பேரரசுகள் ஏற்படுத்திய ரணங்களிலிருந்து இன்று இரத்தம் வடிந்து ஆப்கானை நனைத்துக் கொண்டிருக்கிறது. காயின்களாக உருவெடுத்து வலிமையால் ஆப்கானை சொந்தம் கொண்டாட நினைத்தவர்கள், பின்வாங்கிய பின், ஆபேல் எழுப்பும் குரல்கள் கடவுளின் செவிகளில் சென்றடைகின்ற என நம்புவோம்.
முதலில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த பிரித்தானியாவின் மயான பூமியாக ஆப்கான் விளங்கியது. ஒருமுறை அல்ல மும்முறை. 1838-42, 1878-1880, 1919 என இங்கிலாந்து பேரரசு ஆப்கான் மீது போர்த்தொடுத்தது. 1838 முதல் 1942 வரை நடந்த போரில் இங்கிலாந்து பரிதாபகரமாகத் தோற்றுப் வெளியேறியது, ஆனால் 1878-1880 வரையிலான போரில், இங்கிலாந்து ஆப்கானிஸ்தானை வென்றது. ஆனால் திரும்பவும் 1919 இல் நடந்த போரில் இங்கிலாந்து தோற்றுப் போனது. இப்போர்களை மிகப்பெரிய விளையாட்டு (Great Game) என வருணிக்கிறார்கள். எதற்காக இப்போர்களை இங்கிலாந்து தொடுத்தது எனக் கேள்வி எழுப்பினால், ஆப்கான் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காகவோ, அவர்களின் நலனின் அக்கறைக் கொண்டோ அல்லது அவர்களின் சொத்துக்களை எல்லாம் அபகரிப்பதற்கோ அல்ல. இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு அருகிலே இருந்த ரஷ்யாவுக்கு அஞ்சியது. தங்களுடைய காலனியாக விளங்கிய பிரிட்டீஷ்-இந்தியாவின் அடுத்த நாடாக இருந்த, ஆப்கானிஸ்தான் தங்களின் கைவசம் இருந்தால், ரஷ்யா இந்தியாவை அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்னும் நினைப்பில் இதைச் செய்தது. 1880 இல் அவர்கள், ஆப்கானிஸ்தானை வென்ற போது, அந்நாடானது தங்களுடைய இராணவத்திற்குத் துணைபோவதாக மாற்றிக் கொண்டது. ஆனால் 1919 ஆம் ஆண்டு அது ஆப்கானியர்களால் வீழ்த்தப்பட்டது. பின்னர் பலர் ஆண்டனர். சோஷியலிசம் போன்றவையும் வந்து போயின. பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்த 1960 களும் இருந்தன.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்திற்கு சொந்தமான பிரித்தானியா தனது அதிகார மேட்டிமையை நிறுவவுதற்கா, மக்களை ரணப்படுத்தியது. பெரிய அரசு, சிறிய நாட்டிடம் தோற்று வெளியேறியது.
1979, டிசம்பர் 24 ஆம் தேதி ரஷ்யா ஆப்கானிஸ்தானை தன் ஆளுகைக்குக்குள் கொண்டு வந்தது. ஏன் ஆப்கானை வென்றது? இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், உலகில் இரபெரும் வல்லரசுகள் உருப்பெற்றன. அமெரிக்கா மற்றும் ரஷ்யா. இரண்டும் இருபெரும் கொள்கைகளைக் கொண்டு இயங்கின. முதல் கொள்கை Doctrine of Containment. அதாவது, கம்யூணிச சித்தாங்கள், பிரிட்டீஷ் அரசிலிருந்து விடுபடும் நாடுகளுக்குள் புகவிடமாட்டோம் என்னும் கொள்கையை ஏற்றிருந்தது. அதே வேளையில் ரஷ்யாவானது Brezhnev Doctrine என்னும் கொள்கையைக் கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் ஒரு நாடான சோஷியலிசக் கொள்கையை ஏற்றிருந்தால், அந்நாட்டில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் அகற்றப்படாமல் இருப்பதற்காக அனைத்தையும் செய்யும். ஆப்கானிஸ்தானில், பெருகி வந்த இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சிகளுக்கு முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா 1979 இல் போர் தொடுத்தது. ஆனால் கம்யூணிசம் ஆப்கானில் மீண்டும் தழைக்காமல் இருப்பதற்காக, ரஷ்யாவுடன் பனிப்போர் நடத்தி வந்த, அமெரிக்கா வேறொரு முறையைக் கையாண்டது. அது, அங்கு ரஷ்யாவின் ஆளுகைக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்கிய முஜாஹிதீன் அமைப்புக்குத் தேவையான படைகளைக் கொடுத்து உதவியது. இவ்வாறாக, அவர்கள் ரஷ்ய அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது. இவர்கள் பழங்குடி இனக்குழுக்களுக்கு, CIA (Central Intelligence), எனப்படும் அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறையும், பிரித்தானியாவும், சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும் உதவியது, இக்காலக் கட்டத்தில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் முஜாஹிதீன் இயக்கத்துடன் சேர்ந்தான். அவன் பிற்காலத்தில், தீவிரவாதியாக மாறி அல்கெய்தா என்னும் இயக்கத்தை நிறுவினான். அவன் பெயர் ஒசாமா பின் லாடன். முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுத்தான். ரஷ்யா 1989 இல் தன்னுடைய ராணுவத்தை வெளியேற்றத் தொடங்கியது. மீண்டும் ஒரு பேரரசு தோற்றுப் போய் பின்வாங்கியது. பின்னர் 2001 இல் நடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் மிக்பெரிய நிறுவனங்கள் மீது, அல்கெய்தா தாக்குதல் நடத்தியது. தாங்கள் வளர்த்தியவர்கள் தங்களுக்கே உலை வைத்தார்கள். ஒசாமா பின் லாடனை தருமாறு, தலிபான்களிடம் ஜார்ஜ் புஷ் வேண்டுகோள் வைத்தார். மறுத்துரைக்க, ஆப்கான் மீது போர் தொடுக்கப்பட்டது. இப்போது, மேலும் ஒரு பேரரசு, ஆப்கானிஸ்தானில் தோல்வியுற்று வெளியேறியிருக்கிறது. 2021 ஆகஸ்ட் 31 இல்.
பிரித்தானியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா பேரரசுகளின் மயான பூமியாக மாறியது ஆப்கான் நாடு. எவரும் வெற்றிப் பெறவில்லை. தங்களின் சுயநலத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களை புண்படுத்தி, வெறியர்களாக்கி, ஆயதங்களைக் கொடுத்து, தங்களுக்குள் கொல்லும் அளவுக்கு பேரரசுகள் அவர்களை சீரழித்து விட்டது. அதிகாரம் மண்ணைக் கவ்வியது. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய ரணங்களிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது ஆப்கானில். யார் அவர்களுக்கு வெள்ளைப் பூக்களைக் கொடுத்து ஆறுதல் படுத்தி சகோதர பாசம் செழிக்கும் அமைதியின் பூங்காவாக மாற்றுவர்?
0 கருத்துகள்