முழுமைகள் இல்லையோ! அப்படி நம்பினால் வாழலாம் போல. கிழிசல்களும் சிதறல்களும் உடைபாடுகளும் இல்லா வாழ்வு இல்லை என்று நம்புவதே சிறந்தது. இது ஒருவிதமான சமரசம் என்று கூறவும் தோன்றுகிறது. சாத்தியமில்லாதவற்றை சரியெனக் காட்டிட புத்தி கையாளும் நூதனமான உத்தி என்று சொல்லுதலேத் தகும். அப்படிப்பட்ட சூழ்ச்சியை புத்தி செய்கிறது என்றே தான் வைத்துக் கொள்வோம். அதுவல்லவோ சவுகரியம் என்று தோன்றுகிறது. இல்லையென்றாம் ஏற்படும் வலிகளை எல்லாம் யார் தாங்குவார்? மனம் நிம்மதி அடைந்திட மனம் வகுக்கும் இப்பொய்யை ஏற்றுக் கொள்தலே சிறந்தது. அதி புத்திசாலி என காட்டிக் கொள்ளவும், அதீத நேர்மையை நிலைநாட்டவும் எத்தனித்து புத்தியின் நுணுக்கமான பிறழ்வுகளை சீர் செய்ய எத்தனித்தால் நிம்மதி தூரமாய் நின்று பல்லிளிக்கும்.
உடைபாடுகள் காட்டும் அகத்தின் பிம்பங்களில் இழப்புகளின் வலிகளும், வீழ்ச்சியின் சிராய்ப்புகளும் நன்றாய் தெரிகின்றன. உடைபாடுகளில் வாழ்வின் மர்ம முடிச்சுகள் தெரிகின்றன. உடைந்த முகக்கண்ணாடிகளின் சிதறல்களில் எத்தனை முகங்கள். முழுமையாய் காட்ட எதற்கும் திராணி இல்லைப் போல. அது அஞ்சுகிறது முழுமையாகக் காட்ட. முகத்தின் வரலாற்றுத் தொன்மங்களை எல்லாம் ஒரே நொடியில் காட்டி விட முடியாததால் அவை அஞ்சி நடுங்குகின்றன. துண்டுகளில் முகம் தெரிகிறது. கண்ணை காட்டுகிறது, இன்னொன்று மூக்கைக் காட்டுகிறது. சில துண்டுகள் மூக்கையும் கண்ணையும் காட்டுகிறது. முகம் சிதைந்துக் கிடக்கும் உணர்வு தோன்றுகிறது. முகத்தை முழுமையாகக் காட்டி, முகத்தின் சொந்தக்காரரை முழுமையாக விழுங்கி விட அது விரும்பவில்லை. எப்படித்தான் அம்முகத்தை அது விழுங்க முடியும். முகம் இறுமாப்பு கொள்கிறது. உடைந்து கண்ணாடித் துண்டுகளை முகம் ஏளனமாகப் பார்க்கிறது. சிதறிக் கிடந்தததால் முகத்தின் எல்லாப் பாகங்களையும் அதுக் காட்டுகிறது என்று சொல்லுதலே தகும். ஆனால் எதிலும் முழுமை இல்லை, அது தொகுப்பு. உடைபாடுகளை சேர்த்து வைத்துப் பார்த்தால், முகத்தில் கீறல்கள் விழலாம். அதுத் தேவையில்லை. சிதறியே கிடக்கட்டும்.
சிதறிய முகங்கள் அகத்தின் உடைபாடுகளை அப்படியேக் காட்டுகின்றன. நினைவுகளின் சிதறல்களை, உறவுகளின் சிதறல்களை, வலிகளின் சிதறல்களை, மகிழ்ச்சியின் சிதறல்களை, வாழ்க்கையின் சிதறல்களை, கல்வியின் சிதறல்களை என பட்டியல் போடலாம். சில துண்டுகள் முகத்தைத் திரித்துக் காட்டுகிறது, உறவுகளின் திரிபுகள் அவை. அரைகுறைப் புரிதல்களும், இடைவெளிகளில் நிரப்பப்படாத உறவுகளின் விரிசல்களை அது வெளிப்படுத்துகிறது. முகம் கோணலாய் போகிறது. சிலப் பகுதிகள் முகத்தை மிகைப்படுத்திக் காட்டுகிறது. மிகைப்படுத்தும் உறவுகளைப் பற்றியும் அவைக்குத் தெரியும் போல.
சிதறல்களில் வலிகள் வாழட்டும், மகிழ்ச்சிகள் வாழட்டும். முழுமையாக்கி வாழ்வை சிதைக்க வேண்டாம்...
0 கருத்துகள்