வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் | அ. சந்தோஷ்

உலகம் நெறிகெட்டுக் கிடக்கிறது என்பதில் அவன்கள் உறுதியாய் இருந்தார்கள். எங்கும் அசிங்கங்களும் அவமானங்களும் தலைவிரித்தாடுகின்றன என்பதை ஐயமற அவன்கள் நம்பினார்கள், அத்தோடு அதைப் பற்றி சமூகத்தில் பேசித்திரிந்தார்கள். உலகம் மானங்கெட்டுக் கிடக்கிறது. அதை நெறிப்படுத்த வேண்டியது அவன்களின் பொறுப்பு என்பதை பேசித்திரிந்து, அத்தோடு அவன்களே காவலர்களாக மாறிக் கொண்டும் திரிந்தார்கள். 

photo: pixabay.com

நெறிகெட்டுத் திரியும், மானம் களைந்து கொண்டுத் திரியும் அவள்களை சரிசெய்வது அவன்களின் பொறுப்பு என்னும் கட்டமைப்பை கட்டிக்காக்க வலிந்து முயல ஆரம்பித்தார்கள். அவள்கள் அணிய வேண்டிய ஆடைகளின் அளவுகளை அவன்கள் அளந்து வைத்துக் கொண்டார்கள். அவ்வாடைகள் எந்தெந்த இடங்களை மூட வேண்டும் என்பதை கச்சிமாகப் பேசித் தீர்மானித்துக் கொண்டார்கள். அதற்கான புராண மற்றும் புனித நூல்களின் வரிகளை தேடிப்பிடித்து மனப்பாடம் செய்து கொண்டார்கள். வண்ணக்கலவைகள், ஆடை வடிவமைப்புகள் என அனைத்திற்குமான அளவு கோல்களை அவர்கள் சுமந்து திரிந்தார்கள். அளவுகோல்களை வைத்துக் கொண்டு அவள்களை சீர்தூக்கிப் பார்ப்பதில் அவன்கள் அதீத அக்கறை காட்டினார்கள். அவன்கள் அதற்காக நுண்திறன் பேசிகளின் திரைகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள். நுண்திறன் பேசியின் திரையை அகலமாக்கி விரித்தும் பார்த்தார்கள். இப்போது அளவுகோல்களைப் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருந்தது அவன்களுக்கு. அளவு கோலை தொடுதிரையில் பயன்படுத்தி உறுதிப் படுத்திக் கொண்டுத்திரிந்தார்கள். 

அவன்கள் அவள்களை பார்ப்பது எல்லாம் உலகை சீர்த்திருத்த மட்டுமே என்பதை நீங்கள் நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். அதை நீங்கள் ஏற்றாக வேண்டும் என்பது அவன்களின் விருப்பம். அதற்காக அவர்கள் நீண்ட உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள், விதவிதமான போர்வைகளை போர்த்திக் கொண்டும் இருக்கிறார்கள். உலகம் மானங்கெட்டுப் போனால், அதைக் காப்பவர் யார் என்னும் சமூகப் பிரக்ஞைக்கு முன்னால் நீங்கள் அடிபணிந்தாக வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொள்வோர்களை நீங்கள் இழிவுப் படுத்தினால் நாளை மானங்கெட்ட, நெறிகெட்ட உலகில் உங்கள் பிள்ளைகளும் வாழ்ந்தாக வேண்டிய சூழல் ஏற்படும். அது நடக்க விட வேண்டுமா? அதை தடுத்து நிறுத்த வேண்டாமா? அவன்கள் செய்வது முற்றிலும் நேரியதும் சிறந்ததும் மதிப்புக்குரியதுமான செயல் என்பதை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் மானங்கெட்டவர்கள் என்று முத்திரை குத்தப்படுவீர்கள். நாளைய உலகம் மானமுடையதாக இருக்க வேண்டும். அதற்காக அவள்கள்கள் உடுத்தும் ஆடைகள் கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கான அளவுகளை நீங்கள் கொண்டு நடக்க வேண்டும். உடலை மூடும் ஆடைகளின் தரங்களும், விதங்களும், நிறங்களும், வடிவங்களும் சரியான முறையில் அளக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் போடப்பட வேண்டும். குறைவாக மதிப்பெண் பெறுவோர் அனைவரும் இழிவானவர்கள் என முத்திரைக் குத்தப்பட வேண்டும். அவள்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால்  அவன்களின் மானம் கெட்டுப் போகிறது என்பதை சமூகம் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே புரியவில்லை? அதை சமூகத்தின் மனதில் யார் புரிய வைப்பார்? இன்றைய சமூகத்தில் அவள்கள் வரம்புகளை மீறிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்கு கடிவாளம் போட்டுத் தான் ஆக வேண்டும். இல்லெயன்றால், அவன்களை உள்ளடக்கிய சமூகம் மானங்கெட்டதாக மாறிவிடும்.

அவன்கள் அளவுகோல்களை பயன்படுத்துவதில் முனைவர் பட்டம் பெற்றதோடு முற்றும் துறந்த துறவிகளாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவன்கள் அவள்களை அளக்கும் அளவைகள் அனைத்திலும் காமம் கொட்டிக் கிடக்கிறது என்பதை பொது அறிவு சொல்லுமாயினும், அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை. காரணம் அவன்கள் அவற்றை எல்லாம் கடந்தவர்கள். உலகரீதியிலான ரசனைகளை முற்றிலும் அவித்த முனிவர்கள். அவன்கள், உலகில் சமநிலை கெட்டுப் போகக் கூடாது என்னும் ஒரே நோக்கத்துடன் செயல்படும் உத்தமர்கள் என்பதை மனமார ஏற்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டு.  

அவன்களை கேடுகெட்டவர்கள் என்றுக் கூறி காறி உமிழ்ந்துவிடக் கூடாது. அவன்கள் அவள்களின் உடல்களை, சமூகத்தை காப்பாற்றுதவற்கு என்று மட்டுமே அளக்கிறார்கள். மன்னிக்கவும் உடல்களை அல்ல, உடைகளை. வேறெதுவும் அவன்கள் அளக்கவுமில்லை ரசிக்கவுமில்லை. உடலில் வேறெது ரசாயன மாற்றங்களும் அவன்களுக்குள் நடக்கவில்லை. 

அவன்கள் பொய்யன்கள் என்று நீங்கள் கூறிக்கொண்டால் அதை ஆட்சேபிக்க யாரும் வரமாட்டார்கள். அது உங்களுடைய சுதந்திரம். அவன்கள் அந்தரங்களை ரசிக்கும் அசிங்கமானவர்கள் என்பதையும் நீங்கள் கூறுவீர்கள். அதுவும் கூற உங்களுக்கு உரிமை உண்டு. அவன்கள் அவள்களை சரிசமமாக பாவிக்கவில்லை, முகங்களைப் பார்க்கவில்லை, மாண்புடையவர்களாகப் பார்ககவில்லை என்றெல்லாம் நீங்கள் கூறினால், கூறிக்கொள்ளுங்கள். சிலராவது ஏற்பார்கள் என்றால் சிறந்தது. அவன்கள் அறம் காக்கும் காவலர்கள் என்னும் போர்வையை தந்திரபூர்வமாக அணிந்து கொண்டு நடக்கும் போலிகள் என்று கூறுவதிலும் தவறில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்