புலனத்தில் வாழ்ந்த காதல் | அ. சந்தோஷ்

இருநூறுக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் அவன் அனுப்பியிருந்ததை புலனத்தில் பார்த்து அவள் அதிர்ந்து போனாள். அதில் ஐம்பதுக்கும்  மேற்பட்ட செய்திகள் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றையும் சேர்த்து புலனம் மொத்த எண்ணிக்கையை காட்டியவாறு பல்லிளித்தது. கல்லூரியிலிருந்து சுற்றுலா சென்றவள் இரவு பதினொன்று மணிக்குத்தான் வந்தாள். வழக்கமாக அவள் குறுஞ்செய்திகள் வழியாக அவனோடு நீண்ட நேரம் அளவளாவுவது உண்டு. நேற்றும் அவள், அதைச் செய்யத் தொடங்கினாள். ஆனால், உடல் சோர்வின் அசதியால் தூங்கி விட்டாள். காலையில் அவள் சாதாரணமாகத் தான் எழுந்தாள். அவனைப் பற்றிய நினைவுகள் மனதில் உண்டு என்பதால், “காலை வணக்கம்” என்னும் குறுஞ்செய்தியை அனுப்புவதற்காக எடுத்தப் போது தான், இதைப் பார்த்தாள். ஒவ்வொன்றையும் வாசிக்க வாசிக்க அவளுடயை இதயம் நிதானமிழந்து வேகமாய்த் துடிக்க ஆரம்பித்தது. “நீ என்னை அன்பு செய்யல,” “எல்லாரும் என்னை வெறுக்கிறாங்க,” “யாருக்கும் நான் வேண்டாம்,” “சாகத் தோணுது,” “நீயும் என்ன விட்டுப் போற,” “நீ நல்லா ஜாலியாக இருக்கிற,” “உனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் உண்டு,” “உனக்கு பாய் பிரண்ட்ஸ் கூட நிறைய பேர் இருக்கிறாங்க,” “ஸ்டேட்ஸ்ல நிறைய பேரு உன் கூட சேர்ந்து நிக்குறாங்க,” “புதிய ப்ரண்ட்ஸ் உனக்குக் கிடைச்சிருக்கும்,” “உன் பக்கத்துல இருக்கிறது யாரு?” “அவன் அவ்வளவு நெருக்கமா நிக்குறான்,” “This message is deleted,” “.” “நீயும் போயாச்சு இல்ல என்ன விட்டு” “நீ போனா எனக்கென யாரும் இல்ல” “பிறகு நான் என்ன செய்ய” திரும்பவும் “This message is deleted”  என்று, முகநூலின் பக்கங்கள் போல் முடிவிலியாய் செய்திகள் போய்க்கொண்டிருந்தன. அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. தான் நினைக்காதவற்றை எல்லாம் அவன் குற்றச்சாட்டுகளாக வைத்தப் போது அவளால் தாங்க முடியவில்லை. 

அவள் நிலைமைையை சரிசெய்யும் நோக்குடன், “காலை வணக்கம்,” “ஐ லவ் யு” என்று குறுஞ்செய்திகளை அனுப்பினாள். அவன் பார்த்ததாகத் தோன்றவில்லை. காதலித்து வெகுநாட்கள் ஆகவில்லை, இத்தோடு  இருபது நாட்கள்தான் முடிவடைகின்றன.  அவள் தன் காலைக் கடன்களை முடித்து விட்டுக் கல்லூரிக்குச் செல்வதற்காகத் தயாராகத் தொடங்கினாள். மனதில் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது. கல்லூரி வாழ்க்கை அதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சி, சுதந்திர உணர்வு ஆகியவை அவளுக்குள் வேறுபட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. தற்போது ஏதோ சிறைக்குள் நுழைந்துவிட்டதான உணர்வு அவளுக்குள் உருவாகத் தொடங்கியது. துரிதமாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, காலை உணவையும், அத்தோடு அலைபேசியையும் அருகில் வைத்தாள். அலைபேசி நுகர்வையும், சிற்றுண்டி நுகர்வவைம் கோர்வையாக்கி உள்செலுத்தும் பன்முகத்திறனை அவள் சொந்தமாக்கியிருந்தாள். அவன் இரவு அனுப்பிய குறுஞ்செய்திகளை மறுபடியும் அவள் வாசிக்க எண்ணினாள். மறுகணம் ‘வேண்டாம்’ என நினைத்து, பழையதை மறந்து புதுமையில் புகுவோம் என புதுச்சிந்தனை புகுத்து முயன்றாள். ஆனால் அச்சிந்தனையில் அவளால் நீடிக்க முடியாமல், தொடுதிரையில் விரல்கள் பதிய அதில் மூழ்கி விட்டாள். 

சாதாரணமாக இருவரும் புலனம் வழியாக இரவுகளில் அளவளாவும் நேரங்களில் அவன் எழுப்பும் சில கேள்விகளை அவளால் புரிந்து கொள்ளவும் முடியவுமில்லை, அவற்றை ஜீரணிக்கவும் முடியவில்லை. அவனுடைய வார்த்தைகள் இவளுடைய எளிய உலகைச் சார்ந்ததாக பல வேளைகளில் இருந்ததில்லை. சாதாரணமாக, ஸ்டேட்டஸ் வைத்தால் நிறைய பேர் அதற்கு தங்களுடைய கருத்துக்களை எளிமையாக தெரிவிப்பார்கள். இல்லையென்றால் இமோஜி ஏதாவது அனுப்புவார்கள். நண்பர்கள் “இப்போ என்ன செய்யுற” “அடுத்தும் படிப்பா” போன்ற கேள்விகளை எதார்த்தமாகக்  கேட்பார்கள். “ஜாலியா இருடீ, கல்யாணம் இரண்டு வருஷம் தாண்டிப் பண்ணு” என்று இளங்கலை முடித்து திருமணம் செய்து கொண்ட பிள்ளைகள் உபதேசங்களும் அனுப்புவதுண்டு. அவ்வளவு இயல்பாக இருந்த இடத்தில், ஏதோ  போர்க்களத்தில் நுழைந்த உணர்வு காதல் செய்யத் தொடங்கிய பத்து நாட்களில் அவளுக்குத் தோன்றத் தொடங்கியது. “இந்த டிரெஸ்ல நீ நல்லாவே இல்ல” “ஏன் இப்படி அவங்க கூட எல்லாம் சேர்ந்து நிண்ணு போஸ் கொடுக்கிற” என் கிட்டச் சொல்லாம ஏன், கோயிலுக்குப் போன” “வெளியே ஏன் அதிகமா சுத்துற” போன்ற அவனுடைய கேள்விகள் எல்லாம் அவளுடைய சுதந்திரத்தை முற்றிலுமாக பறிப்பதாக அவள் உணர்ந்தது மட்டுமல்லாமல், அத்தகைய செய்திகள் எல்லாம் முற்றிலும் புதிதாக அவளுக்குப் பட்டது. துணி வாங்கச் சென்றால், அப்பா விலகி நின்று கொள்வார். அவளும் தம்பியும் வாங்கும் துணிகள் எதுவாக இருந்தாலும் எதையும் சொல்ல மாட்டார். காசு மட்டும் அதிகமாக ஆகக்கூடாது என்று சொல்லி விடுவார். மற்றப்படி ஆடைகளைப் பற்றி அவர் குறை சொல்வது இல்லை. எவ்வித ஆடை அணிதலையும் அவர் கண்டுக்கொள்வதில்லை. வெளியே போகும்போது அவள் விரும்பிய ஆடையை அணிந்துச் செல்வதை எதார்த்தமாக பழகியிருந்தாள். அது மட்டுமல்லாமல், நண்பர்கள் வீட்டுக்கோ, கோயிலுக்கோ சென்றால், அம்மாவிடம் சொன்னால் போதுமானதாக இருந்தது. நீண்ட நேரம் காணவில்லை என்றால் அவர் அலைபேசியில் தொடர்பு கொள்வது வழக்கம். இப்போது, அனைத்துக்கும் அனுமதி பெற வேண்டும் என்னும் இக்கட்டானச் சூழலில் சிக்கி விட்டதான உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது. 

“நான் செத்தா நீ நல்லா இருப்ப இல்ல” போன்ற கேள்விகளை, நண்பர்களுடன் சேர்ந்து நின்று எடுக்கும் போட்டோக்களுக்கான கமென்ட் ஆக அவன் போடுவதுண்டு. அதைப் பார்க்கும் போது, அம்மொழி அவளுக்கு வசப்படாமல், ஏதோ செய்தது. அவன் செத்தால் நான் நன்றாக இருப்பது எப்படி? அதற்குள் அடங்கியிருக்கும் உள்ளர்த்தம் என்ன? ஏன் அப்படி ஒருவர் சொல்ல வேண்டும் என்றெல்லாம் அவள் சிந்திக்கத் தொடங்கி இருந்தாள். அவனை அன்பு செய்யத்தானேச் செய்கிறேன், பிறகு எப்படி அவனுடைய சாவில் நான் மகிழ முடியும்? மகிழ்ச்சியாக இருக்கத்தானே அன்பு, சாவதற்கா?  போன்ற கேள்விகள் அவளுக்குள் எழும்ப ஆரம்பித்திருந்தன.

அதனுடைய தொடர்ச்சியாகத் தான் இன்று புலனத்தில் தென்பட்ட இச்செய்திகளும் என்று நினைத்தாள். புலனத்தில் வந்த செய்திகள் எல்லாம், நேரத்தையும் காட்டிக் கொண்டிருந்தன. கடைசியாக இவள் பத்து முப்பது மணிக்கு செய்தி அனுப்பி இருந்தாள். அதைத் தொடர்ந்து அவன், “ஹலோ,” “போயாச்சா,” “என்ன விட்டுப் போன இல்ல,” “என் கஷ்டங்கள் பற்றி உனக்கு எந்த கவலையும் இல்ல இல்ல,” நீயும் என்ன விட்டுப் போவ இல்ல,” “எல்லாரும் ஏமாத்துறாங்க,” “என்ன யாருக்கும் பிடிக்கல,” “நான் படிக்காத்தவன் இல்ல,” “உன்னப் போல டிகிரி எல்லாம் எனக்கு இல்ல,” “அதுதான் யாரும் என்ன அன்பு செய்யல,” “நீ மட்டுமாவது என் கூட இருப்பண்ணு நெனச்சேன்” “கடைசியில என்ன உனக்குப் பிடிக்கல” “உனக்கு எவ்வளவு ப்ரெண்ட்ஸ்,” “கம்பெனியில கரியில வேல பாக்குற என்ன யாரு லவ் பண்ணுவா,” “நீயும் என்ன விட்டுப் போறண்ணுத் தெரியும்,” “நான் எதுக்கு இனிமேல் இருக்கணும்” “நான் செத்தாத்தான் நல்லா இருக்கும்” “உனக்கும் ஹேப்பியா இருக்கலாம்” “நான் எல்லாருக்கும் தொந்தரவா போயிட்டேன்” “என்ன எல்லாரும் தொந்தரவாத்தான் பாக்குறாங்க” “நான் எதுக்கு இருக்கணும்” “சாகப்போறேன்” இந்த செய்திக்குப் பிறகு “This message is deleted” எனும் பத்துக்கும் மேலான தடயங்களை புலனம் எழுதிக் காட்டியது. 

photo: pixabay.com

அச்செய்திகளுக்குப் பிறகு, “நீ எனக்கு வேணும்” “நீ இல்லாம வேற யாரும் எனக்கு இல்ல” உன்னத்தான் நம்பியிருக்கேன்” “உன்ன ரொம்ப பிடிக்கும்” “நீயிண்ணா எனக்கு உயிரு.” பிறகு கொஞ்சலான நிறைய “செல்லம்” வழிதல்களும் செய்திகளாய் பதிந்திருந்தன, அதன் பின், “லவ் யூ” “உன்ன விட்டுட்டு ஒருக்காலும் போக மாட்டேன்,” “உன்ன என் உயிரப் போல பார்ப்பேன்,” “நாம, நாம மட்டுமான அற்புதமான ஒலகத்தில வாழலாம்” என்னும் வாக்குறுதிகளும் தொடர்ந்தன. செய்திகள் அத்தோடு முடிந்து விடவில்லை. மேலும் ஒருமணி நேரத்திற்குப் பின் தொடர்ந்திருந்தன. “எனக்குத் தூக்கமே வரல” “நீ விட்டுப் போறண்ணுதான் மனசு சொல்லுது” “என் பிரெண்ட் கூட அண்ணைக்குச் சொன்னான், ‘மச்சான் உனக்கு எவளும் செட் ஆகமாட்டாடா‘” “அது சரிதாண்ணு மனசு இப்போ சொல்லுது” “எனக்கு என்ன ஆச்சுண்ணு விசாரிக்கக் கூட உனக்குத் தோணலியே” “நான் தூங்குறேனா? வேற என்ன பண்ணுறேண்ணு கூட நீ கண்டுக்கவே இல்ல,” “இப்ப எல்லாம் தொடக்கத்தில இருந்த மாதிரி இல்ல,” “இப்போ நீ ரொம்ப மாறிட்ட,” “பழகப்பழகப் பாலும் புளிக்கும் இல்ல,” “இப்போ நான் வேண்டாதவன் ஆயிட்டேன்,” “நான் எதுக்கு உயிரோட இருக்கணும்,” “நான் இல்லண்ணா நீ நல்லாயிருப்ப இல்ல,” “உன்ன நல்ல இடத்தில கல்யமாணம் செஞ்சு வெச்சிருப்பாங்க இல்,ல”  “நான்தான் இடையில வந்து உன் வாழக்கையைக் கெடுக்கிறேன் போல” “நான் இனி உனக்கு வேண்டாம்,” “உனக்குண்ணு மட்டுமில்ல இந்த உலக்ததில இனி யாருக்கும் நான் இனி வேண்டாம்,” “ஒழுங்க ஒரு பொண்ண கூட லவ் செய்ய முடியாதா நான் எதுக்கு உயிரோட இருக்கணும்?,” “நான் சாகட்டுமா?,” “சாவுறேன் என்ன...,” “நீ நல்ல ஹேப்பியா இரு,” “இனி உனக்கு நான் தொந்தரவு தர மாட்டேன்,” “எல்லாத்துக்கும் மன்னிப்பு கேக்குறேன். இனி நான் உன் வாழ்க்கையில வரமாட்டேன்.  உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தினே சாரி... இனி உன்ன தொந்தரவு பண்ணவே மாட்டேன்.. நான் போறேன்... டா, டா...”   “This message is deleted” என்று தொடர்ந்து பல செய்கிகள் காணப்பட்டன. அவற்றின் தடயங்கள் வழியாக அவள் பார்வையை நகர்த்தியப் போது, அவளுடைய கண்களில் பெரும் பீதி உண்டாகி உடம்பெல்லாம் வியர்க்கும் அனுபவம் உண்டாயிற்று. ஒன்றும் இருக்காது, இது வெறும் லூசுத்தனமான செய்திகளாத்தான் இருக்கும் என நினைத்து மனதை ஆற்றுப்படுத்த நினைத்தாள். உண்மையில் அவன் வேறு ஏதாவது செய்து கொண்டிருப்பானோ?” இதுவரைக்கும் பதில் ஏதும் காணவில்லை, இவள் அனுப்பிய காலை வணக்கம் செய்தி ஒரு டிக் உடன் நின்று போயிருந்தது. அவன் நிகழ்வலையில் இல்லை, இணையத்தோடு அலைபேசியை இணைக்காமல் துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பது மேலும் அச்சத்தை ஊட்டியது. எதுவாக இருக்கும்? வாயில் வைத்திருந்த தோசை வாய்க்கும் விரலுக்கும் இடையில் நின்றிருந்ததை உணர்ந்த அவள் சுதாரித்துக் கொண்டு வாய்க்குள் போட்டு மென்று பார்த்தாள். வாய் அசையாமல் முரண்டுப் பிடித்துக் கொண்டிருந்தது. விழுங்கவும் தோன்றவில்லை. ஏதோ, கல் நெஞ்சிலிருந்து மேலெழும்பி தொண்டையை அடைப்பதைப் போலவும், வாயில் உமிழ்நீர் முழுமையாக வற்றிப் போய்விட்டது போல இருந்தது. இதயத்தின் மேல் பாராங்கல் ஏற்றி வைத்தது போல இருந்தது. அது விலகுவது போல இல்லை. தலைவெடிக்கும் போல் ஆகிவிட்டது. நிதானித்துப் பார்த்தாள். கல்லூரிக்குப் போக வேண்டாம் என்னும் உணர்வு வர, போய்ப்படுத்துக் கொண்டாள். தலையை தலையணைக்குள் புதைத்துக் கொண்டு படுத்தாள். கண்ணீர் வருவில்லை, நெஞ்சம் வெடிக்கும் உணர்வு. பேயைக் கண்டு அரண்டவள் போல் ஆனவள். சற்று சுதாரித்துக் கொள்வதற்கான சிந்தனைகளை உள்ளுக்குள் எழுப்ப ஆரம்பித்தாள். கல்லூரிக்குப் போகாமல் படுத்திருந்தால் இன்றைய தினம் நரகமாக மாறிவிடும். எல்லாம் மறந்து நிம்மதியாய் இருக் வேண்டும் என்றால் கண்டிப்பாய்ப் போய்த்தான் ஆக வேண்டும் என்று நினைத்தாள். நேற்றைய தினம் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது என்று முந்தைய நாளின் நினைவுகளை சற்று அசைப்போட எத்தனித்தாள். நெஞ்சுக்குள் தீயாய்ப் பற்றிய நெருப்பு சற்றுத் தணிவது போல் உணர்ந்தாள். எப்போதும் இப்படித்தான், ஒரு நாள் மிக மகிழ்ச்சியாய் இருந்தால் மறுநாள், சொல்லொண்ணா பெரும் வேதனை மனதை வந்து ஆட்கொள்கிறது. அது தான் விதி போல. நான் மகிழ்ச்சியாய் இருப்பது கடவுளுக்குக் கூட பிடிக்கவில்லைப் போல. வாய்க்குள் சொற்களை மென்றவாறு உதடுகள் அசையாமல் முணுமுணுத்தாள். முணுமுணுப்பு இதயத்தை யாரோ வருடும் உணர்வைக் கொடுத்தது. பாரம் சற்றே குறையும் உணர்வு ஏற்படுத்திக் கொடுத்தது. கல்லூரிக்கிச் சென்ற தான் ஆக வேண்டும் என்று தீர்மானித்தவள் எழும்பினாள். முகத்தைக் கண்ணாடியில் ஒருகணம் பார்த்து, தலைக்கேசமும் முகமும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். வெளியே போகும் போது மனம் பட்ட வலிகளை முகமும் தலைக்கேசமும் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள். கூந்தலையும் முகத்தையும் சரிசெய்து கொண்டாள். பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். 

நடந்து, பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும், அலைபேசி சிறு ஒசை எழுப்பி விட்டு வெளிச்சம் காட்டியது. அவன் தான் அழைக்கிறான் என்பதை அவள் உறுதி செய்தாள். கட் செய்து விட்டாள். பேருந்தில் ஏறியப் பிறகு பேசிக் கொள்ளலாம் என அவள் தீர்மானித்திருந்தாள். வழக்கமாக அப்படித் தான் செய்வாள். அவன் விடுவதாய் இல்லை அலபேசி திரும்பத் திரும்ப ஒலி எழுப்பி ஒளியை வெளியேற்றிக் கொண்டிருந்தது, சிறு சிறு சமிக்ஞைகளுடன். அவள் திரும்பவும் கட் செய்தாள். அழைப்பு தொடர்ந்தது, அலைபேசியை பைக்குள் போட்டுக் கொண்டாள். பேருந்துக்காக பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. பேருந்துக்குள் நுழைந்து அலைபேசியை எடுத்தப் போது, அலைபேசி உயரோட்டத்துடன் துடித்துக் கொண்டிருந்தது. எடுத்தவள் “ஹலோ” என தாழ்ந்த குரலில் சொன்னாள். “நேத்தைக்கு என்ன மெசேஜ் delete பண்ணின” என்று கேட்டாள். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்த அவள், “Delete பண்ணினத அனுப்பிட்டு கால் பண்ணு” என்று சொல்லி விட்டு அலைபேசி இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள். புலனத்தில் பத்துக்கம் மேற்பட்ட படங்கள் வருவதை, தொடுதிரை காட்டிக் கொண்டிந்தது. தொடுதிரையில் சலனம் நடந்துக் கொண்டே இருந்தது. அவள் புலனத்தைத் திறந்தாள். இரத்தம் தோய்ந்த கையைப் பார்த்ததும், தொடுதிரையை படப்படப்படன் அணைத்துக் கொண்டாள். யாரும் பார்க்கக் கூடாது என்று நினைத்தவளாய் அப்படிச் செய்தாள். பேருந்தில் வைத்துப் பார்ப்பது முறையல்ல என அவளுக்குத் தோன்றியது. பிறர் திரையை எட்டிப் பார்ப்பதில் இந்தியர்களுக்கென்று அலாதிப் பிரியம் உண்டு. பிறர் மனை நோக்காதிருக்க கற்றுக் கொடுத்த திருவள்ளுவர், பிறர்திரை நோக்காதிருப்பதற்காகன குறளையும் எழுதி வைத்திருக்க வேண்டும் என்று மனதில் முணுமுணுத்தாள். இரத்தம் ஏற்படுத்திய பாதிப்பு அவளுக்குள் ஆழமாய் பதிய ஆரம்பித்தது. காலை உணவுடன் மென்றிறக்கிய புலனச் செய்திகளை அசைப்போட்டுப் பார்த்து அவற்றுடன் தற்போது வந்திருக்கும் படங்களையும் சங்கிலியால் பிணைத்துப் பார்த்தாள். அவன் சாதாரண ஆளா? இல்லை அவன் பேய்ப்பிடித்தவன் போல நடந்துக் கொள்கிறானா? என்று அவளுக்குள் எண்ண அலைகள் எழ ஆரம்பித்தன. அவன் அசாதாரணமாகத் தென்பட்டான். இவனுடன் வாழ முடியுமா என்னும் கேள்வி அழுத்தமாய் எழ ஆரம்பித்தது. சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. மறுபடியும் அலைபேசியில் அழைப்பு வந்தது. அவள், துண்டித்தாள். மறுபடியும் வர ஆரம்பித்தது. எடுத்தவள் “இப்போ பேச முடியாது” என உடனேத் துண்டித்துக் கொண்டாள். 

கல்லூரிக்குச் சென்றவள், தனியாக இருந்து அனைத்துப் படங்களையும் பார்த்தாள். கழுத்தில் கத்தி வைத்திருப்பது போலவும், கழுத்தில் டவுலால் இறுக்கப்பட்டிருப்பது போன்றும், ஒரு பிடி மாத்திரை மேஜையின் மீது வைத்திருப்பது போலவும், பல படங்கள் இருந்தன. எல்லாம் அவளை திகில் கொள்ள வைத்தன. அருகில் வந்த தோழியிடம் அலைபேசியைக் கொடுத்து விட்டு குனிந்திருந்த அழ ஆரம்பித்தாள். முதல் வகுப்புக்குச் செல்லவில்லை இருவரும். தோழி அனைத்தையும் வாசித்தாள். புரிந்தும் புரியாமலும் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். “கொஞ்சம் நாள் இந்த போண் வேண்டாம்டீ” என்று அவள் அழுத்தமாகச் சொன்னாள். 

மாலை பேருந்தில் அமர்ந்த சிறிது நேரத்தில் அலைபேசி ஒலி எழுப்பி விட்டு ஒளியால் சமிக்ஞை செய்ய ஆரம்பித்தது. துண்டித்தாள், மறுபடியும் துண்டித்தாள், மீண்டும் துண்டித்தாள், மீண்டும் மீண்டும் துண்டித்தாள், விடாமல் துண்டித்துக் கொண்டிருந்தாள், ஓயாமல் துண்டித்துக் கொண்டே இருந்தாள். பேருந்து பெரிய ஏரி ஒன்றைக் கடக்க ஆரம்பித்தது. கடல் போல தண்ணீர் நிரம்பி இருந்தது. தூக்கி வீசினாள் அலைபேசியை. அப்போதும் அது ஒளியால் சமிக்ஞை செய்துக் கொண்டிருந்தது. அவள் ஏரிகளுக்கு மேல் பறந்து திரிந்த பறவைகளைப் பார்த்து ரசித்தவாறு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்