புறக்கணிப்புகளை மென்று விட்டு, அவை தானாக செரித்து விடும் என்னும் மனநிலையை அடைய பெரும் தவம் இருக்க வேண்டும் போல இருக்கிறது. நேசமாய் பிறர் முகம் நோக்குகையில் வெட்டெனத் திரும்பும் முகங்களை, கடந்து சென்று தலைநிமிர்த்து நெஞ்சுரத்துடன் முன்னோக்கி நகர பாதங்களுக்குள் பேராற்றல் புகுத்த வேண்டியிருக்கிறது. முகமுகமாய் வந்தும் கண்களை வேறொன்றில் மையம் கொள்ள வைத்து கடந்து செல்லும் விழிகளில் இரக்கம் கிடைக்கவில்லை என்னும் உணர்வு பேரிடியாய் நெஞ்சில் இறங்க, நரம்புகள் தளர்கையில் மூளைக்குள் புது சிந்தனைப் புகுத்தி சிலிர்த்தெழ வைத்தல் அவ்வளவு இலகுவாய் இல்லை.
எதிரிகள் பெருகிவிட்டார்களா இல்லை நான் என்னும் ஆணவம் வீரியத்துடன் இன்றும் சிந்தனைகளை ஆண்டு கொண்டிருப்பதால் எனக்குள் ஏற்பட்ட சுய கழிவிரக்கமா? தெரியவில்லை. எல்லாருடைய மதிப்பையும் பெற்று விமர்சனங்களில்லா வாழ்வு கைகூட வேண்டும் என்னும் மேட்டிமை எண்ணம் ஆட்டிப் படைப்பதால் ஏற்பட்ட சிக்கல்களா என்பதை ஆராய்ந்து தெளிய எத்தனித்துக் கொண்டிருக்கிறேன். சாதாராண மனிதன் என்னும் இயல்பு வாழ்வை சொந்தமாக்கி, அனைத்தையும் எளிய மனிதர்களைப் போல தாண்டிச் செல்லும் பக்குவம் என்று தான் கைகூடுமோ?
வெறுமையை ஏற்றல் எளிதல்ல. நிரம்பி வழியும் ஆணவத்தை மூளை என்னும் பாத்திரத்தில் சுமந்து திரிவதால், அதற்குள் எதுவும் எளிதில் நுழையாமல் போகும் துர்பாக்கியம் அன்றாடம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பாத்திரம் வெறுமையாக்க முயல்கையில், நினைவுகளின் வலிகளும், சுயம் ஏமாற்றும் வஞ்சனையின் கதைகளும் தடை போட முயல்கின்றன. அவற்றை அகற்றி கரடுகள் களைந்து பாத்திரம் பளிச்சென ஜொலித்திடச் செய்யும், ஞானத்தின் பேரொளிச் சுடரை குழந்தையிடமிருந்து கற்றுக் கொள்ளும் கலையை அன்றாடம் சொந்தமாக்க முயல்கிறேன். வஞ்சனைகள் என்று ஏதுமில்லை, அவை வாழ்வை நகர்த்தும் அன்றாட இயல்பான ஊடாடல்களிலிருந்து மூளை சேகரித்துக் கொள்ளும் எச்சங்கள் என்பதை தேர்ந்து தெளிய குழந்தையின் ஞானம் கைகூட வேண்டும். அன்றாடம் சந்திக்கும் மனிதர்களோடும் நிகழ்வுகளோடும் உறவாடல்கள் புரிந்த போது கைவரிசை காட்டிய உணர்ச்சிகளின் அத்துமீறல்கள் அவை என்பதை கற்றுத் தெளிந்திட குழந்தையின் மாசறு நிலை சொந்தமாக்கிட வேண்டும். அழுதும், கோபித்தும், புலம்பியும், அவற்றை அக்கணத்திலேயே முழுமையாக களைந்திருந்தால், இன்று நெஞ்சம் வஞ்சம் என பெயர் சூட்டிக் கொண்டு பிறர் மீது பழி சுமத்தும் அசாதாரண இயல்பை சொந்தமாக்கியிருக்காது. அப்படி இருந்திருப்பின் என் பாத்திரம் வெறுமையாய் இருந்திருக்கும். அதற்குள் எச்சங்கள் குடிகொண்டு, வாழ்க்கைப் பாடம் என்னும் போர்வையில் பாத்திரத்தை நிரப்பி இருக்காது. வஞ்சம் என்னும் பெயரில் அவை என்னை வஞ்சம் தீர்த்துக் கொண்டிருக்கிறது. பழிகளை சுமந்து இதயத்தை கனம் மிக்கதாக்கி, எளிமையான வாழ்வை என்னை விட்டு நெடும் தூரமாய் நகரச் செய்கிறது.
புதுவண்ணங்கள் கைகூட வேண்டும்; பது மொழிச் சிதறல்கள் சொந்தமாக வேண்டும்; ஆளுமையின் புது தோற்றங்களுடனும், அவற்றை வெளிப்படுத்தும் விழிகளுடனும் உறவாடகள் புரிய வேண்டும்; வாழ்வியல் ஞானமென்பது அறியாமையில் பாத்திரம் சுமந்து நடப்பது என்னும் விவேகம் நெஞ்சில் நிரந்தரம் வசித்திட வேண்டும்; புதுச் சிந்தனைகள், புதுத் தொழில் நுட்பங்கள், தலைமுறைகளின் மாற்றங்கள், மாறிவரும் மனநிலைகள் புது வடிவில் மதிப்புகளையும், கீழ்ப்படிதல்களையும், ஒத்துழைப்பையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை இயல்பாக்கிட குழந்தையின் கரம் பற்றி கையில் வெறுமையின் பாத்திரம் சுமந்து நடக்க பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
0 கருத்துகள்