இரு சக்கரங்களும் சுழன்றுக் கொண்டிருந்தன. மோட்டார் பொருத்தப்பட்டிருந்ததால் அவை ஓடிக் கொண்டே இருந்தன. அவை சுழலும் வேகம் குறித்துப் பலர் குறை கூறியிருக்கிறார்கள். ஆனால் அவை சுழலும் வேகத்தைக் குறைக்கவில்லை. அவை வேகமாய் சுழல சுழல வாழ்வு துடிப்புடன் இருப்பதாய் உணர்ந்தன. வாழ்வின் துடிப்பு அதற்குள் தென்பட்டன. எல்லாவற்றையும் தன் கால்கீழாக்கும் வேகம் அவற்றுக்கு இருந்தன. அவை மிதப்பது போல் உணர்ந்தன. அகந்தையின் திமிர்ப்பு அவற்றில் தென்பட்டன. பலரைப் பொறாமைப் படும் விதத்தில் அவை சுழன்று கொண்டிருந்தன. ஓடிக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் பிடிக்கும். மெத்தனமாய், வாழ்வா சாவா என தூக்கில் தொங்கும் சக்கரங்களைப் பார்க்கையில் அருவருப்புடன் நோக்கும். அவை எதற்கு வாழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஏளனமாய்ப் பார்க்கும். சுழல்வதற்காகத் தானே சக்கரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவை அழகுக்காகப் படைக்கப்படவில்லை. கருப்பாய் இருக்கும் அவற்றின் அழகை யார் தான் பார்த்து ரசிக்க முடியும். ஆனால் அவை சுவை சுழன்றுக் கொண்டிருந்தால் அவற்றின் அழகு தனி. நாங்கள் சுழலைவில்லை என்றால் எங்கள் பணியை யார் தான் செய்ய முடியும்.
விமர்சனங்கள் வெகுவாய் உயர்ந்தன. அவை போகும் போக்கு சரியில்லை என்பது பலரின் வாதம். அவை ஏன் அவ்வளவு வேகமாயச் சுழல வேண்டும் எனப் பலரும் குற்றம் சாட்டினர். அவ்விருச் சக்கரங்களையும் அரசவையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றுப் பலரும் கூறித்திரிந்தனர். அவை அப்படிச் சுழலக் கூடாது என்பது பலரின் வாதமாக இருந்தது. அமைதியாகப் போனால் தான் என்ன? அவற்றிற்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆர்ப்பரிப்பும், ஆடம்பரவும். அவை இவ்வளவு அகந்தைக் கொள்ளக் கூடாது. அவை ஆர்ப்பரித்து, ஊரை விழுங்கிக் கொண்டுச் செல்கிறது. வேறு சக்கரங்களை அவை கிஞ்சித்தும் கண்டுக் கொள்வதில்லை. யாரைப் பார்த்தும் அவை அஞ்சுவதில்லை. தலைக்கனம் பிடித்த சக்கரங்கள் எனப் பலர் தீர்ப்புக் கொடுப்பதற்கான வாதங்களை பெரிய புத்தகங்களில் எழுதி, அதை குற்றமாக மாற்ற, சட்டப் புத்தகங்களை விரித்து வைத்து சட்டத்தின் நுணுக்கங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்கள். அவற்றிலிருந்து வாதங்களை அவர்கள் குறித்தெடுத்துக் கொண்டிருந்தனர். சட்டக்குறிப்புகள் அவை. மதத்தில் நம்பிக்கை வைத்தவர்கள், புனித நூல்களில் கடவுளின் சாப வாக்கியங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்கள். சாப வாக்கியங்களில் உள்ள முட்களை அவர்கள் பிரித்தெடுத்து, பெரிய ஈட்டிகளாகச் செய்துக் கொண்டிருந்தார்கள். பலர் சமூகத்தின் நியதிகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்கள். சக்கரங்கள் காலங்காலமாக இந்த அளவு வேகத்தில் தான் சுழல வேண்டும் என்பதை முன்வைத்து, பேசித்திரிந்தார்கள். பேசித்திரிதல் வழியாக, சக்கரங்களை வெறுப்புக்கு உரியனவாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அவற்றை வெறுப்போரின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அவற்றை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று, சட்டம் படித்தவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். மதத்தலைவர்களில் சிலர், அவை ஈனப்பிறவிகளை மறுப்பிறப்பு எடுக்க வேண்டும் என்று யாகங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் சாத்தானின் கையில் அவற்றை ஒப்படைத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும் என்றார்கள். சமூக வெளியில் பேசித்திரிந்தவர்கள், சக்கரங்களை ஊருக்கு ஒதுக்குப் புறமாக விரட்டத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்.
மறுநாளும் சக்கரம் சுழல ஆரம்பித்தது. சட்டங்கள் மேல் அவை சென்று கொண்டிருந்தன. மதங்களை முடைநாற்றத்தின் மேல் சீறிப் பாய்ந்து சென்றுக் கொண்டிருந்தன. சமூகத்தின் எச்சங்ளைப் புறந்தள்ளி முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருந்தன. ஆணவமிக்க அச்சக்கரங்கள். அவற்றை சுழல வைப்பவன் எவ்வளவு திமிர் பிடித்தவனாக இருக்க முடியும்?
0 கருத்துகள்