ஆணின் தலையை மூடட்டும் பெண்கள் | அ. சந்தோஷ்

மேடையில் நின்றவாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள்
பெண்ணின் பணிவெனும் அச்சில் நன்னெறி சுழன்றுகொண்டிருந்தது.
தலையசைத்துப் பெண்களும் ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள்
ஒவ்வொரு தலையசைவும் பேசியவருக்கு உத்வேகம் ஊட்டிக்கொண்டிருந்தது.

photo: pixabay.com

அச்சு ஒடிந்து விடக்கூடாது
குடும்பங்கள் நிலைகுலையும்
சமூகத்தின் சமநிலை பாதிக்கப்படும்
பணிவை மணிமுடியாக பெண்களுக்குச் சூட்டிக் கொண்டிருந்தார்கள்
பெண்ணின் மானம் காக்கும் சேவகர்களாய் மணச் சேலைவழியாய்.

பெண்ணின் பலவீனம் கயிறால் விலங்கிட்டு காக்கப்பட வேண்டும்.
பொன் இழைகளில் சங்கிலி மாட்டப்பட்டது.
கயிறு இறுகி கழுத்து நசுங்காதிருக்க பணிவை அணிந்தாக வேண்டியிருந்தது.

மூடப்பட வேண்டும் ஆணின் தலையிலும் பெண்ணால் ஒரு வேட்டி 
அவனும் அச்சுத்தண்டுக்கு பலம் கூட்டட்டும்.
மாட்டி விட வேண்டும் ஆணுக்கும் கழுத்தில் பெரிய விலங்கு ஒன்றை
அதன் முடிச்சி பெண் கையால் பத்திரப்படுத்தப்படட்டும்.


பின்னிணைப்பு

சமீபத்தில் தேசத்தை உலுக்கிய பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள்

1. ஆகஸ்ட் 24, 2021 - MBA மாணவி ஒருவர் மைசூரு சாமுண்டி மலையில் வைத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

2. ஆகஸ்ட மாதத் தொடக்கத்தில் டெல்லியில் பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்டது.

3. ஜூலை மாதத்தில் இரு பெண் குழந்தைகள் கோவாவில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டன.

இந்தியாவில் ஒவ்வொரு பதினாறு நிமிடத்திற்கும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறார் என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் கூறுகிறது.

"Rape and Insensitivity: Women’s security must not be predicated on restrictions of their rights and freedoms," The Hindu (Editorial), 30.08.2021, p.6

பெண்களை அறக்காவலர்களாக முன்வைத்து போலிபெண்ணியத்தை நுணுக்கமாகப் பேசி, ஆண் ஆதிக்கத்திற்கு உரம் சேர்க்கும் போதனைகளும் சடங்குகளும் நின்றாக வேண்டும்.

அடிமைப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள் தேவையா? 




கருத்துரையிடுக

0 கருத்துகள்