வஞ்சக சாம்ராஜ்யம் | அ. சந்தோஷ்

வஞ்சம் எனக்குள் நஞ்சாய் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் நான் அதைப் பொருட்படுத்தாமல் நடந்துக் கொண்டிருக்கிறேன் என்று மட்டும் தெரியவில்லை. அது மேலிலிருந்து கீழ் வரைக்கும் இறங்கிக் கொண்டிருந்தது. அதை வெளியேற்ற நான் முயற்சி எடுக்கவும் இல்லை. அது என்னை அழித்து விட நான் அனுமதித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்தும் அறியாதவனாய் நடந்துக் கொண்டிருக்கிறேன்.  காதுகள் வழியாக உள் நுழைந்த சொற்பமான எழுத்துக்களின்  மேல், சில பார்வைகள் வெளிப்படுத்திய சிறு அதிர்வுகளின் மேல், புறம் காட்டிச் சென்ற ஓரிரு உடல் மொழிகளின் மேல்,  மாபெரும் விஷ சாம்ராஜ்யத்தையே கட்டி எழுப்பிக் கொண்டிருந்தேன் அது சிறிதாய் உள்நுழைந்து மாபெரும் வஞ்சகமாய் உருவாகிக் கொண்டிருப்பதற்குத் தேவையான, அனைத்தையும் எனது நினைவுகளும் வாசிப்புகளும் கொடுத்துக் கொண்டிருந்தது. நினைவுகளை வெறுத்து ஒதுக்குவதற்குப் பதிலாக நான் அவற்றிற்கு தாலாட்டுப் பாடி எசப்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தேன். 

photo: pixabay.com

நான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தில், பிரஜைகளுக்குப் பஞ்சமில்லை. இழித்துரைத்தவர்கள், பழித்துரைத்தவர்கள், அடித்தவர்கள், இடித்தவர்கள், மிதித்தவர்கள், ஒதுக்கியவர்கள், கோர முகம் காட்டி அச்சுறுத்தியவர்கள், ஆயுதங்களால் மிரட்டியவர்கள், திட்டமிட்டுச் சதி செய்தவர்கள், என்னைப் புறந்தள்ளி மற்றவர்களுக்கு வாய்ப்பளித்தவர்கள், சிறுவயதில் சீண்டியவர்கள், பாலியல் நப்பாசைகளுக்காக பால்யப் பருவத்தில் சீண்டியவர்கள் எனப் பட்டியல் நீண்டதால்,  வஞ்சக சாம்ராஜ்யத்தின் பிரஜைகளுக்கு பஞ்சமில்லை. பத்து தலை நாகப்பாம்பென அதன் நடுவில் வஞ்சக ராஜாவாக எனது சுயம் ஆசனம் போட்டு அமர்ந்திருந்தது. பிரஜைகளை சேர்ப்பது சுய அழிவுக்கான புதைக்குழிகள் என்பதை அறிந்தும் அறியாதவன் போல் சுயம் அவ்விடத்தில் அவ்விடத்தில் அமர்ந்திருந்தது. அதில் சுகம் காண்பதில் ஏனோ மனம் அலாதி சுகம் கண்டுக் கொண்டிருந்தது. அதன் சுகத்தைத் தடுத்தாக வேண்டும் என்னும் அன்பின் உறுத்தல்கள் எதுவும் குரல் எழுப்பிப் பேச முடியாதவாறு குரல் வளை நெரிக்கப்பட்டு செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தது. வஞ்சக சாம்ராஜ்யத்தில் எனது பிரியமானவர்கள் கூட இடம் பிடித்து விட்டார்கள் என்பதை நினைக்கையில் சாம்ராஜ்யத்தின் மதில் சுவர்கள் எல்லாம் அதிர்ந்துக் கொண்டிருந்தன. அதிர்ச்சியை சுயம் கண்டும் காணாதது போல் இருந்தது. அதிர்விலும் அது சுகம் காண்கிறது என்றால், அது அருந்தி இருக்கும் விஷத்தின் அளவை யாரால் தான் யூகித்துப் பார்க்க முடியும். எனக்காய் உயிர் கொடுப்பதாய்ச் சொன்னவர்களையும் நான் பிரஜைகளாக்கிக் கொண்டேன். அவர்களுக்கு எதிராச் செய்வது  கொடுங்கோன்மை என்பதை நான் அறியாதவனல்ல. ஆனால், அதன் சுகத்தில் திளைப்பதில் ஏதோ பெரும் குழப்பம் நிறைந்த, வலி நிறைந்த பூரிப்பு. என்னுடைய உடன் பிறப்புகளையும், என்னுடையப் பெற்றோரையும் நான் அந்த கூட்டத்தில் சேர்த்துக் கொண்டேன். அவர்கள் அனைவரும் வஞ்சனையின் விஷத்தின் பலங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றில் கொல்ல வேண்டும் இல்லையென்றால் சுதந்திரமாக நடக்க விட வேண்டும். இரண்டையும் செய்வதாய் இல்லை. சித்திரவதை செய்வதால் ஏற்படும் சுகங்களில்  சுயம் இருக்கையில் இருந்த வண்ணம் புழுவைப் போல நெளிந்துக் கொண்டிருந்தது. பழுத்து அவிந்து போன புண்கள் மீது நெளியும் புழுக்களைப் போல அது நெளிந்துக் கொண்டிருந்தது. அது சுய அழிவின் பெரும் சதிக்குழி என்பதை அது அறிந்தும் செய்துக் கொண்டிருந்தது என்பது தான் விசித்திரமாக இருந்தது. நான் என் உறவினர்களையும் அடிக்கடி பிரஜைகளாகச் சேர்த்துக் கொண்டேன். 

சாம்ராஜ்யம் கட்டி எழுப்புவதை என்றுத் தொடங்கினேன் என்னும் நினைவு எனக்கில்லை. அது என்றுத் தொடங்கியிருக்கும்? அதற்கான முதல் வரைப்படத்தை நான் எப்போதுப் போட்டேன்? அதை யார் எனக்குப் போட்டுக் கொடுத்தார்கள்? அத உருவாக்குவதற்கான பண பலத்தையும், ஆள் பலத்தையும் யார் கொடுத்தார்கள்? எல்லாம் புதிர்கள். மாயஜாலங்களின் உலகில் உலவுவது போன்ற உணர்வு என்னைப் பீடித்துக் கொண்டது. அதற்கான முதல் கல் யார் எடுத்து வைத்தார்கள்? அக்கல்லை நானே எடுத்து வைத்துக் கொண்டேனா? எடுத்து வைத்தவனைக் கண்டிருந்தால் ஒருவேளை வஞ்சகம் தொடங்கியதற்கான நோக்கத்தை என்னால் புரிந்துக் கொண்டிருக்க முடியும். கற்கள் யார் போட்டார்கள் என்றுத் தெரியவில்லை. அக்கற்கள் எப்போது போட்டார்கள் என்றும் தெரியாது. அது எச்சங்களாக மரபணுக்கள் வழியாக வந்ததாகக் கூட இருக்கலாம். அதற்குத் தீனிப் போட்டு, தூபம் போட்டு வளர்த்திட வீட்டிலும், சுற்றத்திலும், பாட சாலைகளிலும் ஆலயங்களிலும் பலர் இருந்திருக்கலாம். அது வளர்ந்து வளர்ந்து இன்று, அதற்குள் பிரஜைகளை அடைத்து வைக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை அதில் நல்லவர்கள் என்று யாரும் இல்லை. கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. எல்லார் மேலும் வஞ்சனையின் விஷத்தைத் தோய்த்துப் பார்ப்பதில் என்னே சுகம். ஐயோ அதன் சுகமே தனி. நல்லவர்கள் என்று சுயம் சிலரை வெளியேற்றிக் கொண்டு சுயம் நல்லவனாக மாறிவிட பல வேளைகளிலும் யத்தனிக்கிறது. ஆனால் வெளியேற்றிய சில நொடிகளிலே, மீண்டும் பெரும் விலங்கணிவித்துத் திரும்பும் அழைத்து வந்து, மேலும் வீரியமிக்க விஷத்தை தேய்த்து விட்டு ரசிக்கிறது.

சாம்ராஜ்யத்தின் அழிவு ஏறைக்குறைய தீர்மானம் ஆகிவிட்டது என்றுச் சொல்வதில் தவறேதும் இல்லை என்பதே உண்மை. அதனால், எச்சரிக்கை மணி சுயம் தனக்குள்ளே சொல்லிக் கொண்டது. சாம்ராஜ்யத்தின் வீர அரியாசனத்தின் வீற்றிருக்கும் சுயத்திற்கு மட்டுமே இப்போது தூக்கம் தொலைந்த இரவுகள் கைகூடி விட்டன. பிரஜைகள் எல்லாம், சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் மேல் விஷத்தைத் தேய்த்து விடுவதற்காக அவற்றின் எட்டி உதைக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அவை காலம் பூராவும் தூங்கிக் கொண்டிருக்கும் போல. நான் தூக்கமின்றித் தவிக்க அவை மட்டும் தூங்கிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இப்போது விஷம் கொடிதாக மாறிக் கொண்டிருக்கிறது. எத்தகைய வஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறேன் என்னும் தெளிவற்ற நிலை என்னைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவ்விஷங்கள் யார் மேல் தேய்த்து விடுகிறேன் என்றுத் தெரியவில்லை. 

பிரஜைகள் எல்லாம் சுயம் தாங்கும் உடலின் உறுப்புகளாக சாம்ராஜ்யம் முழுவதும் விரிந்துக் கொண்டிருந்தது. பிரஜைகள் எல்லாம் உருமாறி இருக்கிறார்கள். எனது உடல் உறுப்புகளாக. அவர்கள் மறைந்து (மாறி) விட்டார்களா? அவர்களை விடுவித்தவர் யார்? அவைகளை நான் அல்லவா சிறைப்பிடித்து வந்து பிரஜைகளாக்கிக் கொண்டேன். என்னுடைய அனுமதி இன்றி அவர்களை யார் வெளியேற்றினார்கள். அவர்களை யார் அழைத்து வந்தார்கள்? அவர்களை யாரும் அழைத்து வரவில்லை. அவர்கள் பிரஜைகளே இல்லை. அங்கே நின்றிருந்தவர்கள் எல்லாம் எனது உறுப்புகள். நான் அவற்றின் மேல் விஷத்தை தோய்த்து வந்திருக்கிறேன். அவைகளுக்கான அழிவை நானே திட்டமிட்டுச் செய்துக் கொண்டிருந்திருக்கிறேன். இப்போது எல்லாம் அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. வஞ்சகம் என்னும் விஷம் என் தூக்கத்தை பறித்துச் சென்றது, எனது சுய நிதானத்தை கெடுத்து விட்டது. அது என்னை ஆட்டிப் படைக்கிறது. எனது அழிவு நிச்சயமாகி விட்டது. யாரோ சுயத்தைப் புதைப்பதற்கான, இல்லை என்னைப் புதைப்பதற்கான பிணக்குழியைத் தோண்டும் சத்தம் எழுந்துக் கொண்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்