1863 முதல் 1998 ஆம் ஆண்டு வரை, 150,000 த்திற்கும் மேற்பட்ட கானடா நாட்டு பூர்வகுடிகளின் பிள்ளைகள் தங்கிப்படிக்கும் விடுதிகளில் சேர்க்கப்பட்டார்கள். ஐரோப்பியர்களின் ‘உயர்’ கலாச்சாரத்திற்கு உரியவர்களாக அவர்களை மாற்றுதல் அதன் நோக்கமாக இருந்தது. இந்நடவடிக்கை பூர்வகுடிகளை தன்மயமாக்குதல், அல்லது உள்வாங்குதல் என்று அறியப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் assimilating of the indigenous people என்று கூறுகின்றனர்.
29.05.2021 அன்று இப்படிப்பட்ட
பள்ளிக்கூடங்களுள் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட, பெரிய கல்லறைக் குழியைப் பற்றிய
செய்தியை BBC வெளியிட்டது.
இச்சவக்குழிக்குள் 215 குழந்தைகளின் உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தன்வயமாக்குதல் அல்லது Assimilation என்னும் வன்முறை
மேற்கூறிய செய்தியில் அடங்கியுள்ள யாதார்த்தங்கள்
- முதலாவதாக பூர்வ குடிமக்களின் பிள்ளைகள் வலுக்காட்டாயமாக அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். பெரும்பாலும் இப்பூர்வ குடிமக்கள் கொத்துக் கொத்தாக ஐரோப்பியர்களால் கொல்லப்பட்டு, குழந்தைகள் கவரப்பட்டனர். பூர்வ குடிகளை திருத்தி தங்கள் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்றும் வருந்தலைமுறையினரை மட்டுமே ‘திருத்த’ முடியும் என்றும் நம்பினர்.
- இப்பிள்ளைகள் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க பள்ளிக் கூடங்களில் சேர்க்கப்படவில்லை. மாறாக வற்புறுத்தப்பட்டு, வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டனர்.
- கவரப்பட்டப் பிள்ளைகளை தங்களைப் போன்ற மனிதர்களாக மாற்ற வேண்டும் என்னும் திட்டத்தை ஐரோப்பியர்கள் கொண்டார்கள். அதாவது, பூர்வ குடியினர், ஐரோப்பியர்களுக்கு நிகரான மனிதர்களாகப் பார்க்கப்படத் தகுதியற்றவர்கள் என்பது ஐரோப்பியர்களின் உறுதியான மனநிலை. இதனால், இச்செய்கை வழியாக அவர்கள் மானிட சமூகத்திற்கு ஏதோ பெரும் நன்மையை செய்கிறார்கள் என்பது அவர்களின் எண்ணம்.
- பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகள் தங்களுடைய சட்டத்திட்டங்களுக்கு ஒத்து வராமல் வரும்போது, அவர்கள் மீது வன்முறை செலுத்தப்பட்டது. வன்முறையின் போது கொல்லப்பட்டவர்கள் ஏராளம். எல்லாம் மானிடச் சமூகத்திற்கான சேவை என நினைத்தார்கள்.
- வித்தியாசமாக – different – ஆக இருப்பவை அனைத்தும் அழிக்கப்பட்டு, ஒருபோல ஆக்க வேண்டும். வித்தியாசங்களை சகித்துக் கொள்ள முடியாது. நிறம், முக வடிவம், உடை, வீடுகள் அமைக்கும் முறை, பயன்படுத்தும் ஆயுதங்கள், செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், கலைவடிவங்கள், மொழி, கலாச்சாரக் கொண்டாட்டங்கள், தெய்வ வழிபாடுகள், திருவிழாக்கள், குடும்ப உறவுகள் என வித்தியாசமாக இருக்கின்ற அனைத்தும் அழிக்கப்பட்டு, தங்களைப் போன்று ஆக்க வேண்டும். எளிதான உதாரணம் கூற வேண்டும் என்றால், கிழங்கு சாப்பிடுபவனின் கைகளில் இருக்கும் கிழங்கை வாங்கி எறிந்துவிட்டு அவனுடைய கைகளில் ரொட்டிகளை திணிப்பதற்கு சமம்.
- இப்பள்ளிக்கூடங்களை நடத்துவதில் மதத்தலைவர்கள் பெரும் பங்காற்றினர் என்பது கூடுதல் தகவல். கல்வி அறிவு கொடுக்க வேண்டும் என்னும் பணியில் ஈடுபடும் இவர்களை வைத்து, ஆட்சியாளர்கள், கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர் என்பதும் உண்மை.
- சமூகத்தின் மைய நீரோட்டத்தில், அவர்களை முன்னிலைப் படுத்துதல் என்பது, அவர்களின் கலாச்சாரங்களையும் மொழிகளையும் மதித்து செயல்படுதலையும் உள்ளடக்கியது என்பதை பெருவாரியான கிறிஸ்தவ போதகர்கள் நம்பினார்கள். ஆனால், அதிகாரம் அதை அனுமதிக்கவில்லை. பல வேளைகளில் அவர்கள் பகடைக்காய்கள் ஆக்கப்பட்டனர். ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு அரங்கேறியது. வேறுபட்டு நிற்பவை அழிக்கப்பட்டன. இதில் போதகர்களும் அடங்குவர்.
லெவினாஸ் பார்வையில் தன்மயப்படுத்துதல் அல்லது Assimilation
லெவினாஸ் என்னும்
மெய்யியலார், பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்தவர். இவர், வித்தியாசமாக இருக்கும்
அனைத்தும் ஒரு போல ஆக்குதல் பற்றிப் பேசுகிறார். அதாவது வித்தியாசமாக இருக்கின்ற
அனைத்தையும் அழிக்கும் போக்கு. இதை அவர் Same அதாவது ஒரு போல அனைத்தையும் பாவிக்கும் மனநிலை என்கிறார்.
இது காலகாலமாக நடந்து வருகின்ற செய்கை என்று கூறுகிறார். அப்படி வித்தியாசமாக
இருப்பவற்றை எல்லாம் வன்முறைப் பயன்படுத்தி, அழித்து ஒன்று போல் ஆக்குதல். இதை
அவர் தன்மயப்படுத்துதல் assimilation என்கிறார்.
மெய்யியல் விவாதங்கள் வழியாக
தனது கருத்துக்களை முன்வைக்கும் லெவினாஸ், இதை வன்முறை என்கிறார். மேட்டிமைகள் வளர்த்து,
இன்னொருவரை தன்னைவிட கீழ்த்தரமாகப் பார்ப்பது நியாயமற்றது என்பதை முன்வைக்கிறார்.
தன்வயமாக்குதல் முன்வைக்கும் விவாதங்கள்
எல்லாவற்றையம், தன்னைச் சார்ந்ததை
மையப்படுத்திப் பார்த்து, வேறுபட்டு நிற்பவை அனைத்தையும் தீமை என்றும் தீண்டத்
தகாதவை என்றும், தனக்கும் மானிட சமூகத்திற்கும் கேடானது என்றும் நினைக்கும் போக்கு
பல கேள்விகளை முன்வைக்கிறது.
- என்னைப் போன்று அவர்கள்
இல்லை எனும் போது, அவர்களாலும் இதையேக் கூற இயலும் ‘எங்களைப் போல நீ இல்லை.’
- எனது கலாச்சாரம், எனது மரபு எனது மொழியே தலைச் சிறந்தது என்று கூறி பிறவற்றை இழிதாகப் பார்ப்பது நியாயமானது அல்ல.
- மனிதரை மனிதராக மதிக்காத
போக்குகள் கலாச்சாரங்களில் இருப்பின் அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா?
- உரையாடல்கள் அவசியம். கலாச்சாரங்களுக்கிடையே உரையாடல். அதில் கலந்து கொள்வோர் அனைவரும் சம உரிமையுடையவர்களாகப் பார்க்கப்பட வேண்டும். அதிகாரமும் ஆணவமும் மேலோங்கக் கூடாது.
- கடவுளின் ஊழியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், அந்தந்த கலாச்சாரத்தன் கூறுகளை அவசியம் மதித்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். கலாச்சார அழிப்பு இன அழிப்புக்கு (Genocide) சமம். அதே வேளையில் அடிமைத்தனத்தின் உள்ளீடுகள் இருப்பின் அவை களையப்பட்டு, மானிட மாண்பு காக்கப்பட வேண்டும்.
இன்றும் வன்முறைக்கு உட்படுத்தப்படும் பிள்ளைகள்
பிள்ளைகளை அழித்தொழித்தல்
பல தளங்களில் இன்றும் நடக்க வாய்ப்புகள் உள்ளன. நிறம், அறிவு, நினைவாற்றல், நம்பிக்கை,
உடல் ஆற்றல், குடும்ப பின்புலம், சார்ந்திருக்கும் சாதி போன்றவற்றின் அடிப்படைகளில்,
வெவ்வேறு விதமான பின்புலங்களில் இருந்து வரும் ஆசிரியர்களால் பிள்ளைகள் எண்ணங்கள்,
சொற்கள், பார்வைகள், நடவடிக்கைகள், நடந்து கொள்ளும் விதம் போன்றவற்றால் அழித்தொழிக்கப்படலாம்.
அன்றாடம் சுயவிமர்சனம்
அவசியம். “The unexamined life
is not worth living” என்று சொல்கிறார்
சாக்ரட்டீஸ். அதாவது சுயவிமர்சனம் செய்யப்படாத வாழ்வு அர்த்தமற்றது. சுயவிமர்சனம்
செய்வோம். வித்தியாசங்களை மதிப்போம். மனிதத்திற்கு எதிரான வித்தியாசங்களைக்
களைவோம். மனிதரை அல்ல.
See for More on the Story: https://www.bbc.com/news/world-us-canada-57291530
0 கருத்துகள்