அழகை வெறுக்கும் நசுங்கிய உள்ளம் | அ. சந்தோஷ்

 நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அத்தாய் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் இரவு எட்டரை இருக்கும். தொலைக்காட்சியில் பிள்ளைகளுக்கான பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் பெயர் மனதில் ஒட்டவில்லை. காரணம் மனதை ஆக்கிரமித்து சிந்தனையை கிறங்கடிக்கும் இன்னொரு விமர்சனம் அத்தாயின் வாயிலிருந்து வந்தது. அதற்கு எதிரான வாதங்களை உடனே நான் முன்வைத்து, அது தவறில்லை என உணர வைக்க முன்னெடுத்த முயற்சிகள் தோல்விகள் தழுவின. நான் வாதங்களை முன்னெடுத்த அதே வேளையில் அவரும் தனது வாதங்களை இணையாக முன்னெடுத்ததால் செவிகளுக்கு வேலையில்லாமல் போய் விட்டன. தொலைக்காட்சிப் பெட்டிகளில் வரும் நீண்ட நேர விவாதங்களின் பலனாகக் கூட இருக்கலாம். வாய் பேசும் போது செவிகளுக்கு இடம் கொடுக்காதத் தன்மை இன்று அறிவுசார் வட்டங்களிலும் வளர்ந்து வருகிறது என்று கூறுவதில் மிகையில்லை என்றே கூறலாம்.

பாடல்களுக்கான மதிப்பீடுகளை முன்வைக்கும் நடுவர் குழுவில் ஒரு பெண் மட்டுமே இருந்தார். நிகழ்வுகளில் பெண்கள் இல்லையென்றால் அலங்காரம் குறையும் என்ற பொது நம்பிக்கை நிலவுகிறது போலும். அதனால் ஒருவரை கண்டிப்பாக அமர வைப்பார்கள். சில நிகழ்வுகளில் அவருக்கு மதிப்பெண் வழங்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது சற்று அல்ல மிகுந்த நெருடல் ஏற்படுகிறது மனதில். அவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். நேரில் அல்ல ஊடகங்கள் வழியாக. அவருடைய பாடல்களும் குரலும், தோற்றமும் பழக்கப்பட்டுப் போயிருந்ததால் அவர் எந்த விதமான உணர்வு வித்தியாசங்களையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை. அழகாகத் தோன்றினார். பேச்சிலும், பேசும் விதத்திலும், பயன்படுத்திய மொழியிலும் மிகவும் முதிர்ச்சி நிறைந்தவராக இருந்தார். மொழியில் வன்மம் எதுவும் வெளிப்படவில்லை. பதினைந்து வயதினருக்கு குறைவான பிள்ளைகள் பங்கேற்கும் நிகழ்வில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஊக்கமூட்டுவதாகவும், பிள்ளைகளின் இதயத்தை இதமாய் தொட்டு வருடி மாற்றம் ஏற்படுத்துவதாயும் இருந்தன. அவரின் பேச்சில் எவ்வித நெருடலும் தென்படவில்லை. மொழி மிகவும் மென்மையாய் இருந்தது. கனி இருப்பக் காய் கவர்ந்தற்று” என்னும் குறள் அவருடைய வாய்மொழிகள் வழியாக மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.


photo: pixabay.com

அவருடைய தோற்றம் அழகாக இருந்தது. நெற்றியில் விழிகளுக்கு மேல்வரை துண்டிக்கப்பட்ட முன்முடி பரந்திருந்தது. கூந்தல் சற்றே வண்ண மூட்டப்பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கு இரசிக்கும்படி இருந்தது. பெரிய மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தார். குரல், தோற்றம், மொழி எல்லாம் ரம்யமாய் இருந்தன.

ஆனால் நாற்பதைத் தாண்டியத் தாய்க்கு அவரின் தோற்றம் பிடிக்கவில்லை. விமர்சனத்தைக் கடுமையாக வைத்தார். மொழியில் பெரும் வன்மம் பிறந்தது. இது என்ன உருவம் என்ற வன்மொழியுடன் விமர்சனம் ஆரம்பமானது. உருவத்திற்கு வேறு அடைமொழிகளும் சேர்த்துக் கொண்டார். அவை அனைத்தும் மனிதரைக் குறிப்பதாய் இருந்ததில்லை. அமானுஷிக வெறுக்கத்தக்க, இருப்பதாக (சிலர்/பெரும்பான்மையினர்நம்பும் ஆவிகளைக் குறிப்பதாய் அவ்வார்த்தைகள் வெளிவந்தன. மனிதம் தொலைத்த வார்த்தைகளுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. மனித நேயமற்ற, நெஞ்சில் இரக்கமற்ற வார்த்தைகளாக அவை இருந்தன. ஒருவரின் தோற்றம் அவரை மனிதர் அல்லாமல் ஆக்கி விடுமோ? இல்லையென்றால் அவரை மனிதராகப் பார்க்காமால் இரண்டாம் நிலை மனிதராக பார்க்க வைத்துவிடுமோ?

தலைக்கு எண்ணெய் பூசி பிசுபிசுத்துப்போய் இருக்கும் கூந்தல் அழகானது என்ற போக்கு அத்தாயின் மனதில் ஓடிக்கொண்டிருந்து என்பது அவர் தொடர்ந்து சொன்னவற்றிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. பிசுபிசுப்பான கூந்தலை பிள்ளைகள் விரும்பவில்லை, அதில் ஒருவிதமான நாற்றம் வரும் என்பது இன்றைய பிள்ளைகளின் பொது வாதம். உண்மையாக இருக்கலாம். அதனால் முந்தைய காலத்தில் கூந்தலுக்கு மணம் சேர்க்கும் பூக்களை அணிந்தார்கள் என்று கூட சொல்கிறார்கள். அவர்கள், ஆராய்ந்து சொல்கிறார்களா என்பது தெரியவில்லை. அதில் உண்மை இல்லாமல் இல்லை என்றே தென்படுகிறது.

முடியை அழுகுப்படுத்தி, சிக்கில்லாமல், பிசுபிசுப்பில்லாமல் காக்க வேண்டியது கல்லூரி செல்லும் பிள்ளைகளின் தலையாய கடமையாக இருக்கிறது என்பதை அவர்கள் கூறுகிறார்கள். அம்மா எண்ணெய் தேய்த்து, தலையோடு ஒட்ட வைத்து வாரிக்கட்டிப் போட்டு, பூ சூடி விட்ட கூந்தலை சகிக்காமல், பக்கத்தில் இருந்தவள் இதென்னடி தலையில நாத்தம் என்று  விலகிச் சென்று கேவலப்படுத்தினாள் என பெரும் வேதனையோடு ஒருவர் விவரித்தது நினைவில் இருக்கிறது.

அத்தாயின் வசைமொழிக்கு பதில்கள் இல்லை எனலாம். வித்தியாசமாய்த் தோன்றுவதும் இன்று சிக்கலாக சிலருக்குத் தோன்றலாம். உடை அலங்காரத்தில், சிகை அலங்காரத்தில், நடந்து வரும் விதத்தில், நண்பர்களோடு பேசிக் கொள்ளும் முறையில், ஆண் பெண் சரிசமமாக நின்று பேசும் சமத்துவத்தில் இன்று பலருக்கு உடன்பாடு இல்லை. அதுவும் பெண்கள் என்றால் கிஞ்சித்தும் தாங்கிட இயலாத நசுங்கிய உள்ளத்துடன் வாழ்கிறது பெரும்பான்மையான சமூகம். நசுங்கிய உள்ளம் சிதைந்து நார் நாறாகத் தொங்கிட பெண்பிள்ளைகளின் சிறு சிறு அசைவுகளே போதுமானதாக இருக்கிறது.

அது தொங்கட்டும். நீங்கள் அழகுடன் வாழுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்