அப்பா அதிகம் பேசுவதில்லை, அவர் திட்டுவதும் இல்லை. ஆனால் அம்மா இதற்கு நேர் எதிர். வாய் திறந்தால் நிறுத்தமாடாடர்கள். குச்சி எடுத்து விரட்டினால், வீட்டை சுற்றி குறைந்தது இருமுறையாவது விரட்டுவார்கள். அடுப்பங்கரையில் தண்டித்தால், அது தவியாக இருக்கலாம், ஊதுகுழலாக இருக்கலாம் எதுவானாலும் அடி நிச்சயம்.
வார்த்தைகளின் பஞ்சம் ஏராளமாக அப்பாவிடம் இருந்தது. தண்டனைகள் என்பதே இல்லை. ஆனால், கண்டிப்புகள் ஏராளம். அவரின் ஒவ்வொரு அசைவும் பல செய்திகளை கூறிய வண்ணம் இருக்கும். பார்வைகள், உதடுகளை கடித்தவாறு அவர் காட்டும் செய்திகள் ஒவ்வொன்றும் கண்டிப்பின் தீவிரம். அவர் அதைக் காட்டுவதற்கு பதிலாக ஒரு குச்சியெடுத்து அடித்திருக்கலாம். அதெல்லாம் செய்ய மாட்டார்.
அன்று அடுப்படியில் எனக்கும் அம்மாவுக்கும் சண்டை. சண்டை முற்றி, அடியில் முடிந்தது. அம்மா அடித்து நான் வாங்கியிருந்தால் அத்தோடு முடிந்திருக்கும். நான் திருப்பி அம்மாவை அடித்தது விபரீதத்தில் போய் முடிந்தது.
எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது. என்றுமில்லாத அளவு பயம் எனக்குள் புக ஆரம்பித்தது. அப்பா அறியக்கூடாது என்று நான் வேண்டிக் கொண்டிருந்தேன். அழுதவாறு, இரு கால்களுக்குள் தலையைப் புதைத்தவாறு அமர்ந்திருந்தேன். யாரும் காணக்கூடாது என்பதற்காக, மின்சாரம் இல்லாத வீட்டின் அறையில் ஒரு ஓரத்தில். அம்மா அடித்தது எனக்கு வலிக்கவில்லை. ஆனால் நான் அம்மாவை அடித்தது எனக்குள் தீராத வலிகளை தந்துக் கொண்டிருந்தது. அப்பா வருவதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கின. வழக்கமாக 6 மணிக்கெல்லாம் வந்து விடுவார்.
Photo: pixabay.com
வானொலியில் ‘6 மணி ஆங்கிலச் செய்திகள் தொடரும்’ என்ற அறிவிப்பு வந்தது. எனக்குத் திக் திக் என்றது. அப்பா கண்டிப்பாரா, அடிப்பாரா தெரியவில்லை. ஆனால், அதையெல்லாம் தாண்டி ஏதோ நடக்கும் உணர்வு. காலடி சத்தம் கேட்டது. யாரோ வருவதைப் போன்று. அச்சத்தம் நீண்ட நேரம் கேட்டதால் அது வெறும் தோணல் என்று உணர்ந்தேன்.
இப்போது சத்தம் பெரியாக கேட்டது. சற்றே நடுங்கினேன் என்றே நினைக்கிறேன். அப்பா வந்தார். சத்தம் சற்று நேரம் ஓய்ந்தது, யாரோ குசுகுசுப்பதுப் போல் தோன்றியது. அப்பா நேராக வந்தார்.
ஒரே கேள்வி: இனி அம்மாவ அடிப்பியா?
ஒரே தண்டனை: உழைத்து காய்த்த கையால் தொடையில் அடி. இதுவே அவரிடமிருந்து பெற்ற ஒரே அடி.
வாழ்விற்கான பாடம்: எக்காரணம் கொண்டும் அம்மாவை அடிக்கக் கூடாது. கல்லில் பொறித்தது போல் இன்றளவும்...
0 கருத்துகள்