தூங்க வேண்டிய நேரம் கடந்து விட்டது. சாதாரணமாக இந்நேரத்துக்கெல்லாம் அவன் தூங்கி விடுவான். அன்று ஏன் தூங்கவில்லை என்று தெரியவில்லை 12 மணியாகியும் விழித்திருந்தான். வாட்ஸ்அப் கூட 10.30 மணித் தாண்டிப் பார்ப்பதில்லை. அதை அந்த நேரத்துக்குப் பிறகு பார்த்தால் நிம்மதி தொலைந்து போகும் என்பது அவனது கணிப்பு. அவளிடமிருந்து வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வந்திருந்தது. ஒன்றிரண்டு அல்ல பத்துக்கும் மேல். வாழ்க்கையே நிம்மதியற்றுப் போனதற்கான சலிப்பை பல்லிளிக்கும் குறுஞ்செய்திகள். வழக்கமாக அவளுடைய குறுஞ்செய்திகளுக்கு அவன் உடனே பதிலளிப்பதில்லை. அதை ஆர்க்கைவ்ஸ் என்று தடவி விட்டுவிடுவான். மறுநாளோ அல்லது எப்போதாவது ஞாபகம் வரும்போது, உள்ளேப் போய் பார்த்து பதில் அளிப்பான்.
அன்றைய தினம் குறுஞ்செய்திகளை வாசிக்க வேண்டும் எனும் நிர்பந்தம் அவனுக்கு உண்டாயிற்று. மேலே போப்அப் இல் உதித்த அரைகுறை வார்த்தைகள் அவனுக்குள் பதட்டத்தை உருவாக்கியது. உள்ளிருக்கும் பழைய உறவின் நினைவுகள் ஏற்படுத்திய இரக்கமா, அன்பா, கழிவிரக்கமா என்று இனம் புரியாத ஒன்று மெல்ல எட்டிப்பார்த்தது. கணவனோடு இனி வாழமுடியாது என்று திரும்பத் திரும்ப அக்குறுஞ்செய்திகள் அவளது எண்ண ஓட்டங்களை முன்வைத்துக் கொண்டு தொடர்ந்தன. நீலத்தில் இரண்டு டிக் விழுந்து கொண்டுவந்ததால், அவன் வாசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் உறுதி செய்து கொண்டு குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தாள். திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பின் அதிகமாக அவனோடு அவள் பேசுவதில்லை. அவனும் அப்படித்தான். இப்போது அவளுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. தனது கணவன் தன்னைக் கவனிக்கவில்லை, தனியாக எங்காவது சென்று வாழ வேண்டும் என்பது அவளது குறுஞ்செய்திகள் வெளிப்படுத்திய செய்தி. சொந்தமாக வேலை இருக்கிறது. இனி தனியாகத் தான் வாழ்வு என்பதை அவள் அரைகுறையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதில் உறுதிப்பாடு இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. அவள் அதை ஏதோ மனக்குழப்பத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பது அவனது மனதில் உறைக்க ஆரம்பித்தது. ஆனாலும் இவனுக்குள் நப்பாசை உதிக்கத்தான் செய்தது. விட்டுப்பிரிந்து வந்தால், ஒருவேளை சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம்... அந்தச் சிந்தனை அவனுக்குள் எழுந்ததும் அவன் அவனை வெறுத்தான். கீழ்த்தரமான புத்தி என கண்டமேனிக்கு தன் மேல் வசை மாரி பொழிந்தான். “இவ்வளவு கீழ்த்தரமாக நீ எப்போது மாறினாய்? பிறரின் வலிகளை எப்போது சுயநலத்துக்கு மாற்றத் துணிந்தாய். தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் பெண் ஒருவருக்கு நீ அறுதல் அல்லவா கூற வேண்டும்? மனதை ஆற்றுப்படுத்த வேண்டாமா? நம்பிக்கைக் கொடுக்க வேண்டாமா?” சுயம் எழுப்பிய கேள்விகள் அவனை சுயபிரக்ஞைக்கும் வாழ்வைப் பற்றிய யதார்த்த நிலைக்கும் திரும்ப அழைத்து வந்தது. நல்லவன் என்னும் முகமூடியை அணியத் தொடங்கினான். உள்ளுக்குள் புகையும் சுயநலத்தின் எச்சங்கள் எட்டிப்பார்க்காதப் படி மறைக்கும் வண்ணம் முகமூடியை நன்றாக அணிந்து கொண்டான். அதில் ஓட்டைகள் உருவாகி, சுயநலம் இழிவின் எண்ணங்களாய் கசியக் கூடாது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான். முகமூடியை நன்றாக அணிந்துக் கொண்டானா என அவன் உறுதிப்படுத்திக் கொண்டான்.
இடைச்சொருகல்
Good Person என்று ஒருவர் சொல்லும் போது, person என்னும் சொல்லுக்கான கிரேக்க மூலத்துக்கு முகமூடி, கதாபாத்திரத்தை ஏற்றல் என்றெல்லாம் பொருள் உள்ளன. சமூகத்திற்கு ஏற்ற முகமூடியை அணிதல். இங்கே பிறர்நலத்திற்காக முகமூடி அணிந்தாக வேண்டியது ஒருவரின் கட்டாயம்.
உரையாடல் தொடர்கிறது
முதலில் நக்கலாக சில emoji அனுப்பினான். கண் தள்ளி இருப்பது போல, பெரிதாக சிரிப்பது போல, அழுவது போல என பலவற்றை... அது அவளை சமாதானப்படுத்தும் என்று நினைத்துக் காட்டிய வேலை. அவை அவற்றின் பணியை செய்யவில்லை என்று கூற முடியாது. அவள் சற்றே மனதில் தேறியிருப்பாள் என்பது தெரியும். அவன் அனுப்பிய emoji க்களை விரும்புவதாகவோ, வெறுப்பதாகவோ அவள் காட்டிக் கொள்ளவில்லை. அவள் கண்டு கொள்ளவில்லை. கண்டும் காணாமல் போல் நடித்தாள் என்பதே உண்மை. அவள் தான் கூற வருபவற்றை எல்லாம் கூறியாக வேண்டும் என்பதில் திடமாய் இருந்தாள். ஒருவகையில் இன்றும் அவனை பகடைக்காய் ஆக்கி, தனது உணர்ச்சிகளை பகிர்ந்திட ஓர் ஆள் வேண்டும் என்பது தான் நோக்கம் என்பது திண்ணமாகத் தெரிந்தது. ஆனால், அவன் நல்ல person ஆகவே இருந்தான். நேராக அவன் உணர்வதைச் சொல்லிவிடக் கூடாது என்பதை அவனுக்கு அனுபவம் கற்றுக் கொடுத்திருந்தது. ஆகையால் அவள் அனுப்பும் குறுஞ்செய்திகளை எல்லாம் வாசிப்பதாக, அவளது உணர்வுகளைப் புரிந்துக் கொள்வதாகவும் ஈரெழுத்து ஆங்கிலச் சொற்களால் உணர்த்திக் கொண்டான். அதாவது Ok, Ah, Oh, No, Ee, Ha Ha, Hm போன்றவையே அச்சொற்கள். இவை ஈரெழுத்துக்கள் ஆயினும், பரிமாறிய செய்திகள் பெரியன. அது குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருப்பவருக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும் மந்திரச் சொற்கள். இவ் ஈரெழுத்துக்கள் கடத்திவிடும் உணர்வுகள் அவளுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.
கணவன் மீது கோபம் பெரிதாய் பொங்கிய போது, Ah No எனும் இருச்சொற்களைச் சேர்த்து தட்டிவிட்டான். இதற்கிடையே உணர்ச்சிகளை தத்ரூபமாய் வெளிப்படுத்தும் emoji க்களும் அனுப்பிக் கொண்டிருந்தான். “எனக்கு இரண்டு பிள்ளைகள் போதும் அவர்கள் என்னோடு இருப்பார்கள்” என்று கூறினாள். “நான் அவர்களோடு வாழ்வேன், அவர்கள்தான் எனக்கு வாழ்வு; எனது உலகு. அவர்களுக்காகத்தான் நான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினாள். உலகம் தோன்றியது முதல் பெண்கள் வைத்திருக்கும் தியாகச் சொற்கள் என்று இவற்றைச் சொல்லலாம். நல்ல அர்த்தத்திலும் தங்கள் மேல் பிறர் இரக்கம் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிள்ளைகள் தன்னைவிட்டுப் போகாமல் கட்டிப்போட வேண்டும் என்பதற்கான பூட்டுக்களாகவும் காலகாலமாய் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லலாம். சுயம் நலம் நிறையவே இருக்கிறது.
இவன் பேச வேண்டிய கட்டம் வந்தது என்பதை உணர்ந்தான். முகமூடியை ஒருமுறை கூட சரிசெய்து கொண்டான். காழ்ப்புணர்ச்சிகள் ஏதும் கழிவாய் கசியாமல் இருப்பதை நுணுக்கமாய் கண்காணித்துக் கொண்டான். Ha Ha என்று ஈரெழுத்து சொல்லை தட்டிவிட்டப்பின் “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்று தத்துவம் பேச ஆரம்பித்தான்.” “நான் அப்படித்தான் பண்ணுவேன்” என்று மறுமுனையிலிருந்து செய்தி வந்தது. “என் பிள்ளைகள் என்னோடு இருப்பார்கள். அவர்கள் என்னை விட்டுப் போக மாட்டார்கள்.” “அதற்கு எவ்வித உத்திரவாதித்துவமும் இல்லை” என்று அவளுக்கு மனம் நொந்தாலும் பரவாயில்லை என்று சற்று கடினமாகவே சொன்னான். “இல்லை இருப்பார்கள்” என்று அடம்பிடிக்கவே, “அப்படி யோசிப்பதும் சரியில்லை, அப்படி யோசிப்பதில் முட்டாள்தனம் ஏராளமாக அடங்கி இருக்கிறது” என்றும் கூறினேன். “ம்... என்னை முட்டாள் என்று நினைப்பதில் உனக்கு அலாதி சந்தோஷம் இல்ல” என்று தனது ஆதிக்கத்தை அவன்மீது செலுத்த முயன்றாள். ஆதிக்கம் செலுத்தும் போது, சூசகமாக கையாளவில்லை என்றால், அவள் சொன்னதே சரியென்றாகி விடும். பிறகு, அவளுடைய வலியைப் போக்க வேண்டிய அவன் அதை அதிகமாக்கிவிடுவான் என்பதை உணர்ந்தான். “எல்லாரும் ஒருவகையில் முட்டாள்கள் தான். ஏமாந்து போவது நமக்கொன்றும் புதிதில்லையே!” முகமூடியைத் தாண்டி, சுயகழிவிரக்கம் வெளிவந்தது. சுயம் வெறுக்கும் உணர்வுகளுக்குள் விழுந்துவிட ஆரம்பிக்கும் உணர்வுகள் மேலோங்குகிறது என்பதை உணர்ந்தவன், சுதாரிக்க ஆரம்பித்தான். மூகமூடி எப்படிக் கிழிகிறது. மீண்டும், முகமூடியை சரிசெய்து கொண்டான். ஆனால், முகமூடியைக் கிழித்துக் கொண்டு வந்த, அச்செய்தி, அதன் வீரியத்தைக் காட்டியது என்றே சொல்லலாம். அதன் வழியாக ஏதோ பெரியப் பாடத்தை உணர்ந்தவள் போல, “ஆமா இல்ல, யாரைத்தான் நம்புவது? நாளை ஒருவேளை என் பிள்ளைகளே என்னை விட்டுப் போனால்...” மூன்று புள்ளிகளைப் போட்டுத்தான் செய்தியை முடித்தாள். யோசனையில் மூழ்குகிறாள் என்பது அவனுக்குள் திண்ணமாய் உறைத்தது. இப்போது, இவன் கை ஓங்குவதாய் உணர்ந்தான். அவள் இவனோடான நட்புறவின் இறுதியில், கைப்பிடித்த அனைத்தும் நழுவிப் போய், நிர்கதியற்றுப் போனச் சூழல்களைப் பற்றிய யோசனையில் ஆழ்கிறாள் என்பது நன்றாக புரிந்தது. சுடுஞ்சொற்களைப் பேசியதாய் உணர்ந்தான். ஆனால், அவ்வேளையில் சுடுஞ்சொற்கள் பேராற்றலுடன், யாதார்த்தங்களை படம் விரித்துக் காட்டுகிறது என்பதை அறிந்து, தனக்குள் சமாதானமாகிக் கொண்டான். இதுதான் தக்கத்தருணம் என்பதை உணர்ந்தவனாய், “கணவன் தான் உனக்கு நிரந்தரமானவன்; அவன் மேல் உரிமை கொண்டாடும் அளவுக்கு இவ்வுலகில் வேறு யார் மீதும் நீ உரிமை கொண்டாட முடியாது.” அவளுடைய பதிலுக்குக் காத்திருக்காமல், தொடர்ந்து தத்துவ மழையை பொழியலானான். “பிள்ளைகளை நீ பெற்றெடுக்கிறாயே ஒழிய, அவர்கள் உனக்கு முழுமையாக உரியவர்கள் அல்ல. அவர்கள் சொந்தமென விருப்பு வெறுப்புகளை உடையவர்கள்.” அவள் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள் என்பதை Typing… என்னும் பூடகச் செய்தி காட்டியது. அவள் அதை அனுப்புவதற்குள், தான் சொல்ல வருவதை சொல்லியாக வேண்டும் என்னும் துரிதத்துடனும் விசையுடனும் விரைவாக எழுத்துக்களின் மேல் தடவி, சொற்களாக்கி அனுப்பிக் கொண்டிருந்தான். “பிள்ளைகள் உன்னை விட்டு விலகினால், நீ தனிமையாகி விடுவாய். ஆனால் உன் கணவன் அப்படியல்ல. உனது வாழ்வின் பகுதி, உனது உரிமை” என்று செய்திகளை அனுப்பி வைத்தான். அவள் வாசிக்கிறாள்; யோசிக்கிறாள் என்பது அவனுக்கு, மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளத்தன் ஆழத்தில், நப்பாசைகள் குட்டிப்பிசாசுக்களாய் எழுந்து வண்ணம் தான் இருந்தன. அவற்றை முகமூடியால் மறைத்துக் கொண்டான்.
“என்ன மதிக்கிறதில்ல, நண்பர்கள், சொந்த வேலை, பெற்றோர்கள் என்று அவன் தனது காரியங்களைப் பார்த்துக் கொள்கிறான்” என்ற செய்து நெடுநேரத்திற்குப் பிறகு வந்தது. “Ha Ha அதுவும் செய்து தானே ஆகணும்” என்று குறுஞ்செய்தியை தடவி விட்டான். அவளை அமைதிப் படுத்தும் நோக்குடன் தான், அச்செய்தியை அவன் அனுப்பினான். “அவன் செய்யட்டும், செய்யட்டும், நான் போறேன்” என்று உடனே செய்தி வந்தது. சற்றே செய்திகளைக் கையாள்வதில் தவறி விட்டோனோ என்னும் ஐயம் தோன்றியது. “கோபப்படாத, வாழ்க்கை அப்படித்தான், ஒரு ஆளைச் சார்ந்து மட்டும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று நம்புவது புத்தி சூன்யம்.” Hm என்ற பதில் வந்தது. மறுபடியும் ஏதோ பழைய நினைவுகளுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறாள் என்பதை அறிந்தான் அவன். செல்லட்டும் என்று சற்றே, போண் ஸ்கிரீன் தடவி வேறு செய்திகளுக்குள் நுழைந்தான் அவன்.
ஐந்து நிமிடங்கள் தாண்டியிருக்கும், போப் அப்பில் அவளின் குறுஞ்செய்தி நடனமாடி ஒற்றைக் காலில் நின்று, பிறகு சென்றது. அதில் Good Night என்று மட்டுமே இருந்தது. தனது வேலையும் பயனும் முடிவடைந்தது எனத் தீர்க்கமாய் அறிந்த அவனும், இயந்திரத்தனமாய் பதிலுக்கு குட் நைட் என்று தடவி விட்டான்.
மாதம் ஒன்றாகி விட்டது, இன்று ஒரு செய்தி வந்திருக்கிறது. இடையில் எந்த செய்தியும் காணவில்லை. அவளுடைய கணவரின் தங்கைக்குக் கல்யாண பிசியில் இரண்டு வாரம் கடந்து போனதாய்ச் செய்தி வந்தது. அதற்கு முன்னர் உள்ளவற்றைப் பற்றி ஏதும் அவன் கேட்கவில்லை. Oh அப்டியா என்று பதில் அளித்தான்.
முகமூடி நன்றாகத் தான் வேலை செய்கிறது. பிறர்நலம் பேண அந்த முகமூடியை நிரந்தரமாக்க வேண்டும் என்று உறுதியாய் தீர்மானித்து அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான் அவன்.
0 கருத்துகள்