இணையுமா மூன்று புள்ளிகள்? | அ. சந்தோஷ்

கதைகளாக கேட்டதும் வாசித்ததும், சினிமாக்களிலும் பார்த்ததுமான அரிய நிகழ்வுகள் நிஜ வாழ்க்கையில் வரக்கூடுமோ? வலிகளை விதைப்பதா? விந்தைகளை மனதில் தருவதா? தெரியவில்லை. நம் வாழ்வில் இது எங்கே நடக்கப்போகிறது? இது வெறும் கற்பனைகள் என்று ஒதுக்கித் தள்ளக்கூடியவை யதார்த்தமாகலாம். அப்படி யதார்த்தமானதாக மாறும் போது, காலம் விசித்திரமானதாகத் தென்படுவதோடு கொடூரமானதாகவும் கோரப்பற்களை காட்டி வெறியுடன் சிரிக்கிறது. அதற்கு பிஞ்சுகளை காலம் ஏன் பயன்படுத்துகிறது என்று தெரியவில்லை. உள்மன உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்த விரல்நுனிகளால் இயலவில்லை. அழுத்தும் பொத்தான்கள் எழுத்துகளை அப்படியே திரையில் பதித்தும் அடுத்த நொடி அழித்தும் வருகிறது. காகிதத்தில் எழுதியிருந்தால் வெட்டியதும் திருத்தியதுமான வார்த்தைகளில் எச்சங்களாவது மிஞ்சும். ஆனால் அது இப்போது  கணினிகளில் கைகூடாமல் போவதால் எழுதியவை என்றென்றைக்குமாக மறைந்து போகிறது. 




மூன்று குழந்தைகளின் சந்திப்பு. பதினொன்று வயது மூத்தவனுக்கு, இரண்டாமவளுக்கு ஆறு வயது, மூன்றாமவளுக்கு ஐந்து மாதங்களே நிறைவடைகிறது. மூன்று பேரும் சந்திக்கிறார்கள். மூன்று பேரும் இப்படி சந்திப்பது வாழ்வில் கடைசியாக இருக்குமானால், அது காலம் காட்டும் கொடூரமல்லாது என்ன என்பது. மூத்த குழந்தைகள் இரண்டும் தாயின் அடக்கச்சடங்கில் பங்கேற்ற பச்சையான நினைவுகளுடன், கடைக்குட்டியை சந்திக்கிறது. நான் மூவரும் இணைந்திருக்கும் அற்புத நொடிகளை நுண்திறன் பேசியில் நிழலுருவமாக்கிக் கொண்டேன். ஐந்து மாதமாகும் குழந்தையை, குழந்தையில்லா தம்பதியருக்கு தத்துக் கொடுத்து விடுவார்கள். பிறகு மூத்தப் பிள்ளைகளால் சின்னஞ்சிறு, அழகு செல்லத்தைக் காண இயலுமா? கேள்விகள் என்னைத் துளைத்துக் கொண்டே இருந்தன. உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. காப்பகத்தில் பணியாற்றும் அருட்சகோதரி அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது. இளைய குழந்தை எங்கே வளர்கிறது என அறிய இயலுமா? இயலாது என்பதை அறிந்தே இருந்ததால், தயங்கியே நின்றான். என்னோடு வந்த இளையவன் ஒருவன் அக்கேள்வியைத் தொடுத்தான். கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, அது சாத்தியமில்லை என்பதாக இருந்தது. ஆனால், வளர்ந்த பிறகு அவர்களாகவே, தங்கள் வேர்களைத் தேடிக் கொண்டு வரலாம் என காப்பகத் தலைவி அவர்கள் கூறினார்கள். அப்போது சந்திப்புகள் மீண்டும் நடக்கலாம். அத்தேடல்கள் வளர்ந்தபின் பிள்ளைகளிடமே இருந்து தொடங்குவதாக இருக்கும். யாரும் தடைகள் கூற முடியாத, தடுக்க முடியாத தேடல். அது அரிய சந்திப்புகளை நிகழ்த்திக் காட்டி விடும். அத்தைகையப் பொழுது வாய்க்க நான் பிரார்த்தித்துக் கொண்டேன். அன்று காட்டுவதற்காக சில பொழுதுகளை என் நுண்திறன் பேசியில் இன்று பதிவு செய்து வைத்தேன். அவற்றை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதை மூத்தப் பையனிடம் கொடுக்க வேண்டும் என்றும் விரும்பினேன். தெரியவில்லை. வலிகளை மருந்து போட்டு ஆற்றி அதிசயங்களை நிகழ்த்திக் காட்டும் பொறுமையும் ஆற்றலும் காலத்திற்கு உண்டு என்பது உண்மை. 

கனவுலகில் சஞ்சரித்த அனுபவம் எனக்கு. அழுகை, பூரிப்பு, தவிப்பு, இழப்பு, ஏக்கம், நம்பிக்கை, எதிர்கால கனவுகள் என எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே அரங்கேறிய அரிதான நாள், 04.01.2022. எல்லா உணர்ச்சிகளையும் ஒருங்கே முன்வைக்கும் எழுத்துகள் எனக்கு வசப்படவில்லை. அழுகையை மட்டும் பதிவு செய்தால், உள்ளம் கடந்து சென்று கொண்டிருக்கும் பிற உணர்வுகளை நான் அனுபவிக்கவில்லை என்று ஆகிவிடுமா? பூரிப்பை முன்வைத்தால், அழுகையை வெளிப்படுத்தாத குற்ற உணர்வு என்னைக் கொல்கிறது. தாயை இழந்து நிற்கும் குழந்தைகளின் முன்னால் மனப்பூரிப்புடன் நிற்பதா? என்றென்றைக்குமாக தங்கையைப் பிரியும் தவிப்புகளை நான் கொண்டாடும் அசுரன் ஆகிவிட மாட்டேனா? நான் என்ன செய்கிறேன் என்றே உணர்ந்து கொள்ள முடியாத வெறுமையா? நிறைவா? தெரியவில்லை. 

எழுதுவது எவ்வளவு கடினமானது தெரியுமா?  இல்லை உணர்வுகள் அனைத்தையும் ஒரே காலத்தில் அனுபவிக்கும் கடினமானச் சூழலை எப்படி வெளிப்படுத்துவேன் என்னும் ஏக்கமே எல்லாவற்றிற்கும் மேலாக உடம்பை ஸ்தம்பிக்க வைக்கிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்