“அன்பையும் கனிவையும் கரிசனையையும் பராமரிப்பையும் வேண்டாம் என்று நீயே விலகிச் செல்கிறாய்” என மனம் கூறிக் கொண்டே இருந்தது. “யாரும் உன்னைப் புறந்தள்ளவில்லை” என்று நிச்சயமாய் மனம் விசும்பலுடன் எடுத்துரைத்தது.
“பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன்” என்று புத்தியின் சாதூரியம் பயன்படுத்தி உள்ளத்தின் நேர்மையான தூண்டுதலை ஒதுக்கித் தள்ளி சுயம் நியாயப்படுத்த முயன்றான். “ஒருவர் காட்டும் அன்பை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்? அது அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?” மனம் எதிர்வினை புரிந்தது.
இல்லை ஒரே நச்சரிப்பு, “எழும்பவில்லையா? குளிக்கவில்லையா? வேலைக்குப் போகவில்லையா? மதியம் சாப்டீங்களா? வீட்டுக்கு கிளம்பியாச்சா? யார் போணில் பேசிக்கொண்டிருந்தார்?... அப்பப்பா எத்தனை கேள்விகள்... தாங்க முடியல… போதும் என்றாகி விட்டது.”
“நீ உன்னை ஏமாற்றுகிறாய்” மனம் திட்டவட்டமாய் கூறியது. “நீ ஏன் பதைபதைக்கிறாய். அந்தக் கேள்விகள் இரண்டு நாட்கள் இல்லாமல் போனதால் தானே இப்போது நீ சுயக்கட்டுப்பாடு இழந்து தவிக்கிறாய்?” கேள்வி உண்மையெனப் பட்டது. இப்போது அவன் தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதை நன்கு உணர்ந்தான். ஏதோ இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். அன்றாடம் அவனுடைய செவிகளில் விழுந்து கொண்டிருந்த கேள்விகளின் அசரீரி அவனை இயக்குவதாய் உணர்ந்தான். அக்கேள்விகள், செவிகளில் ரீங்காரம் செய்யவில்லை என்றால் அவன் உலகம் அஸ்தமித்து விடும். அது நிச்சயம்.
புத்தி மீண்டும் மறுப்புரைக்கு தாயாரானது... “தொல்லைகள்... நச்சரிப்புகள்... சந்தேகங்கள்... அடிமைத்தனம் ...”
மனம் மனம்விட்டுப் பேசியது.
“வார்த்தைகளின் அர்த்தங்கள் உனக்குள் மாறுபட்டு ஒலித்தன. தூய்மையான இதயத்திலிருந்து வந்த அந்த வார்த்தைகளை உன் அழுக்குப் படிந்த இதயம் ‘நச்சரிப்புகள்’ என்று விளக்கவுரை கூறியது. உன் விளக்கவுரை வார்த்தைகளை துளிர்க்கச் செய்த அன்பு நிறை இதயத்தை இருட்டடிப்புச் செய்தது. உலக அனுபவம் தந்த பார்வைகள், புத்தியை செதுக்கிய தர்க்கவுரையின் தொகுப்புகள் எல்லாம் களங்கமற்ற இயத்தை தொல்லை எனப் புறந்தள்ளியது. அன்பை வார்த்தைகளால் அளக்க உனக்குச் சொல்லித் தந்தவர் யார்?” மனம் தீவிரமான வாதங்களை முன்வைக்கத் தொடங்கியது. “கரையைத் தழுவும் அலை போல, மரத்தைத் தழுவும் காற்றுப் போல, மழையை இயல்பாய் ஏற்கும் நிலம் போல, பூமியை ஆற்றலாம் நிரப்பும் சூரியன் போல... ஏன் அளிக்கப்படும் அன்பை இயல்பாய் ஏற்கக் கூடாது?”
எல்லாம் தொலைத்த விட்ட உணர்வில் உடலும் உள்ளமும் ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. வண்டியை ஓரங்கட்டினான். சற்றே தொலைவில் தெரிந்த மலைமேல் ஏறினான். ஒரு பாறை மேல் அமர்ந்தான். பாறையின் அடியிலிருந்து கசிந்த நீர் சொட்டுக்களாய் சிறு பூச்செடியின் மேல் விழுந்து கொண்டிருந்தன. செடி ஒவ்வொரு துளிக்கும் சிலிர்த்தது. மஞ்சள் நிறப் பூக்கள் அரும்பி அவனை நோக்கி கேலி செய்து சிரிப்பதைப் போல உணர்ந்தான்.
மனைவியின் மஞ்சள் நிறச் சேலை நினைவுக்கு வந்தது. காலில் பட்ட சிறு காயத்துடன் இரத்தம் கசிய வீட்டுக்கு வந்தபோது, பதைபதைப்புடன் மஞ்சள் நிற சேலையின் தொங்கலால் துடைத்த நினைவுகள் மேலெழ, வீடு நோக்கிப் புறப்பட்டான்.
கரிசனையின் விசாரிப்புகள் தொந்தரவுகள் அல்ல, அன்புநிறை இதயத்தின் விசும்பல்கள்...
0 கருத்துகள்