நடுக்கடலில் தனிமையில் ஒருவன் | அ. சந்தோஷ்

பி.பி.சி. செயலியை எனது அலைபேசியில் நான் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். இச்செயலியில் தான் நான் அன்றாடம் முதலில் செய்திகளைப் பார்க்கிறேன். நெஞ்சைப் பதறவைக்கும் பலச் செய்திகளை இது சுமந்து வருவதுண்டு. 

இன்று 28.01.2022 அன்று அச்செயலியில் மூழ்கிப்போய் கவிழ்ந்து கிடந்த படகில் தனிமையில் தவித்த ஒருவனை அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் இருந்து மீட்டனர் என்னும் செய்தி பார்க்க நேரிட்டது. இவரின் பெயர் எஸ்தபான் மோந்தோயா. 22 வயது நிரம்பும் கொலோம்பியாவைச் சேர்ந்த இவருடன் இவருடைய சகோதரி மரியா கமீலா அவர்களும் மேலும் 38 பேரும் பயணம் செய்திருக்கின்றனர். படகு மூழ்க இவரைத் தவிர்த்து அனைவரும் கடலில் மூழ்கி இறந்தனர். ஐந்து பேரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டன. 

photo: https://www.bbc.com/news/world-us-canada-60135487

குளிரும், எதிர்பாராத பெருங்காற்றும் அலைகளும் உருவாகும் இப்பகுதி பயணிப்பதற்கு உகந்தது அல்ல. ஏன் மக்கள் பயணிக்கிறார்கள்? நல்லதொரு வாழ்க்கை அமெரிக்காவில் அமையும் என்று. இத்தகைய நிகழ்வுகள் ஏராளம் நடந்து கொண்டிருக்கின்றன. க்யூபா, ஹைத்தி போன்ற நாடுகளிலிருந்தும், தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் மக்கள் அபாயகரமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். இலங்கையில், போர் நடந்த காலத்தில் இத்தகையப் படகுகள் பல, ஐரோப்பியக் கண்டங்களுக்குச் சென்றன என்பதை வரலாறு கூறுகிறது. தப்பித்தவர்கள் பிழைக்கிறார்கள். இவர்களை வைத்து பெரும் பொருள் சேர்க்கும் கொள்ளைக் கூட்டம் ஒன்றும் செயல்படுகிறது. இவர்கள் , வீட்டையும் உடமைகளையும் விற்று சேகரித்த ஏழைமக்களின் செல்வம் அனைத்தையும் பிடுங்கி, பல வேளைகளில் பயணிப்பதற்கு ஆபத்தென ஒதுக்கப்பட்ட படகுகளை வாங்கி அதில் மக்களை ஏற்றிக் கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். கடலோர கப்பற்படைகளை பார்த்துப் பயப்படும் இவர்கள், பயணிப்பதற்கு ஆபத்தான படகுகளை நடுக்கடலில் விட்டுவிட்டு வேறு சிறு படகுகளில் தப்பித்து விடுகிறார்கள். படகை செலுத்த யாருமின்றி தவிக்கும் கப்பல் திசை தெரியாமல் நடுக்கடலில் நிற்கும். அப்போது, கடலோரப் படையினர் பார்த்தால் தப்பிப் பிழைக்கிறார்கள். இல்லெயன்றால் கடலால் விழுங்கப் படுகிறார்கள். இது அமெரிக்காவின் கீழ்ப்பகுதி கடல்களில் மட்டும் நடக்கும் நிகழ்வுகள் அல்ல. மத்தியத்தரைக் கடலிலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. 

நிர்கதியற்று தனிமையில் தவித்த மனிதன் மட்டும் இன்று முப்பத்தி ஒன்பது பேரின் மரணத்திற்கு சாட்சியாக அமெரிக்காவின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளான். தடயங்கள் கூட இல்லாமல் அழிந்து போகிறவர்கள் ஏராளம் பேர். இவர்களைப் பற்றியச் செய்திகள் ஏதும் பெரும் ஊடகங்களில் இடம் பெறுவதில்லை, விவாதிக்கப்படுவதுமில்லை. கடவுள் ஆபேல்களில் குரலைக் கேட்டால் நன்று. 

கூடுதல் தகவல்:

உலக அளவில் உலகின் மிகப்பெரிய 10 பணக்காரர்களின் செல்வம் இந்த கோவிட் காலத்தில் இரட்டிப்பாயிருக்கிறது. ஆனால் உலகின் 99 விழுக்காடு மக்களின் வருமானம் ஆபத்தான முறையில் குறைந்துள்ளது. உலகில் விளிம்பு நிலையில் வாழும் 3.1 பில்லியன் (3100 கோடி) மக்களின் செல்வத்தை உலகின் மிகப்பெரிய 10 பணக்காரர்கள் கொண்டிருக்கிறார்கள் (பார்க்க Oxfam's report). இவர்கள் 1 மில்லியன் (பத்து லட்சம்) அமெரிக்க டாலர்களை அன்றாடம் செலழித்தால் 441 வருடங்கள் ஆகுமாம் அவர்கள் சம்பாத்தியத்தை கரைத்திட... ஹா...ஹா... வாழ்க உலக முதலாளித்துவம்.

நான் முதலில் எழுதிய நிகழ்வோடு கீழ் தரப்பட்ட தரவுகள் ஒத்துப் போகிறதா என்று தெரியவில்லை. ஆனால், சமத்துவமின்மை தலைவிரித்தாடுகிறது, அதனால் அடிமட்ட மக்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிக் கூறுவதுண்டு, மத்தியத்தரைக்கடல் மயான கடல் ஆகிவிட்டது. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரச் சந்தை அனுமதிக்கும் ஏகபோக முதலாளித்துவம் விளிம்புநிலை மக்களைக் கொன்றுக் கொண்டிருக்கிறது. கேட்கச் செவியுடையோர் கேட்கட்டும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்