இறப்புச் சான்றிதழ் தூங்கி இத்தோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. அதாவது அதுப்பிறந்த அன்றிலிருந்து தூங்கவில்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். மிகத்துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், சரியாக 28 நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தெட்டு நாட்கள் எனும் போது, சரியாக தேதிகளையும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. அது இறப்புச் சான்றிதழ் வழங்குபவரின் ஒப்புதலை 2022 ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதிப் பெற்றது. ஆனால், அது முறைப்படி முழு வளர்ச்சியடைந்து தொப்புள் கொடி அறுக்கப்பட்டு, சீல் குத்தப்பட்டது 2022 ஏப்ரல் 25 ஆம் தேதியே. அது முதல் அது தூங்கவில்லை. தூக்கமின்மையால் தான் அது இறந்துப் போயிருக்கும் என்னும் பேச்சுப் பொதுவாக சமூகத்தில் பரவியிருக்கிறது. அபப்டித்தான் என்று பலர் ஆணித்தரமாக, சான்றிதழ் இறந்துக் கொண்டிருப்பதை அருகிலிருந்து 28 நாட்களும் கண்காணித்தவர்களைப் போன்று சொன்னார்கள். தூக்கம் இல்லை என்றால் சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இமைகூட மூட முடியாதபடி அதன் கண்கள் வழித்துக் கிடந்தன. விழிபிதுங்கி நின்றாள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம், இது விழிமுளைத்து நின்றாள் என்னும் கூற்றுக்கு உரியதாகப் பார்க்கலாம். அதன் வலிகள் அவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை நாம் ஏற்றாக வேண்டும். நகைத்துத் தள்ள வேண்டாம். அதன் வலிகள் அதற்குத்தான் தெரியும். அதன் உள்வலியின் வீரியத்தை அறிந்திருந்தால் நம்முள் யாரும் அதைக் குறை கூற முடியாது. தீ தின்றதைப் போன்ற உணர்வுடன் அது தவித்துக் கிடந்தது. ஒரு துள்ளித் தண்ணீராவது அதற்கு யாராவது கொடுக்க மாட்டார்களா என்று நீங்கள் தவித்துப் போய் கேள்வி கேட்பீர்கள். ஆனால் அதன் கதையை முழுமையாகத் தெரிந்தவர்கள் யாரும் அதற்குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. முன்வரவில்லை என்று மட்டுமல்ல அதை அவர்கள் பெரும் தீங்காகப் பார்த்தார்கள். அஞ்சத்தக்க பெரும் தீட்டாகப் பார்த்தார்கள். அதை நெருங்குவதும், அதனோடு உறவாடுவதும் வாழ்விற்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் மனித நேயம் மிக்கவர் என்ற முறையில் சிந்திப்பவர்கள், அதன் உயிரைக் காப்பாற்றத் துணிவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுத் துடித்துப் போய் கிடந்தது. அத்தகைய மனித நேயமிக்கவர்கள் இறப்புச் சான்றிதழ் உருவானக் கதையைக் கேட்டால், அதற்கு நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுவார்கள். அவர்கள் அதற்காக , காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் என ஏறி இறங்கி ஓடாய்த் தேய்ந்து, மிச்ச வாழ்வை சிறையிலேயே கழிக்க நேரிடும். அது எப்படியும் நிகழவில்லை. இறப்புச் சான்றிதழ், தன்னுடயை பிறப்பின் பிழையைத் தானாகத் திருத்திக் கொள்வதில் அக்கறைக் கொண்டது என்றே சொல்ல வேண்டும். அதற்கும் சுய அபிமானம் உண்டல்லவா. அதை யாரும் சும்மா சீண்டி விட முடியாது. அதனுடைய சுய கவுரவத்தை சீண்டிப் பார்த்தால் அதற்குக் கெட்டக் கோபம் வந்துவிடும். தன்னுடைய தோற்றப்பிழையை அதுவாக திருத்திக் கொள்ள அன்றாடம் முயன்றுக் கொண்டிருந்தது. அதைக் கொன்ற இரத்தப் பழியை அது யார் மீதும் சுமத்த விரும்பவில்லை. அதன் பிறப்பும் இன்னொருவரின் இரத்தத்தில் தான் ஆரம்பமானது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால், ஏற்கனவே கையிலும் குறிப்பாக பிறப்புறப்பில் படிந்த இரத்தக் கறையால் அது தவித்துக் கிடக்கிறது. அன்றாடம் சாவை தனக்கென தானே வருவித்துக் கொண்டுத்தான் இருக்கிறது. அதன் பிறப்பு, விசித்திரமானதாக இருந்தது. அது ஆண் பிறப்புறுப்பிலிருந்துத்தான் பிறந்தது. இயற்கைக்கு எதிராகத் தான் பிறந்தது. ஆகையால் பிறப்புறுப்பிலிருந்துப் பிறந்த இரத்தக் கறையில் வடுக்கள் இன்னும் மாய்ந்தபாடில்லை.அது ஒருவிதமான வலியை ஏற்படுத்திக் கொண்டுத் தான் இருந்தது. அத்தோடு தொடர்புடைய பெண் உறுப்பும் உண்டு. பெண் உறுப்பிலிருந்து பெற்றுக் கொண்ட இரத்தத்திலிருந்துத் தான் அது உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. இரத்தத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. வன்முறை செலுத்தி எடுத்துக் கொண்டது. அதிலிருந்துத்தான் அதுப் பிறந்தது. பிறப்பு ஆண்-பெண் இணையைச் சார்ந்து தான் நடந்தது. ஆனால், கருவுற்றது பெண் அல்ல. கருவறையில் அது உருவாகவும் இல்லை. அது பெண் உறுப்பு வழியாக வெளியே வரவுமில்லை. அது ஆண் உறுப்பு வழியாகப் பிறப்பெடுத்தது. அது வயிற்றில் உருவாகவில்லை. ஆணின் வக்கிரப் புத்தியிலிருந்துப் பிறந்தது. காட்டுமிராண்டியாய் காலம் காலமாய் வாழ்ந்ததன் எச்சங்களை மரபணுக்களாய்ச் சுமக்கும் ஆணின் முரட்டு மூளையில் அது கருவுற்றது. அங்கிருந்து அது நேராக ஆண் உறுப்புக்கு வந்தது. அங்கிருந்து இச்சான்றிதழும் பிறந்தது. ஆகையால், ஏற்கனவே வன்மம், இரத்தப்பழி ஆகிய பழிகளை சிரமேல் சுமந்துத் திரிந்த இறப்புச் சான்றிதழ் யார் மேலும் இனிப் பழியை சுமத்துவதாக இல்லை. யாருடைய துணையும் இன்றி தானாக இறந்துப் போக வேண்டும் என்னும் முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது. விழி மூடாமல் இருந்தால் எப்படி உயிர் வாழ்வது. பிறந்ததிலிருந்தே விழிகள் மூடுவதில்லை. அக்குறையை அந்த ஆண் கொடுத்திருக்கிறான். ஆண் ஈன்றதல்லவா குறைப் பிரசவமாகத் தான் இருக்கும். இமைகள் மூடவில்லை. வன்மத்தின் விளைவாகப் பிறந்ததால். இரக்கம் நெஞ்சமெங்கும் ஊறிப்போய் கிடந்தது. ஆகையால், உலகிலுள்ள அநியாயங்கள் அனைத்தையும் பார்க்கும் பாக்கியம் அதற்குக் கிடைத்தது. இரவில் தூக்கமில்லை. கண்கள் விழித்தே இருக்கும். யாரும் அதனுடைய திருஷ்டியை மூட முடியாது. அதன் முன்னால் எதுவும் ஒளிவு மறைவாய் இல்லை. எல்லாம் வெட்ட வெளிச்சமாய் இருந்தன. ஆகையால் அது அநியாயங்கள் பார்த்தப் போதெல்லாம் அழத் தொடங்கியது. அநியாயத்தில் பிறந்த அது தூசிகளை நிரந்தரமாக விழிகளில் ஏற்க ஆரம்பித்தது. அதனுடைய உள்மனம் உறங்காததால், அதன் வெளிக்கண்களும் திறந்தே கிடந்தன. அது நிரந்தரமா துன்பத்திற்கு உட்பட்டதாக இருந்தது.
photo: pixabay.com
அது ஒரு சாபப்பிறப்பு என்று உறுதியாகச் சொல்ல வேண்டும். இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கழிப்பறைகள் வந்து விட்டன. இனித் திறந்த வெளி கழிப்பிடம் இல்லை என்றப் பிரகடனம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால் அது நடந்தது. நாம் ஒரு தகவலை இப்போது மனதில் ஏற்றாக வேண்டும். நமது தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த 150 ஆம் நினைவு அக்டோபர் 02, 2019 அன்று அனுசரிக்கப்பட்டது. அன்றுத் தான் நமது நாடானது திறந்தவெளி மலங்கழிப்பு இல்லாத நாடாக மாறியது. அதற்குப் பின்னால், இறப்புச் சான்றிதழ் தன்னுடைய பிறப்பிற்கானத் தொடக்கத்தை அமைத்திருக்கலாம். அதாவது அக்டோபர் 14, 2018 அன்று இறப்புச் சான்றிதழ் தன்னுடைய அவதாரத்திற்கான பிள்ளையார் சுழியை அமைத்துக் கொண்டது. அது சற்று காத்திருந்திருக்கலாம். ஓராண்டு கழித்துப் பிறந்திருக்கலாம். ஓராண்டுக்கு 12 நாள் குறைவாக. அப்படிப் பார்த்தால் ஓராண்டு கூட இல்லை. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கழிப்பறை வரவில்லை என்பதை, 2019 ஆம் ஆண்டின் பிரகடனமானது உறுதிப் படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். அப்படியானால் தர்க்கவியல் படி, அதற்கு முன்னால், திறந்த வெளி கழிப்பிடங்கள் இருந்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக 2018, அக்டோபர் 14 ஆம் தேதி இருந்திருக்கிறது. அன்று தான், பிகாரில், ஒரு கிராமத்தில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த அச்சிறுமி கரும்புத் தோட்டத்திற்கு சென்றிருக்கிறாள். அங்கே சொந்த ஆசிரியரால் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அப்பொழுதில், இறப்புச் சான்றிதழ் தன்னுடைய பிறப்பிற்கான அச்சாரத்தைப் பெற்றுக் கொண்டது. இறப்புச் சான்றிதழ் தன்னுடைய அச்சாரத்தைப் பெற்றுக் கொண்ட இடம் சரியில்லை, காலமும் சரியில்லை. சரியான இடமும் அமையவில்லை, சரியான காலமும் அமையவில்லை. ஓராண்டுப் பொறுத்திருந்தால், அதன் பிறப்பு சுமுகமாக அமைந்திருக்கும். தனக்குத் தானே பழியை ஏற்றுக் கொண்டது போல் ஆயிற்று. வரங்களைப் பெற்றுக் கொண்டுப் பிறக்க வேண்டிய அது சாபங்களைப் பெற்றுக் கொண்டுப் பிறந்தது. சாதாரணமாக இறப்புச் சான்றிதழ் ஏராளமான வரங்களைச் சுமந்துக் கொண்டு தான் பிறக்கும் என்பதை நாம் அறிந்திருப்பது நல்லது. பிள்ளைகளுக்கு வாரிசுரிமையைக் கொடுக்கும். இறந்தவரின் மீது, பிறருக்கு சொத்துரிமையைப் பெற்றுக் கொடுக்கும். இப்படி இழப்பில் பெரும் நன்மைகளை சுமக்கும் முரணின் அடையாளம் இறப்புச் சான்றிதழ். ஆனால், இந்த இறப்புச் சான்றிதழுக்கு அந்த பாக்கியம் வாய்க்கவில்லை. காரணம் இரத்தம் சுமப்பதால், அது தோன்றுவதற்காக அமைத்துக் கொண்ட பாதை எல்லாம் தப்புத்தப்பாய் அமைந்தது.
பிறப்புக்கான அடுத்த கட்டத்தை அது பிப்ரவரி 17, 2022 அன்று அமைத்துக் கொண்டது. வன்மத்தை ஏற்படுத்தியவனுக்காக அது பொறுப்பேற்க முயன்றது என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவு கெடுதலானப் பிறப்பு அதற்கு. மாளிகையில் பிறக்கும் பாக்கியம் எல்லா இறப்புச் சான்றிதழ்களுக்கும் வாய்ப்பதில்லை. வீதிகளிலும், தண்ணீரிலும், அனாதை இல்லங்களிலும் என அது தனது பிறப்பிடத்தை அமைத்துக் கொள்கிறது. அவை காரணத்தை அமைத்துக் கொள்ளும். குறைந்த பட்சம் கொசு கடித்து ஏற்பட்ட நோயால் இறந்தது என்றாவது சொல்லலாம் (கொசுவை நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கொசுக்களால் தான் அதிகம் பேர் இறக்கிறார்களாம். கொரோனா பொறுத்துக்கொள்ள வேண்டும்). ஆனால் நம்முடைய பிறப்புச் சான்றிதழானது தனது பிறப்புக்கான காரணத்தைக் கூட அறிந்திருக்கவில்லை. அது இரு புகைப்படங்களை நம்பிக் கொண்டு தனது பிறப்பை ஏற்படுத்திக் கொண்டது. அவமானம் சுமப்பதற்கு அளவில்லையா? அவமானம் பெருத்த அவமானம். விறகு அடுக்கப்பட்டு, கண்மூடி இருக்கும் மனிதனின் முகத்தை நம்பிக்கொண்டு பிறந்தது நமது இறப்புச் சான்றிதழ். ஒரு புகைப்படம் குளோஸ் அப், இன்னொன்று லாங்க ஷாட். அதில் அம்மனிதனின் முதியவரான அப்பா சட்டைப் போடாமல் நிற்கிறார். பிணமாக நடித்துக் கிடந்த மனிதன் சட்டைப் போட்டானா என்றுத் தெரியாது. உடலை முழுவதும் விறகல்லவா மறைத்துக் கொண்டது. நாசமாப் போன விறகுகள். அதை நம்பித்தான், இறப்புச் சான்றிதழ் பெரிதும் ஏமாந்து போய் விட்டது. அதற்கு சந்தேகம் வராமல் இல்லை. அவனுடைய மூக்கில் பஞ்சு வைக்கப்படவில்லை. தமிழ்நாட்டு முறைப்படி, நெற்றியில் ஒரு ரூபாய் துட்டு வைக்கப்படவில்லை. ஒருவேளை வட இந்தியா ஆனதால் அது நடந்திருக்காது. கலாச்சாரத் திணிப்பை இறப்புச் சான்றிதழ் வெறுத்ததால், ஒற்றை ரூபாய் துட்டும் மூக்கில் இல்லாத பஞ்சும் ஏற்படுத்திய சந்தேகங்களை புத்தியால் புறந்தள்ளியது. உள்ளுறுத்தல்களாக வந்தாலும், அவற்றிற்கு தீனிப் போட்டு வளர்க்கவில்லை.
ஆனால் அதன் முன்னால் பெருந்நோக்கம் ஒன்று இருந்தது. அது தன்மானத்தைக் காப்பாற்றுதல். ஒரு மனிதனின் தன்மானத்தைக் காப்பாற்றுதல். அதற்காக அது உடந்தையாகிப் போய் விட்டது. அதனிடம் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். நீர் பிறந்தாக வேண்டும். உன் பிறப்பின் அர்த்தம் மிக உன்னதமானது என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் அது பிறப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அது வேறு கதைகளைக் கேட்கவில்லை என்றே நாம் சற்றே அதற்காக மனம் இளகி சொல்ல வேண்டி இருக்கிறது. அது ஏன் அவனின் தன்மானத்தை காப்பாற்ற வேண்டும் என்று அது கேள்வி கேட்டிருக்க வேண்டும். அதை கேட்க அது தவறியது. சில மனிதர்களும் இப்படித்தான். ஒருதலைப்பட்சமாக கதைகளை கேட்டு செயலில் இறங்கி விடுவார்கள். மனிதர்களின் நோய் அதையும் பாதித்திருக்கிறது. என்ன செய்வது? காலங்காலமாக அது மனிதர்களுடனல்லவா சகவாசம் அமைத்துக் கொண்டிருக்கிறது. இனிப் பிறக்கும் இறப்புச் சான்றிதழ்கள், பல கதைகளைக் கேட்டுப் பழக வேண்டும். பிறகு தங்களுக்கென ஒரு கதையை உருவாக்கிக் கொள்ளட்டும். தனக்கென ஒரு கதையை உருவாக்காமல், அந்த நீரஜ்... (பெயரின் இரண்டாம் பகுதியை தவிர்த்தல் நன்று) என்ற மனிதரும் அவரின் தந்தை ராஜாராம் (இங்கேயும் பெயரின் இரண்டாம் பகுதியை தவிர்த்தல் நன்று) என்பவரும் சொன்ன கதையைத் தான் இறப்புச் சான்றிதழ் கேட்டிருக்கிறது. என்ன செய்வது, அதிகாரம், அறிவு, செல்வம் (அறிவு, வலிமை, செல்வம் போன்றவற்றிற்கான தேவதைகள் பொறுத்துக் கொள்ள வேண்டும்) சொல்லும் கதைகளுக்கு சுவாரசியமும் நம்பத்தன்மையும் அதிகமல்லவா. சிகப்பானவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போலவே. இறப்புச் சான்றிதழுக்கு பிழைகள் பல இடங்களில். திரும்பத் திரும்ப தவறில் அது விழுந்துக் கொண்டிருந்தது. 12 வயது பள்ளிக் கூட மாணவி, கரும்புத் தோட்டத்தில் எழுப்பிய குரல் ஏனோ இறப்புச் சான்றிதழின் செவிகளை எட்டவில்லை. ஒருவேளை அது குடிசையாக இருந்ததால் இருக்கலாம். கதவுளில்லாத, இருண்ட அறையில், கயிறு கட்டில் கிடக்கும் வீடு. அப்பா 1700 கிலோ மீட்டர் தாண்டி, தென் மாவட்டத்தில் சுமை சுமக்கும் தொழிலாளி. சுமைத் தொழிலாளி, அதுவும் மொழி தெரியாத வந்தேறி என்னும் பெருஞ்சுமை சுமக்கும் தொழிலாளி. அவரின் குரல் எங்கும் ஒலிப்பதில்லை.
ஆனால், இறப்புச் சான்றிதழ் சுய கவுரவத்துடன் இறக்கவில்லை. 12 வயது நிரம்பிய (2018 ஆம் ஆண்டில்) அப்பெண்ணின் தாய் அதற்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்றுத் துணிந்தாள். அதை விட்டுவைப்பதாய் இல்லை. கால் கடுக்க நடந்தாள். பெண் அல்லவா. நூற்றாண்டுகளின் ஆணாதிக்க வன்மத்தை ஏற்ற மரபணுக்கள் சுமந்து நடப்பவள் அல்லவா. அவள் விடுவதாய் இல்லை. கண்ணில் தூசிப் பட்டு கண்ணீர் சிந்திச் சிந்தி சுயம் அழியலாம் என்று நீ தன்மானத் திமிரில் நடக்கிறாய் என்றால், உன்னுடைய தன்மானத்தை கிழித்துத் தொங்க விடுவேன் என்று துணிந்தாள் அப்பெண்மணி.
இறப்புச் சான்றிதழ்கள் ஏற்படுத்திய வேலிகள் எல்லாம் அத்தாயால் உடைத்தெறியப் பட்டன. அவன் வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டான். முகத்தையும், குடும்ப கவுரவத்தையும் மூடிக் கொண்டிருந்த இறப்புச் சான்றிதழை கிழித்தாய் அத்தாய். அது நார்நாராய் கிழியத் தொடங்கியது. இப்போது இறந்தவன் உயிர்த்தெழுந்து சிறை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான். தேதி சொல்லி விடுகிறேன். ஜனவர் 09, 2023. பதினான்கு ஆண்டுகள் அங்கே இருப்பானாம். யாருக்குத் தெரியும் சில ஆண்டுகள் கழித்து அவனுக்கு ஆரத்தி எடுத்து 'வாகை' (தமிழ்த்தாயே மன்னிக்க வேணடும்) மலர் சூடி வரவேற்கலாம் கிராமம்.
0 கருத்துகள்