சமூக ஊடகங்கள் பெருகி இருக்கும் காலகட்டத்தில், அவை விளம்புகின்ற அனைத்தும் நம்மை நேரடியாக வந்து அடையும் சூழல் நிலவுகிறது. மதங்களுக்கு எதிரான பரப்புரைகள் சிலரால் முன்னெடுக்கப்படுவதும், அவை நேரடியாக இறைமக்களுள் சிலருக்கு ஏற்புடையதாக மாறுகின்ற சூழலும் நிலவுகிறது எனலாம். குறிப்பாக, மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட பலப் பரப்புரைகள் இடுகைகளாக இணையத்தில் இடம் பெறுகின்ரன. இதிலும் மனிதநேய வாதிகள் (Humanists), பொதுநலாவாதிகள் (Socialists), நாத்திகவாதிகள் (Atheists), பகுத்திறிவுவாதிகள் (Rationalists) போன்றோர் முன்வைக்கின்ற வாதங்கள், இளகிய மனம் படைத்த இளையோராலும், ஆன்மீகத்தோடு ஒன்றித்துப் போகாதவர்களாலும் ஏற்கப்படுகின்றன. ஆன்மீகவாதிகளாலும், மதங்களாலும் நெருப்பூட்டப்படும் கலவரங்களும் உயிர்சேதங்களும் அதிகமாகும் போது, இவர்களின் கருத்துக்கள் ஈர்ப்புமிக்கனவாக மாறி, இணையத்தில் அவற்றின் குரல்கள் ஓங்குகின்றன. அத்தோடு, பிறரன்புப் பணிகள் மேற்கொள்ளும் குழுக்கள், ரத்ததானம் ஊக்குவிக்கும் குழுக்கள், மதம் தாண்டிய மனிதம் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுக்கள் ஆகியவை பெரிதும் ஈர்ப்புடையனவாக மாறுகின்றன. இவை, ‘ஆலயங்களுக்குச் செல்லாதீர்கள்,’ ‘துன்புறும் மனிதர்களின் துயர் போக்க உழையுங்கள்,’ ‘கோயில்களில் காணிக்கைப் போடுவதற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவு போடுங்கள்,’ போன்ற இடுகைகளை சமூகத்தின் மத்தியில் பரப்புகின்றன. இவை ஏற்புடையனவாக புலன்களுக்குத் தென்படுவதால், அவற்றை ஆமோதிப்பவர்களும் அவற்றிற்கு வெளிப்படையாக ஆதரவு அறிப்பவர்களும் தீடீரென முளைக்கிறார்கள். இத்தகையப் பார்வைகள் மனித நேயம் வளர்த்தும் கருத்துக்களாக முன்வைக்கலாமே ஒழிய அவற்றை முற்றுண்மைகளாக முன்வைத்து, ஆன்மீகத்தையும் அதை ஊக்குவிக்கும் மதங்களையும் முற்றிலுமாக புறக்கணிப்பதும், பன்முக அடையாளங்களை முன்வைத்து முற்றுண்மைகளை கட்டவிழ்ப்பு செய்யும் பின்நவீனத்துவ சிந்தனையோடு ஒத்துப் போகவில்லை என்பதே உண்மை.
அனைத்தையும் ஒற்றை பரிமாணத்தின் கீழ் கொண்டு வருவதை பின்நவீனத்துவம் (postmodernism) கட்டுடைப்பு செய்கிறது, பிறரன்புப் பணிகள் என்னும் ஒற்றைக்குள் மனித வாழ்வின் அர்த்தங்களை அடக்குவது பின்நவீனத்துவத்திற்கு ஏற்புடையதாக இருக்க முடியாது. பின்நவீனத்துவம் பன்மையை ஊக்குவிக்கிறது. சிறு சிறு உதவிகள் செய்வதை நாம் கொண்டாடி அது ஒன்றே உண்மை என்னும் நிலைப்பாடை ஏற்றுக் கொள்ளுதலை ஆங்கிலத்தில் Reductionism என்று கூறுவார்கள். தமிழில் இதை குறைப்புவாதம், சுருக்குவாதம், அபத்த நாடகம் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கலாம். பிறருக்கு உணவு கொடுத்தல், ஏழைகளுக்கு உதவுதல், மனித நேயமிக்கச் செயல்களை முன்னெடுத்தல் ஆகியவை முன்வைத்து ஆன்மீகத்தை முற்றிலும் அகற்றுவது, பின்நவீனத்துவ மொழியில் கருத்துத் திணிப்பு, கருத்தியல் வன்முறை என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கலாம். பிறரன்பு, சிறு சிறு உதவிகளால் ஏற்படும் சாதாராண உணர்வு என்று சுவர்களுக்குள் அடைத்தல் அபத்தமாகவே இருக்கும். மேலும் வயிற்றிற்கு உணவு கொடுத்தல், உடை கொடுத்தல், வீடு கட்டிக் கொடுத்தல் ஆகியவை மட்டுமே மனிதர்களை உண்மையில் மாண்பு மிக்கவர்களாக மாற்றி விடுமா? அடுத்த தலைமுறையை ஆரோக்கியமிக்கதாக மாற்றுமா என்னும் கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.
மதத்தீவிரவாதம், மதத்தின் பெயரால் கொலைகள், மதத்தின் பெயரால் அடக்குமுறைகள், மதத்தின் பெயரால் பெண் அடிமைத்தனம் போன்ற மரணக்கலாச்சாரமானது கடவுளின் பெயரால் முன்னெடுக்கப்படுவதை, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் எழுதப்பட்ட ‘உண்மையில் தோய்ந்த அன்பு’ (Caritas in veritate no. 29) என்னும் திருத்தூது மடல் பேசுகிறது, ஆன்மீகப் பிறழ்வுகள் என இவற்றை அழைக்கலாம். அதாவது ஒருவிதமான தப்பறை. மதம் என்னும் மதம் பிடித்து, சக மனிதரைக் கொல்லும் கொடுஞ்செயல்கள், அன்பே ஆக இருக்கும் கடவுளின் இயல்போடும் மனிதரைப் படைத்ததன் நோக்கத்தோடும் எவ்விதத்திலும் ஒத்துப் போவதில்லை. மதம் அல்லது ஆன்மீகத்தன் பெயரால் கொலைகளையும் வன்முறைகளையும் பல தீவிரவாத அமைப்புகள் அதிகாரங்களுக்காகப் பயன்படுத்துகின்றன என்பதே உண்மை. இவை ஏற்புடயவை அல்ல. ஆனால், மதத்தின் பெயரால் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை காரணம் காட்டி, மதச் சுதந்திரத்தையும் மத நம்பிக்கைகளையும் தீயனவாக சித்தரித்து ஒதுக்கித் தள்ளுதல் மனிதரின் உள்ளார்ந்த ஆன்மீக தாகத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவதாக அமைவதோடு, மானிடர்கள் அனைவரும் சம உரிமையும் சம மாண்பும் படைத்தவர்கள் என்னும் நம்பிக்கையை வேரோடு பிடுங்கி எறியும் நிலையை நோக்கித் தள்ளும். கடவுள் தம் சாயலில் மனிதர்கள் அனைவரையும் படைத்திருக்கிறார், அவர் தம்முடைய உருவில் படைத்திருக்கிறார். ஆகையால் மானிடர் ஒவ்வொருவரும் கடவுளின் சாயலைச் சுமந்தவர்களாகப் இருக்கிறார்கள். அத்தோடு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மனிதராதல் வழியாக, அதாவது நம்மைப் போல அவர் மனித உரு பூண்டு நம் நடுவில் பிறந்ததால், அவர் ஒரு வகையில் அனைத்து மனிதர்களோடும் தன்னையே இணைத்துக் கொண்டார். வத்திக்கான் திருச்சங்கம் பின்வருமாறு கற்பிக்கிறது.
“இறைமகனாகிய அவர் தாம் மனிதராக பிறந்தால் ஒவ்வொரு மனிதரோடும் ஒருவகையில் தம்மையே ஒன்றித்துள்ளார். அவர் மனிதக் கைகளால் வேலை செய்தார்; மனித உள்ளத்தால் செயல்பட்டார்; மனித இதயத்தால் அன்பு செய்தார். கன்னிமரியாவிடமிருந்து பிறந்து அவர் உண்மையில் நம்மில் ஒருவரானார்; பாவம் தவிர மற்றெல்லாவற்றிலும் நம்மைப்போல் ஒருவரானார்” என இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டின் 22 ஆவது எண் கூறுகிறது. ஆகையால், நாம் இவ்வுலகில் காணும் ஒவ்வொரு மனிதரிலும் கிறிஸ்து வாழ்கிறார், அவரது உருவமானது ஒவ்வொரு மனிதரிலும் தென்படுகிறது. கடவுளின் சாயலைப் பெற்றவர்களாக, மறுக்க முடியாத உரிமைகளுடன் - invioable rights - வாழும் மனிதர்களை மாண்புடன் கருதுவதற்கும் அவர்களுக்கான உரிமைகளைக் கொடுப்பதற்கும், இறைநம்பிக்கையானது அடிப்படை என்பதை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் உறுதிப்படக் கூறுகிறார். மனிதர்களின் இத்தகைய இயல்பை வலியுறுத்துவது அவசியமாகிறது. மனிதர்கள் கடவுளோடு கொண்டிருக்கும் இத்தகைய உறவைத் துண்டித்துச் செயல்பட்டால், மனிதர்கள் தங்கள் அடிப்படை அழைப்பையும் இயல்பையும் இழந்து, வாழ்வுக்கான அர்த்தத்தை இழந்தவர்களாக மாறி விடுவார்கள். கடவுள் நம் அனைவருக்கும் தந்தை, நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள். பிள்ளைகளாக மானிடர் ஒவ்வொருவரும் தோழமை உணர்வுடன் ஒருவர் மற்றவரின் நல்வாழ்வில் அக்கறைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை திருத்தந்தை வலியுறுத்துகிறார். இது சம மாண்பை அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும். இது நம்பிக்கை. இதைக் களைந்து, வெறும் பணத்தையும் பொருளையும் அடிப்படைகளாக் கொண்டால் மனிதர்கள் பண்டங்களாக மாறிப்போவார்கள். பண்டங்களை பயன்படுத்தித் தூக்கி எறிவது சாதாரணச் செயலாக மாறும். இதையே மனிதர்களை நுகர்பொருட்களாக - objects of consumerism - மாற்றுதல் என்னும் சொல்லாடல் வழியாக உறுத்திப் படுத்தப்படுகிறது. பொருள் முதன்மை வாதத்தின் - materialism - அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இத்தகையச் செயல்கள் மனிதர்களை நுகர்வுப் பொருட்களாகப் பார்ப்பதற்கும், சொந்த லாப இச்சைகளுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்குமான வழிவகையைச் செய்யும் - use and throw culture. one use என்றெல்லாம் நாம் சொல்வோமே அதைப் போன்றது.
இன்றைய உலகில், ஏழ்மையில் இருக்கும் நாடுகளுக்கு உதவ வேண்டியதும் அவர்களின் பொருளாதார ஏற்றத்திற்கான திட்டங்களை வகுப்பதும் நடைமுறைப்படுத்துவதும் வளர்ச்சியடைந்த நாடுகளின் கடமை என்பதை வலியுறுத்தும் திருத்தந்தை அவர்கள், அதே வேளையில் இன்னொரு எச்சரிக்கையும் வைக்கிறார். வளர்ச்சி என்பது மனிதரின் மாண்பை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும்.
இன்றைய சமூக ஊடகங்கள் கடவுள் வேண்டாம் மனிதம் போதும் என்றும், கடவுளை வளர்த்த வேண்டாம் மனிதரை வளர்த்தால் போதும், கடவுளுக்கு காணிக்கைக் கொடுப்பதற்கு பதிலாக நூறு பேருக்கு உணவு கொடுத்தால் போதும் எனக் கூறும் போது, அவை கவர்ச்சகராமாகத் தோன்றினாலும் அதன் கீழ் பெரிய ஆபத்துக் காத்திருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. கல்வி அறிவு, உணர்வுபூர்வமான முதிர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி போன்றவை இல்லாமல் மனிதர்களின் உடலை வளர்ப்பதற்காக உணவு கொடுக்கிறோம் என்றால் அது மனித மாண்பை வளர்த்தாது. மனித நேயமற்ற சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.
ஒரு சிறு எடுத்துக்காட்டை முன்வைக்கலாம். ஊரடங்கு நாட்களில் வீதியோரங்களில் வாழ்வோருக்கு மாலை வேளைகளில் உணவு கொடுக்கப்பட்டது. உணவை முதலில் மிகுந்த மகிழ்ச்சியோடு உதவி செய்வோரின் நல்லுள்ளத்தின் வெளிப்பாடாக பார்த்தவர்கள் பின்னர் அதை உரிமையாகக் கருத ஆரம்பித்தார்கள். உணவு கொடுப்பதற்காக காலம் தாழ்த்தத் தொடங்கினால் அது அவர்களுக்குள் கோபம் உருவாக்கும் நிலையை நோக்கி பரிணமித்தது. அவர்களுக்குள் யார் முதலில் உணவு பெற்றுக் கொள்வார்கள் போன்ற அதிகாரம் சார்ந்த சிக்கல்களும் அவர்களுக்குள் உயர்வதைப் பார்க்க முடிந்தது. ஆன்மீகமும் அறிவும் கொடுக்காமல் வெறுமனே உடலுக்கான உணவை மட்டும் கொடுத்துக் கொண்டு இருந்தால் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டப் பின் நம்மையே தாக்குவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இன்றைய உலகில் காணப்படும் வேறு சில காட்சிகளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர நினைக்கிறேன். சமீபத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில், அமெரிக்கா ஆப்கான் மக்களுக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் அளித்திட இயலாமல் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் வெளியேறியது. தற்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் வசம் வந்து விட்டது. தாலிபான்கள ஊடகங்கள் காட்டுப் போதெல்லாம், அவர்கள் கைகளில் பெரிய துப்பாக்கிகளை வைத்துக் கொண்டிருப்பதாக காட்டுவார்கள். அத்தோடு உரிமைகளுக்காக மக்கள் போராடுவதும், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் அலைமோதுவதும் என எதுவுமே நல்லச் சூழலை நம்மிடம் காட்டவில்லை. மக்களிடையே ஒருவிதமான பயம், மீண்டும் பயங்கரவாதத்தின் கீழ் வந்ததான தொனி போற்றவைக் காட்சிப் படுத்தப்படுகின்றன. இந்தப் போர்கள், தீவிரவாதம், துப்பாக்கிகள், மக்கள் கலக்கமடைந்து ஓடுதல், அச்ச உணர்வு போன்றவை இல்லாத மனித நேயமிக்கக் குழுக்கள் ஏன் தென்படவில்லை என்பது நம்முடைய மனங்களில் கேள்விக் கணைகளாக உயர்ந்தால் நாம் மாற்றி யோசிக்கிறோம் என்று பொருள். ஆப்கான் மக்களை தீவிரவாதிகளாகப் பார்க்காமல், அவர்களை நம்முடயை சகோதரர் சகோதரிகளாக பார்க்கும் நிலையானது உருவாகும். பேரரசுகளின் மயான பூமி என்று அழைக்கப்படும் ஆப்கான் ஆனது, பிரித்தானியர்களால் 19 ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆக்கிரமிக்கப்பட்டது. பிரித்தானிய இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவும், ஆப்கான் ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிக்கு உட்பட்டால் அது பாதிக்கப்படும் என்பதற்காகவும் போர் தொடுத்தார்கள், பிறகு 1979 ஆம் ஆண்டில், தனது எல்லையை விரிவாக்குவதற்காக, ரஷ்ய நாடு ஆப்கானை ஆக்கிரமித்தது. இந்த வேளையில் உலகின் இருபெரும் சாம்ராஜ்யங்களான, ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பனிப்போர் நடந்து வந்த காலம். ரஷ்யாவின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்னும் நோக்குடன், அமெரிக்கா தலிபான்கள் என்னும் அமைப்புக்கு உதவ ஆரம்பித்தது. இக்குழுவானது மத அடிப்படை வாதத்தை முன்நிறுத்தி கம்யூணிச சித்தாந்தந்திற்கும் அரசுக்கும் எதிராக போராடி வந்த சிறு குழுவாக இருந்தது. இது ஒரு மதக்குழு. மத நம்பிக்கையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அக்குழுவின் வழியாக அமெரிக்கா தன்னுடைய அதிகாரத்திற்காக பகடை விளையாட்டை ஆரம்பித்தது. ஆப்கானில் இன்றைய நிலை உருவாவதற்கு மதமும் ஆன்மீகவும் காரணமாக அமைந்ததா என்று கேள்வி எழுப்பினால், இன்று நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ளும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்சம் நின்று பேசுபவர்கள் ஆம் என பதில் அளிக்கலாம். ஆனால் அது அல்ல பதில். தங்களுடைய ஆன்மீகத் தாகத்தை போக்குவதற்கான ஆப்கான் மக்களின் நியாயமான கோரிக்கையை, கம்யூணிசம் தனது பொருள் முதன்மை வாதத்தால் எதிர்த்தது. நியாயமான ஆன்மீக தாகம் கொண்ட மக்களின் கைகளில் பெரிய ஆயதங்களைக் கொடுத்து அவர்களை வலுப்படுத்தியது அமெரிக்கா. ஆப்கான் மயான பூமியானது, பேரரசுகள் அதிகார விளையாட்டை முடித்து வெளியேறின.
அதிகாரத்தைத் தக்க வைக்கவும், யார் பெரியவர் என்று காட்டிக் கொள்ளவும் மத உணர்வுகள் மடைமாற்றம் செய்யப்பட்டு மக்கள் அழிப்புகளாக முன்னெடுக்கப்பட்டன. மனித அழிப்புகள் இன்றும் மதத்தின் பெயரால் அதிகாரத்திற்காக நடத்தப்பட்டு வரப்படுகிறது. உடல் வளர்க்கிறார்கள், துப்பாக்கிகளை ஏந்துகிறார்கள், துப்பாக்கி முனையில் ஆட்சி செய்கிறார்கள். அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் நேயமிக்கவை ஆன்மீகமாக ஊட்டப்படவில்லை. துப்பாக்கிகள் விதைக்கப்பட்ட இடங்களில் மனித நேயம் விதைக்கப்படவில்லை. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், உணவு இல்லையென்றாலும் பெரிய துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிற்பதை நாம் பார்க்க முடியும். Afghanistan, Colombia, the Central African Republic, the Democratic Republic of the Congo, Iraq, Mali, Myanmar, Nigeria, the Philippines, Somalia, South Sudan, Sudan, Syria, and Yemen போன்ற நாடுகளில், குழந்தைகள் போர்வீரர்களாக மாற்றப்பட்டு அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்படுகின்றன. புத்தகங்கள் சுமக்க வேண்டிய பூக்களின் கைகளில், துப்பாக்கிக் கொடுத்து வாழ்க்கைய நசுக்குகிறார்கள். இந் நாடுகளில் எல்லாம் உணவுகள் பரிமாறப்படுகின்றன. மேற்கத்தைய நாடுகளால் முன்னெடுக்கப்படும் உணவு திட்டங்களின் கீழ் போர் பாதித்த இடங்களில் மக்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, எத்தியோப்பியாவில் அரசுக்கும், Tigray பகுதிவாழும் எதிர்குழுவுக்கும் இடையே போர் நடக்கிறது. ஏராளமான மக்கள் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். சூடான் போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடுகிறார்கள். இவர்களுக்கு உணவு கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடவுளைக் கொன்று விட்டு அனைத்து மனிதர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்னும் எண்ணங்களை, தீவிரவாதக் குழுக்களை எதிர் சாட்சியங்களாக வைத்து முன்னெடுக்க ஆரம்பித்தால், எல்லா மனிதர்களும் பிற்காலத்தில் ஆயுதங்களை ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படலாம். அது அமைதிக்கான வழி அல்ல என்பதை உணர்ந்து ஏற்றல் அவசியமாகிறது.
மனித நேயம் தழைக்காமல் துப்பாக்கிகளைத் தூக்கிச் செல்வதை நாம் நிறுத்தியாக வேண்டுமென்றால், கடவுளின் பிள்ளைகள் என்னும் உணர்வானது ஊட்டி வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. ஒரே கடவுளின் பிள்ளைகள் என்னும் நிலையானது இங்கே வளர்க்கப்பட வேண்டியது இன்றியமையாதது.
ஆலயங்களுக்குச் செல்வது, நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் உணர்வை உள்ளூர வளர்த்துக் கொள்வதற்காக... நாம் அனைவரும் நம்மைப் படைத்தக் கடவுளால் நேசிக்கப்படுகிறோம் என்பதை ஏற்பதற்காக... சகோதரர்களாக வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்வதற்காக... வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படும் போது அவற்றிற்கு காரணமாக இருக்கின்றவர்களை இனம் கண்டு அவர்களை அழிக்கும் மனநிலை அகற்றி அவர்களை மன்னிக்கவும், அவர்களுக்காக செபிப்பதற்குமாக... உரிமைகள் மறுக்கப்படும் போது, ஜனநாயக வழியில் அமைதியான முறையில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், உரையாடல்கள் நடத்தவும் சட்டப்போராட்டங்கள் நடத்துவதற்குமான தெளிவு கிடைப்பதற்காக... நம்முடைய பிள்ளைகள் நாளைய தினம் நல்ல முதிர்ச்சி மிக்கவர்களாக மாறி, மனித நேயத்துடன் வாழ்வதற்கான அரிச்சுவடிகளை கற்றுக் கொள்வதற்காக... நம்பிக்கையோடு ஒவ்வொரு தினத்தையும் அணுகுவதற்காக... எதிர்நோக்குடன் நல்ல நாளைய தினத்தை மனதில் கொள்ளவதற்காக... அனைவருக்கும் நல்வாழ்வு அளிக்கும் கடவுளின் அரசு நிறுவப்படும் என்னும் எதிர்நோக்கை வளர்த்தி அன்பில் வாழ்வதற்காக ... அதற்காக உழைப்பதற்காக ...
இத்தகைய உணர்வுகளை வளர்த்துகின்ற நல்ல அமைப்பாக கத்தோலிக்கத் திருச்சபை ஈராயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டும், அதை ஊக்குவித்துக் கொண்டும் தான் இருக்கிறது. திருச்சபையிலும் குறைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தன்னலமற்ற ஏராளமான குருக்களாலும் துறவியர்களாலும் நல்ல மனிதர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். பிறரன்பு நிறுவனங்களை நடத்துதல், உதவி செய்தல் ஆகியவை நடந்தேறுகிறது.
ஏன் ஆலயங்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்னும் கேள்வி எழும் போது, கடவுளின் பிள்ளைகளை உருவாக்குவதற்கான அமைப்புகள் அழிந்து போனால், சமூகத்திற்கு மனித நேயம் கற்பிக்கும் அமைப்புகள் அழிய ஆரம்பிக்கும். அனைவரின் உரிமைகளையும் மதிக்கும் போக்குகள் அழிந்து விடும். ஆன்மீக வாதிகள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காகவும், தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் மக்களின் ஆன்மீக உணர்வுகளை சுரண்டுகிறார்கள் என ஒட்டு மொத்தமாக கூறி, மதங்களும் ஆன்மீக வாதிகளும் வேண்டாம் என ஒதுக்குவதும் அவர்கள் மேல் எதிர்மறையான சிந்தனைகளை வைப்பதும் சரியான அணுகு முறையாக இருக்காது. காரணம் அமைப்பு சாரா முறையில் பலரின் ஏற்றத்திற்காக ஆன்மீக வாதிகளில் பலர் தங்கள் நலன்களைத் துறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாது. அவர்களால் நலம் அடைந்தவர்கள் இன்று பெரும் அளவில் சமூக ஊடகங்களில் தங்கள் பதிவுகளை போட தயக்கம் காட்டுகிறார்கள். நாளைய சமூகம் நல்ல படியாக அமைய வேண்டும் என்றால், நூறு பேருக்கு இலவசமாக உணவு கொடுத்தால் மட்டும் போதாது.
மனித நேயம் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கடவுள் இன்றி மனிதர்கள் சகோதரர் சகோதரிகளாக ஒருவரை ஒருவர் ஏற்று வாழ்வதில் சிக்கல் ஏற்படும். மனித உரிமைகள் மீறப்படும். ஆகையால், கடவுள் அனைவருக்குமான தந்தை, அவர் அனைவரும் வாழவே விரும்புகிறார், மக்களை அழிப்பதில் அவருக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை, தீமை அகற்ற தீமை விதைக்க கூடாது நன்மைகளை விதைக்க வேண்டும் என்று இருப்பவர்.
விதைகள் விதைக்கப்படும் இடங்களாக இருக்கும் ஆலயங்கள் வளரட்டும். அவைகளுக்கு கொடுக்கும் காசுகள் நம்முடைய எதிர்கால தலைமுறையினருக்கான மூலதனம் என்பதை நினைவில் கொள்வோம். மனிதம் வளர்க்கும் கடவுளைக் கொண்டாடுவோம். இரதத்திற்காக வாய்ப்பிளந்து நிற்கும் கடவுளுக்குப் பணம் கொடுக்க வேண்டாம். கொல்லுங்கள் அவன் கடவுளின் எதிரி என்பவனை கொண்டாடவும் வேண்டாம். கடவுள் எதிரிகளைப் பார்த்து அஞ்சுகிறார் என்றால் அவர் கடவுள் இல்லை. உண்ண உணவு கொடுங்கள், சக மனிதர்களை உன்னுடைய உயிராக நேசி என்று கூறும் கடவுளுக்காகக் கொடுங்கள். அப்படிச் சொல்லும் மனிதர்களைக் கொண்டாடுங்கள். எனக்குச் சேவை செய்யுங்கள் என்று சொல்லும் ஆன்மீக வாதிகளையும் நம்ப வேண்டாம். மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறுபவர்களைக் கொண்டாடுவோம்.
துப்பாக்கி முனைகளில் பூக்கள் மலர மானிடர் அனைவரையும் சரநிகராக நேசிக்கும் கடவுள் உயிர் வாழட்டும். மனிதர்கள் முழு வாழ்வு வாழ்வதே கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது என்று திருச்சபைத் தந்தை இரனேயு என்பவர் இரண்டாம் நூற்றாண்டில் கூறினார். மக்கள் அழியும் போது, அவர் பெயரால் கொலைகள் நடக்கும் போது கடவுள் இகழ்ச்சி அடைகிறார். கடவுளின் உருவம் சிதைக்கப்படுகிறது. மனிதம் வளர்த்தும் கடவுள் இன்று அவசியம்.
இயேசு கூறுகிறார்: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்” (மத் 7:21-23).
0 கருத்துகள்