நாசிக்களின் கொடூரம் அதன் உச்சத்தில் அரங்கேறிக் கொண்டிருந்த காலம் அது. செக்கோஸ்லோவேக்கியாவில் டெரசின் (Terezin) என்னும் வதைமுகாம் நாசிக்கள் நல்மனம் படைத்தவர்கள், அவர்கள் யூத கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பவர்கள், அவர்களின் கலைத்திறன்களையும் விளையாட்டுத் திறன்களையும் வெளிப்படுத்துவதிலும் வளர்த்தெடுப்பதிலும் தனிக்கவனம் செலுத்துபவர்கள் என்னும் பிம்பத்தை கட்டியெழுப்பிட உருவாக்கப்பட்டது. நாசிக்களின் நன்முகத்தை உலகோரக்கு வெளிப்படுத்த 1944 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை பதிவுச் செய்யத் தொடங்கினர். இயக்குநர் வரவழைக்கப்பட்டார். ஒளிப்பதிவாளர்கள் கொண்டுவரப்பட்டனர்.
சிறைக்குள் மக்கள் சாவோடு போராடிக் கொண்டிருந்தனர். பசி, பட்டிணி தலைவிரித்தாடியது. சக மனிதர்களின் சடலங்களோடு சேர்ந்து வாழப் பழகி இருந்தனர். பறவைகளின் சிறகுகளை மட்டும் அரியப்படவில்லை, அவற்றை கொல்வதெற்கென வளர்த்துக் கொண்டிருந்தனர். சாவை கண்முன் கண்டு வாழும் மக்கள் திரைப்படத்தில் நடிக்க வேண்டும், அதுவும் இன்முகத்துடன் உற்சாகமாக... அதில் கால்பந்துப் போட்டி ஒன்று காட்சியாக்கினர். அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்த நீச்சல் ஆடுவது போன்ற பிம்பத்தை, வெளியுலகில் வாழும் மக்கள் மனங்களில் உருவாக்கும் நோக்குடன் அதை தத்ரூபமாக ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினர். சிரிப்பதற்காக நிர்பந்திக்கப்பட்டனர்; உற்சாகமாக இருக்க நிர்பந்திக்கப்பட்டனர்; பார்வையாளர்கள் கையடித்து ரசிக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்; உணவுகளை உண்பது போல் நடிக்க நிர்பந்திக்கப்பட்டனர். ஹிட்லரின் கோரமுகம் எளிய மக்களின் முகங்களில் சிரிப்புகளாக மாற்ற எத்தனித்தனர் அதிகாரிகள். உற்சாகமாய் விளையாட்டு மைதானத்தில் ஓடி வராவிட்டால் நீ கொல்லப்படுவாய்; போட்டியில் முழுமையாக உன்னை இணைத்துக் கொள்ளாவிட்டால் நீ கொல்லப்படுவாய்; கோல்கள் அடிக்கவில்லை என்றால் கொல்லப்படுவாய்; பார்வையாளர்கள் சிரிக்கா விட்டால் கொல்லப்படுவார்கள்; அவர்கள் கைகளை தட்டவில்லையென்றால் கொல்லப்படுவார்கள்; நிறைய உணவுகளை உண்பது போல் காட்டிக் கொள்ளவில்லை என்றால் கொல்லப்படுவீர்கள்... ஹா... ஹா... செயற்கையை அணியாவிட்டால் கொலை நிச்சயம். செழிப்புடன் வாழவில்லை என்று காட்டிக் கொண்டால் அழிவு நிச்சயம். பட்டினியும் சாவுமே வாழ்க்கை என்பதை கூறினால் சாவு நிச்சயம். இனவெறி தாண்டவம் ஆடுகிறது என்று காட்டிக் கொண்டால் பெரிய பிணக்குழியின் விளிம்பில் நிறுத்தப்பட்டு சுட்டுத் தள்ளப்படுவீர்கள்...
யூதர்கள் ஒளிர்கிறார்கள்; அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்; அவர்கள் எக்குறையுமின்றி நிம்மதியாய், ஆடிப்பாடி, விளையாடி உல்லாசமாய் இருக்கிறார்கள். இதை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்காக கேமரா கண்கள் சாட்சியாக்கப்பட்டன. படம் வெளிவரவில்லை என்பது தகவல். படத்திற்கு தெரசின்ஸ்டாட் (Theresienstadt) எனப் பெயர் போடப்பட்டது. அதற்குள் நாசிப்படை வீழ்த்தப்பட்டது.
முப்பத்தி ஐயாயிரம் பேர் இங்கே அழித்து ஒழிக்கப்பட்டனர். இங்கு தங்கியிருந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் அவுட்விச் வதை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டு விஷவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
மானம் காக்கப்பட எடுக்கப்பட்ட தெரசின்ஸ்டாட் படம் இன்று துண்டுகளாய் சிதறிக் கிடக்கின்றன, இரத்த வாடையுடன்.
உபகதை
இந்தியாவில், கோவிட் - 19 க்குப் பிறகு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. பணக்காரர்கள் இக்காலக் கட்டத்தில் பன்மடங்கு செல்வம் பெருக்கிக் கொண்டனர். நல்ல மருத்துவம் பெற்றுக் கொண்டனர். நன்றாக உண்டனர்.
உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஏழரைக் கோடி மக்கள் இக்காலகட்டத்திலும் அதற்கு பின்னர் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்; உலக அளவில் இப்படித் தள்ளப்பட்டோருள் அறுபது சதவீதம் பேர் இந்தியர்கள் (The Hindu 31.03.2021, page 6).
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அதில் குறிப்பிட்ட நபர்கள் நன்றாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சிரிப்பையும் இந்தியாவின் ஒளியையும் போட்டிப் போட்டுக் கொண்டு சமூக ஊடங்களும், பொது ஊடகங்களும் பரப்பி வருகின்றன. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், ஆகையால் நாம் பணக்காரர்கள் ஆகிவிட்டோம் என்று நம்புகிறாள் தாய் ஒருத்தி. அவள் கையில் இருக்கும் குழந்தையின் வாயிலிருந்து இரண்டு மூன்று சோற்றுப் பருக்கைகள் விழுந்தன. எதிர்காலத்தில் சிரிக்க வேண்டிய பற்கள் கழன்று விழுவதைப் போல் இருக்கிறது.
நம்புவோம்: போதிய மருத்துவம் இன்றி மக்கள் இறந்தாலும் நாம் பணக்காரர்கள்; ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் எல்லும் தோலுமாய் இருந்தாலும் நாம் பணக்கார்கள்; வாழ்விடங்கள் வளர்ச்சிக்காக முதலைகளின் வாயில் ஊட்டப்பட்டாலும் நாம் பணக்காரர்கள். இப்படி செயற்கையாய் சிரிக்க ஏராளமானவை உள்ளன. நம்புங்கள் நீங்கள் பணக்காரர்கள்; பணக்கார நாட்டில் வாழ்வதில் பெருமை கொள்ளுங்கள்; மார்தட்டிக் கொள்ளுங்கள் ஆசியாவில் மூன்றாவது பணக்காரர்கள் நாம் தாம் என்று. உங்கள் கைதட்டலை உலகம் பார்க்கட்டும். உங்கள் மகிழ்ச்சி வெள்ளம் பெரும் அலையாய் உயரட்டும். பத்திரிகைகளும் இதழ்களும் பணக்காரர்களை பற்றிய கட்டுரைகளை பக்கம் பக்கமாய் எழுதட்டும். ஒளி ஊடகங்கள் பெரும் விவாதங்களை நடத்தட்டும். நாம் பணக்காரர்கள். நம்புங்கள் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். குறை ஒன்றும் இல்லை...
0 கருத்துகள்