தலையில்லா மனிதர்கள் | அ. சந்தோஷ்

 அந்த மனிதன் தலையில்லா மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்தான். இயந்திர மனிதர்கள் அல்ல, சதையும் எலும்பும் தோலும் உடைய மனிதர்கள். மனிதர்கள் என்று அழைக்கலாமா என்றால், பகுத்தறிவு உடையவர்களால் அப்படி அழைக்க முடியாது. ஆனால் அந்த மனிதன் தலையில்லா அந்த மனித உயிர்களை மனிதர்கள் என்று தான் அழைத்தான். அதுதான் அவனுடைய பார்வையில் உண்மையான மனிதர்கள். அவன் சொல்வது தவறு என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அதுதான் தன் இருப்புக்கு சாதகமாக இருந்தது. ஆகையால் தலையில்லாதவர்களை மனிதர்கள் என்று அழைக்க கற்பித்தான். அதுவே உண்மையான மனிதர்களின் அடையாளம் என உரைத்தான்.  

ஒன்று சொல்ல மறந்து விட்டது. பகுத்தறிவுவாதிகள் இப்போது இல்லை. அவர்கள் தலையுள்ளவர்களாய் இருந்ததால், அவர்கள் தன்னைப் போல் இருக்கிறார்கள் என்று சொல்லி தலையில்லா மனிதர்களை வைத்து அழித்து விட்டான். மற்று சிலரை மிரட்ட வைத்து தங்கள் தலைகளை பயன்படுத்துவதில்லை என்று அவர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றுக் கொண்டான். மேலும் தங்கள் தலைகளை மூடிக்கொண்டு எவ்வித அடையாளமுமின்றி வாழ அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.  தலையை மூட மறுத்தால் உயிர் இருக்காது என்று அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தலையில்லாமல் எதற்கு வாழ்வு என்று சுய கவுரவத்தை உயிரை விட மேலாக மதித்தவர்கள் உயிர் துறக்க தயாரானார்கள். அவர்களை அழிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை. அதை எல்லாம் தலையில்லா மனிதர்கள் கச்சிதமாக செய்து முடித்தார்கள். தங்களைப் போல் அல்லாமல் அவர்கள் தலையுடன் இருந்ததால் அவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தார்கள். ஆகையால் வித்தியாசமாக இருந்தவற்றை அழிப்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது.

எப்படி தலையில்லாத மனிதர்களை உருவாக்குவது என்ற பயிற்சியை அம்மனிதன் பெற்றிருந்தான். அதற்கான பயிற்சியை அவனுடைய ஒத்த இயல்புடைய முன்னோர்கள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். இன அடையாளம் சார்ந்த பெருங்கதையாடல்கள் கட்டமைக்கப்பட்டு, அதை நம்ப வைக்க சில பல குறியீடுகளும் வடிவமைக்கப்பட்டன. குறியீடுகள் எல்லாம் தலையில்லா மனிதர்களின் உடல்களில் பச்சைக் குத்தி விடப்பட்டன. அடிக்கடி அக்குறியீடுகளைப் பார்த்து புளகாங்கிதம் அடையை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்ப்ட்டது.  


photo: pixabay.com

சிக்கல் என்னவென்றால், இப்போது தலையில்லா மனிதர்கள் எங்கும் பரவி, தலையில்லாமல் இருப்பவர்தான் மனிதர்கள் என்று சொல்லித் திரிகிறார்கள். அப்படி வாழ்பவர்கள்தான் மனிதர்கள் என்று நம்ப வைக்க, நீண்ட நேரம் பேசுகிறார்கள். தலையுடையவர்கள் மனித இனத்தின் எதிரிகள் என்னும் பிம்பத்தை கட்டியெழுப்புகிறார்கள். தலையுடைய மூதாதையர்களின் பிம்பங்களை எல்லாம் திட்டமிட்டு அழித்தும் வந்தனர்.

தலையுடைய மனிதன் இப்போது, சுலபமாய் தலையில்லாதவர்களை சுரண்டுகிறான். ஆனால் அதை தலையில்லாதவர்கள் உணரவில்லை. காரணம் தங்கள் இனக்கவுரம் பாதுக்காக்கப்படுவதாய் உணர்ந்தார்கள். தலையுடையவன் தனது பிம்பத்தை வளர்த்துக் கொண்டே இருந்தான். தனது காவல் மதில் சுவர்களை உயரமாக கட்டியெழுப்பிக் கொண்டு இருந்தான். அதன் மேல் ஏறி நின்றவாறு தலையில்லாதவர்கள் இனத்தின் அடையாளங்களைக் காக்க பாடுபடுவதை புகழ்ந்து மெச்சி பெரும் உரைகளை நிகழ்த்தினான். அவ்வுரைகளை கேட்டு தலையில்லாதவர்கள் ஆட்டம் போட்டார்கள். தலையுள்ளவர்கள் யாராவது முளைத்தால், அவர்களை கணகச்சிதமாய் அழித்து விட்டனர். அதை தன் தலைவனுக்காய் செய்ததாகக் கூறித் திரிந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாதவாறு தலைவன் பார்த்துக் கொண்டான்.

அவன் அழிக்க முடியா பெரும் சக்தியாக உருமாறிக் கொண்டிருந்தான். அதற்கான எல்லாப் வேலைகளையும் தலையில்லாதவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்கள், சகோதரிகள், உடன்பிறப்புகள், உறவினர்கள் அனைவரையும் பலி கொடுத்து அந்த மாபெரும் பிம்பத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். தலையுள்ளவர்கள் குரல் எழுப்பினால், அவர்களை அழிப்பதற்கான ஆயுதங்களை தலைவனே செய்து கொடுத்தான்.

இன அடையாளம் பெரிதாய் உயர்ந்து கொண்டே சென்றது. இரத்தம் சிந்தப்பட்டு நதியாய் ஓடியதுபசி பட்டினியால் மனிதர்கள் அழிந்து கொண்டிருந்தார்கள்பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்பெரும் தொற்று நோய்கள் பரவி சடலங்கள் வீதி எங்கும் வீசி எறியப்பட்டன. எல்லாவற்றையும் செய்து முடிக்க தலையில்லா மனிதர்கள் பயிற்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் பெரும் இன அடையாள கவுரவத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சொந்த ஆடை அவிழ்ந்து நிர்வாணமாய் மாறி, கால்களில் ஏற்பட்டிருந்த அழுகிய புண்களிலிருந்து புழுக்கள் வெளியே வந்த போதும் அவர்களுடைய வாய்கள் பெருங்கதையாடல்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்