இக்கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை | அ. சந்தோஷ்

ஆண்கள் இல்லாத கிராமம்...  ஆம்.. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஆண்களுக்கு இக்கிராமத்தில் அனுமதியில்லை. பெண்கள் மட்டும். பெண்கள் மட்டும் வாழும் கிராமம். கென்யா (Kenya) நாட்டில் உமோஜா (Umoja) கிராமம்.



ரெபேக்கா லோலாசோலி என்னும் பெண்மணி இதை உருவாக்கி இருக்கிறார். வழக்கம் போல இவருக்கும் திருமணம் நடந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர். எல்லா வகையிலும் துன்புறுத்தும் கணவன். கூடி வாழ்தல் இயலாது. சுற்றி வாழ்ந்தக் குடும்பங்களைப் பார்த்தார். ஏராளமானப் பெண்கள் இதே நிலையில் இருந்தனர். சம்ரூ குல வழக்கத்தின் படி பெண்கள், சிறுமிகளாக இருக்கும் போது மணம் முடித்து வைக்கப்படுவர், பெண் விருத்தச்சேதனமும் நடைமுறையில் இருந்தது.

ரெபேக்கா வாழ்வில் விடியல் வேண்டி பலரிடம் உதவி கேட்டாள். அரசு அதிகாரிகளும் கைவிரித்தனர். அவரும் அவரோடு இணைந்து 14 பெண்களும் துணிந்தனர். சொந்தமாக நிலம் வாங்கினர். மரக்கிளைகளும், மண்ணும் பயன்படுத்தி வீடுகள் உருவாக்கினர். கைவினைப்பொருட்கள் செய்து சுற்றுலாப்பயணிகளுக்கு விற்று பொருள் சேர்த்தனர். சொந்தமாக பள்ளிக்கூடம் வைத்தனர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க... ஆண் பிள்ளைகள் 18 வயது வரை வாழலாம். தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், பெண் தலைவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும்.

ஆண்கள் இவர்களை குலைக்க சதி செய்தனர். இவர்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் வீடுகள் வைத்து தங்கினர். கடைசியில் பெண்கள் ஆண்கள் தங்கியிருந்த நிலத்தையும் வாங்கி, கிராமத்தை பெரிதாக்கினர்.

பெண்கள் மட்டும் உமோஜா கிராமத்தில்... உமோஜா என்ற சொல்லுக்கு ஒற்றுமை என்று பொருள்.

பெண்கள் அடிமைத்தனம் தொலைத்து சுதந்திரமாய் வாழ்கின்றனர் இங்கே...

மதுப்பிரியர்கள்’ (…) பொறுப்பற்ற கணவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையோ?

கருத்துரையிடுக

0 கருத்துகள்