அன்றாடம் வாழ்வோடு போராடும் அன்றாடம் காய்ச்சிகளின் கிராமம் அது. உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் பாடாக இருந்தது. எல்லாம் சுரண்டப்பட்டவையாய், வளங்களின்றி, பலர் போட்ட பிச்சைகளின் எச்சங்களில் அது வாழ்ந்துக் கொண்டிருந்தது. இருப் பக்கங்களிலுமாக நெருக்கிக் கொண்டுக் கிடந்த கிராமங்களுக்கிடையே நிரந்தரமானப் போட்டி நிலவி வந்தது. இரண்டும் இருபெரும் சக்திகளாகத் தங்களை நிறுவிக் கொண்டு கிடந்தன. இரண்டினுள் எக்கிராமம் அதிக வலிமை வாய்ந்தது என்னும் போட்டியும், வார்த்தைப் போர்களும் நிரந்தரம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போட்டியானது இன்று நேற்றுத் தொடங்கியது அல்ல. அது பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது என்பதை அப்பிரதேசத்திலுள்ள அனைவரும் அறிந்திருந்தனர். வலிமை ஒரே நாளில் தீர்மானிக்கக் கூடியதாக இல்லை. அது ஒருநாள் நடந்து முடிகின்ற அதிகார விளையாட்டு அல்ல. அவை இரண்டும் அதை நிரந்தரமாக நிரூபிக்கும் என்னும் கட்டாயத்தில் இருந்தன.
அப்பிரதேசத்தில் வெவ்வேறு கிராமங்களில் வாழ்ந்தவர்கள், அன்றாடம் இவ்விரு கிராமங்களையும் பற்றி தீர்க்கமாக விவாதித்தார்கள். பத்திரிகைச் செய்திகளை ஒவ்வொரு வரிகளாக வாசித்து, எந்த கிராமம் வலிமைப் படைத்ததாக இருக்கிறது என்பதை தீர்மானித்தார்கள். அதற்கான பெரிய மதிப்பீடு பலகையையும் வைத்திருந்தார்கள். இந்த மதிப்பீடுப் பலகை யாரை அதிகம் வலிமையுடைதாக காட்டுகிறதோ, அக்கிராமத்து தலைவர்களின் வார்த்தைகளையும் செயல்களையும் வலிமைப்படைத்ததாக அப்பிரதேசத்தில் வாழ்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் கருதின. இரண்டினுள் எந்த கிராமம் வலிமைப்படைத்தது? என்பதை நிரூபிப்பதற்கான போர் நிரந்தரமாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால் விசித்திரம் என்னவென்றால், இவ்விரு கிராமங்களும் நேரடியாக போரில் ஈடுபடுவதில்லை. அவைகள் சொந்த மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தன. அவர்களின் வாழ்வில் எவ்விதமான ஊறும் ஏற்படக்கூடாது என்பதில் மிகக்கவனமுடன் செயல்பட்டன. நேரடியாக போரில் ஈடுபட்டால் தங்கள் நாட்டு போர்வீரர்கள் உயிர்களை இழப்பார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தனர். போர்வீரர்களை இழக்கும் போது, பெற்றோர் பிள்ளைகளுக்காக அழுது புலம்புவார்கள். கணவனை இழந்த மனைவி, அரசியல் தலைவர்களின் இருக்கைகளை தங்கள் போராட்டாங்களால் அசைத்துப் பார்ப்பார்கள். தலைவர்களின் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். அரசியல் நிச்சயமற்ற தன்மை சொந்த நாட்டில் ஏற்பட்டு விடும். சொந்த மக்களை போர்க்களத்தில் இறக்கி விட்டு அவர்களின் உயிர்களைக் காவு வாங்கும் தலைவர்கள் தூக்கி வீசப்படுவார்கள். அவர்களின் இடங்களில் வேறு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆகையால் இரு கிராமங்களும் நேருக்கு நேர் போராடுவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தன. சொந்த கிராமத்தில் போர் நடக்காதவாறு இருபெரும் கிராமங்களும் நிச்சயித்திருந்தன. இதற்காக இரு கிராமத்தாரும் இரகசியமாக ஒப்பந்தம் போட்டிருந்தார்கள் என்று பொதுவாகப் பேசிக் கொண்டார்கள். வலிமைப்படைத்தவர்களுக்கிடைேய நடக்கும் மறைமுகமான ஒப்பந்தங்களைப் பற்றி வலிமை குன்றியவர்களால் எளிதில் புரிந்திடவும் முடியாது அறிந்திடவும் முடியாது.
Photo: pixabay.com
ஆனால் எந்த கிராமம் வலிமையானது என்பதை தீர்மானிப்பதற்கான போரை நடத்தியாக வேண்டிய நிர்பந்தத்தில் அவ்விரு கிராமங்களும் இருந்தன. அது அவர்களின் இருத்தலுக்கு கட்டாயமான ஒன்றாக இருந்தது. அதற்காக அவர்கள், புத்தி சாதூரியமிக்க, அறிவுக்கூர்மையான, யுத்தியை கையில் எடுத்தார்கள். இரு கிராமங்களுக்கும் இடையேயான அந்த கிராமம். அக்கிரமாத்து மக்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், அவர்களுக்குள் அதிகாரம் கைப்பற்றுவதற்கான ஆசைகளால் அவர்களுள் பிளவுகள் காணப்பட்டன. மிக முக்கியமாக இருபெரும் கருத்தியல்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். இரு கருத்தியல்கள், அதன் அடிப்படையில் இரு குழுக்கள். ஆனால் அவர்கள் இருவேறு கருத்துக்களின் அடிப்படையில் மாறி மாறி ஆட்சி செய்து கொள்வார்கள், மேடைகள் போட்டு ஒலிப்பெருக்கிகளை வைத்து ஒரு சாரார் மறு சாரார் மீது சேர் அள்ளி வீசுவார்கள். அது ஒருவகையில் நாட்டின் பொழுது போக்காக இருந்தது. எக்கருத்தியல் மிகச்சிறந்தது, எக்கருத்தியலைக் கொண்டவர்கள் ஆட்சி செய்தால் மிக்கப் பயன் விளைவிக்கும் என்று பேசிக் கொண்டு, பொழுதுகளைக் கழிப்பதற்கு அது ஏதுவாக இருந்தது. மாலை வேளைகளையும், அலுவலகங்களில் உணவு இடைவெளிகளை நிரப்புவதற்கும், பொதுவெளிகளில் மக்கள் கருத்துப் பரிமாற்றம் நடத்துவதற்கும் அவ்விரண்டு கருத்தியல்களும் மிகுந்தத் துணைப் புரிந்தன. ஆகையால் அதை நாம் ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டுமேப் பார்க்க முடியும். அக்கிரமத்தார் ஏழையானவர்கள். அவர்களிடம் பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. ஆகையால் அக்கிராமம் அமைதியாக இருந்தாலும், இரு பெரும் கிராமங்களைப் பொறுத்தவரைக்கும் அது பலவீனமானதாகத் தென் பட்டது. தங்கள் விளையாட்டுக்கு ஏற்றத் தளமாக அதைப் பார்த்தார்கள். அவர்களுள் யார் பெரியவர் என்பதை தீர்மானிப்பதற்காக அவை அவைகளுக்கு இடையே இருந்த இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்தன.
அச்சிறு வலிமையிழந்த கிராமம் பிளக்கப்பட்டது. பிளவுப்பட்ட கிராமத்தை சரிபாதியென தங்களுக்கென சொந்தமாக்கிக் கொண்டன. இரு குழுக்களுக்கும் வாள், வேல், கேடயம், பெரிய பீரங்கிகள், கவசங்கள், வெடி குண்டுகள், போர்க்கள பயிற்சிகள் என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அச்சிறுக்கிராமத்து மக்கள் இருக் குழுக்களாப் பிரிந்து தங்களுக்குள் போரிடத் தொடங்கினர். பலர் மடிய ஆரம்பித்தார்கள். அச்சிறுக்கிராமத்தில் கல்லறைகள் அதிகமாகத் தொடங்கின. மக்களை பசி பட்டினி ஆட்கொண்டன. வறுமை தலைவிரித்தாடியது. முழு கிராமத்தையும் முழுமையாகச் சொந்தமாக்க வேண்டும் என்னும் ஆவேசத்துடன் போரிட்டார்கள். அதற்காக வலிமைப்படைத்த கிராமங்கள் சுயநலமில்லாமல் தங்களுக்கு உதவுகின்றன என நம்பின. அங்கே நிரந்தரமான வெற்றிகள் யாருக்கும் இல்லை என்பதே முக்கியமான விஷயம். ஒருவர் ஜெயித்து விட்டால் போர் நின்றுவிடும். பிறகு அதிகாரப் போராட்டம் நின்றுவிடும். அதிகாரம் நிலைநிறுத்திக் கொள்வதற்கான எதிரி இல்லாமல் போனால், மிகப்பெரிய கிராமத்தின் தலைவர் எப்படி தன்னை உலகோர் முன் தன்னைப் ஆற்றல் படைத்தவனாகக் காட்ட முடியும். ஆகையால் போர்களுக்கு முடிவுகள் இல்லை. நல்லாட்சி ரணங்களால் வீழ்ந்து கிடந்த கிராமத்தில் இல்லை. மக்கள் வீதிகளில் உணவுக்காக கை ஏந்தி நின்றார்கள். அதைப் பற்றி வலிமைப் படைத்தக் கிராமங்கள் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை.
உலகளாவிய அரசியல் தொடங்கி தனிமனித உறவுகள் வரை அனைத்தின் மீதும் இச்சூட்சி ஆதிக்கம் செலுத்துகிறது.
0 கருத்துகள்