போர்வைகளை எரிக்க நெருப்புப் பொறி வேண்டும் | அ. சந்தோஷ்

புழுக்கம் உள்ளுக்குள். உடலெல்லாம் போர்வைகளின் சுமை வெகுவாக அழுத்துகிறது. போர்வைகளின்றி புத்தியை தெளிவுப்படுத்தி, உடலை காற்றோட்டமுடையதாக மாற்ற முயற்சிகள் இல்லை. பலர் வந்து செல்ல அனுமதி இல்லை. அவர்கள் தங்கள் உள்ளுணர்வுகளையும் கனவுகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதியில்லை. வெளிக்காற்று உள் புகாதபடி பல போர்வைகள் நான் மூடியிருந்தேன்.

போர்வைகள் எல்லாம் பலர் எனக்குப் போர்த்தி விட்டவை. அப்போர்வைகளை அந்தந்த வேளைகளில் நான் உள்மன அழுக்குகளை மறைக்க வாங்கிப் போர்த்திக் கொண்டேன். அவைப் போர்த்தப்பட்டப் போது உடலுக்கு சுகமாக இருந்தது. போர்வைகளிலிருந்து பெரும் வாசனையும் வெளியே வந்துக் கொண்டிருந்ததால் அதைப் போர்த்திக் கொள்வதில் எனக்கு அலாதி சுகம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக நான்ப் போர்த்திக் கொண்டேன்.

நான் அவற்றை விரும்பி அணிவதற்கு பெரும் காரணமுண்டு. எனது உள்ளுக்கள் புழுங்கிக் கொண்டி பலவிதமான அழுக்குகள் எனக்கு நெருக்கடியைத் தந்துக் கொண்டிருந்தன. அவை எனக்குள் ஒருவிதமான அச்சத்தைத் தந்துக் கொண்டிருந்தது. அச்சம் சிறுகச் சிறுகப் பெருகி, பெரும் குப்பையாக மாறியிருந்தது. இனம் தெரியாத அச்சம். குப்பைகளில் எது எங்கேக் கிடக்கிறது என்னும் தெளிவில்லாமல் குழப்பம் மேலோங்கியது. அச்சம் பெருகி இருந்ததால், அவற்றை போக்கிவிட குறுக்கு வழியை நான் தேடலானேன். உள்ளுக்குள் யார் நுழைந்து குப்பைகளை அகற்றுவது. குப்பைகள் கிடப்பது சுகத்தைக் கொடுக்கவில்லை என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. போதைப் பொருளை உடலில் குத்தி வைப்பவனுக்கு வலிக்காதா என்று கேள்வி கேட்பதைப் போன்றது அது. வலிதானே சுகம். நாற்றம் தானே உடலைச் சிலிர்க்க வைக்கும் வாசனை. அப்படியென்றால் குப்பைகளை ஏன் களைய வேண்டும்? வேறு ஒருவருக்கு அது நாற்றம் கொடுக்கமால் இருந்தால் போதாதா? அவர்கள் பார்க்கும் போது, மணம் வீசினால் போதாதா? அதனால் போர்வைகளேத் தீர்வு என்பதை நான் உணர்ந்ததேன். போர்வைகளை நிறையப் பேர் அணிந்துக் கொண்டு நடக்கிறார்கள் என்பது எனக்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது. ஆகையால், போர்வை அணிவதில் எவ்விதத் தவறுமில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு சுயம் நியாயப்படுத்திக் கொண்டேன். போர்வைகள் பலர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரும் பொருள் செலவின்றி அது கிடைத்தது. நான் எனக்கு நோவாமல் குப்பைகளின் சுகத்தை அனுபவிப்பதை அனுமதிக்கும் போர்வைகள் கிடைத்தன. அதை நான் பெரும் வரப்பிரசாதாமாகப் பார்த்தேன். போர்வைகள் பெரும் பிரசங்கங்களாக வந்துக் கொண்டிருந்தன, ஊக்கமூட்டும் உரைகளாக வந்துக் கொண்டிருந்தன. புனித மனிதர்கள் அதை கொஞ்சம் விலைக்குக் கொடுத்தார்கள். ஆனால் அது பெரும் ஆசி பெற்றது என்பதை அவர்கள் கூறினார்கள். குறைந்த செலவில் பெரும் ஆதாயம் என்பது பெரும் ஆறுதலை எனக்குக் கொடுத்தது. நான் வாங்கி போர்த்த ஆரம்பித்தேன். அது உள்மன நாற்றத்தை வெளிக்கொணரும் எனும் நிலை ஏற்படும் போது, சந்தையில் புதிதாக விற்பனைக்கு வந்த, புதியனவற்றை வாங்கி அணிந்துக் கொண்டேன். சில வேளைகளில் ஒரே வேளையில் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றை வாங்கி அணிந்து கொண்டேன். உடலோடு ஒட்டிக் கொண்டு கிடக்க ஒன்று, அதற்கு மேல் சற்று இதமான ஒன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, காண்போரை மயக்க வைக்கும் பெரும் போர்வை. அதைத் தேர்ந்தெடுப்பதில் நான் அதீத கவனம் செலுத்துனேன். இதை எனக்குப் பலர் கூறியிருக்கிறார்கள். அப்போர்வைதான் பிற மனிதர்களை நம்மிடம் கவர வைக்கும் அற்புதமானப் போர்வை. அதில் எவ்வளவு அதிகமாக அலங்காரம் செய்ய முடியுமோ அப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள்.

வேறொரு விசித்திரமான விஷயமும் நடந்துக் கொண்டிருந்தது. சில ஆடைகள் எனக்கு நன்றாகப் பொருந்திப் போய் விட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அது என்னுடைய தோலின் பகுதியாக மாறிவிட்டது. சற்று நாற்றமடித்தாலும் அதில் சிக்கல் ஏதும் காணவில்லை. காரணம் அது தோலுடன் நெய்து சேர்க்கப்பட்டது போல் மாறிவிட்டது. உடல் ஏது போர்வை ஏது என்று அறிந்துக் கொள்ள முடியாத வண்ணம் அது மாறியிருந்தது என்பது பெரிய அதிசயம் அல்லவா. 

ஆனால் உள் மனப் புழுக்கம் மட்டும் மாறவில்லை. வெந்து நீறிக்கொண்டிருந்தது உள்ளம். குறிப்பாக, வெளியே இருந்து ஏதும் உள் நுழைய முடியாதவாறு இருள் படிந்துக் கிடந்தது. உள்ளுக்குள் எது எங்கே கிடக்கிறது என்னும் தெளிவு இல்லாமல் போயிற்று. நல்லன எது தீயன எது என்று தேடி எடுத்துக் கொள்ள முடியாமல் இருள் மண்டிக் கிடந்தது. ஆகையால், வாயிலிருந்து வந்த வார்த்தைகள் தெளிவற்றவையாய் வந்தன. போர்வை தனது பணியைச் செவ்வனேச் செய்தாலும் வாய் பல வேளைகளில் மாட்டிக் கொடுத்து விடுகிறது. வாய் மட்டுமே செயல்பாடுகளும் தான். 

உள்ளுக்குள் ஒரே துர்நாற்றம். இப்போது அணிந்துக் கொண்ட போர்வைகளுள் பல உடலோடு நெய்து சேர்க்கப்பட்டிருந்ததால், போர்வைகளை தூக்கி எறிதலும் சாத்தியமில்லாமல் போய் விட்டது. உடல் கிழிந்து இரத்தம் கசியும் அப்படிச் செய்தால். அது தாங்க முடியாதல்லவா? என்ன செய்ய? கூடுதல் போர்வைகள் வாங்கி அணிந்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஆனால் சுமை மட்டும் பெரிதாகிவிட்டது போல. இருள் பல படிமங்களாக தனது உடனிருப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருந்தது. சிந்தனை எட்டிய இடம் வரை எவ்விடத்திலும் ஒளியின் அம்சம் இல்லை.

சிறு நெருப்புப் பொறி வேண்டும். உடலெல்லாம் தீப்பற்றி போர்வைகளை எரித்து விட.



கருத்துரையிடுக

0 கருத்துகள்