'நான் நானாக இல்லை' - டிஜிட்டல் உலகு | அ. சந்தோஷ்

 காலையில் எழுந்ததும், எனது நுண்ணறி கைகடிகாரத்தை (Smart Watch) அணிந்து கொண்டேன்.  இதை அணிந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுதல் மிகச் சிறந்த பலனை அளிக்கும் என்று எனது மருத்துவர் அறிவுரைத்திருந்தார். அத்தோடு, நண்பர்கள் பலரும் இதைப் பயன்படுத்தி மிகுந்த பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதை என்னிடம் கூறி, அதைப் பரிந்துரைத்தார்கள். அதனால், அதை அணிந்து கொண்டேன். உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும், எனது கடிகாரம் வெவ்வேறு எண்களைக் காண்பிக்கத் தொடங்கியது. அதைப் பார்த்தப் போது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. உடல் அசைவின் ஒவ்வொரு வேளையிலும் கலோரிகள் எவ்வளவு எரிந்து தீர்கின்றது என்பதை அதைக் காட்டிக் கொண்டே இருந்தது. இதைப் பார்க்க பார்க்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

உடற்பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. சில வேளைகளில் உடல் மிகவும் பலவீனமாகிப் போய் வீழும் நிலை ஏற்பட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் எந்த மகிழ்ச்சியும் தோன்றியதில்லை. காரணம், பல நாட்கள் உடற்பயிற்சி செய்திருக்கிறேன். ஆனால் வயிறு அப்படியேத் தான் இருக்கிறது. வயிறு குறைய வேண்டும், உடல் தகுதியுடன் பிட் ஆக இருக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் அது சாத்தியமாவதில்லை. அப்போதெல்லாம் ஒருவிதமான சோகம் தான் மனதை வந்து தொற்றிக் கொள்ளும். பிறகு உடற்பயிற்சி செய்வதற்கான உற்சாகமே இருக்காது. எதுக்கு தேவையில்லாமல், என்னதான் பயிற்சி செய்தாலும் வயிறின் அளவில் எவ்வித மாற்றமும் வருவதில்லை என்று தீரிமானித்துக் கொண்டேன். இந்த உணர்வுகளை நெடுநாட்களுக்குப் பின்னர், மருத்தவர் ஒருவரிடம் கூறினேன். அவர்தான் இதைப் பரிந்துரைத்தார்.

முதல் நாள் மனதில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. எவ்வளவு சாதுரியமாக அந்த நுண்ணறிவு கைக்கடிகாரம் கணக்கிடகிறது. அதில் காண்பிக்கும் எண்களைப் பார்க்கப் பார்க்க எனக்குள் உற்சாகம் பெருகிக் கொண்டே இருந்தது. இதை ஏன் இவ்வளவு தாமதாக வாங்கினேன் எனும் கேள்வி எனக்குள் எழுந்தது. எனது உலகறிவின்மையை நான் சபித்தேன். காட்டுவாசி போன்று ஆகிவிட்டேனே எனத் தோன்றியது.

இதிலே விசித்திரம் என்னவென்றால், அது நம்மைக் கட்டுப்படுத்தும். அதிகமாக உடற்பயிற்சி செய்தால், உடல் சோர்வடைந்து தேவைக்கு அதிகமாக கலோரிகள் எரிந்து போய், பிறகு உடல் பலவீனமாகிவிடும் என்பதையும் எச்சரிக்கும். எவ்வளவு நுண்ணறிவு அதற்கு? என்னை விட என் உடலைப் பற்றிய அறிவை அந்த சிறிய படைப்புக் கொண்டிருப்பதைப் பற்றி மிகவும் வியந்தேன். அது என்னை ஆளும் மன்னராக உணர்ந்தேன். இல்லை வாழ்க்கைத் துணை. எனது உயிரைப் பற்றியும் எனது உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் அதீத கவலை கொண்ட ஈடில்லா உயிரி அது. அது நண்பி.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்னும் குறளுக்கு முற்றிலும் தகுதிப் பெற்ற நிகரில்லாப் படைப்பு. நான் பெருமிதம் கொண்டேன். எனக்குள் இருக்கும் கலோரிகளின் அளவுகள், அதை எந்த அளவு எரிக்க வேண்டும், எவ்வளவு வைத்திருந்தால், நான் ஆரோக்கியமாக இருக்கப் போகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் அறிந்து, என்னிடம் உணர்த்திக் கொண்டிருக்கும் விசித்திர உயிரி. நான் பெரும் மகிழ்ச்சிக் கொண்டேன்.


photo: pixabay.com

பின்னிணைப்பு

வருங்காலத்தில், இப்படிப்பட்ட முறைகள் வரப்போகிறதாம்... வேலைக்குச் செல்லும் போது, உடல்தகுதிச் சான்றிதழை இப்படிப்பட்ட இயந்திரங்கள் தருமாம். மருத்துவருக்கு பணம் கொடுத்து, பொய்ச்சான்றிதழ் வாங்க முடியாதாம். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று  நீங்கள் யாரிடமாவது சொன்னால், அவர்கள் நம்ப மாட்டார்கள். நுண்ணறிவு இயந்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்பார்கள். இது ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல. நம் உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கிறதாநம்மால் இக்கட்டானச் சூழலைக் கையாள முடியுமா என்பதை கண்காணிக்குமாம். நேர்முகத் தேர்வில், நீங்கள் நல்லப் பதில்களைச் சொல்லித் தப்பிக்க முடியாதாம். இதுவரையிலும் நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள் என்பதை அனைத்தையும் எண்ணிம தகவல்களாக (Digital data) ஆக சேகரித்து வைத்திருக்கும் இயந்திரம் காட்டிக் கொடுத்து விடும். உயிரித் தொழில் நுட்பமும் (Biotech) தகவல் தொழில்நுட்பமும் (Infotech) நம்மை ஆளத் தொடங்குமாம்.

உடற்பயிற்சியில் நுண்ணறிவு கடிகாரத்தைப் பாராட்டிய நான், இப்போது தயங்குகிறேன். எனது சுதந்திரம் என்னிடம் இல்லை என்ற உணர்வும் தோன்றத் தொடங்குகிறது. என்னைப் பற்றிய சகலத்தையும் சேகரித்து வைக்கப்போகும் - உடல், உணர்ச்சிகள், பணம், தொழில், விருப்பு வெறுப்புகள் – பெருநிறுவனங்கள் என்னை ஆளுமாம். என்னை மட்டுமல்ல உலகம் முழுவதையும்.

வாழ்க சுதந்திரம், ஒங்குக தனிமனித உரிமைகள்... ஹா ... ஹா...  

கருத்துரையிடுக

0 கருத்துகள்