பற்கள் பல வழிகளில் மனிதனுக்கு உதவுகிறது. இவனைப் பொறுத்தவரைக்கும் சோறு போட்டுவந்தவை பற்கள்தான். சிலர் கூறுவதுண்டு ‘இந்த வாய் மட்டும் இல்லண்ணா ... நீ பிச்ச எடுத்திருப்ப...” இம்மொழிகளை இவனோடு பொருத்திப் பார்த்தால் பற்கள் வாயின் இடத்தில் செம்மையாய் பொருந்தி நிற்கும். முதுகெலும்பு அற்ற எவ்விதச்சூழலோடும் இயைந்து செல்ல பழகியிருந்த அவனுக்கு தேவையான வாழ்க்கை நிதியை அளித்து வந்தது இப்பற்கள்தான். பல்லிளித்து பழகிய இவனுக்கு பல பதவிகளை வழங்கியதும் இப்பற்கள் தான். எவ்வளவு விதமான பல்லிளிப்புகள்... சூடு சொரணை, நாணம், வெட்கம் என்ற வரிசையிலே எதுவும் இவனை தீண்டவில்லை போலிருக்கிறது. துதிபாடிப் பழகிய இவனது செவிட்டுச் செவிகளுக்குள் ‘சொந்த காலில் நிற்க வேண்டும்’ ‘மானம் மனிதருக்கு ஆடை’ போன்ற போதனைகள் நுழையவில்லை என்பது திண்ணம். அவனை வாழ வைத்துக்கொண்டிருந்த பற்கள் தங்கள் பணியை கச்சிதமாய் இதுவரைக்கும் நிறைவேற்றிக்கொண்டுதான் வந்திருக்கின்றன.’ அகத்தின் அழுக்குகளை, சீழ் வடிக்கும் புண்களின் நாற்றத்தை, வலியை எல்லாற்றையும் இம்மியளவும் வெளிக்கொணராமல் பற்கள் எவ்வளவு தத்ரூபமாக உள்ளத்திற்கு மூடுதிரை போட்டு நின்றன தெரியுமா? பற்களால் வாழ்வதற்காக இவன் கடவுளிடமிருந்து தனிப்பட்ட முறையில் வரம் வாங்கி வந்திருந்தான் போலிருக்கிறது.
இவன் பற்களால் மக்களிடமிருந்து ஓட்டு சேகரித்தான். முதலையின் வாய் போல் விரிந்து நிற்கும் பற்களின் வெளிப்பரிமாணத்தை மக்கள் வாசனை பகர்ந்திட வரும் மலரென புரிந்து வைத்திருந்தனர். அவ்வளவு வசீகரம் ‘அக்கோரப்பற்களுக்கு’ இருந்தன. அமைச்சர் நாற்காலியை வழங்கியதும் இப்பற்கள் தான். இவனுடைய பற்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளோடு பலரது பற்கள் போட்டியிட்டு கடைசியில் தோல்வியையேத் தழுவின. முகத்திற்கு விளக்குப்போட்டாற்போன்று அவ்வளவு கச்சிதமான அமைப்பு முறையை அவனது பல்வரிசை பெற்றிருந்து. இது அவனது எதிரிகளுக்கு பொறாமைக்கு விஷயமாகவும், ஆதரவாளர்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்திருந்தது. மனைவிக்கு இது சொத்து சேர்ப்பதற்கான பொக்கிஷம். திருமணமாகும் போது அவளுக்கு அவனுடைய பல்வரிசை மிருகத்தனத்தின் வெளிப்பாடாக தென்பட்டது. ஆனால் அவை வெகுவிரைவில் இறைமையின் வெளிப்பாடாக பரிணமித்து நின்றன. சொகுசாக வாழ இது எவ்வளவு உதவுகிறது என்று நினைக்கும் போதெல்லாம் அப்பற்கள் சாகா வரம் பெற்று என்றும் நிலைக்க வேண்டும் என்று அவள் வேண்டுதல் நேராத நாட்களே இல்லை என்றுதான் சொல்ல முடியும். எவ்வளவு பூஜைகள் இதற்காக நேர்ந்தாயிற்று. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் வரை கடவுள் கைவிடவில்லை. நாய்க்கு வால் வாழ்வைக் கொடுக்கிறது என்றால் இவனுக்கு பற்கள்தான்.
இப்போது அனைத்துப் பற்களும் இதோ சிதறிக்கிடக்கின்றன. பற்கள் என்னும் வேலியைத்தாண்டி வந்த ‘கப்பு’ அனைத்து பற்களையும் வீழ்த்திவிட்டன. துர்நாற்றம் வருடங்களாக சேகரித்து வைத்திருந்த அகம் என்னும் சாக்கடையினின்று பீறிட்டு நகர்வோரை கிறங்கடிக்கும் விதத்தில் வெளிவந்தது. இதுவரை சேகரித்து வைத்திருந்த கவுரவம், செல்வாக்கு அனைத்தும் இப்போது இவனை வெறித்துப்பார்த்த வண்ணமாய் பேய் சிரிப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தன. துர்நாற்றம் உறவுகளின் அறிவின்மையால் நேர்ந்தது என்று நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு மனைவியை கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. நோமையற்ற சுயத்தால் ஏற்படும் உறவுகள் எல்லாம் விலங்குகள் என்று இப்போது நன்றாய் உறைக்க ஆரம்பித்தது. ‘இனி உறவுகளே வேண்டாம்’ என்று தீர்மானம் ஏற்றி முடிப்பதற்குள் பொக்கை வாயினின்று விழுந்த எச்சில் அவனுக்கு சுயபிரக்ஞை கொடுத்தது.
மனைவியும் உறவினரும் பற்களை இழந்த பொக்கை வாயனை விட்டு வெகு தொலையில் இப்போது சென்று கொண்டிருந்நதனர். எண் பதித்த மேல்சட்டையையும் அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்தவனின் கைகளில் இருந்த அலுமினிய பாத்திரத்திலிருந்த சோற்றுப்பருக்கைகள் பற்களின் உருவம் பூண்டு அவனைப்பார்த்து இளித்துக் கொண்டு கிடந்தன்.
0 கருத்துகள்