சுதந்திரம் என்பது இன்று பெருமளவு உரிமைகள் சார்ந்துப் பேசப்படுவதை நாம் அறிவோம். Yuvan Noah Harari தனது 21 Lessons for the 21st Century என்னும் நூலில், சுதந்திரம் என்பது ஒரு சமய நம்பிக்கை என்னும் நிலையை அடைந்திருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார். இயல்பாக, இயற்கையான, உணர்வு சார்ந்த ஒன்றாக இருந்த சுதந்திரம் என்பது ஒரு பெரிய கருத்தியலாக மாற்றப்பட்டு, அதை நிலைநிறுத்த வேண்டும் என்னும் நிலையானது வந்திருக்கிறது. அது ஒரு வழிபடு பொருளாக, மரியாதைக்குரிய பொருளாக மாற்றப்பட்டு, அது பொதுவெளியில் காணக்கிடக்கும் பண்டமாக மாற்றப்பட்டுள்ளது. மதமானது எப்படி தன்னுடைய போதனைகள் வழியாக கட்டளைகளயும், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும், வழிபடு முறைகளையும் முன்வைக்கிறோ (கட்டமைக்கப்பட்ட இத்தகைய மத சித்தாத்தங்களை பலரும் வரலாற்றில் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அது மனிதரின் ஆன்மா சம்மந்தமான காரியமாகப் பார்க்கப் பட வேண்டும் என்னும் வாதங்களானது இன்று பெருமளவில் திரும்பத்திரும்ப முன்வைக்கப்படுகிறது) அது போல சுதந்திரம் என்பது மாற்றப்பட்டிருக்கிறது. இதில் உறவுகளின் அடிப்படையிலான உணர்வுகளானது இருட்டடிப்புச் செய்யப்படுகிறது என்பதை மறக்க முடியாது. சமூகப் பிரக்ஞை. தோழமை சார்ந்த பொறுப்புத்துறப்பு வழியாக விரியும் சுதந்திரம் என சுதந்திரத்தைப் பார்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இச்சூழலில் லெவினாசின் சிந்தனைகளை அசைப் போடுதல் நன்று.
சுதந்திரம்: லெவினாசின் பார்வை
வரையறைக்குட்பட்ட சுதந்திரம் என்னும் தலைப்பின் கீழ் பேசும்
லெவினாஸ் (Otherwise than Being, 122), மனித மனங்களில்
குடிக்கொண்டிருக்கும் மடமைமிக்க நம்பிக்கையை முன்வைக்கிறார். மனிதர்கள் பல
வேளைகளில் தன்னுடைய திட்டச் செயலாக்கமாக வாழ்க்கையைப் பார்க்கும் போக்கு நிலவுகிறது.
அதாவது, இவ்வுலகம்
தோன்றும் முன்னரே, தன்னைப் பற்றிய
முழுமையான திட்டங்களை வகுத்துவிட்டதான எண்ணம் மனிருக்குள் வந்து விடுகிறது.
தங்களைப் பற்றியத் தெளிவை அவர்கள் பெற்றவர்களாக நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
ஆகையால் தங்களை முதன்மைப் படுத்திக் கொண்டு அனைத்துவிதமான சுதந்திரத்தையும்
அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக
சுதந்திரத்தை எவ்விலைக் கொடுத்தாவது காக்க வேண்டும் என்னும் நிலையானது உருவாக்கிக்
கொள்கிறார்கள். இத்தகைய நிலையானது மடமை சார்ந்ததாக லெவினாஸ் சுட்டிக்
காட்டுகிறார்.
தன்னிலையின் சுதந்திரத்தை மையப்படுத்தி சிந்தித்தல் என்பது நமக்கு வழக்கமாகி விட்டது. இது எப்படி இருக்கிறது என்றால், உலகம் தோன்றியதை நான் கண்ணுற்றேன்; எனது சுதந்திரமான விருப்புத் தேர்வால் உருவாக்கப்பட்ட உலகின் மீது முழு அதிகாரமும் நான் பெற்றிருக்கிறேன் என்று சொல்வதைப் போன்றது. இவைகள் மெய்யியலாளர்களின் கற்பிதங்கள், இலட்சியவாதியின் ஊகம்! அல்லது பொறுப்பற்றவர்களின் பொறுப்புத் துறப்பு என்றல்லவா சொல்ல வேண்டும் (OB 122).
இவ்வாறாக கடினமானச் சொற்களால், பிறரை
பொருட்டாகக் கருதாத மனித வாழ்க்கையைப் பற்றியப் புரிதலை லெவினாஸ் விமர்சிக்கிறார்.
இச்சிந்தனையின் அடிப்படையில் சுதந்திரமாக இருத்தல் அல்லது சுதந்திரமில்லாமல்
இருத்தல் என்பது மனித வாழ்வை நிர்ணயிக்காது.
காரணம் அவர் மறைமுகமாக முன்வைப்பதைப் போல, நான் உருவாகும் முன்னரே இவ்வுலகம் இருக்கிறது. இங்கு
மனிதர்கள் இருக்கிறார்கள். இங்கே நான் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறேன் என்று
மேட்டிமைப் பாராட்டுதல், ஆணவத்தின் உச்சம், மேலும், தனக்கென
இருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, எடுக்கும் முயற்சிகள் பிறர் வாழ்ந்துக் கொண்டிருக்கும்
இடத்தை அபகரித்துக் கொள்ளும் வன்முறையாக மாறி விடும். ‘நான்,’ ‘எனது இடம்’ என்று
சொந்தம் கொண்டாடும் இடமானது,
வேறு ஒரு
மனிதரின் இடமாக இருக்கிறது. ஆகையால், “சுதந்திரம் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்” (TI 303). அப்படியாக
நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் பொறுப்பேற்க வேண்டும். தன்னுடைய இருத்தலை
தீர்மானிப்பது, பிற மனிதருக்கு
தன்னிலை ஏற்கும் பொறுப்புணர்வில் அடங்கியிருக்கிறது.
"Thus do things change. What yesterday was still religion is no longer such to-day, and what to-day is atheism, tomorrow will be religion" Feuerbach (rf. The God of Jesus Christ p. 29)
0 கருத்துகள்