நான், நான் மட்டுமே ரசிக்கிறேன் | அ. சந்தோஷ்

வெளியினின்று உள்புகும் ஆசைகளை துறக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். துறக்க வேண்டும் என்னும் சிந்தனையின் மேல் வேறு பல வந்து படிந்து அதை புறந்தள்ளி விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாழ்வாக்க வேண்டியதை நெஞ்சில் சுமந்து நடப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அதற்கான பெரும் முயற்சிகளை நான் எடுக்க வேண்டியிருக்கிறது. நானல்லாதனவாக என்னை மாற்றும் புறவெளி ஆசைகள் உள் நுழையாமல் தடுப்பது ஒன்றே நிரந்தர ஆசையாக மாறி அதில் உய்வதற்கான முயற்சிகளை நிரந்தரம் மேற்கொள்கிறேன். உள்புகும் ஆசைகள் ஒருவிதமான ஏமாற்று வித்தைகள் என்பதை நான் கேட்டிருந்தாலும் இன்று அவை எந்த அளவு இதயத்தை வாட்டி வதைக்கின்றன என்பதை அறியும் போது முற்றிலும் துறந்தாக வேண்டும் என்னும் முடிவுக்கு வந்து விட்டேன். புற ஆசைகள் என்பவை நானல்லாத வேறொன்றை அணிவதற்கான முயற்சி என்றே இதயம் உரக்கச் சொல்கிறது. புற ஆசைகளை ஏற்பதால், பொறாமை எளிதல் தொற்றிக் கொள்கிறது. வெறுப்பும் பழி தீர்க்கும் எண்ணங்களும் இதயத்தைக் கவ்விக் கொள்கின்றன. உள்நுழையும் ஆசைகளிலிருந்து நான் வெளியேறிக் கொண்டிருக்கும் போது, இன்னொருவர் வளர்கிறார் என்னும் செய்தி நெஞ்சில் விழ, மீண்டும் பொறாமையும் வஞ்சகமும் நெஞ்சில் எழுகிறது. மீண்டும் நான் தன்னலத்தின் சிறையில் விழுந்து அடைபடுகிறேன். வேண்டுமென்றே சிறைக்குள் நுழைந்து விடுகிறேன். 

photo: pixabay.com

அதன் பூட்டுகளை உடைத்து வெளியே வர பலவிதமான வித்தைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. புத்திக்கு வேலை கொடுக்கும் புத்தகங்களை வாசிக்க  வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், இகம் மறக்கச் செய்து காற்றில் மிதக்க வைக்கும் இசையில் மூழ்க வேண்டியிருக்கிறது. நெஞ்சம் பெரும் அழுத்தத்தில் இருக்கும் போது இசை தரும் போதை பெரிதாக இருக்கிறது. அதுவும் இல்லையென்றால், பக்கம் பக்கமாக எழுத வேண்டியிருக்கிறது. எழுதுவதில் அடங்கியிருக்கும் வலிகள் சிறையின் பூட்டுகளை உடைக்கும் ஆற்றல் படைத்தனவாய் இருக்கின்றன. தனக்குள் ஒன்றாய் இருந்த ஒன்றை குழந்தையாய்  தன் அருகில் கிடத்திப் பார்க்கும் அனுபவம். தன்னுள் ஒன்றாய் இருந்ததைப் பிரிவதில் தாய் அனுபவிக்கும் வலிகளை எழுத்துக்களும் தருகின்றன. எழுத்துக்கள் உள் நுழையும் ஆசைகள் எனும் விலங்குகளை தகர்த்தெறியும் ஆயுதமாக மட்டுமல்ல, சிறகுகளை முளைக்கச் செய்யும் தேவதைகளாகவும் வருகின்றன. 

உள்புகும் ஆசைகள் துறந்து, யதார்த்தமான உலகில் என்னையே நான் அடையாளம் காண முயல்கிறேன். அதுவே உண்மையான தன்னலம். யாரும் நுழைந்து கெடுக்க இயலா ஆழ்மனதின் பேரின்பக் கடல். அதற்குள் வேறு யாரும் நுழைய முடியாது. காரணம் அது எனக்கு மட்டுமானது. அதை யாரும் காண வேண்டும் என்னும் அவசியமில்லை. நான் என்னையே காணும் அதிசய உலகம் அது. அதில் நான் என்னையே ரசிக்கும் அதீத கலைகளின் கலவை. விளக்க முயன்றால், அது வேறொருவருக்கு சொந்தமாகி விடும் என்னும் அச்சத்தால் அதை என்னுடையதாக மட்டும் பத்திரமாய் பாதுகாக்கும் விந்தைமிகு உலகம். அதை யாரும் ரசிக்கவில்லை, யாரும் வருணிக்கவில்லை, யாரும் புகழவில்லை, யாரும் அதற்கு போர்வைகள் போர்த்தவில்லை, பூச்செண்டுகள் அணிவிக்கவில்லை, தமிழ் இலக்கியத்தின் அரும்பெருஞ் சொற்கள் அனைத்தையும் கோர்வையாக்கி கவிதைச்சரங்களால் புகழாரம் சூட்டவில்லை. என்னுடைய ரசனைகளை அவர்கள் கவர்ந்தெடுத்து  என்னை தங்களுடைய கைதியாக மாற்றும் சூழ்ச்சிமிகு வியூகத்திற்குள் நான் விழாமலிருக்க அதை பத்திரமாக காத்து வருகிறேன்.

இருளல்ல அது, பேரொளியின் பெருஞ்சுடர். புற உலகித்தனருக்கு அது காரிருளின் கறுப்புக் கூடாரமாகத்தான் ஒருவேளை காட்சியளிக்கலாம். ஆனால் எனக்கோ அது உள்ளும் புறமும் ஒளிர்விக்கும் மெய்நிகர் ஒளிக்கலவை. அதில் வண்ணங்களுக்கு எந்தக் குறையுமில்லை. வண்ணங்களின் கலவைகள் விசித்திரமான ஓவியங்களை எனக்குள் தீட்டிக் கொண்டிருந்தன. அக்கலவைகளைப் பற்றி நான் அறிவேன். நான் மட்டும் அறிவேன். புற உலகின் ஆசைகள் எனக்குள் கறுப்பு வெள்ளைகளைப் புகுத்தி அதையே ரசிக்கும் படி வைத்திருந்தன. கறுப்பு - வெள்ளை அதுவே வாழ்வின் நியதி எனும் கற்பிதங்களை நான் நீண்ட காலம் சுமந்து திரிந்தேன். கறுப்பு-வெள்ளைகளைத் தாண்டி ரசிப்பதும், வாழ்வதும் பெரும் தீது என புத்திக்குள் யாரோ சித்தாத்தங்களை புகுத்தி வைத்திருந்தார்கள். இப்போது எல்லாம் வண்ணமயமாய்க் கிடக்கின்றன. வானவில்லின் நிறங்களுக்குள் ஒளிபாய்ச்சி மினுங்கச் செய்யும் ஒளிக்கலவை. நான் ரசித்தேன். 

எனக்கென இருக்கும் உலகினுள் நான் புத்தகங்களை வாசித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவை தரும் சுகத்தினுள் திளைத்துக் கிடந்தேன். யாருக்காகவும் நான் வாசிக்கவில்லை; யாருக்கும் போதனை செய்யவும் நான் வாசிக்கவில்லை; யாரையும் வசீகரிக்கவும் நான் வாசிக்கவில்லை; நூல்களை எழுதிடவும் நான் வாசிக்கவில்லை; பெரும் விவாதங்களில் பங்கேற்று எனது அறிவின் விசாலத்தை பலா்முன் நிறுவிடவும் நான் வாசிக்கவில்லை; எதிரிகள் முன் நெஞ்ம் நிமிர்த்து, ஞானக்களஞ்சியங்களை விளம்பவும் நான் வாசிக்கவில்லை; அதிலிருந்து வரும் தத்துவ முத்துக்களை கதைகள் என்னும் வசீகர மருந்தில் பொதிந்து அச்சேற்றிப் பிரசுரிக்கவும் நான் வாசிக்கவில்லை; எதிர்காலத்தில் பெரும் பேச்சாளனாக மாற வேண்டும் என்பதற்காகவும் நான் வாசிக்கவில்லை; எதிரிகளை வாயடைக்கச் செய்யும் வாதங்களை முன்வைக்கவும் நான் வாசிக்கவில்லை; உலகின் ஞானசூன்யங்களை எல்லாம் துடைத்தெறிந்து ஞான வெள்ளத்தால் நிரப்பவும் நான் வாசிக்கவில்லை; மனித மனங்களின் உள் மனக் கிடக்கைகளை ஆராய்ந்து அறியும் கருவிகளை சொந்தமாக்கவும் நான் வாசிக்கவில்லை; அக்கருவிகளால் மனிதர்களின் மனநோய்களை தீர்ப்பதற்காகவும் நான் வாசிக்கவில்லை; பெரும் பட்டங்களை பெற்று, இறந்த பின் கல்லறைகளில் பெயர்களுக்குப் பின்னால் எழுதி வைக்கவும் நான் வாசிக்கவில்லை. வாசிக்கும் நூலின் அட்டையை நான் ரசிக்கிறேன், நானே ரசிக்கிறேன், நான் மட்டும். அதன் வாசனையை நான் ரசிக்கிறேன், நானே ரசிக்கிறேன், நான் மட்டும். அதன் வார்த்தைக் கோர்வைகளை ரசிக்கிறேன். அதன் அலங்காரங்களை நான் ரசிக்கிறேன். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்னும் உள்ளுணர்வு தரும் சுகத்திற்காக வாசிக்கிறன். 

எனக்கென இருக்கும் உலகினுள் நான் சொந்தம் கொண்டாடும் என்னை சொந்தம் கொண்டாடும் உறவுகளுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது தரும் ரசனை பேரானந்தத்தை இயத்திற்கு தருகிறது. அதில் போலிகள் இல்லை என்பது நெஞ்சில் மாமழை பொழியச் செய்கிறது. வஞ்சகங்கள் இல்லா, சுயநலங்கள் இல்லா அன்பின் உறவுகள் தரும் அகமகிழ்வினுக்கு நிகர் ஏதும் இல்லை. தேடல்கள் இல்லாமல் நேர்மையாய் வந்து ஒட்டிய உறவுகள் அவை. பெருங்கூட்டம் அல்ல அது, சிறிய வட்டம் அது. அதன் மத்தியில் இருக்கும் போது, பேரரசின் சிம்மாசனத்தில் தலைநிமிர்த்து இருப்பதாக உணர்கிறேன்.  போலிகள் இல்லாத நிஜமான நேரிய உறவுகளை நான் ரசிக்கிறேன், நான் மட்டுமே ரசிக்கிறேன். 

நான் செய்யும் வேலைகளை நான் ரசிக்கிறேன். அவைகள் தரும் சுகங்கள் அதீதமானது. கடினமான உழைப்பு தரும் சுகம் அலாதியானது. தண்ணீர் ஊற்றும் போது வாழை மரம் விடும் இலைகள் தரும் சுகம் பெரிது. அவற்றின் செழிப்பு எனக்குள் மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. அது இயல்பாக என்னோடு வந்து சேர்ந்து கொள்கிறது. நெருடல்கள் இல்லா வேலைகளாய் அவை நீள்கின்றன.

நான், நான் மட்டுமே ரசிக்கிறேன். அதில் வாழ்ந்திட நான் நாளும் முயல்கிறேன். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்