பால் கொடுக்கப் போன அப்பா திரும்பவில்லை இதுவரை. பிற்பகல் 2 மணிக்குப் போனால் 3 மணிக்கு முன் திரும்பி விடுவார். பால் சொசைட்டிக்கு பால் கொடுப்பதால், சொசைட்டி பால்காரர் வந்து பால் எடுப்பது வழக்கம். அவர் வீட்டுப் பக்கம் வருவதில்லை. சந்தைப் பக்கம் வருவது வழக்கம். சந்தை வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலையில் இருந்தது. அம்மா அப்பாவைத் தேட ஆரம்பித்தார். ‘ஆ... ஆளக் காணில்லிய... பாலு கொடுக்கப் போன ஆளு எங்கப் போச்சு’ என்று அம்மா ஆதங்கப்பட ஆரம்பித்தார். ஆதங்கம் பொழுதுகள் கழிய கழிய அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பது பிள்ளைகள் அனைவருக்கும் தெரியும். மணி இப்போது நாலரை ஆகிவிட்டது. ‘அப்படி ஒரிடத்துக்கும் போகாத...’ வீட்டில் அடுக்களையில் காபிப் போட்டுக்கொண்டிருந்த அம்மா நான்காவது முறையாக வீட்டில் மேற்குப் பக்கம் போய் நின்று பார்த்தாள். பாதை வெறிச்சோடிக் கிடந்தது. அப்பா வருவதற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. அம்மாவின் கவலை அதிகரிக்க ஆரம்பித்தது. அது பிள்ளைகளுக்கும் தொற்ற ஆரம்பித்தது என்பதை, அவளது சேலையைச் சுற்றிப்பிடித்தவாறு நின்ற மகனின் செய்கையிலிருந்து வெளிப்பட ஆரம்பித்தது. அம்மா பால் காய்ச்சி காப்பிப் பொடி போட்டு கலக்கி, சக்கரையும் போட்டு மூடி வைத்தாள். காப்பிக் குடிக்கும் நினைப்பில் அவள் இல்லை. ‘யாரிட்ட இப்போ கேக்குதது’ என்று அம்மா தனக்குள் பேசிக்கொண்டாள். “ஆரிட்டயாவது பேசிட்டு நிக்குதாருக்கும்” என்று மூத்த அக்காள் சொன்னாள். ‘என்ன பேசோக்கு, அங்க என்ன இதுவர, ஆளு வீட்டில வராம... இனி பசுவுக்கு புல்லு பாக்கப் போணும்... ஒரு நெனப்பும் இல்லாமலா நிக்குது.’ அம்மாவின் புலம்பல்கள் பதில்களாக வெளிப்பட்டன. “இப்ப வருவேன், நாலு மணிக்கு புல்லுக்குப் போணும் எண்ணு சொல்லீட்டில்லா போச்சு. மணி அஞ்சாச்சே.” அம்மாவின் தேடல் தொடர்ந்தது.
வீட்டில் பால்கறக்கும் பசுக்கள் மூன்று நின்றன. இரண்டு
பெரியன. ஒன்று சின்னது. இதைத் தவிர்த்து, ஒருவயதான காளை குட்டி ஒன்றும் உண்டு, அத்தோடு வேறு
இரண்டு புதிய குட்டிகளும். பெரிய பசுக்கள் கன்று போட்டி முறைய ஒன்று மற்றும்
இரண்டு மாதங்கள்தான் ஆயின. குறையாமல் 15 லிட்டருக்கும் மேல் பால் இருக்கும், சொசைட்டியில்
கொடுப்பதற்கு. காலையிலும் மாலையிலும் சொசைட்யியில் கொடுப்பது வழக்கம்.
பசுக்களுக்கு கண்டிப்பாக காலையில் புல் போட்டாக வேண்டும். வைக்கோல் போட்டு இரவை
சமாளித்து விடலாம். வெயில் காலம் ஆனதால், கைகளால் பிடுங்குவதற்கென்று புல் அதிகம் இருக்காது.
மண்வெட்டிவைத்து மண்ணோடு சேர்த்துத் செதுக்கித்தான் எடுக்க வேண்டும். ஒருவர்
முன்சென்று செத்திப் போட, இருவர் பின்னால்
மண்குடைந்து எடுக்க வேண்டும். அதை அப்படியே பனை ஒலையால் வேய்ந்த கடுவம் (பெரிய
குட்டை) இல் சேகரித்து எடுத்து வரவேண்டும். சில வேளைகளில் தென்னங்கீற்றால் வேய்ந்த
வல்லத்திலும் எடுத்து வருவதுண்டு. அது அதிக நாட்கள் நீடிக்காது. சீக்கிரம்
கிழிந்து விடும். ஆனால் அதை புல் செகரிப்பது எளிது, சுமந்து வருவதும் எளிது. புல் எடுத்து வந்து, குளத்திற்கு
சென்று, அதை கழுவிப்
பக்குவமாய் சுமந்து வீட்டுக்கு வந்து வராந்தாவில் காயப் போட வேண்டும். மறுநாள், மேலாக உள்ள
புற்கள் சற்று வாடி தண்ணீர் வடிந்து காணப்படும், அதைப் பசுக்களுக்குப் போடுவது வழக்கம். தண்ணீர்
நனைந்த புல் போட்டால், பசுக்களுக்கு
நோய் வரும் என்பதால், நன்றாக தண்ணீர்
வடிந்த பிறகே, புற்களைப்
போடுவது வழக்கம். மறுநாள்,
சூரியன்
மேலெழுந்த பின்னர், வெயிலில் போட்டு
காய வைப்பது வழக்கம். அதுவும் அதிக நேரம் போட்டால் கருகிப் போய்விடும். வெறும்
மண்ணின் மேல் புல் போடவும் கூடாது. அதை ஓலைக் கீற்றுப் போட்டு அதன் மேல் போட
வேண்டும். மேலாக உள்ள புற்கள் காய்ந்தபின் திருப்பிப் போட வேண்டும். அதிகம்
சிரத்தை புல் விஷயத்தில் வீட்டில் காட்டுவதுண்டு. புல் போடும்போது, பசுக்கள்
வெளிப்படுத்தும் நெருக்கங்கள் உள்ளத்திற்கு அலாதி சுகம் தரும். பசுக்களைத் தொடுவது, அவற்றின் மீது
அமர்ந்திருக்கும் பெரிய ஈக்களைக் கொல்வது, பேன்கள் இருந்தால் எடுப்பது இவையனைத்தும் நிறைய நேரத்தை
அபகரித்தாலும், அதில் கிடைக்கும்
ஆனந்தம் பெரிது.
Photo: pixabay.com
நான்கு மணிக்காவது போனால் தான், மரவள்ளிக்கிழந்து
பிடுங்கிய பிறகு, வெறுமையாகக்
கிடக்கும் நிலத்தில் வளர்ந்திருக்கும் புற்களை செதுக்கி எடுக்க முடியும்.
குறைந்தது இரண்டு மணிநேரமாவது வேலை செய்தால் தான் தேவைக்கான் புல் கிடைக்கும்.
அப்பா புல் சேகரிப்பதில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்வார். செதுக்கும் போது, மண்ணுக்குள்
அமிழ்ந்து போகும் புற்களை காலால் மண்ணைத் தட்டி மேலெழச் செய்வார். நாங்கள் அவற்றை
மிகுந்த கவனத்துடன் பொறுக்க எடுக்க வேண்டும். சிறு புற்கள் எஞ்சினாலும் அப்பாவின்
திட்டு கிடைக்கும். ஆகையால் மிகுந்த கவனத்துடன் நாங்கள் அவர் பின்னால் நகர்ந்து
நகர்ந்து மண்குடைந்து புற்களை சேகரிப்போம். மண்ணை அளவளாவுதல் எங்கள் விரல்களுக்கு
வாய்த்திருந்த கலையாக இருந்தது. விரல்கள் அரிப்புபோல செயல்படும். மண்ணக் கீழே
தள்ளி, புற்களை மட்டும்
கைகளுக்குள் அரித்தெடுக்கும் நுணுக்கமான கலையில் நாங்கள் வெகுவாக புலமைப்
பெற்றிருந்தோம். அவற்றை கூட்டி வைக்க வைக்க, கூட்டத்தில் இளையவராக இருப்பவர், கடவத்தை நகர்த்தி
நகர்த்தி புற்களை அள்ளி போட்டு வருவார். பலவீனர்களுக்கு கொடுக்கப்பட்ட மிக எளிதான
வேலை அது. அதை அள்ளி எடுப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல. ஒரே அடியாக அள்ளினால், புற்கள்
சிந்தும். பிறகு சிந்திய புற்களைப் பொறுக்கவது இரட்டிப்பு வேலையாகிவிடும் காரணம்
சிந்திக்கிடக்கும் மண்களில் விழுந்து, மண்ணின் பகுதியாகி விடும். ஆகையால் புற்களை இரண்டு
கைகளாலும் சுற்றிப்பிடித்து சுருட்டி லாவகமாக எடுக்க வேண்டும். அவை கைகளுக்குள்
ஒதுங்க வேண்டும். சிறு புல்லாயினும் அது தொங்கக் கூடாது. ஆகையால் அதற்கும் பயிற்சி
தேவை. இதெல்லாம் எங்களுக்கு கைகூடிய கலையாக இருந்தது. புற்களைக் கொண்டுப் போய், கழுவுதல்
இதனினும் கடினம். குளம் என்றால் கொஞ்சம் சமாளிக்கலாம். முட்டிவரை தண்ணீர் உள்ள
இடத்தில் நின்று கழுவினால்,
சவுகரியமாக
இருக்கும். புல்லிலிருந்து கெட்டியாக இருக்கும் மண்திட்டுகள் எல்லாம் போக
வேண்டும். கழுவியப் பின் அவை இருந்தால் அது பசுவுக்கு பெரும் கஷ்டத்தைக்
கொடுக்கும். ஆகையால் கழுவும் போது, அவைகள் கரைந்து போகும் படி கழுவ வேண்டும். தண்ணீரில் போட்ட
புற்கள் யாவும் கைகளுக்குள் ஒதுக்கி வாரியெடுக்க வேண்டும். சிலர் அதற்குள் குளிக்க
வருவார்கள். அவர்கள் குளத்தில் குதித்தால், தண்ணீர் சலனத்தால் புற்கள் ஆழம் நோக்கி பயணித்துவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக் கழிவு, பெரும் இழப்பின்றி திருப்பி கடவத்தில் வாரி வைத்துக்
வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும். நேரம் அதிகம் இருட்டவில்லையென்றால், குளத்து
சப்பாத்தில் கொஞ்சம் நீர்வடிவதற்காகப் போடுவோம். அதில் நாங்கள் அதில் அதிகம்
ஆர்வம் காட்ட மாட்டோம். காரணம் குளித்து வீட்டில் போய்விட்டு திரும்ப அள்ளி
எடுத்து தலையில் சுமந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வேளையில் தண்ணீர் உடலெல்லாம்
வடியும். வாய்க்காலில் புல் கழுவி எடுப்பது சுலபம் அல்ல. சில வேளைகளில் வாழைத்தண்டு
போட்டு சிறு தடுப்பு உருவாக்கி புற்களைக் கழுவுவோம். அப்படியானால் புற்கள்
அடித்துச் செல்லாமல், வாழைத்தடை
கொஞ்சம் பாதுகாப்பைத் தரும். சில வேளைகளில் அடித்துச் செல்லப்படும் புற்களை
சேகரிப்பதில் பொழுதுகள் எல்லாம் கழிந்து விடும்.
நல்ல வெயில் காலத்தில் செதுக்கி சேகரிக்கப்படும் புற்களில்
படிந்திருக்கும் மண்ணை களைய வேறு வித்தையைப் பயன்படுத்துவதுண்டு. சேகரித்து வந்த
புற்களை வீட்டு முற்றத்தில் போடுவோம். பிறகு இரண்டு பிடிகள் அள்ளி சற்று விலக்கிப்
போட்டு தென்னைமர மட்டையை செதுக்கி எடுத்தி அதனால் அடிப்போம். இப்போதையை கிரிக்கெட்
மட்டை வடிவில் அதை வடிவமைப்பது வழக்கம். அதனால் அடித்தால் திட்டுக்களாக இருக்கும்
மண்எல்லாம் உடைந்து போய் விடும். பிறகு புற்களை வாரிக் குடைந்து எடுப்போம்.
எல்லாத்திலும் நேர்த்திக் கையாளப்பட வேண்டும். பசுக்களும் வெயில் காலத்தில்
கொஞ்சம் காய்ந்து போய் இருக்கும் புல்லை எளிதில் உண்பதில்லை. நல்லதை
தேர்ந்தெடுத்து உண்டு, மற்றதை கழித்து
விடும். பிறகு கத்த ஆரம்பிக்கும். “ஆமா உனக்கு வேண்டி மலையில சுந்தரிப்புல்லு
அறுக்க ஆளு போயிருக்கு... வேணும்ணா தின்னு” என்று மாட்டை திட்டிவிட்டு அம்மா, புதிதாக புல்
போடவேண்டாம் என்று சொல்லி விடுவாள். கத்தியும் பலனில்லை என்று அறியும் பசு பிறகு
கழித்துப் போட்டதை மறுபடியும் உண்ண ஆரம்பிக்கும். சில வேளைகளில் பசுவை வெளியே
குற்றி அடித்துக் கட்டியிருந்தால், குற்றியோடு பிடுங்கிக் கொண்டு வந்து மொத்தமாக சேகரித்து வைத்திருக்கும்
புல்லை சிந்திப்போட்டு உண்ண ஆரம்பிக்கும். காலால் புல் மிதிப்பட்டு, சாணியோ மூத்திரமோ
பட்டுவிட்டால் திரும்ப அப்புல்லை பசு உண்பதில்லை. அப்போது அதுவரை செய்த
வேலையெல்லாம் வீணாகி விடும். இது பசு கவனித்தலில் மிகச்சிறிய பகுதி மட்டுமே.
மாடுகளுக்கு புல் போடுவது மட்டும். இன்னுமும் என்னென்னவோ வேலைகள் இருக்கின்றன.
தண்ணீர் கொடுத்தல், தொழுவம் சுத்தம்
செய்தல், மாடுகளை கழுவுதல்
என ஏராளம். இதையெல்லாம் செய்தால் தான் பசுவிலிருந்து பால் கிடைக்கும். அம்மா
அடிக்கடி சொல்வாள். “இங்க ரெண்டாளுக்க வேலை செய்யணும், எங்கிதான்
ஜீவிக்க முடியும்”.
அப்பா வரட்டும் என்னும் சொல்லி விட்டு அம்மா பக்கத்திலேயே
புல் சேகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அம்மாவும் நாங்களும் சேர்ந்து புல்
சேகரிக்கப் போனோம். அப்பாவைப் பற்றி அம்மா சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். புல்
சேகரிக்கும் வேலையும் நடந்துக்கொண்டுத்தான் இருந்தது. யாராவது வீட்டிற்கு
வருகிறார்கள் என்றால் நாங்கள் நின்ற இடத்திலிருந்தே பார்த்திட இயலும். ‘ணே ஒனக்க
மாப்பிளய போலிஸ் பிடிச்சிட்டுப் போச்சு’ என்று கடைக்குப் போய்விட்டுத் திரும்பிய
ஒருவர் சொல்லி விட்டுப் போனார். அம்மாவுக்கு கேட்ட உடனே, ஏதோ போல ஆனது.
‘என்னத்துக்கு... ஊரில நாலு பேருக்கு உபகாரம் செய்யும், அல்லாம யாருக்க
உபத்திரவித்திற்கும் போகாத... எதுக்கு பிடிச்சோண்டுப் போனானுவ’ என்று அம்மா
சத்தமாகச் சொல்ல ஆரம்பித்தாள். ‘ஏதோ பாலு காரனுக்கக் கூட பிரச்சனையாம்.’ ‘ஆங்...
பாலுக்காரனுக்ககிட்ட எதுக்கு மல்லுக்கு போச்சு...’ ‘அதொண்ணும் அறிஞ்சூடா...
அருமனக்குக் கொண்டுப்போயிருக்கு, இதறிஞ்சு ஜங்ஷனிலேருந்து செயர்மேனும், பிரசிடென்டும்
போயிருக்காங்களாம்... பிறவு ஒனக்க தம்பிமாரும் போனாங்களாம்’ என்று அவர்
கூறிவிட்டுச் சென்றார். அப்பா அப்போது பஞ்சயாத்தில் மெம்பராக இருந்தார். எங்கள
எல்லாம் ‘மெம்பர் பையன், பொண்ணு’
அப்டீத்தான் கூப்பிடுவாங்க. ‘இதெல்லாம் எப்ப நடந்து. எனக்கு வையாம்... போலிசிலயும்
கோர்ட்டிலயும் ஏறினா ஜீவிதம் பாழாப்போவும்... அது எங்க குடும்பத்தில வரவே
கூடாதுண்ணு செபிச்சாத்த நாளில்ல. அதுவும் இன்னி நடக்குமோ.’ அம்மா கற்பனையை
விரிவாக்கி வாழ்க்கையை முழுவதும் சிறு நிகழ்வுக்குள் அடக்கி அலசிப் பார்க்க
ஆரம்பித்தாள்.
அப்பாவின் நண்பர் ஒருவர், வந்துக் கொண்டிருப்பதை அம்மா கவனித்தாள். ‘லே
கமலா, நம்ம ஆள
பாத்தியா.’ ‘ஓ... நானும் அறிஞ்சு போனேன். ஒண்ணும் இல்ல. போலிஸ் பிடிச்சோண்டு போன
உடனே, ஆளுவ அடுத்தக்
காரில போயிருக்காங்க. அடிச்சக்கு பிடிச்சவும், செயர்மேன் போலிஸ் ஸ்டேஷனில உள்ளப் போனாரு. ‘ஆள தொட்டுப்
போகருது’ ண்ணு சொன்னாரு. பிறகு கொஞ்சம் நேரம் பேசி முடிச்சாங்க. மஞ்சாலுமூட்டுக்கு
செயர்மேனுக்க வீட்டுக்குப் போனாரு. இப்ப வருவாரு’ அம்மா நிம்மதி பெருமூச்சு
விட்டாள். போலீஸ் எங்களுக்கும் பயம் தான். பக்கத்து வீட்டில் போலீஸ் வருவதும், அவர்கள்
இழுத்துப் போவதையும் பார்த்திருக்கிறோம். மேலும், கள்ளுக்கடையில் கள்ளச்சாராயம் விற்பதை அறியும்
போதும் போலீஸ் வருவதுண்டு. அவர்களைப் பற்றிய பயம் தான் மனதில் நிறைந்திருந்தது.
அப்பா போலீஸ் ஸ்டேஷனில் இல்லை, வெளியே வந்தார் என்ற செய்தி பெரும் ஆசுவாசமாய் மனதில்
விழுந்தது.
‘பாலு காரனிட்ட என்ன மல்லுக் கெட்டப் போச்சு’ அம்மா
தொடர்ந்து வினவினாள். ‘பாலில மீட்டர் போட்டான் (பால்மானி)... பாலில வெள்ளம் ண்ணு சொல்லி
எடுத்தில்லான். ரெண்டு வாட்டி பேசிப்பார்த்திருக்காரு. அவன் ஒத்துக்கல. ‘அப்படீண்ணா ஒண்ணு செய்வோம், உன் கேனில கெடக்கப் பாலில மீட்டர் போட்டுப் பார்ப்போம். அத
விட நான் கொண்டு வந்த பாலு கட்டிக் கொறஞ்சு இருந்தா நீ எடுக்க வேண்டாம்’ அப்டீண்ணு சொல்லியிருக்காரு. ‘நீ யாருவல எனக்கக் கேனில மீட்டர் போட்டுப்
பாக்குறதுக்கு’ அப்டீண்ணு பாலுகாரன் சொல்லியிருக்கான். அது
சண்டயில போயி, சட்டயில பிடிச்சு
தள்ளுறவரைக்கும் போயிருக்கு. அவன் கேசுக்க பெலம் கூட்ட, கேனையும்
சைக்கிளையும் கீழத் தள்ளிப் போட்டு, சொசைட்டிக்கு தகவல் கொடுத்தான். இவரு கேட்டது நியாயம் நான்.
அவன் கொண்டு வாற பச்சவெள்ளத்த எல்லாரும் பாலுண்ணு வாங்கிக் குடிக்கணுமாம். நாம
சுத்தமான பாலு குடுத்தா அவனுக்கு கெட்டியில்லயாம். அப்போ அதில மீட்டர்
போட்டுத்தானப் பாக்கணும். என்னத் தப்பு...” அம்மா பாலில் தண்ணீர் கலப்பது
உண்மைதான். சிலப் பசுக்களின் பால் அவ்வளவு கெட்டியாக இருக்காது என்பது அம்மாவின்
வாதம். பொதுவாக, பால்காரன் பால்
எடுக்கத் தொடங்கும் முன் வீ்ட்டில் வைத்தே கேனுக்குள் கால்பாகம் தண்ணீர்
நிறைப்பான் என்பது பொதுவாக நம்பப்பட்டது. பிறகு, அதில் குடியாட்கள் கொடுக்கும் பாலால் சரி செய்து
விடுவானாம்.
அப்பா தூரமாக வந்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கையில்
பால்பாத்திரம் இருந்தது. சொசைட்டிக்கு பால் கொடுக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில்
வந்துக் கூடியிருந்தவர்களுக்குக் கொடுத்தார் என நண்பர் கூறினார். அப்பாவின் தலை
நிமிர்ந்தே இருந்தது. ‘எல்லாருக்கும்
ஒரே நியாயம் தான்’ என்று சொல்லிக்
கொண்டு வருவதைப் போன்று அவரது நடை இருந்தது.
0 கருத்துகள்