சுயம் ரசிக்கும் நார்சிஸ்ட் | அ. சந்தோஷ்

கரடு முரடான பாதை வழியாக பாதங்கள் பயணிக்கத் தொடங்கியிருந்தன. பார்க்கிற இடமெல்லாம் வெறிச்சோடிக்கிடக்க, காற்று தன் பங்கிற்கு செம்புழுதியை அள்ளி எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் புழுதி படிந்து நான் சிவந்து கொண்டிருந்தேன். இம்மியளவும் தயவு தாட்சண்யமின்றி இயற்கை தன் வித்தையைக் காட்டிக் கொண்டிருந்தது. வெயில் எங்கும் பரவி உடம்பை சுட்டெரித்துக் கொண்டிருக்கும் உணர்வு. உடலெல்லாம் கருகிப் போய்விடுமோ என்று கூடத் தோன்றியது. கால்கள் பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஏன் வெறுமையில் பயணிக்க வேண்டும்? பசுமையான மரங்களையும், நீர்ச்சுனைகளையும், வாய்க்கால்களையும் கடந்து உயிர் வாழத் தகுதியற்ற இந்நிலப்பகுதியை நோக்கி பாதங்கள் ஏன் பயணிக்கிறது என்றுத் தெரியவில்லை. திரும்பி வரத் தோன்றவில்லை. வலி இதயத்திலிருந்து கசிந்து பாதங்கள் வழியாக நிலத்தில் பரவிக் கொண்டிருந்தது. அது நிலத்தில் வேர்தள்ளி, எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. வேர்களைத் தள்ளிய பாதத்திடம் வேர்களின் தந்திரம் செல்லுபடியாகவில்லை. வேர்களால் பாதங்களைச் சிறைப்பிடிக்க முடியவில்லை. வேர்களை பரப்பிக் கொண்டு பாதங்கள் சுதந்திரமாகப் நகர்ந்துக் கொண்டிருந்தன. நெஞ்சிலிருந்து பாதங்கள் வழியாக பெருந்துயரின் இரத்தக்கசிவுகள் கீழே விழுந்துக் கொண்டிருந்ததால், வேர்கள் அவற்றைக் குடித்துக் கொண்டு, புழுதியை மேலும் செந்நிறமாக்கிக் கொண்டிருந்தது. இரத்த அபிஷேகம் கிடைத்த ஆனந்தத்தில் புழுதி மேலும் மேலும் மேலே எழும்பி எங்கும் பரவிக் கொண்டிருந்தது. புழுதி நெஞ்சின் வலிகளை ஆனந்தத் தாண்டவாக மாற்றிக் கொண்டிருந்தது. அதன் தாண்டவம் நெஞ்சில் இனம் புரியாத உணர்வுகளை ஊட்டிக் கொண்டிருந்தது. வலிகளின் கோரத்தை நெஞ்சம் சுகமாக உணர்ந்து கொண்டிருந்தது. சுயம் துன்புறுத்தி இன்பம் காணும் வன்மம் ஏனோ இதயத்தில் தொற்றியிருக்கிறது.  ஒருவிதமாக Masochism என்னைத் தொற்றிக் கொண்டதோ என்னும் உணர்வு தலைக்குள் புக நெஞ்சத்திற்குள் நெருடல் தோன்றியது. 

இதயம் இப்போது, பாதத்தின் சலனங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இயங்கிக் கொண்டிருந்தது. திரும்பி வர வேண்டும் என்றுத் தோன்றவில்லை. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று தோன்றியது. புழுதிகள் படிந்து கொண்டிருந்தது எனக்கு ஏனோ பிடித்துப் போய் விட்டது. என் வலிகளே எனக்கு சுகம் தருவது ஏதோ ரசிக்கும் படியாக இருந்தது. என் குருதியே என்னை அபிஷேகம் செய்து கொண்டிருந்தது. மண் என் சோகங்களை தனதாக்கிச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தது. அதற்கு காற்று எசப்பாட்டு இசைத்து, என் சோகத்தோடு பங்கேற்றது. காற்றும் புழுதியும் எனது வலிகளை தங்களது ஆக்கிக் கொண்டதன் இன்பம் எனக்குள் ஏதோ பித்து ஏற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அவை என்னோடு தொடர்ந்து உறவாட ஏனோ துணியவில்லை. விலகி விலகிச் சென்றுக் கொண்டிருந்தது. 

புழுதியை அள்ளித் தேய்ப்பதில் காட்டிய அக்கறை என்னோடு கைகோர்த்து நடப்பதில் ஏனோ காட்டவில்லை. விலகிச் சென்றன, உறவுகளைப் போன்று. 'சொந்தக் கொண்டாட நாங்கள் உன்னுடையவர்கள் அல்ல' என்பதை அவை தீர்க்கமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தன. 'வேர்களை நீ ஏன் விடுகிறாய்?' என அவை கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தன. 'வேர்களை விடாமல் சென்றிருந்தால், நீ வெறும் பயணியாக மட்டும் மாறியிருப்பாய்' என தத்துவம் பேசிக் கொண்டிருந்தன. 'எங்களுக்கு தனிச் சுதந்திரம் உண்டு. எங்களிடமிருந்து நீ ஏதாவது பெற்றிருந்தால் அதற்கு நன்றி செலுத்திக் கொண்டு சென்று விடு' என அவை உரைத்தவாறு இருந்தன. நான் எனக்குள் முடங்கிக் கொண்டிருந்தேன். நான் உருவாக்காதவற்றை எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்? உறவுகளை உருவாக்க நான் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டேன் எனும் என் முணுமுணுப்புக்கு வன்மையான எதிர்வினைகள் இயற்கையிலிருந்து வந்துக் கொண்டிருந்தன. 'நீ ஏதாவது உருவாக்கியதாக சொந்தம் கொண்டாடினாலும் அதன் மூலப்பொருட்கள் உன்னுடையவை அல்ல. அவற்றை வேறு யாரோ உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். நீ அவற்றை பயன்படுத்தி உனக்கு விருப்பமான ஒன்றை உருவாக்கிக் கொண்டாய். யார் சொன்னார் உன்னிடம், உனக்கு விரும்பியதை, இன்னொருவரின் மூலப்பொருளிலிருந்து உருவாக்குவதற்கு? நீ உருவாக்கியவற்றை வைத்து நீ இன்பம் அனுபவித்திருந்தால், அவை உன்னை விட்டுப் பிரியும் போது சொந்த கொண்டாட உனக்கு துளி அளவு கூட உரிமையில்லை. நன்றி செலுத்தி விட்டு நகர்ந்து விடு.' தத்துவங்களை கொன்றழிக்க இங்கே யாரும் இல்லையா? என்று கோபம் எனக்குள்ளிருந்து கொப்பளித்துக் கொண்டிருந்தது. 

photo: pixabay.com


வன்மம் பெருகிக் கொண்டிருந்தது. வலிகள் மேலும் சுகத்தை எனக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது. எங்கும் வெறிச்சோடிக் கிடக்கிறது என்பது ஏனோ திருப்தியைத் தந்துக் கொண்டிருந்தது. அந்தத் திருப்தியில் மனம் சுகம் காண முயன்றுக் கொண்டிருந்தது. எனக்கென நான் மட்டும் என்னும் உணர்வை திருப்தி வளர்த்தெடுக்க வருந்தி முயன்றுக் கொண்டிருந்தது. அதில் நான் வெற்றிக் கண்டேன். எனக்கென நான், நான் மட்டும் என்னும் திமிர் மேலெழும்ப உடலின் நரம்புகள் புடைத்தெழும் உணர்வு தொற்றிக் கொண்டது. அது தலைக்குள் சென்று மின்சாரத்தைப் பாய்ச்சியது. எவ்வளவு நேரம் இந்த தனிமையின் சுகம் நீடிக்கும் என்று தெரியவில்லை. அடுத்து எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும், அந்த சுகம் ஆனது கீழே விழுந்து சுக்கு நூறாகச் சிதறிப் போகலாம். நான் தரையில் கொட்டப்பட்ட நீர் போல மாறிப் போகலாம்.  சுயம் ஆராதிக்கும் நார்சுஸ் ஆக நான் மாறிட முயன்றாலும் அது வெற்றி அடையவில்லை. நார்சிஸ்ட் கேட்க நன்றாக இருக்கிறது. எனக்குள் புதைந்து, நானே என்னை ஆராதிக்கும் விளையாட்டு. நல்லதுதான். ஆனால், அது நீடிக்கவில்லையே. அதைத்தான் 'கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே'  என்னும் தத்துவம் கூறுகிறதோ. 'நீ உனக்கென வாழ், பிறருக்காக ஏன் வாழ வேண்டும்?' எனும் கேள்விக்கும் இதுதான் அர்த்தமோ? எல்லாம் குப்பைகள். போன போக்கில் யாரோ விதைத்து விட்டுச் சென்றவை. அவர்கள் தங்கள் இயலாமையில் உதிர்த்தவைகளாக இருக்கலாம். நடந்து கொண்டிருந்தேன். இரத்தம் கசிகிறது. பாதங்கள் நிலத்தில் வேர்களை பரப்பவுதை நிறுத்தவில்லை. 

இனி என்றுதான் பாதங்கள் பசுமையை நோக்கித் திரும்புமோ. நீரில் நடந்து நெஞ்சை குளிர்விக்க ஆசையாக இருக்கிறது. அது கைகூடுவது எந்நாளோ?

கருத்துரையிடுக

0 கருத்துகள்