'ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று' | அ. சந்தோஷ்

ணவுக்காக கை ஏந்தி நிற்பது அவ்வளவு சுகமானது அல்ல. அது உடலையும் உள்ளத்தையும் ஒருபோல நாணச் செய்து சுய கழிவிரக்கம் உடலெங்கும் மின்சாரம் போல தாக்கி இறங்கும் அனுபவம். உணவுக்காக மட்டுமல்ல, உடைக்காக, பணத்திற்காக கை ஏந்துகிறார்கள். இல்லாதவன் இருப்பவனை நோக்கிக் கை ஏந்துகிறான். கை ஏந்துபவன் எல்லாம் தேவையில் இருப்பவன் அல்ல என்னும் வாக்கியத்திற்குள் தேவையில் இருப்போர் பலர் இருக்கின்றனர் என்னும் உண்மையும் அடங்கியுள்ளது.

ஊரடங்கு நாட்களில், (2021 மே) நறுமுகிழ் சமூக சேவை சங்கத்தின் சார்பாக ஆதரவின்றி வீதிகளில் தங்கி இருப்போருக்கு உணவு கொடுக்கலாம் என்னும் சிந்தனை இளையோருள் ஒருவனுக்குள் உதித்தது. எப்படி பொருளாதாரத்தை ஈட்டப் போகிறாய்?’ என்று மறு கேள்வி கேட்டேன். நாம 25 பேருக்குக் கொடுக்கலாம். 1000 ரூபாய் ஆகலாம். முதல் நாளுக்கானப் பணத்தை நான் போடுகிறேன்என்று கூறினான். கொடுப்பதற்குத் தொடங்கினோம். இப்போது 70 பேருக்குக் கொடுக்கிறோம். நானும் போவதுண்டு. திரித்துவபுரம் தொடங்கி, குழித்துறை, வெட்டுவெந்நி (அந்தோணியார், ஐயப்பன் கோயில்கள் செல்லும் சாலை) மார்த்தாண்டம் பேருந்து நிலையம் என இந்தப் பயணம் அன்றாடம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் கை ஏந்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உணவுப் பொட்டலத்தின் எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வருகிறோம். 25 பிறகு 30, தொடர்ந்து 35, 40, 50, 60, 70 வரை சென்றது.



நேற்றைய (28.05.2021) தினம் சென்ற போது போதவில்லை. யார் யாரோ வருகிறார்கள். சில இடங்களில் கூட்டமாக எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். காத்திருப்பவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை எனும் போது, அது பெரும் நெருடலை மனதிற்குள் ஏற்படுத்துகிறது. உணவு வழங்கும் போது தாராள மனநிலை இருக்க வேண்டும். திருமண வீடுகள், புதுமனை புகுவிழா, விருந்து என அனைத்திலும் உணவு அமிதமாக இருக்க வேண்டும் என்பது பொதுவான உணர்வு. உணவு அதிகமானாலும் குறையக் கூடாது. அதுவும் விருந்தினர் வரும் போது அவர்கள் நிறைவாக உண்டு முழு திருப்தியுடன் செல்ல வேண்டும் என்பது ஊர் வழக்கம். வீடுகளிலும் பொது நிகழ்வுகளிலும் இவ்வுணர்வு இளந்தலைமுறையின் மனங்களில் பெரியோர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. உணவு பற்றாக்குறை, அது விருந்து அளிப்பவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்படும் பெரும் அவமானமாகப் பார்க்கப்படுவதுண்டு. எனது தாராளத்திலிருந்து நான் உணவு கொடுக்கிறேன் என்று சுயம் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், விருந்தினரின் முகம் மலரவில்லை என்றால், அங்கே விருந்து அளிப்பவர் தோற்றுப் போகிறார் என்றே பொருள்.

உணவுக்காக கை ஏந்துபவர்களிடம் இல்லைஎன்று கூறுவது பெரும் அவமானத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. திரும்ப வந்து இரவுணவு உண்ணும் போது, கை ஏந்தியவர்களின் நினைவுகளும் முகங்களும் வந்து போகின்றன. தோற்றுப் போகிறோம் என்னும் உணர்வு ஆட்கொள்கிறது. ஈ (தா) என்று கேட்பவர், சுயம் இழந்து கேட்கிறார். அவர் தமது வலியிலிருந்து கேட்கிறார். ஆனால், அவருக்கு ஈயேன் (கொடுக்க மாட்டேன்) என்று கூறுவது அதினினும் வலி மிக்கது. அது மிகவும் இழிவானச் செயல்தான். இனியும் பொட்டலங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வே சிந்தையை ஆட்கொள்கிறது.  

புறநானூறு கூறுகிறது

ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

பொருள்:

ஈ என்றால் கொடு, தா, என்று பொருள். எனக்குக் கொடு, எனக்குத் தா என்று கேட்டு இரப்பது இழிவு. தன்னிடம் உள்ளதை ஈயமாட்டேன் என்பது அதைவிட இழிவு. 

கருத்துரையிடுக

1 கருத்துகள்