லூனார்ஸ் செருப்பும் சொத்தை விரலும்

ஒரு விரலில் மட்டும் பிரச்சனை. வலது காலில், வலப்புறத்திலிருந்து மூன்றாவது, இல்லை இடப்புறத்திலிருந்து மூன்றாவது, ம்..ம்... இரண்டும் சரிதான், அந்த விரல் தான்.அதுதான் பிரச்சனை. அவ்விரல் எங்கிருந்துத் தொடங்குகிறது என்னும் ஆராய்ச்சியில் கிரானைட் போட்ட வீட்டில் இருந்தவாறு நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் லூனார்ஸ் செருப்புக்காரன் என்றுத்தான் அழைக்கப்பட்டேன். அதனால் அப்பெயரேப் போதும். பாதத்தின் முற்புகுதியில் ஐந்து விரல்கிளும் பிரியத் தொடங்கும் இடம் வரை வலிக்கிறது என்பதை உணர்ந்தான். லூனார்ஸ் செருப்பை அன்று வெளியேப் போட்டு விட்டு, நீண்ட நேரம் கிரானைட் மீது காலை வைத்துக் கொண்டு வேலை செய்துக் கொண்டிருந்தேன். பிறகு எழும்பிய போது, அந்த விரல் நிமிரவில்லை. எப்படியாவது நிமிர்த்த வேண்டும் என்னும் பிடிப்புடன் காலை நிலத்தில் வைத்து அழுத்தினேன், விரல் நிமிர்ந்தது. நடந்துப் பார்த்தேன். பிரச்சனை நீடிப்பதை உணர்ந்தேன்.  உடனை பைக் எடுத்துக் கொண்டு வைத்தியர் ஒருவரை பார்க்கச் சென்றேன். அவர் அவ்வூரில் மிகவும் பிரபலமானவர் என்பதை யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். சென்ற உடனே பெயர் பதிவுச் செய்யப்பட்டு, நம்பர் ஒதுக்குப்பட்டு, அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது. போட்டோ இல்லாத அடையாள அட்டை. அதற்கென தனியாக இருபது ரூபா வாங்கினார்கள். விலைமதிப்பற்ற அட்டை அது. பிறகு, வரிசையில் காத்திருந்தேன். நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின்னர் மருத்துவரை பார்க்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. நேரம் இரவு 9 மணி ஆகிவிட்டது. பாதம் முக்கியமல்லவா, அது இல்லையென்றால் எப்படி நடப்பது. ஆகையால் பிரச்சனையின் தீவிரம் அறிந்து, நண்பர் தான் அழைத்துச் சென்றார். காலம் தாழ்த்தக் கூடாது என்று அவர் தீவிரமாக உபதேசித்து என்னை அழைத்துச் சென்றார். மருத்துவர் பாதம் பிடித்துப் பார்க்கவில்லை. விரலை இழுத்துப் பார்க்கவில்லை. அது எங்கிருந்து தொடங்குகிறது என்றுப் ஆராயவும் இல்லை. எதவும் செய்யாமல், கேட்ட உடனை பேப்பரில் எழுதத் தொடங்கினார். எனக்குப் பெரிய வருத்தம். வருத்தம் மட்டுமல்லை, காலைத் தொட்டுக் கூடப் பார்க்காத மருத்துவர் என்ன மருத்தவர்? அத்தகைய ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டதால், அதைவிடவும் பெரிதாக மருத்தவரிடம் எதிர்பார்த்தேன். காசு கொடுக்கிறோம் அல்லவா. அவருக்குக் காலைப் பிடித்துப் பார்த்தால் தான் என்ன? சரி பிடித்துப் பார்க்க வேண்டாம், பாதத்தை உயர்த்திக் காட்டவாவது சொல்லியிருக்கலாம் அல்லவா. அவர் யாருடைய காலையும் பிடிக்கும் பழக்கம் இல்லை போலும். அப்புறம் இப்படி பெரிதொரு மருத்துவமனையை உருவாக்கி இருக்க முடியும். இரு வினாடிகள் சிந்தனையில் மூழ்கி விட்டேன். இளம் வயசு தானே. சரி அது நிற்கட்டும். வேறு என்ன காரணமாக இருந்திருக்க முடியும். கால் சுத்தம் இல்லை என்றுத் தான் கண்டிப்பாக நினைத்திருக்க முடியும். உலகின் அழுக்குகளை எல்லாம் வீட்டிற்குள் கொண்டு வரும் சுத்தம் கெட்ட பாதங்கள் அல்லவா அவை. அதனால்தான் அவர் அப்படி நினைத்திருப்பார். அப்படி அவர் நினைக்கிறார் என்றால் அதை நான் பெரிதும் வெறுக்கிறேன். அத்தகையதொரு நிலை எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏற்பட்டதில்லை. காரணம் நான் அணிவது லூனார்ஸ் சப்பல்ஸ். அதுவும் நீல வெள்ளை காம்பினேஷன்.

photo: pixabay.com

லூனார்ஸ் செருப்புக்கும் எனக்கும் நீண்ட கால உறவு. விட்டுப் பிரியாத பிணைப்பு. தற்கால உலகில் செல்போன் எப்படி விரலோடு ஒட்டி இருக்கிறதோ, அதுபோல லூனார்ஸ் செருப்பு காலோடு ஒட்டியது. தொப்புள் கொடி உறவல்ல, கொடி வள்ளி உறவு. அதை அணியத் தொடங்கியக் காலம் முதல், அதில் யாரும் குறைகாண முடியாதவாறு பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன். எங்கள் பள்ளிக் கூடத்தில் பெரும்பான்மையான நண்பர்கள் லூனார்ஸ் அணிபவர்கள்தான். அதை நேர்த்தியாக நாங்கள் காத்து வந்தோம். ஓராண்டு காலம் அதற்கு ஆயுள் விதித்திருந்தோம். அது அக்கடமையை நேர்த்தியாகச் செய்யும்  கடைசியில் ஓராண்டுக்குள் அது தேய்ந்து ஒட்டை விழவில்லை என்றால், ஓட்டை போடும் செயலிலும் நாங்கள் ஈடுபடுவதுண்டு. பள்ளிக் கூடத்திற்கு செல்லும் போது, மைதானம் செம்மண் பரவியிருந்ததால், செம்மண் செருப்பிலும் ஒட்டிக் கொள்ளும். அதைக் கழுவினாலும், செருப்பிலிருந்து சீக்கிரமாகப் போய்விடுவதில்லை. அதை மறுநாள் குளத்திற்கு எடுத்துச் சென்று தேய்த்துக் கழு வேண்டும். கழுவுவதற்கென்று, தேங்காய் நாரைப் பயன்படுத்துவதண்டு. சில வேளைகளில் அதை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதுண்டு. நாரை எடுப்பது அல்லது எளிதல்ல. தேங்காய் தோடிலிருந்து அதைப் பிரித்தெடுத்து, அதை நார் ஆக்கும் படலம் வீடு தொடங்கி குளம் வரை நடக்கும். நாரைப் பிர்த்தெடுத்து நன்றாக தண்ணீரில் போட்டு அலசி, 510 சோப்பிலிருந்து உரசி எடுத்து செருப்பைத் தேய்க்க வேண்டும். வெண்மை நிறமும் நீல நிறமும் பள பளவெனத் தெரியும் வகையில் அதைப் கழுவிடுவேன். இது நான் மட்டும் செய்வதல்ல. அப்பா சொல்லிக் கொடுத்த கலையும் அல்ல. அவர் பிளாஸ்டிக் செருப்பு போடுவார். எங்களோடு குளிக்க வரும் அண்ணன்கள் கற்றுத் தந்த பாடம் அது. குளிக்கும் முன்னர் துணி துவைப்போம். அப்போது செருப்பை காலில் அணிந்திருப்போம். அப்போது செருப்பில் இருக்கும் அழுக்கானது கரையத் தொடங்கும். பின்னர் தேங்காய் நாரால் தேய்க்கும் போது எளிதில் போய் விடும். பின்னர் அதை வைத்து, பாதங்களை கழுவுவோம். நன்றாக தேய்த்து, ஆகையால் செருப்பைப் பேணுதலும் கால்களை அழுக்குப் படாமல் பேணுவதும் எங்களுக்கு கைவந்தக்கலை. செருப்பை ஓரமாக தண்ணீர் படாமல் கைப்பிடிச் சுவரின் கீழ் சாய்த்து வைப்போம். அப்படிப் பேணிக் காக்கும் லூனார்ஸ் செருப்பு கால்களை தூய்மையாய் வைத்திருந்தது என்பதில் எனக்குத் துளி அளவும் சந்தேகமில்லை. 

ஆகையால் இப்போது வைத்தியர் காலை எட்டிக் கூடப் பார்க்காமல் மருந்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க அவர் ஒருவேளை போலியாக இருப்பாரோ என்னும் சந்தேகம் எனக்குள் பலமாக எழுந்துக் கொண்டிருந்தது. கேட்டு விட வேண்டும் என்று தோன்றியது. உடனே வேறொரு சிந்தனை மூளையை ஆக்கிரமித்தது. ஒருவேளை அவர் முற்றும் துறந்த துறவி போல முற்றும் அறிந்த ஞானியாக இருப்பாரோ. அது இல்லை என்றால், காலின் எலும்புகள் அசைவுகள் பற்றி தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவராக இருப்பாரோ. நாம் கேள்வி கேட்டால், அது குற்றமாகிப் போய் விடுமோ. முனிவரின் சாபத்திற்கு உள்ளானவர்கள் பலரின் கதையை பள்ளிக் கூடத்தில் கேட்டிருந்ததால் பயமாக இருந்தது. வைத்தியரின் சாபத்திற்கு நான் ஆளாகக் கூடாது அல்லவா? ஞானதிருஷ்டியால் சிலர் அனைத்தையும் அறிந்திருப்பது போல, இவர் வைத்திய திருஷ்டியால் அனைத்தையும் அறிந்திருப்பார். யாருக்குத் தெரியும்? கைப்பிடித்து மருந்துக் கொடுப்பவர்கள் இருக்கும் போது, இவர் காலைத் தொடாமலேயே பிணியைப் பற்றி அறிந்திருப்பார். கையைக் கூட பிடித்துப் பார்க்கவில்லையே. போலியாக இருப்பாரோ. சந்தேகம் வலுத்துக் கொண்டே இருந்தது. அவர் எழுதி முடித்தப் பின்னர், பதிலாக, எதவும் சொல்லவில்லை. நான் நண்பரை பார்த்தேன். அவர் முகத்தில் புன்முறுவலை விரியவிட்டார். அதற்கான அர்த்தம் நான் புரிந்தது என்னவென்றால், வைத்தியர் எல்லாம் பார்த்துக் கொள்வார். அவர், நர்ஸ் ஒருவரை அழைத்துத் துண்டைக் கொடுத்து விட்டார். எங்களை நர்ஸ் அவர்கள் அழைத்துச் சென்றார். கொஞ்ச நேரக் காத்திருப்புக்குப் பின்னர், மூன்று நான்கு பேப்பர் பொதிகள் கிடைத்தன. அனைத்திலும் மாத்திரைகள். இரண்டு கைகளையும் சேர்த்து வைத்தால் கொள்ளும் அளவு மாத்திரைகள். இவ்வளவு மாத்திரை சாப்பிட்டால் என் வயிரு என்னாவது? கேள்வி பலமாக எழுந்தது. கால் பிடிக்கவில்லை, சரிய கையாவது பிடித்துப் பார்த்திருக்கலாம் அல்லவா அந்த வைத்தியர். அந்த வெறுப்பும் மனதில் எழுந்தது. நான் தீர்மானித்தேன் போலி மருத்துவரேத் தான். வாங்கிச் சென்ற நான் அப்படியேக் குப்பையில் போட்டேன். 

லூனார்ஸ் செருப்பை இனிமேல் கழட்டுவதில்லை என்று தீர்மானித்தேன். இப்போது அதே கலரில் கிடைப்பது அரிதாம். தேடினேன், தேடித் தேடி கடைசியில் கண்டுப் பிடித்தேன். சொத்தை விரலின் வலி குறையவில்லை. ஆனால், லூனார்ஸ் செருப்புப் போட்டதால் இனிப் பிரச்சனை இல்லை என நம்பினேன். ஆனால் முதல் நாளே ஸ்டிக்கர் எடுக்க விட்டுவிட்டேன். மறுநாளஅ ஸ்டிக்கர் தானாக போய் விட்டது. ஆனால், ஸ்டிக்கர் ஒட்டிய இடத்தில் அழுக்கு ஒட்டிக் கொண்டது. அதை நீக்குவது எளிதல்ல. சொத்தை விரலுக்கு, கொஞ்சம் அழுக்குப் படிந்த செருப்பு போதும் என்று நினைத்தேன். எனக்கு குறை இருக்கும் போது உனக்கு நிறை வேண்டாம் என்னும் பொறாமையும் மனதை ஒட்டிக் கொண்டது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்