"நரகம் வெறிச்சோடிக் கிடக்கிறது. சாத்தான்கள் எல்லாம் இங்கே உலவுகின்றன"
– வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஐரோப்பாவில் பயணம் செய்யும் நேரங்களில் ரயில் பெட்டிகளில் இளம் பெண்களும் ஆண்களும் பேய்களைப் போன்ற வேடமணிந்து உங்கள் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து யாத்திரை செய்கிறார்கள் என்றால் அதிசயப்படுவதற்கில்லை. சங்கிலிகளை அலங்காரங்களாகப் பிணைத்திருப்பார்கள். விழிப்புருவத்திலும், மேல் உதட்டிலும் கீழ் உதட்டிலும், மூக்கிலும், காதுகளிலும், தொப்புளிலும், ஓட்டைகள் போட்டு அணிகலன்களை அணிந்திருப்பார்கள். கிழிசல்கள் நிரம்பிய ஆடைகள், நீண்ட முடி, சிக்குப்பிடித்து கெட்டியாய்ப் போன முடி என பல வேடங்களில் வருவார்கள். இத்தாலியில் மிலானிலிருந்து உரோம் நோக்கிப் திரேனித்தாலியா ரெயிலில் பயணம் செய்த போது இதைப் போன்றதொரு குழுவின் முன்னால் பயணம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. நீண்ட நேரம் அவர்களைப் பார்த்தவாறு தான் இருந்தேன். ஆனால் அவர்கள் சாதாரண மனித நேயமிக்கவர்களாகவே தென்பட்டார்கள். வெறுப்போ கோபமோ அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை.
பாரிசில் ஈபிள் டவர் முன்னால், இத்தகையதொரு குழுவானது வீதி நாடகம் ஒன்றை மக்கள் மத்தியி்ல் அரங்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. விதவிதமான முகமூடிகள், ஆடைகள், கறுப்பும் வெள்ளையுமென. திகில் படங்களில் மட்டும் பார்த்திருக்கும் காட்சிகளை நேரடியாகப் பார்க்க முடிந்தது. அங்கும் வன்முறைகள் ஏதும் தென்படவில்லை. உரோமையில், முக்கிய பேருந்து மற்றும் இரயில் நிலையத்தின் வாசலில் நின்றிருக்கையில், ஒரு பெரிய வாகனம் நிறைய ஒலிப்பெருக்கி பெட்டிகளை அடுக்கி, அதிபயங்கர ஒலிகளுக்கு நடுவே பேய்களின் வேடங்களை அணிந்தவாறு பலர் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது. பொருட்காட்சி மற்றும் பொழுது போக்கு இடங்களில் திகில் அறைகளைப் பார்க்க முடியும். நுழைவுச் சீட்டு எடுத்து உள் நுழையும் போது, இடையிடையே விளக்குகள் அணைக்கப்பட்டு இரத்தம் உறைய வைக்கும் திகிலூட்டும் உருவங்கள் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாமல், அச்சுறுத்திச் செல்லும். லண்டனில் மாதம் துசாடே மெழுகுச் சிலைகள் அமைந்திருக்கும் அரங்கின் ஒருபகுதியில், அடிமைகளையும் போர் குற்றவாளிகளையும் கொல்வதற்கு பயன்படுத்திய கில்லட்டின் என்னும் இயந்திரம் வைக்கப்பட்டு அதன் இயக்கத்தை திகிலுடன் சித்திரப்படுத்தி இருந்தனர். அத்தோடு பேய்களும் அங்கு நடமாடின. இத்தகையக் குழுக்கள் ஏராளம் உள்ளன. பிறந்தோம், வளர்ந்தோம், களித்தோம், இறந்தோம் என வாழ்ந்திட முயல்கின்றனர் போலும். இவர்களின் பெற்றோரின் கண்ணீர்க்கதைகளை சில வேளைகளில் கேட்கும் வாய்ப்பும் வாய்த்திருக்கிறது. இவைகளை நான் பல வேளைகளில் சந்தேகங்களுடனும் அச்சங்களுடனும் கடந்து போன பொழுதுகள் உண்டு. உரோமையில் போர்த்தா தி ரோமா அருகாமையில் நான் தங்கியிருந்த காலத்தில், மாலை நடப்பதற்காகச் செல்வதுண்டு. பீர் பாட்டில்கள் நொறுங்கிக் கிடக்கும் வீதிகள் உண்டு. சில ஆலயங்களின் முன்னால் கூட அப்படிக் கிடப்பதுண்டு. இப்படியொரு வீதியின் வழியாக செல்லும் போது, வீடுகளற்ற அப்பகுதியின் மதில் சுவர்களில் பேய்களில் விதவிதமான படங்களை ஸ்ப்ரே பெயின்ட் செய்து வைத்திருப்பதைப்பார்க்கையில் அச்சம் நெஞ்சில் ஏறுவதுண்டு. குளிர் காலங்களில் அவ்விடங்களை தவிர்த்திருக்கிறேன். அச்சத்தின் உள்ளீடுகளை அவைகள் கொண்டுள்ளன. அவற்றைப்பார்த்து அஞ்சும் மனிதர்களும் உண்டு. இவைகள் அழிக்கும் ஆற்றல் பெற்றனவா என்றால். பதில் ஆம் என்றுதான் அமையும். அருள் நிறைய வேண்டிய உலகில் இருள் நிரப்புவது சாதகமாக அமையாது என்பதே உண்மை.
ஆனால் லூசிபர் என்னும் உருவம் அதன் பாதிப்புகளை இன்னும் ஏற்படுத்திக்
கொண்டுதான் இருக்கிறது. உலகில் தீமைகள் உருவாக வேண்டும் அது வளர்ந்து கொண்டே
இருக்க வேண்டும் என்னும் எண்ணங்களும் அத்தகையச் செயல்களை ஊக்குவிக்கும் நபர்களும்
இருக்கிறார்கள்.
உயிர்கொல்லிகளை உருவாக்கும், கட்டமைக்கப்பட்ட எண்ணங்களையும் செயல்களையும்
சமூகத்தில் மத்தியில் விதைக்கின்ற சாத்தான் வழிபாடு சார்ந்த இடுகைகள் காணொளிகள்
வாயிலாகவும் பக்கங்கள் வழியாகும் சமூக வலைத்தளங்களில் விளம்பப்பட்டு வருகின்றன.
இவற்றை உள்வாங்கி அவற்றிற்கேற்றப்படி மானிட வெறுப்புகளை செயல்முறையாக்கும்
மனிதர்களும் இருக்கிறார்கள். இதனால் கவரப்பட்ட மனிதர்கள் வன்முறைச் செயல்களில்
ஈடுபடுகின்றனர்.
திகில் படங்களைப் பார்ப்பதில் ஆசை கொண்டவர்கள் உண்டு. இரவில், விளக்குகளை அணைத்து இப்படங்களைப் பார்த்து இரசிப்பவர்கள் உண்டு. வெறுப்பு,
அழிப்பு, கொலை, கொடூரம்
போன்ற உணர்வுகள் மனிதருக்குள் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கின்றன. காட்டில்
வேட்டையாடி, எதிராக வரும் குலங்களை அழித்து தங்களை
நிறுவிக்கொண்ட மனிதர்கள், நாகரீகம் என்னும் போர்வை அணிந்து
வெகுகாலம் ஆகவில்லை என்பதை மானுடவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆகையால், நன்மைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீமைகளை ஆராதிப்பதிலும், அவற்றைக் கொண்டாடுவதிலும் மனிதர்கள் ஆசை காட்டுகிறார்கள்.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இங்கிலாந்தில் பிபா ஹென்றி மற்றும் நிக்கோலா ஸ்மால்மேன் ஆகிய இருவரும், கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இவர்கள் பிபாவின் பிறந்தநாளை, லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் கொண்டாடிக் கொண்டிருந்தனர். பெண்வெறுப்பை சுமக்கும் டான்யால் ஹூசைன் என்பவர், தற்போது 19 வயது அடைகின்ற இவர், பெண்களைக் கொல்ல வேண்டும் என்னும் என்னும் ஒப்பந்தத்தை ஒரு சாத்தான் வழிபாட்டக் கொள்கையுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் ஜூலை 2021 இல் குற்றம் நிரூபீக்கப்பட்டு தண்டனைப் பெற்றார். ஒப்பந்தத்தின் பிரதி அவரது வீட்டிலிருந்து கிடைக்கப்பெற்றிருந்தது. இதன்படி, பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் பெண்களை கொல்வேன் என்னும் ஒப்பந்தம் ஏற்றிருந்தார். கடந்த இரண்டாண்டுகளில் இங்கிலாந்தில் இத்தைகயைச செயலில் ஈடுபட்டாதாக 7 பேர் தண்டனைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களுள் 6 பேர் பதின்வயதினர். நவீன-நாசி சாத்தான் வழிபாட்டை மேற்கொள்ளும் பயங்கரவாத அமைப்புடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். டான்யால் ஹூசைன் அவர்கள் தீவிரவாதியாக இருந்ததில்லை ஆனால், இணையக் கருத்துக்கள் வழியாக அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்த ஒப்பந்தத்தின்படி, ஒருவர் உலகில் பணமும் அதிகாரமும் பெற வேண்டுமென்றால், சில மனிதர்களைக் கொன்று இரத்தம் சிந்த வேண்டும். ஹுசைன் அவர்கள், ஏற்படுத்திய ஒப்பந்தப் பிரதியில், அவர்தம் கையொப்பந்தத்தை போட்டதுடன், பெண்களைக் கொல்வேன் என்று சபதம் ஏற்றார். அதன் பயனாக அவருக்கு பணமும் லாட்டரியில் பரிசும் கிடைக்கும் என்பது ஒப்பந்தம் சொல்லும் காரியம். இதை அவருக்குள் திணித்தது இணையம். அதை முன்னெடுத்தவர், டார்வினின் சமூக கருதுகோளின் படி, பலம் படைத்தவன் கோழையை வெல்கிறான் என்னும் சித்தாந்தைத் முன்வைத்திருந்தார்.
Reference:
https://www.bbc.com/news/av/uk-58196068
0 கருத்துகள்