கத்தோலிக்கத் திருச்சபையின் மையமான வத்திக்கானில் அமைந்திருக்கும் புனித பேதுரு ஆலயத்தில் செபிக்கச் சென்றோம் நண்பர்களுடன். அது குளிர் காலம். கிறிஸ்துமஸ் விழாவுக்கான தயாரிப்புகள் ஓரிரண்டு ஆங்காங்கே தென்பட்டன. நீண்ட வரிசை. நம்மிடம் இருக்கும் பொருட்களை பரிசோதனை செய்து, உடலெல்லாம் ஸ்கேன் செய்த பிறகு தான் ஆட்களை உள்ளே நுழைய அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். குண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருந்த 2015 ஆம் ஆண்டு அது. பல நாட்டவர்கள் அந்த வரிசையில் நின்றிருந்தார்கள். பல நிறத்தவர்கள். ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க கருப்பர்கள், ஆசிய கலப்பு நிறத்தவர்கள், குள்ளமான ஜப்பானியர்கள் என பல இனத்தவர்கள். எல்லாரும் அன்பாய் தெரிந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள், புதியவர்களைப் பார்க்கும் போது ஹாய் சொல்லி சிரித்துக் கொண்டார்கள். சிலர் தேவையற்ற ஆடைகளை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய பெட்டி ஒன்றிற்குகள் ஆடைகளைப் போட்டனர். ஒரு யூரோவுக்கு குடை விற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் எல்லாரும் அழகாய்த் தெரிந்தார்கள்.
புனித பேதுரு ஆலயத்தை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே நிற்கலாம். உள்ளேயும் வெளியேயும் அதன் அழகு தனித்துவமானது. மைக்கில் ஆஞ்சலோவின் கை வண்ணம் அப்படியே கண்களை கவர்ந்து இழுக்கும். சித்திரங்களில் காணப்படும் வண்ணக்கலவைகள், ஆளுருவங்களை வடிவமைத்திருகும் விதம், ஆலய வடிவமைப்பு, கட்டமைப்பு எல்லாம் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும். பல நாட்கள் சென்றாலும் பார்த்து ரசித்து முடிக்க இயலா விசித்திரம் அது.
செபம் முடித்து உள்ளம் நிறைய திரும்பினோம். மெட்ரோ ரயிலில் நுழைந்தோம். ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று இத்தாலிய மொழியில் பெண் ஒருவர் கத்தினார். அது ஒரு வெள்ளை இனத்தவர். அவர் கத்தியதைக் கேட்ட சிலராவது தங்களது பைகளை பத்திரப்படுத்திக் கொண்டு, எங்களிடமிருந்து சற்று விலகினர். நாங்கள் எங்களுக்குள் சுருங்கிக் கொண்டோம். சிரிப்புகள் அடங்கி மவுனமானோம். உள்ளத்தில் எங்கோ கீறல்கள் விழுந்தன. ஊரில் இருந்திருக்கலாம் கடைமையைச் செய்து கிடைத்ததை உண்டு... எனத் தோன்றியது.
சாலையில் செல்லும் பழைய ட்ராம் ரயிலில் அழுக்கு ஆடைகளுடன் குழந்தைகளும், பெண்களும் சில ஆண்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அகதியர் முகாம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்கள். வெளியே சாலை ஓரத்தை ஆக்கிரமித்து பைகளை விற்றுக்கொண்டிருந்த கறுப்பினத்தவர்களை போலிசார் விரட்டிக் கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய குப்பைத்தொட்டிக்குள் நுழைந்து காலாவதி ஆன முந்தயை நாளைய இறைச்சி பாக்கெட்டுக்களையும் காய்கனிகளையும் சில மனிதர்கள் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். மனிர்கள் அழுக்காய்த் தெரிந்தார்கள், குறிப்பாக மெட்ரோ பயணிகள் எல்லாம்...
இப்போது கோயிலில் நுழைந்தால் அழகுகளுக்கிடையே அழுக்குகளும் மனதில் வந்து போகின்றன.
0 கருத்துகள்