வீதிகளில் வாழும் ஞானிகள் | அ. சந்தோஷ்

வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், கடைத் திண்ணைகளிலும் மனிதர்கள் இன்றும் வாழ்கிறார்கள். பலர் பகல் மட்டும் இங்கே வாழ்கிறார்கள், இரவானதும் திரும்புகிறார்கள். ஒருவேளை எங்காவது தங்குவதற்கு ‘வீடுகள்’ இருக்கலாம். பெரும்பான்மையினர் வீதிகளிலே தங்கி விடுகிறார்கள். எல்லாரும் புத்திப் பேதலித்தவர்கள் அல்ல. பலர் சுய புத்தி உடையவர்கள். மிகவும் வயது முதிர்ந்தவர்களும் அல்ல. ஐம்பதைக் கடந்தவர்களும் இருக்கிறார்கள். நல்ல ஆடை அணிந்திருக்கிறவர்களும் இவர்களுள் உள்ளனர். குளித்து, பொட்டு வைத்து, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் சிலர். வீடுகளுக்குச் செல்பவர்கள் மறுநாள் நல்ல ஆடையுடன் வந்தமர்கிறார்கள். மூன்று நான்கு பேர் இணைந்து இருப்பவர்களும் உள்ளனர். நிறையப் பேச்சுக்கள், குசும்புகள், வேடிக்கைப் பேச்சுக்கள், கோபங்கள், முதுமொழிகள், ஞானமுத்துக்கள், கேலிப்பேச்சுக்கள் என அவர்கள் தங்களுக்கென உறவுகளை ஏற்படுத்தி வாழ்கிறார்கள். வீடுகளில் கட்டமைக்கப்பட்ட, அமைப்புசார் குடும்பங்களில் ‘கவுரவமாக’ வாழ்பவர்களை விட இவர்களுள் பலர் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம்.

அவமதிப்புகள், சிறுமைப்படுத்தல்கள், உதாசீனங்கள், ஏளனங்கள் எல்லாவற்றையும் கடந்து போக கற்றிருக்கிறார்கள். அவர்கள் மேல் சொல்லாலும் செயலாலும் வன்முறையினைத் திணிப்பவர்கள் எத்தகைய மன வலியுடன் வாழ்கிறார்கள் என்பதை, இவர்கள் நன்கறிந்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகையால், தங்களை துன்புறுத்துவோரை மிகவும் சாதாரணமாக கண்டு கடந்து போகிறார்கள். எதார்த்தங்கள் தரும் வலிகளை இவர்கள் மிகவும் அனுபவதித்தவர்கள். ஆகையால் அவை திரும்பத்திரும்ப அணுகும்போது, அவை வாழ்வின் நிதானத்தைக் குலைக்காமல் கடந்து போக அனுமதிக்கிறார்கள். தங்கும் இடங்களிலிருந்து அடிக்கடி விரட்டப்படுகிறார்கள். நிரந்தரமாக எதுவும் இல்லை. இன்று தூங்கிய அதே இடம் நாளை கிடைக்கும் வேண்டும் என்றில்லை. உடைமைகள் குலைக்கப்படலாம், சூறையாடப்படலாம். இருப்பவற்றை தூக்கிக் கொண்டு எந்நேரமும் நகர்ந்திட இவர்கள் தயாராய் இருக்கிறார்கள். பொருட்களின் சுமை மனங்களின் சுமைகளாக மாறி மனதை அழுத்திட இவர்கள் அனுமதிப்பதில்லை. ஆகையால் உடைமைகளுள் ஒன்றை தொலைத்தாலும் புதிதாய்க் கிடைப்பவற்றை சொந்தமெனக் கருதி சாதாரணமாகி விடுகிறார்கள். நிரந்தரங்கள் எதுவுமில்லாததால், உறவுகளையும் அப்படியேப் பார்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் சிறுபணம் கொடுப்பவரும் அவர்களின் சொந்தக்காரர்களாகி விடுகிறார்கள். இரண்டு நாள் உதபுவர்களிடம் பூர்வக்குடியின் உறவுகளைக் காண்கிறார்கள். உதவியவர்களை பிறகு காணவில்லை என்றாலும் அவர்களை அதை யதார்த்தமாய் ஏற்கிறார்கள். உடன் தங்கி பல ஆண்டுகளால் கை ஏந்தியவர்கள் இறந்து போகும் போது, கண்ணீர் வடித்து விட்டு, இல்லையென்றால் ‘அவர் போகட்டும் நாம் சென்று கொண்டே இருப்போம்’ என உள்ளுரைத்து மிக விரைவில் இயல்புக்குத் திரும்புகிறார்கள். அன்றாடம் ஏராளமான உறவுகளை அவர்கள் புதிது புதிதாக சொந்தமாக்குகிறார்கள். யாரும் அவர்களுக்கு விரோதிகள் இல்லை. அழகுடையோர், அழகில்லாதோர், பணம் படைத்தோர், பணம் இல்லாதோர், நல்லவர், கெட்டவர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தார், பாவிகள், புனிதர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், உயர் சாதியினர், தாழ் சாதியினர் என எந்த முன்னெண்ங்களும் அவர்களைத் தடுப்பதில்லை. அவர்கள் பார்வை தெளிந்த நீரோடை போல் தெளிவாய் இருக்கிறது. நமது பார்வைக்குள் கரடுகள் ஏராளமாய் படிந்து கிடப்பதை அவர்களைப் பார்க்கும் போது புரிகிறது. சுயதெளிதல் சாத்தியமாகிறது. கரடுகளை வாழ்வின் பார்வைகளாகக் கொண்டு வாழக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அறிவு, ஞானம், கல்வி அறிவு, வாழ்க்கை அனுபவம் என அக்கரடுகளை சாமர்த்தியமாக பேரிட்டு அழைக்க நன்றாகக் கற்றுக் கொண்டு, சுயநலத்தின் நியதிகளை வாழ்க்கைக்கான நிரந்தர, உலகளாவிய சட்டங்களாக மனதில் திணிப்புடன் ஏற்று வாழ்கிறோம், எதார்த்தம் தொலைத்து. அவர்களின் பார்வை நமக்கு வாய்க்கவில்லை என்பதே நிதர்சனம்.

காலங்காலமாய் கூறப்பட்ட ‘கடமையைச் செய் மற்றதை மறந்து விடு’ என்னும் வாழ்க்கைத் தத்துவம் அவர்களுக்கு மிகவும் ஒத்துப்போவதாகத் தோன்றுகிறது. கையேந்துவோம், கொடுப்பவர்கள் கொடுக்கட்டும் இல்லாதவர்கள் போகட்டும் என்னும் கடமையுணர்வு அவர்களை வெகுவாக வழிநடத்துகிறது. நாளைக்கும் அவர்கள் அவ்வழி கடந்து போனால், கையேந்துவோம். வெறுப்பின் பகைமையின் நினைவுகள் நெஞ்சில் தங்கவில்லை. உதவி கேட்டேன் உதவவில்லை, மறக்கமாட்டேன் என்னும் வெஞ்சினம் கிஞ்சித்தும் அவர்களை அண்டவில்லை. பகை சுமந்து, பாரம் நிறைந்த உள்ளத்துடன் நகரும் போதெல்லாம் புண்களின் வலித்தணிக்கும் களிம்பாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் ஞானத்தை ஏராளமாகச் சொந்தமாக்கியிருக்கிறார்கள்.

உடைமைகள் சுமைகளாக மாறி குடும்பக் கலகங்களாக மாறும் உலகில், இவர்கள் கைகளுக்குள் ஒதுங்கும் பொருட்களுடன் நிம்மதியாக வாழ்கிறார்கள், எப்போது வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் இடம் நகர தயாரான நிலையில். கடந்து செல்லல், மறந்து செல்லல், மன்னித்துச் செல்லல், துறந்து செல்லல், தொந்தரவாக மாறும் போது விலகிச் செல்லல் போன்றவை இவர்களுக்கு வெகுவாக கைகூடியிருக்கிறது. சுமைகளாக மாறாமல், தங்கள் சுமைகளை குறைத்துக் கொண்டு எளிதாக கடந்து விடுகிறார்கள். நமது கூர்புத்தியின் பிடிகளுக்குள் அவர்கள் ஒதுங்கி விடுவதில்லை. நமது அறிவுகளையும், தத்துவங்களையும் கடந்தவர்களாக, நமது வட்டங்களிலிருந்து புறம் சாடுகிறார்கள். நமது முன்னெண்ணங்களும், கரிசனைகளும் வெறுப்புகளும் பகைமைகளும் அவர்ளை தொந்தரவு செய்வதில்லை. அவர்கள் அவற்றின் எல்லைகளை விட்டு வெளியேறும் அதீதப் பிறவிகளாய் காட்சியளிக்கிறார்கள்.

கிடைப்பவற்றை அவர்கள் நிரந்தரமாக்காத முற்றும் துறந்த துறவிகளாய் மாறிவிடுகிறார்கள். தான் ஆசையோடு எடுத்து வைத்தப் பொருள் நாளை தொலைந்தால், அதை எளிதில் மறக்கிறார்கள். புதியப் பொருள் கிடைக்கும் மகிழ்ச்சி அதை மறக்க வைக்கிறது. நிரந்தரங்கள் இல்லாத உலகில் தொலைதலும் புதியன ஏற்றலும் மட்டுமே நிரந்தரம் என்னும் ஞானமுதிர்ச்சியில் வாழும் துறவிகளாய் மாறிவிடுகிறார்கள். கிடைப்பதெல்லாம் சொந்தம் என்று கொண்டாடும் உறவின் நெருக்கம், இழக்கும் போது, அது எனதல்ல என்று கூறி நகரும் பொறுப்புத்துறப்பு ஆகியவை எங்கிருந்து கற்றார்கள் என்று தெரியவில்லை. நெருங்கும் உறவுகளுக்கு உறவின் வெண்மை அளித்தல் அவர்களுக்குள் இயல்பாய் ஒட்டியிருக்கிறது. ஓரிரு வார்த்தைகள் பேசி முடிவதற்குள், நமது சொந்தங்களாக அவர்கள் மாறி விடுகிறார்கள். நாம் உதிர்க்கும் வார்த்தைகளில் எவ்வித மேலாண்மை இருந்தாலும் அதை அவர்கள் கண்டுக் கொள்வதில்லை. விருந்தோம்புதலில் முதிரச்சிப் பெற்றத் ஆதித்தமிழர்களாக தென்படுகிறார்கள். தங்களைத் தேடி வந்து உதபுவர்களின் மனங்கள் கோணும்படிச் செய்யாமல் இருக்கிறார்கள். கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், அவர்கள் தங்களைத் தேடி வரும் உறவுகளை சமாளித்து விடுகிறார்கள். அவர்களுடன் உரையாடும் சில வினாடிகள் வாழ்வின் பெரும் சுமைகளை இறக்கி வைக்கும் அனுபவத்தைக் கொடுத்துவிடும்.

photo: pixabay.com

வீதிகளில் கொட்டிக் கிடக்கும் காட்சிகளையும், இசைகளையும், குரல்களையும், வண்ணங்களையும் அன்றாடம் அவர்கள் ஏராளமாகப் பருகிப் பருகி வாழ்கிறார்கள். நாம் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் அழகுகளை இரசித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முன்னால் அழுகுகளின் அணிவகுப்பு அன்றாடம் நடந்து கொண்டுருக்கிறது. வீடுகளின் ஜன்னல்கள் தரும் ஒற்றைப் பார்வைகளை மட்டும் சொந்தமாக்கிய நம்முன்னால். திறந்த வெளியில் ஜன்னல்களும் கதவுகளும் இன்றி வாழ்பவர்கள் சிரித்த முகத்துடன் நிற்கிறார்கள். உனது பார்வை மிகுச்சுருங்கியது என்று ஏளனமாகப் திரும்பித் திரும்பக் கூறி நம்மை அவமானப் படுத்துகிறார்கள். சுவர்கள் தரும் ஓரிரு வண்ணங்களே களிப்பூட்டுவன என எண்ணி வாழும் நம்மை அவர்கள் கேவலயமாய்ப் பார்க்கிறார்கள். அவர்களின் முன்னால் வானவில்லின் ஏழு நிறங்கள் கோடிக்கணக்கிலான கலவைகளைக மாறி அன்றாடம் தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் முன் நமது ஓரிரு நிறங்கள் எவ்வளவு கேவலமாக உள்ளன. நம்முடைய கண்களில் வர்ணங்களின் கலவைகளை ரசிக்க முடியாத செதிகள் படிந்துவிட்டன எனலாம். ஓரிரு இசைகளை கேட்டு, அதுவே மிகச்சிறந்தது என வாழும் நம்முன்னால், அவர்கள் பிரம்மாண்ட இசை ரசனையுடன் வாழ்கிறார்கள். வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும் இசைக்கும் இசைகள், ஓசைகள் எல்லாம் அவர்களுக்குச் சொந்தம். இசைஞானியின் கிராமிய இசையும், ரகுமானின் இசைப்புயலும், எம்.எஸ். விஸ்வநாதனின் மெல்லிசையும் ஒரே நேரத்தில் அவர்களின் செவிகளுக்கு விருந்தூட்டுகின்றன. இதயத்திற்கு இதமூட்டும் இசையை மட்டும் உன்னிப்பாய் கவனித்து, கூச்சல் குழப்பங்களுக்கிடையே, அதை மட்டும் கவனிக்கும் கவனக்குவியம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. ஓசைகள் எதுவும் இல்லா இடத்தில் கவனக்குவியம் பயிற்சி செய்து கொண்டிருப்போர் மத்தியில், காதை கிழிக்கும் ஓசைகளுக்கு மத்தியில் எங்கோ கேட்கும் பிடித்தமான ஓசையை மட்டும் மனதில் பதிய வைக்கும் அவர்கள் ஞான தீட்சிதர்கள். மேல்நாட்டு இசையில் மனம் நடனமாட அனுமதிக்கிறார்கள்; மெல்லிசையில் உறவின் மென்மைகளை அசை போடுகிறார்கள்; தமிழின் இனிமைகள் அவர்களுக்கு வசமாகின்றன; கண்ணதாசன் கூறிய வாழ்வின் தத்துவங்களை யாதார்த்தமாய்க் கூறி நம்மை அவமானத்துக்குட்படுத்தி கடந்து போகிறார்கள். நாம் இரவு பகலாக நூல் வாசித்தும் கிடைக்காத ஞானத்தெளிவை அவர்கள் எப்படித்தான் பெறுகிறார்களோ? அறைகளுக்குள் இருந்து Amazon prime, Netflix என இணையங்களில், காமராக்களுக்குள் சுருக்கப்பட்ட பார்வைகளையும் கதைகளையும் கண்டு கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களோ, உலகில் எந்தக் கேமாராவாலும் படம்பிடிக்க முடியாத கண்களாகும் கேமராவால் வாழ்வின் நிதர்சனைகளை கண்டு இரசித்தும், விசும்பியும், சிரித்தும், உணர்ச்சி வசப்பட்டும் வாழ்கிறார்கள். அன்றாடம் அவர்கள் முன்னால் எப்பேர்ப்பட்ட கதைகள் நடந்தேறுகின்றன. பேருந்து நிலையங்களில் வந்து போகும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளை அவர்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள். மேடைகளில் காட்டமுடியாத வாழ்வின் அழகுகளையும் அசிங்கங்களையும், வன்மைகளையும் மென்மைகளையும், வசீகரங்களையும் அருவருப்புகளையும், விரும்புத்தக்கவையையும் வெறுக்கத்தக்கவையையும் அவர்கள் பாரத்துக் கொண்டும் ரசித்துக்கொண்டும், வெறுத்துக்கொண்டும், அழுதுகொண்டும், சிரித்துக்கொண்டும், அருவருத்துக்கொண்டும், எள்ளி நகையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பார்க்கும் சினிமாக்கதைகளுள் நூறில் ஒன்று கூட நாம் பெரும் திரைகளில் பார்ப்பதில்லை. அவர்கள் முன்னால் வார்த்தைகள் வாரி இறைக்கப்படுகின்றன. நாம் நூலகங்களில் இருந்து வார்த்தைகளையும் பொருட்களையும் தேடிப்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் முன்னால் வார்த்தையின் படையல் நடக்கிறது. நாம் விரும்பிய வார்த்தைகளைத் தேடிப் பிடித்துக் கொண்டு ஒற்றைப் பார்வையுடையவர்களாய் மாறிக் கொண்டிருக்கும் போது அவர்கள், வாழ்வின் எல்லா யாதார்த்தங்களையும் செவிகளுக்குள் ஏற்று சர்வஞானிகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குத் திறந்த வெளிகள் பயமில்லை. கதவுகளைப் பூட்டி, பூட்டியப்பின்னர் நன்றாகப் பூட்டியிருக்கிறோமா எனத் திரும்ப பல முறை சோதித்து, ஜன்னல்களை எல்லாம் இறுக மூடி படுக்கக் கிடந்தாலும் பயம் நம்மை விட்டு விலகுவதில்லை. மதில்களைத் தாண்டி, கதவுகளைத் தாண்டி, ஜன்னல்களைத் தாண்டி பயம் உள்நுழைந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது. தூங்கும் போது கனவுகளில் எல்லாம் பயம் பூதாகாரமாய் வெடிக்கிறது. வீட்டோடு சேரந்து நிற்கும் மரத்திலிருந்து முறிந்து விழும் ஒரு கிளை நமது உறக்கத்தைக் கெடுத்துவிடுகிறது. திறந்த வெளியைச் சொந்தமாகக் கொண்டவர்கள் எவ்விதமான பயமுமின்றி அயர்ந்து தூங்குகிறார்கள். தூக்கமின்றி விடியற்காலம் பேருந்து நிலையங்களில் வந்து நிற்பவர்களை அவர்கள் ஏற இறங்கப் பார்க்கிறார்கள் எகத்தாளத்துடன். பல்லிகளையும் கரப்பான்பூச்சிகளையும் கண்டு விஷம் என்றும் ஒதுங்குகிறோம் நம்மை அவர்கள் கோழைகளாகப் பார்க்கிறார்கள். தெருநாய்க்களுடன் வாழ்கிறார்கள். பன்றிகள், பெருச்சாளிகள், எலிகள் என எல்லாம் அவர்களை சந்தித்துச் செல்கின்றன. அவர்கள் வாழ்வில் வீரம் தெறிக்கிறது.

அவர்கள் கொண்டிருக்கும் ஞானதிருஷ்டி நமக்கு வாய்த்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்!! 

கருத்துரையிடுக

0 கருத்துகள்