இயேசு அடைப்பட்டுப் போய்க் கிடந்தார் கண்ணாடிக் கூண்டிற்குள். அவர் வெளியே வர முடியாதபடி சுற்றி இருந்தவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அவருக்கு நிறைய ஆராதனைகளையம் துதிகளையும் அவர்களை செலுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் அந்த துதிகளில் வாழ வேண்டும் என்னும் நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது.
அவரை அடைத்துப் போட இரும்புப் பெட்டி ஒன்று வாங்கி வரப்பட்டது. அப்பெட்டியை தங்கத்தால் பொதிந்தார்கள். பிறகு அப்பெட்டியை பாதுகாக்க பெரிய கூண்டு ஒன்றையும் உருவாக்கிக் கொண்டார்கள். அதைச் சுற்றி அலங்காரங்கள் செய்யப்பட்டன. வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. அவர் அந்த ஒளியில் நடுவின் மின்னிக் கொண்டிருந்தார். பார்த்தவர்கள் அனைவரும ்மெய்ச்சிலிர்த்துப் போயினர். அவரை பார்ப்பதிலேயும் ஆராதனைகளைச் செய்வதிலேயும் அலாதியான சுகத்தை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவுக்கு இப்போது மூச்சுமுட்ட ஆரம்பித்திருக்கிறது. வெளியே வர வேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டது. ஆனால் அவரே வெளியே விட்டால் அது பெரும் ஆபத்தில் முடிந்து விடும் என்று அவர்களுக்குத் தோன்றியது. அவர் ஓடிச் சென்று ஒரு அனாதையின் வீட்டில் இருந்து விட்டால் என்ன செய்வது. சாக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவன் கரங்களில் போய் அவர் அமர்ந்து விட்டால், அவரில் படியும் அழுக்கை யாரால் அகற்றிட முடியும். அவர் ஓடிச் சென்று, நீதி மறுக்கப்பட்ட ஒரு நிரபராதியின் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்து விட்டால், நீதியை நிலைநாட்டுவதற்காக யார் குரல் கொடுக்க முடியும். அவரைப் பூட்டி வைப்பதே சிறந்தது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. இதைவிடக் கொடிது என்னவென்றால், அனைத்தும் அமைதியாகச் சென்றுக் கொண்டிருக்கும் சூழலில் அவர் குழப்பம் உருவாக்கிவிடக் கூடும். உண்மை, நீதி, நேர்மை போன்ற தேவையற்ற சொற்களை அவர் கூறினால், நிலவி வரும் சமாதானம் முற்றிலுமாக சிதறடிக்கப்படும். அநீதிகளைக் காணும் போது அவர் கொதித்தெழுந்தால் எல்லாம் பிரச்சனைக்குரியதாகிவிடும். அது மட்டுமல்லாமல் அவரை ஆராதித்துக் கொண்டிருப்பவர்களை விமர்சித்தால் என்ன செய்ய முடியும். பிறகு இயேசு பாதுகாக்கவும், அவரை ஆராதிக்கவும், அவருக்காக கோயில்களை எழுப்பவும் ஆள் இல்லாமல் போய் விடும். பிறகு இயேசு அனாதையாகி தெருவில் நிற்க வேண்டியச் சூழல் ஏற்படும். இயேசுவை பாதுகாப்பது நம் பொறுப்பல்லவா!
photo: pixabay.comஅவரை ஆராதித்துக் கொண்டிருந்தவர்கள், அவர்களுக்கு விருப்பமான கடவுளாக அவரை மாற்றிக் கொண்டிருந்தார்கள். இயல்பான இயேசுவாக அவர் இருக்கக் கூடாது. நற்செய்திகளில் காணப்படும் இயேசுவாக அவரை மாற்றக் கூடாது. அவரை போலியாக்கிக் கொண்டிருந்தார்கள். ஏரோதுக்களும், தலைமைக்குருக்களும், பரிசேயர்களும் விரும்பும் கடவுளாக அவர் மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தார் என்பது எள்ளளவும் மிகையான பேச்சு அல்ல. பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ கூடு என அவர் கதற ஆரம்பித்தால் யாரால் தாங்க முடியும். சாட்டை வாறு எடுத்து வியாபாரிகளை துரத்தினால், அதன் வலியை யாரால் தாங்க முடியும்.
மீண்டும் கெத்சமெனியில் இரத்தம் வியர்ப்பதா? வேண்டவே வேண்டாம்? மீண்டும் யூதாசால் காட்டிக் கொடுக்கப்படவா? வேண்டவே வேண்டாம்? மீண்டும் காவலாளிகளால் கைதுச் செய்யப்படவா? வேண்டவே வேண்டாம்? மீண்டும் கற்றூணில் கட்டி வைத்து அடிக்கவா? வேண்டவே வேண்டாம்? மீண்டும் தலையில் முள்மூடி சூட்டப்படவா? வேண்டவ வேண்டாம்? மீண்டும் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படவா? வேண்டவே வேண்டாம்? மீண்டும் பிலாத்துவின் முன் நிறுத்தப்பட்டு விதிக்கப்படவா? வேண்டவே வேண்டாம்? மீண்டும் பாரமான சிலுவையை சுமந்து கொண்டு கடினமான பாதையில் செல்லவா? வேண்டவே வேண்டாம்? மீண்டும் கல்வாரி மலையில் அறையப்படவா? வேண்டவே வேண்டாம். அதனால், அவரைப் பத்திரப்படுத்தினார்கள்.
அவர்கள் பணம், அதிகாரம், பெருமை போன்றவை இழந்து விடுவோம் என்பதற்காக இயேசுவை அடைத்தார்கள். அவரை அடைத்து வைத்து விட்டு, ஏழைகளை சுரண்டி பெரிய மாளிகளை கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு ஆசீர்வதிக்கிறார் எனக் கூறி, அவர்கள் இருநூறு விழுக்காடு, மூந்நூறு விழுக்காடு இலாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தார்கள். இயேசு திமிர்த்து வெளியே வரத் துடித்துக் கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்தது. அதனால் அவர்கள், அவரை விதவிதமானப் பொருட்களால் அலங்கரித்தனர். நிறைய பூட்டுகளைப் போட்டு பூட்டி அவரைப் பத்திரப்படுத்தினர்.
அவர்கள் பெரிய வாகனங்களில் நடப்பதை ஆசீர்வாதமாகப் பார்த்தார்கள். பல இடங்களிலும் முதன்மையான இடங்களைப் பெறுவதை பெருமையாகப் பார்த்தார்கள். இரத்தம் தோய்ந்த நிலங்களை சொந்தமாக்கி அதனுள் சிற்றாலயங்களைக் கட்டி அதில் இயேசுவை அடைத்து வைப்பதில் அவர்கள் அலாதியான பிரியம் காட்டினார்கள். உலுக்கினால் பணம் பொழியும், பெரும் நிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்க அவர்கள் பெரும் கையூட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கையூட்டுக் கொடுத்து விட்டு, இயேசுவை கூண்டிற்குள் அடைத்து வைத்து விட்டு, அவருக்கு நிரந்தரமான ஆராதனைகளைச் செய்து, அவரின் அற்புதம் நடக்க காத்துக் கிடந்தார்கள். பெரும் கையூட்டுப் பெற்றவர்கள், அனுமதிகள் வழங்கிய போது, அது கூண்டில் அடைப்பட்டுக் கிடந்த இயேசு தந்த பெரிய ஆசியாய் விளம்பரப்படுத்திக் கொண்டு, தங்கள் பெருமையின் பட்டயங்களின் நீளங்களை அதிகப்படுத்திக் கொண்டார்கள். அதில் பெரிய பெயர் பலகைகளை எழுதி வைத்தார்கள். அதில் இயேசுவின் பெயர் தவறாமல் இடம் பெற்றதோடு, அவருக்காக வெற்றி முழக்கங்களை செவிப்பறை கிழிய எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
0 கருத்துகள்