மூளையில் கூர் நகங்களால் கிழித்து வைத்தனர். பாலியல் அறிவும் பாலியல் உணர்வுகளும் ரணங்களாய், ஆறாதப் புண்களாய் சிதைக்கப்பட்டு கிடந்தன.
ரணங்களை யாரும் துடைக்கவில்லை. புண்களை யாரும் குணப்படுத்தவுமில்லை. மூளையில் கிழிக்கப்பட்ட பாலியல் அறிவின் கிழிசல்களை முறையாக நெறிப்படுத்தி அவளது மூளைக்கென எழுதிக் கொடுக்க யாரும் முன்வரவுமில்லை.
அனைத்தும் சரியாகும் என திருமணம் செய்து வைத்தனர். இன்று தாயில்லாப் பிள்ளைகள் தாய் வேண்டும் என்று உரிமை கோருகிறார்கள். யாரோ தவறாய் கிறுக்கியவை இன்று நீதிக் கேட்டு அழுகின்றன. நிலத்திலிருந்து குரல் எழுப்பிக் கதறிய ஆபேலின் இரத்தம் போல நீதிக்காக....
0 கருத்துகள்