கடவுளின் மாட்சியும் மானிடரின் நல்வாழ்வும் | அ. சந்தோஷ்

கடவுளை அப்பா என்று அழைத்து மன்றாடக் கற்றுக் கொடுத்தார் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இந்த அற்புதமிக்கம் செபமானது பக்தி சார்ந்தது மட்டுமல்ல, கடவுளின் அருள் கிடைக்கும் வேண்டுதலாகவும் சமூக ஈடுபாட்டிற்காக அழைப்பாகவும் இருக்கிறது.

‘உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக,’ ‘உமது அரசு வருக,’ ‘உமது திருவுளம் விண்ணுகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுவதாக’ என மூன்று விண்ணப்பங்களை நாம் ஒவ்வொரு முறையும் ‘விண்ணகத்திலிருக்கின்ற எங்கள் தந்தையே’ என்னும் வேண்டுதலை ஏறெடுக்கும் போது முதலில் கூறுவதுண்டு. அதாவது கடவுளின் பெயர் மாட்சிப் பெற வேண்டும்? அவரது ஆட்சி வர வேண்டும், மண்ணகத்தில் கடவுளின் திருவுளமானது நடக்க வேண்டும். இவை மூன்றும் முதல் பாதியில் வருகையில், இரண்டாம் பாதியில், அன்றாட உணவு வேண்டும், எங்கள் பாவங்களை மன்னிக்க வேண்டும், சோதனைக்கு உட்படுத்தக்கூடாது, தீயோனினின்று விடுவிக்க வேண்டும் என்று நான்கு வேண்டுதல்களை ஏறெடுக்கிறோம். இங்கே முற்பாதியில் வருகின்ற 3 விண்ணப்பங்களுக்கும் பிற்பாதியில் வரும் 4 விண்ணப்பங்களுக்கும் இடையே ஏதாவது தொடர்பு உண்டா என்பதைப் பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம்.

photo: pixabay.com

மேலெழும்பும் மற்றும் கீழிறங்கும் இறையியல் பார்வைகள்

இதற்குள் இருவிதமான இறையியல்கள் அடங்கியுள்ளன. கீழிறங்கும் இறையியல் (ascending theology) மேலெழும்பும் இறையில் (descending theology).  இவ்விரண்டு இறையியல்களையும் ஆண்டவர் கற்பித்த வேண்டுதலோடு இணைத்து இரு கேள்விகளில் சுருக்கலாம்.  

முற்பாதியில் வருகின்றவை நடக்கும் போது பிற்பாதியில் வருகின்ற நான்கும் நடக்குமா? இல்லை பிற்பாதியில் வருகின்ற நான்கும் நடைமுறைக்கு வரும்போது முற்பாதியில் வருகின்றவை நடக்குமா? அதாவது, கடவுள் மாட்சிப் பெறும் போது மனிதர்கள் பசியின்றி, யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் வாழ்வார்களா (descending)? இல்லை, மனிதர் அனைவரும் பசியின்றி ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொண்டு வாழும் போது கடவுள் மாட்சி அடைவாரா (ascending)? இக்கேள்விகளுக்கான பதிலானது சற்று சிக்கல் நிறைந்தது என்றே சொல்லலாம். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயு என்னும் திரு அவைத் தந்தை, “மனிதர்களின் முழுமையான வாழ்வு கடவுளின் மாட்சி சேர்க்கிறது” என்று கூறினார். அதாவது மனிதர்கள் எல்லாமும் பெற்று நிறைவான வாழ்வு வாழ்வதில் கடவுளின் மாட்சியானது அடங்கியிருக்கிறது என்று பொருள். இதன் படி பார்த்தோமென்றால், ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்னும் வேண்டுதலின் பிற்பாதியில் வருகின்ற நான்கும் நடக்கும் பட்சத்தில் கடவுள் மாட்சி பெறுவார் என்று அர்த்தம் கொள்ள முடியும். எல்லாரும் எல்லாமும் பெற்று வாழும் போது கடவுள் மாட்சி அடைவார்; மனிதர் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொண்டு அமைதியில் வாழும் போது கடவுள் மாட்சி அடைவார்; சோதனைகளான மட்டுமீறிய பொருளாசை, பதவியாசை, பேராசை போன்றவைகளில் விழாமல் வாழும் போது கடவுள் மாட்சி அடைவார்; தீயவன் தருகின்ற ஆசைகளில் விழாமல் கடவுளுக்கு கீழ்ப்படிந்து அவர் சொற்படி வாழும் போது கடவுள் மாட்சி பெறுவார். இத்தகைய நிலையானது, கடவுளின் ஆசியின்றி சாத்தியமாகுமா என்னும் சிக்கலானது இருக்கிறது.

நல்லன செய்ய இயலா நிலை

நல்லவனாக வாழ வேண்டும் என்னும் ஆசை நம் அனைவருக்குள்ளும் உண்டு; உணவின்றி தவிப்போருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் அதை எப்போதும் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. நமக்கு தீமை செய்தவர்களை பொறுக்க வேண்டும், மன்னிக்க வேண்டும் என்னும் ஆசை நமக்கு உண்டு. ஆனாலும் அது சாத்தியமாவதில்லை, எல்லாவிதமான பேராசைகளையும் வெறுத்து, கிடைப்பதில் இன்புற்று பிறருக்கு பகிர்ந்து வாழ வேண்டும் என்னும் ஆசை உண்டு ஆனால் அதுவும் கைகூடுவதில்லை. தீமைகள் வந்து நம்மைத் தாக்கும் போது அவற்றிடம், “அப்பாலே போ சாத்தானே” என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. தூய பவுல் இத்தகைய நிலையைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்” (உரோ 7:15). இதை மனிதருக்குள் நடக்கும் போராட்டமாக புனித பவுல் குறிப்பிடுகிறார்.

இத்தகைய நிலையைப் பற்றி, புனித அகுஸ்தினார் விளக்கம் அளிக்கிறார். நன்மைகள் செய்வதற்கு மனிதரால் ஏன் இயலாமற் போகிறது? மனிதர்கள் விரும்பும் நல்ல காரியங்களை செய்வதற்கான ஆற்றல் இல்லாமல் போவதற்கான காரணம் என்ன? என்பதற்கான விளக்கத்தை புனித அகுஸ்தினார் தொடக்க பாவத்தை - original sin - முன்வைத்து விளக்குகிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும், கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதை தொடக்கநூல் முதல் அதிகாரம் 27 ஆம் இறைவார்த்தையானது கூறுகிறது. இதன்படி கடவுளோடு நிலையான உறவில் வாழவும், கடவுளின் இயல்புப்படி நன்மைகளை மட்டுமே ஏறெடுக்கவும் தகுதிபடைத்தவர்களாக மனிதர்கள் இருந்தார்கள். அதன்படி இயல்பால் நன்மைகளைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பெற்றிருந்தார்கள். கடவுளோ மனிதர்களுக்கு அதற்கான ஆற்றலையும் கொடுத்தார். ஆனால், மனிதர்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை தவறாக பயன்டுத்தியதால், பாவத்திற்கு உட்பட்டார்கள். இதனால் கடவுளுக்காகப் படைக்கப்பட்ட மனிதர்கள், கடவுளை சுலபமாக இயல்புசார்ந்த முறையில் தேடும் திறனை பாவத்தால் இழந்தார்கள்.

நன்மைகள் செய்ய அருள் அவசியம்

பாவம் என்றால் என்ன? நாம் சாதாரணமாக, ஒரு தவறு செய்வதை, பிறருக்கு எதிராக ஏதாவது தீங்கு செய்வதை பாவம் என்று கூறுகிறோம். புனித அகஸ்தினார், “நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமா அதிலிருந்து விலகுவதே” பாவம் என்று கூறுகிறார். அதன்படி நாம் செய்ய வேண்டியக் கடமையிலிருந்து விலகுவதைப் பாவம் என்று வரையறுக்கலாம். மனிதர்கள் எதற்காகப் படைக்கப்பட்டார்களோ அதிலிருந்து விலகுவது பாவமாக இருக்கிறது. இந்த அர்த்தத்தில் பாவத்தால் நமது இயல்பானது துருப்பிடித்துப் போய்விட்டதால் அது நன்மை செய்வதற்கான இயல்பை இழந்து விட்டது என்றார். இத்தகைய நிலையானது நிலவுவதால், விண்ணகத்தில் இருக்கிற தந்தையே என்னும் வேண்டுதலின் பிற்பாதியில் வருகின்ற காரியங்களை முன்னெடுக்க நம்மால் இயலாமல் போகிறது. ஆகையால் கடவுளின் அருள் வேண்டும். அதாவது, அனைவரும் பசியின்றி வாழ்வதற்காக கடவுளின் அருள் வேண்டும், அனைவரையும் மன்னித்து ஏற்றுக் கொள்ள கடவுளின் அருள் வேண்டும்; பேராசைகளிலும் சோதனைகளிலும் விழாமல் வாழ்வதற்காக கடவுளின் அருள் வேண்டும், தீயவனிடமிருந்து நாம் விலகி வாழ்வதற்காக கடவுளின் அருள் வேண்டும். இத்தகையத் தீமைகளிலிருந்து விலகுவதற்காக நாம் கடவுளின் அருள் வேண்டுகிறோம். ஆகையால் கடவுளின் அருள் கிடைப்பதற்கான வேண்டுதல் புரியவும், அவரைப் புகழ வேண்டியதும் அவசியமாகிறது. ஆகையால் விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தையே என்னும் வேண்டுதலின் போது, முதலில் நாம் கடவுளின் அருளுக்காக வேண்டுகிறோம். அவர் அருளால் நமக்கு அன்றாட உணவு கிடைப்பதற்காக, பாவங்களை மன்னிப்பதற்காக, சோதனையில் விழாமல் இருப்பதற்காக, தீயவன் நம்மை தாக்காமலிருப்பதற்காக தந்தைக் கடவுளிடம் வேண்டுதல் புரிகிறோம். ஆக, கீழிறங்கும் இறையியலின் அடிப்படையில் நல்லன புரிந்து இறையாட்சியின் விழுமியங்கள் உலிகல் வர வேண்டுமென்றால், கடவுள் மேலிருந்தவாறு செயல்பட்டாக வேண்டும். மனிதர்கள் தங்களுடைய முயற்சிகளால் மட்டும் விண்ணரசை நிறுவவும் முடியாது, மனிதர்கள் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவும் முடியாது.  

பொறுப்பேற்க அழைக்கும் ஆண்டவர் கற்பித்த வேண்டுதல்

கடவுளின் அருளால் நாம் அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியாக, தீமைகள் அணுகா வாழ்வதோடு நம்முடைய கடமை முடிந்து விடுவதில்லை. கடவுளின் அருள் பெறும் நாம் அதற்காக அன்றாடம் உழைக்க வேண்டும் என்னும் பொறுப்புணர்வும் இதன் வழியாக நமக்குத் தரப்படுகிறது. கடவுளின் அரசை இம்மண்ணுலகில் நிறுவுவதற்காக உழைக்க வேண்டும் என்னும் அழைப்பு நமக்குத் தரப்பட்டிருக்கிறது.  அருள் என்பது நம்மை வலுப்படுத்தும் கடவுளின் உடனிருப்பு, நீ தனிமையில் இல்லை உன்னை வலுப்படுத்து நான் உடனிருக்கிறேன் என்னும் வாக்குறுதி. புனித பவுல், “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி 4: 13) என்று கூறுகிறார். கடவுளின் அருள் பெற்று வாழும் நாம், மக்கள் அனைவரும் பசியின்றி வாழ்வதற்காக உழைக்க வேண்டும்; மானிடர் அனைவரும் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொண்டு தோழமை உணர்வுடன் ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ ஒப்புரவின் நற்செய்தியைப் பரப்ப வேண்டும்; பிறரை சுரண்டி அத்துமீறிய பொருளாசையும், அதிகார ஆசையும் களைந்து இயல்புடன் வாழ உழைக்க வேண்டும்; தீயோனின்று செயல்கள் உலகை விட்டு அகன்று நல்லவராம் கடவுளின் விருப்பம் நிறைவேற நிரந்தரமாக உழைக்க வேண்டும்.

அனைவருக்கும் அன்றாட உணவு தாரும்

அனைவருக்கும் உணவு கிடைப்பதற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. இயேசு நாசரேத்தூரில் தனது பணியைப் பற்றி விவரிக்கின்ற பகுதியில், ஏழைகளுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற வந்துள்ளேன் என்று கூறுகிறார். மேலும் மத்தேயு நற்செய்தியாளர், நற்செய்திப் பேற்றைப் பற்றிப் பேசுகிறார். அதில் ஏழைகளின் உள்ளத்தோர் பேறு பெற்றோர் எனக் கூறுகிறார். ஆனால் லூக்கா நற்செய்தியாளர், ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு உங்களுக்கு உரியது’ என்று கூறுகிறார். இவ்வாறாக இயேசு ஏழைகளுக்காக குரல் கொடுப்பதை லூக்கா நற்செய்தித் திரும்பத் திரும்பக் கூறுகிறது. இதனால் இறையியாலாளர்கள் லூக்கா நற்செய்தியை ஏழைகளின் நற்செய்தி என்று சிறப்புப் பெயர் கொடுத்து அழைக்கின்றனர். விடுதலை இறையியலின் முன்னணி நாயகர்களுள் ஒருவரான, குஸ்தாவோ குட்டீரஸ் என்னும் தென் அமெரிக்க இறையியலார், ‘ஏழைகள் உரிமைகள் பெற்று நல்லதொரு சமூக வாழ்வு வாழ்வதற்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வது கடவுளின் ஆட்சி என்று  விளக்கம் அளிக்கிறார். ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பானது ஏழைகளின் நல்வாழ்விற்கான அறைகூவலாகவும், உரிமைகளுக்கான விடுதலையின் முழக்கமாகவும் இருந்தது என்பது விடுதலை இறையியலாளர்கள் கூறுகிறார்கள். ஏழைகள் சுரண்டப்பட்டு வாழ்வாதாரம் இழந்து நின்ற போது அவர்களுக்காக குரல் கொடுத்த புனித ஆஸ்கார் ரொமேரோ,  நீதியின் கனிந்த அன்பு என்பதை வலியுறுத்தினார். அமைதி ஏற்பட வேண்டுமென்றால் அங்கே அன்பும் நீதியும் தழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இவ்வாறாக அனைத்து மக்களும் வாழ்வதற்கான உரிமைகளைப் பெற வேண்டும். அப்படி உழைப்பதைப் பார்த்து ஆண்டவரின் பெயர் மாட்சி பெறும்.

பசித்திருப்போருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது, விவிலியம் திரும்பத் திரும்ப முன்வைக்கும் செய்தியாக இருக்கிறது, “ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன?” (யாக் 2:15-16) என யாக்கோபு தன்னுடயை திருமுகம் வழியாகப் பேசுகிறார். “பசியால் மடியும் மனிதருக்கு உணவளி; ஏனென்றால் அவர்களுக்கு உணவளிக்க விட்டால் நீ அவாகளைக் கொன்றவனாவாய்’’ என வத்திக்கான் திருச்சங்கம், திருச்சபைத் தந்தையர்களின் எழுத்தை மேற்கோள் காட்டிக் கூறுகிறது. ஆகையால், அன்றாட உணவை எங்களுக்கு இன்று தந்தருளும் என்று நாம் அன்றாடம் விண்ணப்பம் ஏறெடுக்கும் போது பசியால் வாடும் சக மனிதர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்னும்  சிந்தனையானது உள்ளது. இயேசு, “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்” (மத் 25: 35) எனக் கூறுகிறார். பசி விலக, நீதி தழைக்க, மக்கள் மாண்புடன் வாழ உழைக்க வேண்டும் என்பதை அன்றாட உணவை எங்களுக்குத் தாரும் என்பதன் வழியாக நாம் விண்ணப்பமாக ஏறெடுக்கிறோம்.

ஒப்புரவடைந்து நேயத்துடன் வாழ்தல்

இரண்டாவதாக வரும் விண்ணப்பம் பாவ மன்னிப்பு பற்றியது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய, அனைவரும் உடன்பிறந்தோர்,’ Fratelli tutti என்னும் திருமடலானது, சுயநலத்தின் சுவர்களுக்குள் அடைக்கலம் புக எப்படி உலகு பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு உலப்போர்கள் முடிவுற்ற நிலையில், மானிடர் அனைவரும் சகோதரர் சகோதரிகள் என்னும் தோழமை உணர்வு மேலோங்கியது. அனைவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொண்டு உலகளாவிய மானுடம் உருவாக்க வேண்டும் என்னும் சிந்தனை தலைதூக்கியது. ஆனால், தற்போது பலர் தங்கள் நாடுகளுக்களு முடங்கிப் போகவும், தேசியவாதம் முன்வைத்து, தனித்துச் செயல்படவும் தீர்மானிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நம்முடைய இந்தியாவிலும் பாரதியார் முன்வைத்த “முப்பதி கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்” என்னும்  தேசிய ஒற்றுமையின் சித்திரம் மாற்றம் கண்டு, பிரித்தாளும் தன்மைகள் தலைதூக்கி இருக்கின்றன. இதற்காக பழைய காலத்துக் காயங்களை திரும்ப எடுத்து அவற்றின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் மறைமுகமாக முன்னெடுக்கப்படுகின்றன. பழையன மன்னித்து, ஒன்றிப்பில் வாழ வேண்டும் என்று உண்மையானது வேண்டுமென்றே மறக்கப்படுகிறது. திருத்தந்தை அவர்கள், புனித பிரான்சிஸ் அசிசி அவர்களை, மன்னிக்கவும் ஏற்கவும் முன்மாதிரியாத தன்னுடைய மடல் வழியாக முன்வைக்கிறார். சிலுவைப் போர்கள் நடந்து வந்த காலத்தில், இஸ்லாமிய சகோதரர்களுடன் அமைதியான முறையில் அன்பின் மொழிகளைப் பேசி, அவர்களின் இதயங்களை வென்றார். இத்தகையப் போக்கானது நம்முடைய வாழ்விற்கு அவசியம் என்பதை வலியுறுத்துகிறார். ஆகையால் பிரிவினையின் சுவர்களை தகர்த்து ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ் வேண்டும் என்பதை, பாவங்களை மன்னிக்க வேண்டும் என்னும் வேண்டுதல் வழியாக இயேசு முன்வைக்கிறார். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல ஏழு ஏழுபது முறை மன்னியுங்கள் என்று இயேசு கூறுகிறார்.

சுயநலத்தின் சோதனைகளைக் கடந்து வாழ்தல்

மூன்றாவது வரும் விண்ணப்பம், எங்களை சோதனையில் விழவிடாதேயும் என்பதாக இருக்கிறது. திருத்தந்தை தொடர்ந்து சமூகக் கண்ணோட்டமானது மறக்கப்பட்டு, சுயநலத்தால் பிறரை ஏற்றுக்கொள்ளாத மனநிலையானது பெருகி வருகிறது என்பதையும் பதிவு செய்கிறார். எல்லாவற்றையும் சொந்தமாக்க வேண்டும் என்னும் எண்ணமானது மேலோங்கி வருகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் குடியாட்சி என்பது ஜனநாயக ஆட்சிப் பெற்றிருக்கும் வரையறையாக இருந்து வருகிறது. ஆனால், இன்று பெரும்பாலும் மனிதர்கள் பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு, கட்டுக்கடங்காத முதிலாளித்துவ ஆட்சி முன்வைக்கும் சந்தைப் பொருளாதாரத்தின் பகுதியாக மாறி இருக்கின்றனர். ஜனநாயகம் நாட்டின் ஒரு சதவீதம் மக்கள் மட்டுமே அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் நிலை நோக்கி தரம் தாழ்ந்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். நூறு விழுக்காடு மக்களால், நூறு விழுக்காடு மக்களுக்காக, நூறு விழுக்காடு மக்களே நடத்தும் ஆட்சி என்னும் போக்கு இன்று மாறிப்போய் ஒரு விழுக்காடு மக்களால் ஒரு விழுக்காடு மக்களுக்காக ஒரு விழுக்காடு மக்களே நடத்தும் ஆட்சியாக மாறி வருகிறது எனலாம். முதலாளிகளின் மட்டுமீறிய வளர்ச்சியையும் ஏழைகளின் பரிதாப நிலையையும் இது காட்டுகிறது. அரசியல் கட்சிகளுக்கு பெரும் முதலாளிகளால் கொடுக்கப்படும் கணக்கில் வராத பணத்தின் பலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஒரு சதவீத முதலாளிகளால் அரசு ஆட்சிக்கு வருகிறது. அவர்களே அரசின் திட்டங்களை தீர்மானிக்க அது அவர்களுக்கான ஆட்சியாக மாறுகிறது. அரசின் அனைத்து அமைப்புகளையும் அவர்களே கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களே ஆட்சி செய்யும் போக்கானது நடக்கிறது. இவ்வாறாக பேராசைகள் வளர்கின்றன. இத்தகையச் சோதனை அடிமட்ட மக்கள் வரைக்கும் பாதித்திருக்கிறது என்பது தான் வருந்தத்தக்க விஷயம். சாதாரண குடிமகனையும் மகளையும் இப்பேராசை பாதித்திருப்பதால், முதலாளிகளின் வளர்ச்சியைப் பற்றிய அக்கரை இல்லாமல், தன்னுடயை வளர்ச்சி என்னும் நிலை நோக்கி மாறியிருக்கிறார்கள். சோதனை இன்று மாற்று உருகொண்டு வாழ்கிறது. இவைகளை உணர்ந்து, பேராசை என்னும் சோதனையைக் களைந்து வாழ்தல் அவசியம்.

மனிதனோடு உரையாடல் நடத்தி தீமை ஏற்படுத்தும் தீயோன்

கடைசி விண்ணப்பம் தீயோனிடமிருந்து என்னை விடுவித்தருளும். தீயோன் என்பது ஒரு சக்தியாக மட்டும் பார்க்க முடியாது என்று திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுப் படக் கூறுகிறார். அது ஒரு நபர், a person ... அவனோடு உங்களால் பேச முடியும் உரையாட முடியும். அவன் நிரந்தரமாக தன்னுடைய தாக்கங்களுடன் நம்மைச் சுற்றி நிற்கிறான். இயேசு, சாத்தானிடம் உரையாடல் மேற்கொள்ளும் போது, கடவுளின் வார்த்தைகளை பயன்படுத்துகிறார் இல்லையென்றால், அப்பாலே போ சாத்தானே, என் கண்முன் நிற்காதே என்றெல்லாம் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். “நல்லவர் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்” (மத் 12:35). சாத்தானிடம் உரையாடல் மேற்கொள்ளப்படும் போது தீய கருவூலமானது உருவாகிறது? கொலை செய்வதற்காக ஒருவர் தீயோனிடம் உரையாடல் மேற்கொள்ளலாம், ஒரு இனத்தை அழித்தொழிப்பதற்காக சாத்தானிடம் ஒருவர் உரையாடல் நடத்தலாம், பிறருக்கு எதிராக தீமை செய்வதற்காக, மன்னிக்காமல் இருப்பதற்காக, பிறரை ஏமாற்றுவதற்காக... என ஏராளமாவற்றைக் கூறலாம். தீமை செய்வதற்காக ஏராளமான நியாயங்களை சாத்தான் உங்கள் முன் வைக்கும். கற்களை அப்பமாக மாற்று என்னும் உரையாடல், அதற்கள் வஞ்சகம் அடங்கியிருப்பதை இயேசு அறிகிறார். ஒரு நியாயமாக பசியை முன்வைக்கிறது, கடவுளின் ஆற்றலை முன்வைக்கிறது... சொத்துக்களை சொந்தமாக்க அது அவசியம் என்னும் நியாயம்... இப்படியாக நிறைய... இன்றும் நாம் தீமைகளை நியாயப்படுத்தலாம். இவ்வாறு செய்யாமல் வாழ முடியாது என்னும் போக்கு... ஆக சாத்தானின் செயல்பாடுகளுக்கு எதிராக எப்போதும் போராட வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆக சாத்தானின் சோதனைக்கும் வஞ்சகத்திற்கும் உட்படாமல் இருக்கும் போது நாம் கடவுளின் ஆட்சிக்கு உட்படுகிறோம் என்று அர்த்தம். “அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது” (1பேது 5:8).

இறுதியாக

கடவுளின் அருளைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்னும் செபத்தின் பிற்பாதியில் வரும், அன்றாட உணவு தாரும், பாவங்களை மன்னியும், சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து விடுவியும் போன்ற விண்ணப்பங்களை நிறைவேற்றும் கடமையைப் பெற்றிருக்கிறார்கள். அவற்றை நிறைவேற்றும் போது கடவுள் மாட்சி பெறுவார். ஆக, முதல் பாதியில் வரும் வேண்டுதல்களும் பிற்பாதியில் வரும் வேண்டுதல்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. கடவுளின் பெயர் தூயதெனப் போற்றப் பெற, அனைவரும் உரிமைகள் பெற்று வாழ வேண்டும். அவரது ஆட்சி வருவதற்காக, மண்ணுகில் நாம் கடவுளின் வார்த்தைகளை செயல்படுத்த வேண்டும். அவரது திருவுளம் மண்ணுலகில் நிறைவேற, தீயவனுக்கு அடிபணியாமல், சோதனைக்கு உட்படாமல் வாழ வேண்டும்.

ஆண்டவர் கற்பித்துத் தந்த அற்புதமான செபமானது ஆழமிக்க கருத்துக்களை கொண்டது. செபிப்போம், செபத்தை வாழ்வாக்குவோம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்