கதையின் ஆரம்பம்
நான் முற்றத்தில் கிடந்து அழுது புரண்டுக் கொண்டிருந்தேன். வயது நினைவில்லை. ஆனால் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்குவதற்கு முன்னால்தான் என்பது நிச்சயமாய்த் தெரியும். அடம்பிடிக்கவும் அழுது காரியங்கள் சாதிக்கவும் சிந்தைத் தெளிவுப் பெற்றிருந்ததால் நிச்சயம் அது நான்கு வயதாகத் தான் இருக்கும். வீட்டில் எல்லாரும் உண்டு, அப்பாவையும் மூத்த அக்காவையும் தவிர. முதலில் பயங்கரமாய் அழுதான். அக்கம் பக்கத்துக்காரர்களும் ரோட்டில் செல்பவர்களும் கேட்கும்படி உச்சத்தில் அழுதேன். நாய் பின்னங்கால்களால் பிராண்டி குரைப்பது போல், கைகளாலும் கால்களாலும் முற்றத்தில் கிடந்த மணலைக் கிளறி தடாபுடலென அழுதேன். வைராக்கியத்துடன் முழு ஆற்றலுடன் முழு உடலையும் பயன்படுத்தி புரண்டு பரண்டு அழுதேன். ‘அம்மா பிள்ள அழுதான்’ இரண்டாவது அக்கா சொன்னாள். ‘ஓ... அழுது முடிச்சு வரட்டும்’ என்று அம்மா அனாயாசமாகச் சொன்னாள். நான் அழுகையின் ஸ்தாயியை கூட்டினேன். இன்னும் குரூரமாக அழுதால் தான், கவனிப்பார்கள் என்று உள்மனம் சொல்லியது. கையில் மண்வாரி எறிந்தேன். சில கற்கள் வீட்டுத்திண்ணையில் விழுந்தன. ‘இப்ப வீடு தூத்ததுதான் உண்டு, மண்ணு வாரி எறிஞ்ச தொலச்சுப்போடுவேன்’ என்று அம்மா அதட்டினாள். பயம் வந்தது. கிழங்கு கிளறும் துடுப்பால் அடி கிடைக்க வாய்ப்புள்ளதால், அதைத் தவிர்த்தேன். ஆனால் அழுகையை நிறுத்தவில்லை. செடிகளுக்கிடையை மண் விழுமாறு வாரி இறைத்தேன். செடி விதைகளை மூடிப்போட்டிருந்த பனை ஓலைகளில் மண் விழுந்த சத்தம் கேட்க கோழிகள் பயந்து கூவிக் கொண்டு பபறந்தன. ‘ஆ கோழிய கல்லெடுத்தா எறியுதான். இவனுக்கு இண்ணு ரெண்டு குடுக்கணும்’ என்று அம்மா மீண்டும் சொன்னாள். ‘கம்பெங்க’ என்று கேட்பது என் செவியில் விழுந்தது. மண் எறிவதை நிறுத்திக் கொண்டேன். இனி அம்மாவைக் கோபப்படுத்தினால் அடி கிடைக்கும் என்பது நிச்சயமாய் தெரிந்தது. இதற்கு முன்னால் இது பல வேளைகளில் நடந்திருக்கிறது. புத்தி புத்திமதி கூறி, விவேகத்துடன் செயல்படத் தூண்டியது. ஆனால் அழுகையை நிறுத்துவதாய் இல்லை. அழுகைத் தொடர்ந்தது உச்சஸ்தாயியில். பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்க வேண்டும் என்னும் தீர்மானத்துடன் அழுதேன். ‘அழுக நிக்கலியா... சத்தம் வெளிய கேக்கக்கூடாது’ என்ற அம்மாவின் அதட்டல் வந்ததும் அமைதியாய் அழ வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன். ‘இண்ணு முழுசும் வேணும்னா அழு ஆனா சத்தம் வெளியே கேக்கக்கூடாது’ அம்மா தீர்மானமாகச் சொன்னாள். நான் அழுகையை நிறுத்தவதாய் இல்லை. புரண்டு அழுவதை நிறுத்தி எழுந்து உட்கார்ந்து ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தேன். இடையிடையே வீட்டில் இருப்பவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக, ஏங்கல் வரும் இடங்களில் குரல் எழுப்பினேன். இசைபோல், தாளம் மாறாமல் அந்த ஏங்கல் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. உடலெல்லாம் மண், மூக்கு வடிந்து கொண்டிருந்தது. சட்டை போடாத உடம்பில், கண்ணீரும், சகதியும் ஒட்டி ஏதோ செய்து கொண்டிருந்தது. யாரும் கண்டு கொள்ளவில்லை. அழுகையை நிறுத்தினால் தோற்றுப்போய் விடுவோம் என்னும் உணர்வு மேலொங்கியது. ஆகையால் எக்காரணம் கொண்டும் அழுகையை நிறுத்தக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். ‘பிள்ள வா’ என்று அக்கா சொல்வது கேட்டது. நான், அதை அழுகைக்கான அங்கீகாரமாகப் பார்த்து அழுகையை தீவிரமாக்க முயற்சித்தேன். ‘பாவம் பாத்து கூட்ப்பிட்டான். ஓவரா அழுற. சரி, அழுது முடிச்சு எழும்பி வா’ என்று சொல்லி விட்டு அக்கா வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டாள். துணைக்கு வந்த ஒருவரையும் அடம்பிடித்து விரட்டி விட்டேன். உடம்பெல்லாம் எப்படியோ ஆனது. இனி யாரும் துணைக்கு வரமாட்டார்கள் போல. மனம் போராட்டத்தைக் கைவிட சொல்லத் தொடங்கியது. ஆனால் கவுரவித்திற்கு என்ன ஆவது? ஆணவம் கொள்ளச் சொல்லியது மறுமனம். அழுது தொடங்கி இப்போது அரை மணிநேரம் முடிவடைந்திருக்கும். என்னை யாராவது தூக்கி எடுப்பார்கள், கொஞ்சுவார்கள், கண்ணீர் துடைப்பார்கள், எனக்கு ஆறுதுல் சொல்லுவார்கள்... என்ற நினைப்பெல்லாம் அஸ்தமிக்கத் தொடங்கின.
தங்கச்சிக்கென ஒதுக்கி வைத்திருந்த பண்டம் கிடைக்க பரணியில் கை போட்டதால் தொடங்கிய அழுகைப் படலம், இப்போது தீர்மானம் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. ‘நீ இண்ணு பூரா அழுதாலும் அந்தப் பண்டத்தில உனக்குப் பங்கில்ல. உடம்பெல்லாம் கொதிக்குது அதுக்கு. கொஞ்சம் உடல் தணுத்தா அது பண்டம் சாப்பிடும். அத உனக்குத் தர முடியாது’. அம்மா இம்மியளவும் அசைந்து கொடுப்பதாய் இல்லை.
‘பிள்ள எழும்பி வாடே, நேத்து ரெண்டு பேரக் கொண்ணவன் அந்தா ரோட்டில வாறான்.’ இரண்டாவது அக்கா சொன்னாள், நான் பயந்து ஓடிப்போய் அம்மாவுக்குத் தெரியும் விதத்தில் சமையலறையில் ஓரமாய் அமர்ந்தேன்.
கதையின் முடிவு
கூட்டம் தொடங்கி அரைமணி நேரம் ஆயிற்று. பொதுநலனுக்காகவும், மேல்நிலை ஊழியர்களின் மனம் நோகாமல் இருப்பதற்காகவும் நிர்வாகம் சீர்குலையாமல் இருப்பதற்காகவும் கடைநிலை ஊழியர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேச்சுக் போய்க் கொண்டிருந்தது. கடைநிலை ஊழியர்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் தலையசைத்து சொன்னவை சரியென ஒப்புக்கொண்டார்கள். பெரும்பான்மையினர் பிரச்சனைகள் வராமல் இருந்தால் நல்லது என, சமரசம் பேசி தங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொண்டார்கள். அருகில் இருப்பவர்களுக்கும் அந்த அறிவுரையை கூறி சாந்தப்படுத்தினார்கள்.
இந்த ஆண்டு நிறுவனத்தின் வருமானம் சென்ற ஆண்டுபோல் இல்லை; வெகுவாகக் குறைந்து விட்டது; லாபம் பெரிய அளவில் இல்லை என்பது நிர்வாகத்தில் குரலாக இருந்தது. ஆகையால், இவ்வாண்டு ஆண்டிறுதியில் கடைநிலை ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்க முடியாது என்பது அவர்களின் தீர்மானம். மேல் மட்ட ஊழியர்களுக்குக் கொடுத்துத்தான் ஆக வேண்டுமாம். அவர்கள் ஆண்டிறுதியில் செய்யும் ஷாப்பிங், புத்தாண்டு பார்ட்டிகள் எல்லாம் பாதிப்படையும். போனஸ் இல்லை என்று கிசுகிசுப்புகள் ஆரம்பமான போது ஓரிரண்டு பேர் உரிமையாளரிடம் சென்று தங்களது நிலைமைகளை எடுத்துக் கூறி அழுதிருக்கிறார்கள். குறிப்பாக, புதிய ஆடை அணிந்து பார்ட்டிக்குச் செல்லவில்லை என்றால் தங்கள் கவுரவம் போய்விடும். வாட்ஸ்அப் குழு இழிப்பேச்சுக்களின் தளமாக மாறிவிடும். வரும் புத்தாண்டு கேவலமாய்ப் போய்விடுமாம். ஆகையால் தங்கள் குடும்பம், பிள்ளைகள் ஆகியோரை கருத்தில் கொண்டு தங்கள் போனசிஸ் கைவைக்கக் கூடாது என்று கூறி அழுதார்களாம்.
photo: pixabay.com
இதனால்தான், உரிமையாளர் நிலைமையைப் பற்றி அரைமணிநேரமாக கடைநிலை ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர்களுடைய அழுகையின் குரலுக்கு பதில் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தனக்குள்ளதாகப் பேசினார். ஆகையால் கடைநிலை ஊழியர்கள் தியாகம் செய்தாக வேண்டும். நிறுவனம் முக்கியம் என்றார்.
நான் உள்ளுக்குள் சிரிக்கத் தொடங்கினேன். நான்கு வயது சிறுவனின் அரைமணி நேர அழுகையை அலட்சியம் செய்த அம்மா மனத்திரையில் நின்றாள்.
கடைநிலை ஊழியர்கள் தங்களுக்கான போனசை விட்டுக் கொடுக்க முடியாது என்று நான் துணிந்து நின்று பேசத் தொடங்கினேன். உயர் மட்ட ஊழியர் பெருந்தொகை பெறும் போது, கடைநிலை ஊழியர்களுக்கான சிறுதொகையை கொடுத்தாக வேண்டும். உங்கள் கவுரவித்திற்காக எங்கள் உரிமைகளை இழக்க முடியாது என்பதை தீர்மானமாய் உணர்த்தினேன். நிறுவனத்தின் இழப்புகளை சரிசமமாய் சுமப்போம். என் கடைநிலையை முதலீடாகப் பார்த்து அதில் கண்ணீரால் அபிஷேகம் செய்து, தந்திரபூர்வமாக கொள்ளை அடிக்க விட மாட்டேன் எனக் கூறினேன். மாற்றுச் சிந்தனை கடைநிலை ஊழியர்கள் மனங்களில் தீப்பொறி பற்ற வைத்தது. பலரும் பேச ஆரம்பித்தார்கள். வேண்டும், வேண்டும் என்ற உரிமைக் குரல் ஓங்கவே, அழுதவனின் கண்ணீர் எந்த சிரத்தையையும் பெறவில்லை. அது முதலைக் கண்ணீர் என உறுதியாய் உணர்ந்தனர். கூட்டம் முடிந்தது.
கூட்டத்தின் முடிவு உயர் தரப்பினரிடையே பரவி விவாதமாக மாறி, புலம்பல்களாய் பரிணமித்து, வெதும்பல்களாய் கண்ணீராய் மாறி, பெருங்கதறலாய் விழிநீர் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
அதில் கால் அலசி, தூசுக்களை களைய துணிவோமே தவிர உரிமைகளை விட மாட்டோம் என உறுதியாய் நின்றோம்.
அழுக்கிலே வாழ்ந்தவன் கொஞ்சல் உடல் அலசி எழும்பலாம் என நினைக்கும் போது, தூசு படாமல் இதுவரை வாழ்ந்தவர்கள் உடலில் சிறு தூசு படும் போது வெகுண்டெழுகிறார்கள், இங்கு மட்டுமல்ல, எல்லாத் தளங்களிலும்... அரசியல், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, ஆன்மீக நிறுவனங்கள் என...
0 கருத்துகள்