பட்டாம்பூச்சியின் சிறகுகளை அரியும் கள்ளிப்பூக்கள் | அ.சந்தோஷ்

 பட்டாப்பூச்சி பறக்க ஆரம்பித்தது. சுதந்திரமாகப் பறக்க ஆரம்பித்தது. பூந்தோட்டத்தில் அது பறந்து திரிந்தது. அனைத்து மலர்களும் அதை ரசித்தன. அதன் அழகால் அவை கவரப்பட்டன. விதவிதமாய் அதன் வண்ணங்கள். நீல நிறம், மஞ்சள் நிறம், வெள்ளைப் புள்ளிகள் என அதன் அழகு அனைவரையும் கவர்ந்தது.

அப்படியே வேலி பாதுகாத்துக் கொண்டு நின்ற கள்ளியில் பூத்த மலரும் அதனால் கவரப்பட்டது. அதுவும் இரசித்தது. அதனுடைய வண்ணங்கள் அதை மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால் அது பூந்தோட்டத்தில் எல்லாப் பூக்களும் பார்க்க சுதந்திரமாக பறப்பதை கள்ளிப்பூவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அது தனக்கு மட்டுமே சொந்தமானது என்று சுயம் தீர்மானித்தது. தான் மட்டுமே அதன் அழகை ரசிக்க வேண்டும் என்பது அதன் தீர்மானமாக இருந்தது. அதன் அழகு தனக்கு மட்டுமே உரியது. அதை கண்களால் உரசிட யாரையும் அனுமதிக்க மாட்டேன் என சுயம் பிரகடனம் செய்தது.


photo: pixabay.com

அதன் வெறுப்பு அத்தியாயம் சுருள் அவிழ ஆரம்பித்தது. அது முதலில் பூந்தோட்டத்தை வெறுக்க ஆரம்பித்தது. அழகழகாய் விதவிதமாய் வண்ணம் ஜொலிக்க பூத்து நின்ற பூக்களை எல்லாம் வெறுத்தது. அவற்றை எப்படி அழிக்கலாம் என்றெல்லாம் திட்டம் தீட்டிப் பார்த்தது. ஆனால் அது பலிக்கவில்லை. அடுத்ததாக அவற்றிற்கு தண்ணீர் அளிக்கும் வான்முகிலை வெறுத்தது, சூரியனை வெறுத்தது. அவை இப்பூக்களை வெறுத்திருக்க வேண்டும் என்பது அதன் நினைப்பு.

கடைசியில் ஒரே வழிதான் அதன் முன்னால் தெரிந்தது. பட்டாம்பூச்சியை எச்சரிப்பது. இனி தன்னுடைய பூவை விட்டு நகரக்கூடாது என்று அது கூற ஆரம்பித்தது. பூந்தோட்டத்தில் நிறைய ஆபத்துக்கள் காத்திருப்பதாகக் கூறி அதை தடுக்க ஆரம்பித்தது. பூந்தோட்டத்தில், தேனீக்கள் வரும் அதன் கொடுக்கு உன்னை காயப்படுத்தும் என்றது; அங்கே பெரிய கரிய வண்டுகள் வரும், அவை உன்னை தாக்கி அழித்து விடும் என்றதுஅங்கே சிட்டுக்குருவிகள் வரும் அவை உன்னை கொத்தி விடும் என்றதுஅங்கே பூக்களில் விஷப்புழுக்கள் உருவாகும் அவை உன்னை கொன்று விடும் என்றது. அதன் தடைகளின் பட்டியல் நீண்டது.

எதையும் பட்டாம்பூச்சி கேட்பதாயில்லை. கள்ளிப்பூவின் அன்பிற்கு தீமையின் கொம்புகள் முளைக்க ஆரம்பித்தன. அது வெறுப்பாய் உருவானது. பட்டாம்பூச்சியை இனி தன்னை விட்டு நகரச் செய்யக் கூடாது என்பது அதன் தீர்மானமாக இருந்தது. அதன் சிறகில் காயம் ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தது. முதலில், தனது முட்களால் சிறகுகளின் நுனிகளை மட்டும் முறித்து விட்டது. காயப்பட்ட பட்டாம்பூச்சி, நின்று விடுவதாய் இல்லை. அது மீண்டும் பறக்க ஆரம்பித்தது. கள்ளிப்பூவுக்கு கோபம் அதிகரித்தது. அது மீண்டும் சிறகுகளை தாக்கியது. அதிகமாகவே சிறகின் பகுதிகளை இழந்தது. ஆனால் பட்டாம்பூச்சி மீண்டும் பறந்தது. கோபம் தலைகேறி சுயநினைவிழந்த கள்ளிப்பூ, சிறகுகளை முற்றிலும் அரிந்து விட்டது. புழுவாய் பட்டாம்பூச்சி, கள்ளிப்பூவுக்குள் விழுந்தது.

பட்டாம்பூச்சியை சொந்தமாக்கி விட்டோம் என்று கள்ளிப்பூ ஆனந்த தாண்டவம் ஆடியது. அதன் ஆட்டம் அதிகம் நீடிக்கவில்லை. சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி அருவருப்பாய் தோன்றியது. கள்ளிப்பூ அதை வெறுக்க ஆரம்பித்தது. வெறுப்பை மட்டுமே பட்டத்து பூச்சியின் மேல் உமிழ ஆரம்பித்தது. வெறுப்பு முற்றி அதைக் கொன்றது. செத்துப்போன பட்டாம்பூச்சி, கள்ளிப்பூவுக்குள் விழுந்தது. அதை பூச்சிகள் அரிக்க ஆரம்பித்தன. அப்பூச்சிகள் கள்ளிப்பூவையும் விட்டு வைக்கவில்லை. அதையும் தின்ன ஆரம்பித்தது.

கதை எழுதி முடித்த மலரினியாள், தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள்... சிறகுகள் அரியப்பட்டதன் காயங்கள் தெரிந்தன...

கருத்துரையிடுக

0 கருத்துகள்