ஞானவடிவன் | அ. சந்தோஷ்

மெய்யியல் தத்துவங்களையும் உண்மைகளையும் அந்நூல் விளம்பிக் கொண்டே இருந்தது. அதை வாசிப்பதில் அலாதி சுகம் ஏற்பட்டுக் கொண்டு இருந்தது ஞானவடிவனுக்கு. அது ஒருவிதமான போதையைத் தந்துக் கொண்டிருந்தது. ஞானவடிவனைப் பொறுத்தவைரைக்கும் வாசிப்பதும் போதை தான். அது மூளைக்குள் நுழைந்து, நிறைய நம்பிக்கைகளை ஊற்றியவாறு இருந்தது. அது மூளையை கிளர்ச்சிப்படுத்தும். அந்த கிளர்ச்சி அளிக்கும் போதையில் நெடுந் நேரம் பயணிப்பதுண்டு. இகம் விட்டு பரம் நோக்கிப் பறப்பதற்கான சிறகுகளை அவனது வாசிப்பு அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவன் அந்த ஞான பிரம்மையில் மேகங்களுக்கு இடையேப் பறந்துக் கொண்டிருந்தான். யாரும் இல்லாத உலகில் தனிமையில் பறக்கும் சுகத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் வாசிப்பது பெரும் ஞானக்களஞ்சியம் என்பதை ஆழமாக, திடமாக நம்பினான். தனித்துவமிக்க கொள்கைகளை விளம்பி, அக்கொள்கைகளுக்கு நிகரான தத்துவங்களும் வாழ்வியல் கோட்பாடுகளும் உலகில் இதுவரை தோன்றவில்லை; யாரும் கூறியதில்லை; இதன்படி நடப்பவர்கள் வாழ்வின் முழுமையையும் பிறவிப்பயனையும் அடைந்துவிட்டார்கள் என்னும் முழுமை வாதங்களையும் முற்றுண்மைகளையும் அந்நூல் முன்வைத்தப் போது, அது தந்த அலாதியான சுகத்தில் பறந்து திரிந்தான். ஞானம் பெரும் போதையைத் தந்துக் கொண்டே இருந்தது. நாடி நரம்புகளை எல்லாம் கிளர்ச்சியுறச் செய்து புடைத்தெழ போதையைப் போல ஞானதிரவ்யத்தை அருந்திக் கொண்டே இருந்தான்.  அது தந்த பெரும் போதையில் திளைத்துக் கிடந்தான் ஞானத்தின் வடிவான ஞானவடிவன். ஏராளமானவர்களை குற்றவாளிகளாக விதித்துத் தீர்ப்பு அளித்துக் கொண்டே வந்தான். அவன் ஞானத்தின் முழுமைக்கான சில அடையாளங்களையும், தோற்றங்களையும் மனிதருக்கு கட்டமைத்துக் கொண்டு இருந்தான் அந்நாட்களில். அத்தோடு நின்று விடாமல் உண்மையான மனிதருக்கான இலக்கணங்களையும் வகுத்துக் கொண்டான். அவையெல்லாவற்றையும் அந்த ஞானத்தின் ஊற்றுக்கண்ணான நூல் அளித்துக் கொண்டு இருந்தது அவனுக்கு. பலக் குழுக்கள் அவனுடைய வரையறைக்குள் நிற்கவில்லை. அவன் வரையறுத்த அடையாளங்களுக்குள்ளும், சட்டத்தொகுப்புகளுக்குள்ளும் ஒடுங்காதவர்களை அவன் விதித்துக் கொண்டே வந்தான். அவன் பலருக்கும் மரணத் தண்டனை விதித்துக் கொண்டே இருந்தான். 


photo: pixabay.com

பிறருக்கு மரண தண்டனை விதிப்பதில் தான் என்னே களியின்பம். யார் என்னை கேள்விக் கேட்க இருக்கிறார்கள்? நான் வாசித்துக் கொண்டிருக்கும் ஞானப்பழமான நூலுக்கு நிகர் உலகில் இல்லை என அவன் தன் மார்பில் தட்டிக்கொண்டு சுயம் மெச்சிக் கொண்டான். அவனுக்குள் நம்பிக்கையின்  புது இரத்தம் பாயந்தோடிக்கொண்டிருந்தது. அது நரம்புகளுக்குள் புகுந்து குருதியைக் கொதிக்க வைத்தது. முழு உண்மையை அறிபவர்கள் விரல்களால் எண்ணிவிடக்கூடியவர்களே. அவர்களில் ஒருவனாக மாறுவதில் அடங்கி இருக்கும் அலாதி சுகம் வேறெதிலும் இல்லை என்பதை நினைத்து நினைத்து புளகாங்கிதம் அடைந்தான். அது அவனுக்குள் சுய மமதையின் அளவுகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தது.  

அரசர்களும் பேரரசர்களும் தனக்கு அடிபணியாத அரசுகளை வென்று, எதிரிகளின் வெட்டி வீழ்த்தி, அனைத்தையும் தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வருவது போல, தன்னுடைய ஞானத்தின் சர்வாதிகாரத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்னும் அதிகாரத் திமிர்ப்பில் திளைத்தான். உலகமானது அறிவின்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும், அறியாமையை அகற்றி ஞானத்தின் ஆட்சியை ஏற்படுத்தி அனைவரையும் ஞானத்திற்கு அடிமையாக்கி விட வேண்டும் என்றும் ஞானவடிவன், இதயத்தில் எழுப்பிக் கொண்ட அதிகார முழுமையின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு கர்ஜித்தான். 

ஞானவெறியால் பீடிக்கப்பட்டவனாக, தலையில் பித்துப் பிடித்ததுபோல் ஆசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு ஆணைகளைப் பிறப்பிக்கத் தொடங்கினான். வார்த்தைகளைக் குறைத்து சமிக்ஞைகளால் அதிகாரத்தை உறுதிப் படுத்த எத்தனித்துக் கொண்டிருந்தான். ஞானவடிவன் தனது ஆடை அலங்காரங்களை மாற்றி அமைக்கத் தொடங்கினான். அவை அதிகாரங்களை வெளிப்படுத்தும் அதே வேளையில் ஞானத்தை பிரகடனப்படுத்துவனவாகவும் அமைய வேண்டும் என்பதில் உன்னிப்புடன் செயல்பட்டான். ஞானவடிவன் ஞானத்தை வெளிப்படுத்தும் ஆடையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு அணிந்து கொண்டான். ஆடைகள், அம்மணத்தை மட்டுமல்ல மறைக்க வேண்டியது, அது உள்ளிருக்கும் ஞானத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஆடை உள்ளத்தில் குடிக்கொள்ளும் அசிங்கங்களை மறைத்துக் காக்கும் என்பதை நன்குணர்ந்தவனாய் ஆடை ஆலங்காரம் செய்து கொண்டான்.  சிகை அலங்காரம், உடல் அலங்காரம். நடப்பில் மாற்றம், பிறரைப் பார்க்கும் போது, அவர்களுக்குள் ஞானம் ததும்பிச் செல்ல வேண்டும் என்னும் பார்வைகள் அனைத்தும் கச்சிதமாகப் பொருந்துகிறதா என சுய ஆய்வு செய்துப் பார்த்துக் கொண்டான். நடக்கும் போது பூமித்தாய்க்கு வலிக்கக் கூடாது என்னும் ஆன்மீகத்தின் உச்சம் வெளிப்பட்டு கால்களை மிக லாவகமாக எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தான். ஆஹா எவ்வளவு அழகாக இருக்கிறது என்னைப் பார்க்க, என்று தன்னைப் பற்றிய பெருமிதத்தில் மூழ்கி விட்டான். ஞானம் கொடுத்த அதிகாரம் அவனுக்குள் புகுந்தது. அதிகாரம், ஞானம் கொடுத்த போதையை இரட்டிப்பாக்கி, முழு மயக்கத்தை நோக்கி அவனது உணர்வுகள் பயணம் செய்து கொண்டிருந்தது. தனது ஞானதிருஷ்டிக்கு ஈடு இணை இல்லை என்பதை இப்போது அவனுக்கு உணர்த்த யாரும் தேவைப்படவில்லை. உலகம் போலிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஞானமும் அதிகாரமும் கொடுத்த போதையில் உளறல்களாய் போதித்துக் கொண்டிருந்தான். மறு கேள்விகள் கேட்கப்படாதவாறு அவன் அதீத ஆற்றல் படைத்தவனாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்து நினைத்து ஆனந்த கயத்தில் மூழ்கி மூழ்கி எழும்பிக் கொண்டிருந்தான். உப்புநீரும் நன்னீரும் கலந்த நீர் போல ஞானமும் அதிகாரமும் அவன் உடலின் திசுக்களுக்குள் நுழைந்து உசுப்பேற்றிக் கொண்டிருந்தது.

ஞானவடிவன் தான் உண்ட ஞானப்பழத்தின் விதைகளை தன் நண்பர்களின் மூளைகளில் விதைக்கத் தொடங்கினான். சிலர் ஏற்றனர் பலர் புறக்கணித்தனர். புறக்கணித்தவர்கள் மீது வெறுப்பை கொப்பளிக்கத் தொடக்தினான். ‘வாழ்வியல் விளம்புகிறேன், திருந்தா முண்டங்களாக இருக்கிறார்களே’ என்னும் ஆதங்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. அவர்கள் வாழ தகுதியற்றவர்கள் எனக் கூறினான். நம்பிய சிலர் அவனோடு சேர்ந்து தலையசைக்க ஆரம்பித்தார்கள். பலரை அழித்தால் சிலர் சுகமாக வாழலாம் என்னும் பொருளாதார மனநிலை அவர்களுக்கு இருந்திருக்கலாம். அதைப்பற்றி அவன் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. அவர்களை வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கினேன். அவர்கள் அவன் விழுங்கிய ஞானப்பழத்தின் உண்மைகளை பரப்பிட தளம் அமைத்துக் கொடுத்தார்கள். ஞானவடிவன் பேச பெரிய பெரிய மேடைகளை அமைத்துக் கொடுத்தார்கள். உடையலங்காரம், சிகை அலங்காரம், உண்பதற்கு உயர் தர சைவ உணவுகள், தங்குவதற்கு ஏழை தங்கும் வீட்டின் தோற்றம் தரும் விலைமதிப்பு மிக்க வீடு, சன்யாச தோற்றம் தரும் ஓட்டைகள் போடப்பட்ட கிழிக்கப்பட்ட உயர்தர ஆடை எல்லாம் அவர்கள் அமைத்துக் கொடுத்தார்கள். அவன் நம்பியவை, அவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அவை தாங்கள் பணக்காரர்கள் ஆவதற்கு பெரிதும் உதவிக் கொண்டு இருந்தன. கொள்கைகளை ஏற்காமல் விமர்சிப்பவர்கள் இத்தேசத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்ற முழக்கம் அவர்களுக்கு வெகுவாகப் பிடித்துப் போய் விட்டது. அவனுக்கு சிஷ்ய கணங்கள் பெருகின. அவர்களுக்கு வேறுவிதமான அலங்காரங்களைக் கொடுக்க ஆரம்பித்தேன். தன்னைப் போன்று அவர்கள் ஆடை அணியக்கூடாது என்பதில் ஞானவடிவன் குறியாய் இருந்தான். அவர்கள் அவன் வாசித்த நூலுக்கு அடிமைகளாய் மாறி வருவதில் பெரும் ஆனந்தம் அடைந்தான்.  அவர்களை வைத்து, இப்போது நிறைய வேலைகளைச் செய்ய முடிகிறது. குறிப்பாக, அவனது சிந்தனைகளை நம்பாமல் அவனை அவமதித்தவர்களை அழித்தொழிக்க அவர்கள் பெரிதும் பயன்பட்டார்கள். அவர்கள் இரவும் பகலும் அதற்கென உழைத்தார்கள். பகுத்தறிவற்ற மூளைச்சலவை. அதுவல்லவா சுகம், அதுவல்லவா பொருளாதார ஏற்றம் தரும் மகோன்னதம்.

ஆ... பகுத்தறிவு. இதை முன்வைத்தவன் யார்? அவனை அழிக்க வேண்டும். அவனுடைய குலப்பெருமையை அலசி ஆராய வேண்டும். அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட வேண்டும். அறிவு ஜீவிகள், சமூக சீர்த்திருத்த வாதிகள், மாற்றத்திற்கான விதைகளை விதைப்பவர்கள், சுய அறிவை போதிக்கும் வித்தகர்கள், மானம் உயிரை விட முக்கியம் என கூறித்திரிபவர்கள், அடிமைகள் அல்ல தனிமனிதர்களே அவசியம் என்பவர்கள், சுயபுத்தி என்னும் ஞானம் போதிப்பவர்கள், இவர்கள் இந்நாட்டுக்கு உகந்தவர்கள் அல்ல. ‘பகுத்தறிவு,’ ‘சுயபுத்தி,’ ‘தேர்ந்து தெளிதல்,’ ‘தீர விசாரித்து ஆய்ந்தறிதல்,’ ‘உன்னை அறிவாய்’ போன்றவை கொடுஞ்சொற்கள். இவை நாட்டையும் நாட்டுப் பற்றாளர்களையும் கெடுத்து விடும். இவர்கள் விஷ வித்துக்கள், முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டும். அவர்கள் வளர்ந்திருந்தால், இனி வளர முடியாதவாறு வேரிலே நஞ்சு வைத்து முழு மரத்தையும் வீழ்த்தி விட வேண்டும். இதற்கான விஷங்களை அவன் மீது நம்பிக்கை வைத்தவர்களின் வாய்களிலும், கைகளிலும், கால்களிலும தடவி விட்டான். அவர்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் நாகத்தன் கொடுந்நஞ்சு. தீண்டினாலே உடல் பொசுங்கி விடும்.

அறிவின் முழுமையைப் பழம் என்றான் அவன். அதை அப்படியே விழுங்கி விட்டு அதன் விதைகளை விழுங்கச் சொல்லி அவர்களுக்கும் கொடுத்தான். அடிமைகள் அதை அப்படியே விழுங்கி விட்டு மனிதத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள். பலர் அழிந்து கொண்டிருந்த போது ‘ஒருமை‘ என்னும் மீமெய்யியல் தோற்றமைவு ஆதீத ஆற்றல் படைத்ததாய் அவனுக்குள் உருப்பெற்றுக் கொண்டிருந்தது. பன்மையின் வடிவங்களை உள்வாங்கிக் கொண்டு ஒருமையை வளர்த்தெடுக்கத் துடித்துக் கொண்டிருந்தான்.  வித்தியாசங்கள் அனைத்தையும் விழுங்கிக் கொண்டே வந்தான். அவன் விழுங்கியவை செரித்து, ஒருமை அவனுக்குள் அசுர வலிமையுடன் வளர்ந்தது. 

விழுங்குவதில் சில செரிக்காமல் வயிற்றுப் பிரச்சனை செய்ய ஆரம்பித்திருக்கிறது இப்போது. அவன் ஏதோ தந்திரம் செய்கிறான் எனச் சொல்லி சில விஷமிகள் பகுத்தறிவு என்னும் கசப்பும் இனிப்பும் கலந்த பழத்தை அவன் வயிற்றுக்குள் செலுத்த ஆரம்பித்தனர். அவை செரிக்கவில்லை. அது அவனுடைய நாவைக் குளறச் செய்தது. ஞானவிதைகளுக்கிடையே களைகளை சிஷ்ய கணங்கள் மேல் விதைக்கும் அவலம் அவனுக்குள் நடந்து கொண்டிருந்தது. அணிகள் மத்தியில் மூளைக்குழப்பத்தின் சலனங்கள் ஏற்படலாயிற்று. அவர்கள் மத்தியில் களைகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. அவைப் பகுத்தறிவாக வந்து விழுந்தன. ஞானப்பழத்தை கிழித்துப் பார்க்க வேண்டும் என்று கூறி, அவ்விதைகள் அவர்கள் கையில் கத்திகளாாக மாறின. அப்பழம் வாழ்விற்கு உகந்ததா இல்லை அது வெறும் ஏமாற்று வித்தையா என்பதை ஆராய ஆரம்பித்தார்கள். அதை முழுமையாக விழுங்கி விட வேண்டாம், ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கியாக வேண்டும் என்னும் தீர்மானத்திற்கு அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். மூளைச்சலவையைத் தடுக்கும் மந்திரக் கருவியாக அது மாறியது.  

ஆபத்தை உணர்ந்தார்கள் அவனோடு இருந்தவர்கள். ஞானவடிவனை சரிசெய்ய வேண்டியதை கடமையாக ஏற்று வெறுப்பின் மீது அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் அவனுக்கு சிகிட்சைக் கொடுக்க ஆரம்பித்தனர்.  பொதுவெளியில் அவன் இனிப் பேசக்கூடாது என்பதை தீர்மானித்த அவர்கள், அவன் வாய்த்திறக்காதப்படி பார்த்துக் கொண்டார்கள். அவன் இப்போது பேசுவதில்லை. ஆகாயத்தில் பறந்து திரிந்தவன், ஓலைக்குடிசை ஒன்றில் கஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான். அக்குடும்பத்தின் ஆண்மக்கள் அனைவரும், ஞானப்பழத்தால் கவரப்பட்டு, கொலைவெறியர்களாக மாறி, வித்தியாசமானவர்களைக் கொல்லும் போது கூட்டத்தில் அழிந்து போனார்கள். அவர்களின் நிழலுருவங்கள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன. ஞானவடிவன் குடித்த கஞ்சியில் இரத்தத்தின் நெடி அடித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்